திங்கள், 11 நவம்பர், 2024
மாற்றம்- தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகிறது
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்மக்களின் தெற்கில் உள்ள சிங்கள மக்களைப் போல மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது கடந்த சிலநாட்களாக வடக்கு கிழக்கில் நடந்த தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டங்களுக்குக் குறிப்பாகச் சிறிலங்காவின் அரசுத்தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் கலந்து கொண்ட கூட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கில் திரண்டு சென்றது எடுத்துக்காட்டுகிறது. தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் எனத் தங்களை பிரகடனப்படுத்திக்கொண்ட தமிழ்க் கட்சிகளின் கூட்டங்களுக்கு இவ்வாறான மக்கள் திரள் வரவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இதை நாங்கள் தமிழ்த் தேசியத்தின் தோல்வியாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பின் போர்ச்சூழலில் தமிழ்த் தேசியத்தை சிதைத்த, கந்தலாக்கி தொங்க விட்ட போலி தமிழ்த் தேசிய தலைவர்களின் தோல்வியாகவே இதை நாம் பார்க்க வேண்டும்.
யுத்தம் முடிந்த கடந்த 15 வருட காலத்தில் தமிழின அழிப்புக்கு தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமாறு இந்தத் தமிழ் தலைவர்கள் சொன்னபோது நமது மக்கள் அதைச் செய்தார்கள். அதுபோலத் தமிழினப் படுகொலையை முன்னின்று நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மொட்டுக் கட்சி ஆகியவற்றின் தலைவர்களையும் ஆதரிக்குமாறு இந்தப் பிழைப்பு வாத தலைவர்கள் கூறியபோது தமிழ் மக்கள் ஆதரித்தார்கள். இந்த 15 வருட காலத்தில் ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைமைகள் ஆனாலும் சரி, தமிழ்த் தேசியம் பேசி நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தலைவர்களாலும்சரி தமிழ் மக்களுடைய எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணவில்லை . சட்டவிரோத குடியேற்றங்கள் தடுக்கப்படவில்லை.
பௌத்த மத ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்படவில்லை.
இராணுவத்தாலும், தொல்பொருள் திணைக்களத்தாலும் தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் அரசியல் நோக்கங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டதை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, காணாமல்போனோரின் பெற்றோர் உறவினர்களின் போராட்டங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை.
தமிழினத்தின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடியவர்கள் கைது செய்யப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் தடுத்து நிறுத்தப்படவில்லை.
அரசியல் பழிவாங்களும் சிவில் நிர்வாகத்திலும் கல்வியிலும் நீதித்துறையிலும் வடக்கில் இராணுவத் தலையீடு இருப்பது தடுத்து நிறுத்தப்படவில்லை.
மேற்கூறிய அத்தனை நடவடிக்கைகளுக்கும் கொழும்பில் இருந்த சிங்கள அதிகாரவர்க்கத்திற்கு, தமிழ் மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு உலா வந்த தமிழ் அதிகார வர்க்கம் திரை மறைவில் உதவியதுதான் கடந்த கால வரலாறு. இதற்குக் கூலியாகப் பார் ஃபோர்மிட்டுகளும், சொகுசு பங்களாக்களும், சொகுசு வாகனங்களும் இன்ன பிறவும் பெற்றுக்கொண்டது தான் வரலாறு. தமிழ் மக்களுக்கு ஒரு முகமும் தங்களது வர்க்க கூட்டாளிகளான சிங்கள அதிகாரவர்க்கத்துக்கு இன்னொரு முகம் காட்டிய இந்தப் போலி தமிழ்த் தலைவர்களின் முகமூடிகள் கழன்று போனதன் வெளிப்பாடுதான் மாற்றத்தைக் கொண்டு வருவதாகச் சொல்லிக்கொள்ளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தால் என்ன என்று ஒரு முடிவுக்குத் தமிழ் பேசும் மக்கள் வருவதற்கு காரணமாகும். இப்படித்தான் இதை நான் பார்க்கிறேன்.
அனுரகுமார திசாநாயக்க அவர்களின் அரசாங்கம், அதாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்குறிப்பிட்ட தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் முழுவதையும் உடனடியாகத் தீர்க்கப் போவதில்லை. தீர்க்கவும் முடியாது. இதுதான் யதார்த்தம். இதிலே முக்கியமான சிலவற்றை அவர்கள் தீர்க்கலாம். ஆனால் எல்லாவற்றையும் உடனடியாகத் தீர்க்க முடியாது. அப்படி தீர்ப்பதற்கு அனுரகுமார திசநாயக்க அவர்கள் அவதார புருஷரோ,« ஓம் க்ரீம் சூ மந்திர காளி நான் சொல்றது நடக்கட்டும்» என்று மந்திரக்கோல் வைத்து நடத்திக் காட்டும் மந்திரவாதியும் அல்ல.
சிறிலங்கா அரசுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாமல் தான் நம்மவர்கள் பலர் கருத்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் என்பது ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாறும். அரசு என்பது மாறாது. அரசாங்கத்தின் தலைவர் அரசை வழிநடத்தலாம். ஆனால் அரசின் அடிப்படைகளை அவ்வளவு சுலபத்தில் மாற்றிவிட முடியாது. அதை மாற்றுவதற்கு ஒன்று புரட்சி செய்ய வேண்டும், அல்லது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் அரசின் இருப்பை தீர்மானிக்கின்ற அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். கடந்த 75 வருட காலமாகப் பௌத்த சிங்கள பேரினவாத நிறுவன கட்டமைப்பாக மாறியுள்ள ஸ்ரீ லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசை, உண்மையான மக்கள் ஜனநாயக குடியரசாக மாற்றுவது அவ்வளவு இலேசான வேலை இல்லை. சிங்கள பௌத்த பேரினவாதம் இன்று தேர்தலில் தோற்கடிக்கபட்டிருந்தாலும் அது ஒன்றும் பலமிழந்து போகவில்லை.
அது தனது இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்த மாற்றத்தையும் அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக் கொள்ளாது.
வெறும் அதிகார மாற்றங்களும், ஆள் மாற்றங்களும் ஆட்சி கட்டமைப்பைத் தக்க வைக்க உதவுமே தவிர, உண்மையான மாற்றத்தைக் கொண்டு வராது.
மறு புறத்தில் தமிழர் தரப்பில், சமூக வலை தளங்களில் களமாடுவதும் தேர்தல் காலத்தில் மேடைகளில் பேசுவதும் தான் தமிழ்த் தேசியம் என்று நம்மவர்கள் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தான் தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருப்பதாக நாம் நம்ப வைக்கப்படுகிறோம். தேசியம் என்பது ஒரு படு பிற்போக்குத்தனமான, ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள வைக்கப்படுவதற்கான கோஷமல்ல. நமது சமூகம், சமூக படிநிலைகளில் படிநிலை வளர்ச்சி பெறாத, இன்னும் அடிமை சமூக கூறுகளையும், நிலப்பிரபுத்துவ கூறுகளையும், கைவிடாமல் இன்றைய முதலாளித்துவ சிந்தனைகளுக்கும், நவதாராளமய சிந்தனைகளுக்கும் ஏற்ப அவற்றை உள்வாங்கி மறு சீரமைத்துக்கொண்டு பிற்போக்கான கலப்பு சமூகமாக உள்ளது. இதைக் கணக்கில் எடுக்காததுதான் இலங்கை சமூகத்தில் வர்க்க போராட்டங்கள் தோற்று போனதற்கும், மக்களது விடுதலைப் போராட்டங்களும் உரிமைப் போராட்டங்களும் தோற்றுப் போனதற்கும் காரணம் ஆகும்.
தேசியம் என்பது வெறும் வார்த்தை ஜாலங்களால் உருவாவதில்லை. ஒரு மக்கள் சமூகத்தின் ஒருங்கிணைவு, மொழி பண்பாடு கலாச்சாரம் பொருளாதாரம் வாழ்வியல் என்று அனைத்தினதும் அசைவியக்கம் மற்றும் இருப்பு என்பவற்றின் அடிப்படையிலேயே தேசியம் கட்டமைக்கப்படுகிறது.
இன்றைய பின் போர்ச் சூழலில் தமிழ்த் தேசியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது சாதிய முரண்பாடு ஆகும். நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பிலிருந்து கடத்தப்பட்டு வந்த இந்தச் சாதிய அமைப்பு இன்றைக்கு யாழ்ப்பாண குடாநாட்டிலே என்றுமில்லாத அளவுக்குக் கூர்மைப்படுத்தப் பட்டிருக்கிறது.
முன்பெல்லாம் ஒரு ஊரிலே திருமணம் என்றால் உறவினர்கள் ஒன்று சேர்ந்து முதலில் பந்தல் கால் நடுவர்கள். அடுத்து ஒன்று கூடி பலகாரம் சுடுவார்கள். ஒன்று கூடி பந்தல் போடுவார்கள். திருமணத்தன்று உறவுகள் கூடி சமையல் செய்வார்கள். திருமணத்தின்போது குடும்பங்களில் ஒருங்கிணைவும் உறவினர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் இருக்கும். இதிலேயே ஒரு அசைவியக்கம் இருக்கும். இன்று திருமண மண்டபம் எடுத்து ஒப்பந்தக்காரனுக்கு பணம் செலுத்தினால் ஆடம்பரமாகத் திருமணம் நடக்கும். எல்லோரும் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பிட்டுவிட்டு அன்பளிப்பு கொடுத்துவிட்டு செல்வார்கள் ஆனால் அங்கே தொலைந்து போனது குடும்பங்களின் ஒருங்கிணைப்பு. பாசப் பிணைப்பு, கூட்டுப் பொறுப்பு என்பனவாகும். இன்றைக்கு நவ தாராளவாதம் இதற்கு அடித்தளமிட்டிருக்கிறது. இதுகூட தேசிய உருவாக்கத்தின் சிதைவுகளில் ஒன்று.
அடுத்து ஒரு சமூகத்தின் மெய்யியல் தளம் என்பது அதன் இருப்பு மற்றும் கூட்டு செயல்பாட்டு அசைவியக்கத்துக்கு முக்கியமானது. கூட்டுவழிபாடு கூட்டுப் பிரார்த்தனை கூட்டு சடங்குகள் என்பன ஒரு சமூகத்தை ஒரு இனமாக இணைக்கின்ற மிக முக்கியமான வடிவங்களாகும். இவற்றைச் சார்ந்ததுதான் ஒரு இனத்தின் பண்பாட்டு தளமும் கலை வடிவங்களும் செழுமைப்படுத்தப்படுகின்றன. ஒரு இனத்தின் அழிவென்பது அதன் பண்பாட்டு தளமும் கலை வடிவங்களும் சிதைக்கப்படு வதிலிருந்தே ஆரம்பிக்கிறது.
இன்றைக்கு தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடக்கில் தமிழர் மெய்யியல் தளம் முற்றாகச் சிதைக்கப்பட்டிருக்கிறது. தமிழர் மரபுவழி தெய்வங்கள் தூக்கி வீசப்பட்டு ஆரிய சனாதன வழிபாட்டு முறை திட்டமிட்டு திணிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாகத் தமிழ்த் தெய்வமான கண்ணகி ஆலயங்களின் மூலஸ்தானத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு ஆரிய தெய்வமான ராஜராஜேஸ்வரி குடியமர்த்த பட்டிருக்கிறார். தமிழர்களை ஒருங்கிணைக்கின்ற மடைவைத்தல் குளித்திவைத்தல் பொங்கல் இடுதல் அந்த நிகழ்வுகளை ஒரு சடங்காகக் கொண்டாடுதல், அந்த நிகழ்வுகளுக்காக முன்கூட்டியே தயார்படுத்தல் காத்திருத்தல், கூத்து கோலாட்டம் கும்மி என்று கலை நிகழ்வுகள் செய்தல் அதற்கான தயார்படுத்தல் செய்தல் எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு மக்களைத் தேர்த் திருவிழாவுக்கு வந்து செல்லும் பார்வையாளர்களாக ஆலயத்திற்கு வெளியே வந்து நின்று வணங்கிச் செல்லும் ஒரு நாள் பக்தர்கள் ஆக மாற்றும் வேலை திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கிறது. ஆரிய வைதிக பாரம்பரியத்தில் வந்த நல்லூர் ஸ்கந்தன் யாழ்பாணத்தின் அடையாளம் என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலப்பிரபுத்துவ முறையில் நிலவிய கட்டியம் கூறுதல் பெருமைக்குரிய விடயம் என நம்பவைக்கப்படுகிறது. ஆனால் இன்றும் தமிழ்மணம் மாறாமல் தமிழர் மரபு மாறாமல் எந்தக் கெடுபிடிகளும் இல்லாமல் எந்த வைதிகச் சடங்குகளும் இல்லாமல் இருக்கும் செல்வச்சந்நிதி முருகன் ஆலயமே உண்மையில் யாழ்பாணத்தின் அடையாளமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
இப்படி இன்னும் தமிழ்த்தேசிய இருப்பை தமிழின அடையாளத்தைக் கந்தலாக்கி தொங்க விட்டுள்ள பல விடயங்களைக் குறிப்பிடலாம். இன்றைக்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள போதைப்பொருள் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்முறை என்பவற்றின் அடிப்படை சமூகத்தின் அசைவியக்கம் தடுக்கப்பட்டு சமூகம் தனித்தனிக் கூறுகளாகச் சிதைக்கப்பட்டதே ஆகும்.
இந்தக் கட்டுரையை விரிவு கருதி ஃப் அவற்றை நான் தவிர்த்துக் கொள்கிறேன்.
முடிவாக மாற்றம் என்பது தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகிறது. தமிழ்ச் சமூகம் தன்னைப் பாதுகாத்து கொள்ளவும் தன்னுடைய அடையாளத்தைத் தக்கவைக்கவும் அனைத்து மட்டங்களிலும் மாற்றத்திற்காக முயல வேண்டும். போராட வேண்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)