தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தின் வீரவரலாறு 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் உயிராலும் இரத்தத்தாலும் எழுதப் பட்டுக் கொண்டி ருக்கின்ற இந்த நேரத்தில் தமிழனத்தின் சாபக்கேடும் உடன் பிறந்தே கொல்லும் வியாதியுமான சாதியத்தை பற்றி இங்கே புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து பேச வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
இன்று புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள புலி எதிர்ப்பாளர்களுடைய பிழைப்புக்கான மூலதனமாக சாதியம் திகழ்கிறது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை குறுகிய சாதிய வட்டத்தக்குள் அடக்கி கொச்சைப்படுத்தி மக்களை பிளவு படுத்த முனையும் வேலைகளும் திட்ட மிட்டு செய்யப்பட்டு வருகின்றன.
மறுபுறத்திலே ஒருவன் தான் இருக்கும் ஊரை மாற்றலாம் தனது பெயரை மாற்றலாம் தனது தொழிலை மாற்றலாம் தனது மதத்தை மாற்றலாம் ஆனால் தனது தாய் தந்தையரையும் தனது பிறப்பையும் அதனால் வரும் சாதிய அடையானத்தையும் மாற்ற முடியாது என்று சொல்கின்ற ஒரு கூட்டமும் ‘சாதியா அது எங்கே இருக்கிறது என்று சிங்களப்பார்வை பார்வை பார்த்து பம்மாத்து விடுகிற ஒரு கூட்டமும் இங்கே புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிறது.( சிங்களப் பார்வை என்றால் தமிழர்களுக்கு இனப் பிரச்சனை என்ற ஒன்று இருகக்pறதா என்று முழுப் புசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்ப்பது.தமிழர் எல்லாம் பொரிய உத்தியோகத்தில் இருக்கிறார்கள்.வியாபாரம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. கொழும்பில் இலட்சக்கணக்கான தமிழர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று உதாரணம் காட்டுவது)
2000 வருட காலமாக நமது கருத்தியல் தளத்திலே ஆளமாக வேரூன்றி நமது சிந்தனைத் தளத்தை ஆக்கிரமித்திருக்கிற சாதியத்தை நாங்கள் ஒரு 30 வருடப் போராட்டத்தில் முற்று முழுதாக அழித்துவிட முடியாது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்.
சாதியம் என்பது மாறவில்லை அது அன்று இருந்த வடிவத்தில் இன்றும் அப்படியே இருக்கிறது என்று கூறமுடியாது.இன்று அடிமை குடிமை முறை கிடையாது. தீண்டாமை அன்றிருந்த நிலையில் இன்று இல்லை.ஆனால் அது முற்றாக ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.
சாதியம் என்பது என்ன? இது எப்போது தோன்றியது? இன்று எங்கள் மத்தியிலே இருக்கக் கூடிய சாதியம் தமிழ் சமூக உருவாக்கத்துடன் தோற்றம் பெற்றதா அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்பட்டதா என்கின்ற வினாக்களுக்கு விடை தெரியாத நிலையில் அல்லது அதை தெரிந்து கொள்ள விரும்பாத நிலையிலேயே எல்லோரும் சாதியைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் வர்க்க அடிப்படையிலான சாதியத்துக்கும் வர்ணக்கோட்பாட்டின் அடிப்படையிலான சாதியத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நம்மவர்கள் புரிந்துகொள்வதே இல்லை.
வர்க்க அடிப்படையிலான சாதி அமைப்பு என்பது அதாவது ஆண்டான் அடிமை- முறையும் மூலதனத்தை அல்லது சொத்தை அடிப்படையாகக் கொண்ட ஏற்றத் தாழ்வுகளும் ஐரோப்பிய சமூகத்தில் கூட இருந்தன. சர்வ வல்லமை பொருந்திய மத குருமார்கள் அரச பரம்பரையினர் பிரபுக்கள் அல்லது பூர்சுவாக்கள் வணிகர்கள் குடியானவர்கள் அல்லது அடிமைகள் என்று ஐரோப்பிய சமூகத்திலும் எற்றத் தாழ்வுகள் இருந்தன.
தமிழ் சமுகத்திலும் குறுஞ்சி முல்லை நெய்தல் மருதம் பாலை என்ற ஐவகை நிலப் பிரிவினை அடிப்படையிலான சமூக அமைப்பும் வலிமை மற்றும் சொத்தின் அடிப்படையிலான ஆண்டான் அடிமை முறையும் மற்ற சமூங்களைப் போலவே இருந்தது.செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து மனிதர்களை இழிவுபடுத்தும் முறை தமிழ் சமூகத்தில் ஒரு பொது வழக்கமாக இருந்ததாகத் தெரியவில்லை.அடிமை குடிமை முறை சில தொழில்களை அடிமட்ட மக்கள் தான் செய்யவேண்டும் என்று கட்டாயப் படுத்தி இருந்தது. ஆண்டைகளுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வு என்பது ஏனைய சமூகங்களில் இருந்தததைப் போலவே தமிழ் சமூகத்திலும் இருந்தது.ஆனாலும் பண்டைய தமிழ் சமூகம் காதல் மணத்தையும் களவு மணத்தை ஏற்கொண்ட சமூகமாக இருந்தால் சாதியக் கலப்பு தடுக்கப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.
ஆனால் இன்று தமிழ் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் சாதிய அமைப்பென்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது தனக்குத் தானே வேலிபோட்டு தன்னை தானே அடைத்துக்கொன்டுவிட்ட ஒரு சமூக அலகாகாகும். தமிழ் சமுகத்தை தனித்தனி அலகுகளாக்கி எந்த ஒரு அலகும் மற்ற எந்த ஒரு அலகுடனும் இணைவதை ‘புனிதம் தீட்டு அகமணமுறை’ என்பவற்றின் முலம் தந்திரமாகத் தடுப்பதே இன்றைய இந்த சாதி அமைப்பின் அடிப்படையாகும். ‘நான் கடவுளின் படைப்பால் புனிதமானவன். என்னுடைய சாதி புனிதமானது.நான் என்னுடைய சாதி அலகுக்குள் அல்லாத அடுத்த சாதியினனை என்னுடன் சேர்த்துக்கொண்டால் அல்லது என்னுடைய வீட்டுக்குள் கோவிலுக்கள் அனுமதித்தால் ஒன்றாக உண்டு குடித்து உறங்கினால் தீட்டுப்பட்டுவிடும் என்பதே இந்த சாதி அமைப்பு போதித்து வைத்திருக்கும் நீதியாகும்.எனவே இந்தப் புனிதத்தை காப்பாற்றுவதற்கு அகமணமுறை அதாவது தங்களது உறவு வட்டத்துக்குள் திருமணம் செய்வது வலியுறுத்தப்படுகிறது. காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் பாவச் செயலாகவும் எற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் பிரகடனப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு சாதிய அலகும் தன்னை தானே தன்னளவில் புனிதர்கள் என்ற நினைப்போடு மற்ற சாதிய அலகுகளில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதால் ஏனைய சமூகங்களிலும் இனங்கள் மத்தியிலும் (இந்தியா இலங்கை தவிர்ந்த) ஏற்பட்ட தொழில் புரட்சி பொருளாதார மாற்றம் மற்றும் அரசில் புரட்சிகளால் வர்க்க அடிப்படையிலான காரணங்களின் அiடிப்படையில் இருந்த சாதி அமைப்பு தகர்ந்தது போல எங்கள் மத்தியல் இருக்கும் சாதி அமைப்பு தகரவில்லை.
என்னளவில் எங்கள் அளவில் நாங்கள் மேலானவர்கள் புனிதர்கள் என்று எங்கள் சிந்தனைத் தளத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்தியலே பௌத்த சிங்கள பேரின வாதிகள் குண்டு வீசி எங்கள் இனத்தையே அழிக்கும் போது சாதியையும் தூக்கிக் கொண்டு ஓடுவதும் புலம் பெயரும் போது அதையும் விமானமேற்றி கூடவே அழைத்துவருவதும் தொடர்கிறது. இந்த கருத்தியல் தான் காட்டிக் கொடுப்புக்களுக்கும் துரோகத்தனத்துக்கும் பிழைப்பு வாதத்துக்கும் கூட அடிப்படையாக இருக்கிறது.
ஈழத் தமிழ் மக்களான நாங்கள் யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு என்ற மூன்று வாழ்வியல் தளங்களை கொண்டவர்கள். இதில் யாழ்ப்பான சமூகமும் அதன் வாழ்வியல் தளமும் மட்டுமே இறுக்கமான சாதியக் கட்டமைப்பை கொண்டதாக இருந்தது. சாதி என்பது தமிழர்களுடைய அடையாளம் என்று இந்த சமூகம் நம்பியது.
யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்பு கட்டுள்ள சாதிகள், கட்டற்ற சாதிகள், கட்டுள்ள கலப்புச் சாதிகள், கட்டற்ற கலப்புச் சாதிகள் என்ற நான்கு வரையறைகளைக் கொண்டவையாக இருந்தது.
வெள்ளாளர், பிராமணர், கோவியர். நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர், ஆகிய சாதிகள் கட்டுள்ள சாதிகளாக இருந்தன. இதில் வெள்ளாளரும் பிராமணர்களும் அதிகார வர்க்க சாதியினராகவும் ஏனையோர் அடிமைச் சாதியினராகவும் இருந்தனர்.
இந்தியாவை பொறுத்தவரை பிராமணர்கள் முதன்மைச் சாதியினராக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களுக்கு அடுத்த இடத்திலேயே அவர்களது நிலை இருந்தது.
இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டின்படி வெள்ளாரர்கள் சூத்திரர்கள் என்ற அடிமட்ட சாதிப் படிநிலைக்குள் அடக்கப்பட்ட போதிலும் ஆறுமுக நாவலர் அதை மறுதலித்து வெள்ளாளர்களை சற்சூத்திரர்கள் அதாவது பிராமணர்களுக்கு நிகரானவர்கள் என்று நிறுவியதும் நிலமும் கோவில்களும் வெள்ளாளர்களுடைய ஆதிக்கத்திலேயே இருந்ததும் பிராமணர்கள் அவர்களது கோவில்களில் ஊழியம் செய்பவர்களாக இருந்ததுமே அவர்களது சாதிப் படி நிலையை பின் தள்ளிவிட்டது.
இந்த கட்டுள்ள சாதி அமைப்பில் கோவியரும் பஞ்சமர்கள் எனப்படும் நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர் ஆகியோரும் வெள்ளாளர்களுடைய குடிமைகளாக கருதப்பட்டார்கள்.1920 ம் ஆண்டு இந்த குடிமைமுறை சட்டரீதியாக ஓழிக்கப்பட்டாலும் 1970ம் ஆண்டு வரை அது தேசவழமை என்ற பேரில் கட்டாயப் படுத்தப்பட்டிருந்து. கோவியர்கள் வெள்ளாளர்களுடைய வீட்டு வேலைகளை செய்வதும் அவர்களது உடமைகளாக இருந்த கோவில்களுக்கு ஊழியம் செய்வதும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.
ஏனைய பஞ்சமர் சாதிகள் வெள்ளாளர்களின் விளை நிலங்களில் கூலியின்றி வேலை செய்து கொடுப்பது, அவர்களது வீட்டு திருமண ஊர்வலங்களில் “கா” காவிச் செல்வது. அதாவது ஒரு தடியில் ஒரு முனையில் வாழைக்குலை பலாப்பழம்; முதலான பழ வகைகளையும் மறு முனையில் அரிசி முதாலான உணவுப் பண்டங்கள் மற்றும் பாத்திங்கள் முதலான சீர் வரிசைகளையும் கட்டித் தொங்க விட்டு அந்தத் தடியை தோழில் வைத்து அந்த ஊர்வலம் முடியும் வரை காவிக் கொண்டு செல்வதே “கா” காவுதலாகும். மரச்சடங்கில் பாடை கட்டுவது (பெண்கள்) குடக் குரவை வைப்பது மயானத்தில் பிணத்தை எரியூட்டுவது என்று இந்தக் குடிமை முறை நீண்டு கொண்டு செல்லும் .
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டற்ற சாதிகளாக முக்குவர் திமிலர் தட்டார் செட்டிகள் முதலானவை இருந்தன. இந்தச்சாதிகள் தங்களுக்குள் இறுக்கமான கட்டுக் கோப்பையும் அகமணமுறையையும் கொண்டவையாக இருந்த போதிலும் கட்டுள்ள சாதிகளைப் போல அடிமை குடிமைகளை கொண்டவையாக இருக்கவில்லை.
கட்டுள்ள கலப்புச்சாதிகள் என்ற வரையறைக்குள் நட்டுவர்கள் பண்டாரிகள்; முதலானோர் அடக்கப்பட்டனர். தங்களுக்குள் தங்களுக்கு இணையான சாதியனருடன் உறவுகளை பேணிவந்த இவர்கள் அடிமை குடிமைகளை ஒடுக்கும் விடயத்தில் வெள்ளார்களுக்கு இணையானவர்களாகவே இருந்தார்கள்.
கட்டற்ற கலப்புச்சாதிகளாக கரையார் தச்சர் கொல்லர் குயவர் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்.அதிகளவுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொண்ட இந்தச் சாதியினரிடையே தீண்டாமையும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் மனோபாவமும் ஏனைய மேல்தட்டு மற்றும் இடைநிலை சாதியினரைவிடக் குறைவாகவே இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் எனையபகுதிகளை விட கரையார சாதியினரை அதிகமாகக் கொண்ட வடமராட்சி கிழக்கு பகுதிகள் சாதிய ஒடுக்குமுறை மிகக் குறைந்த பகுதிகளாக இருந்ததும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1697ம் ஆண்டு ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்தில் 40 சாதிகள் இருந்ததாக குறிக்கப்பட்டிருக்கிறது.தற்போது 15 முதல் 20 சாதிகளே வழக்கில் இருப்பதாகவும் அதிலும் சில சாதிகள் மறைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் 2000ம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழர்கள் தங்கள் வரலாற்றை தொலைத்தற்கும்; தங்கள் தேசத்தை தொலைத்ததற்கும் அடிப்படையான இந்தச் சாதியத்துக்கு அடிப்படையாக இருப்பது வைதீக இந்து மதம் என்பதில் யாரும் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்.கி.மு.1 ம் நூற்றாண்டில் வட இந்தியாவிலே ஆட்சியல் இருந்து சுங்க வம்சப் பிரிவைச் சேர்ந்த(பார்ப்பணிய பிரிவு) புஷ்யமித்திரன் என்பவனின் ஆட்சிக்காலத்தில் சுமதி பார்கவா என்ற பிராமணனால் உருவாக்கப்பட்ட மனு தர்மம் என்றே நூலின் மூலமே சாதியம் சட்டமாக்கப்பட்டது. இந்த இந்துத்துவ சட்ட நூலில் வகுக்கப்பட்ட வர்ணக் கோட்பாட்டின் மூலமே குலத் தொழிலும் தீண்டாமையும் அகமணமுறையும் மக்கள் மீது திணிக்கப்பட்டன.
நம்மிலே பலர் வைதீக இந்து மதத்துக்கும் தமிழர் மதத்துக்குள் வேறுபாடுகாண முடியாத நிலையிலேயே இருக்கி;றார்கள். அன்பேசிவம் என்பதும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்; என்பதும் தான் தமிழர் மதமாகும்.சிவலிங்கம் என்பது ஆண்பெண் உறுப்புக்கள் சேர்ந்த வடிவம் என்பதும் கி.பி முதலாம் நூற்றாண்டு வரை ஆரிய வைதீக பிராமணர்கள் இந்த வழிபாட்டுமுறையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.திராவிடர்களை போரில் வெல்ல முடியாத ஆரியர்கள் தங்களது வர்ணக் கோட்பாட்டை தமிழர்கள் மத்தியல் புகுத்தி தந்திரமாக அவர்களை அடிமை கொள்வாற்காக பிச்சாண்டியான சிவனை மஹாதேவனாகவும் முருகனை ஸ்கந்தனாவும் கண்ணனை மகா விஸ்னுவாகவும் காளியையும் ஏனைய பெண் தெய்வங்களையும் சக்தியின் அம்சங்களாகவும் மாற்றிய வரலாற்றை இந்தக் கட்டுரையின் நீட்சி கருதி இங்கே குறிப்பிடவில்லை.
18 ம் நூற்றாண்டில் (1790 என்று நினைக்கிறேன்) தமிழகத்தின் பாண்டிச் சேரி காரைக்கால் பகுதிகளை கொலனிகளாக வைத்திருந்த பிரெஞ்சு அரசின் ஆளுனராக இருந்த தளபதி துப்ளக்ஸ் என்பவர் தமிழ் சமூகம் பற்றி ஒரு ஆய்வை செய்திருக்கிறார்.
இந்த ஆய்வில் முக்கியமான அம்சம் சோழரைப் பற்றியது.ஐரோப்பியர்களான தாங்கள் கடல்கடந்து சென்று நாடுகளைப் பிடித்து கொலனிகளாக வைத்திருப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தச் சோழர்கள் அதாவது தமிழர்கள் கிழககு மற்றும் தெற்காசியாவிலுள்ள பல நாடுகளை பிடித்து தங்கள் ஆட்சியின் கிழ்; வைத்திருந்திருக்கிறார்கள். அந்த நாடுகளில் அவர்கள் திரட்டிய செல்வம்; எல்லாவற்றையும் அவர்கள் தொழில் துறைகளில் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அவர்களுடைய நாடு பிரான்சை விட பலம் கொண்ட நாடாகவும் வளாச்சியடைந்த நாடாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு ஆலோசகர்களாக இருந்த பிராமணர்கள் நீங்கள் சென்ற இடங்களில் எல்லாம் கொலையும் கொள்ளையும் செய்து பாவம் சம்பாதித்துவிட்டீர்கள்.இந்த கொடிய பாவம் உங்கள் சந்ததியை அழித்துவிடும் அதற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு கோவில்களை கட்டுங்கள் யாகங்கள் நடத்துவதற்கும் வேத பாராயணம் செய்வதற்கும் பிராமணர்களுக்கு தானங்களை வழங்குங்கள் எற்று கூறி அந்த செல்வம் எல்லாவற்றையும் கோவில் கட்டுவதற்கும் சதுர்வேதி மங்கலங்கள் என்ற யாக சாலைகளை அழைப்பதற்கும் செலவழிக்க வைத்துவிட்டார்கள். இன்று சோழர்களும் இல்லை.அவர்களது இராட்சியமும் இல்லை. அவர்களது குடி மக்களான தமிழர்கள் தங்களது முன்னோர்கள் செய்த பாவம் தீர இன்னமும் கோவில்களில் பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறார்கள். சோழர்களை போரில் வெல்ல முடியாத அவர்களது எதிரிகள் மதம் என்ற அவர்களது பலவினத்தை வைத்து அழித்ததை பிரான்ஸ் அரசாங்கம் உதாரணமாகக் கொள்ளவேண்டும் என்று துப்ளக்ஸ் தனது ஆய்வில் தெரிவித்திருக்கிறார்.
சாதி என்பது தமிழ் சமூகம் ஒன்றுபடுவதற்கும் விடுதலை இலக்கை விரைந்து அடைவதற்கும் முக்கயமான தடைக்கல்லாக இருக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.
தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் என்பதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள் சாதியம் என்பது நுளைய முடியாது என்பதிலும் சந்தேகமேயில்லை.இதற்கு ஏராளமான நடைமுறை சார்ந்த உதாரணங்கள் இருக்க்pன்றன.அவை பற்றி இங்கு பேச வேண்டிய தேவையும் இல்லை.
இப்போது பிரச்சனை என்னவென்றால் புலம் பெயர்ந்த சமூகத்தை சீரழிப்பதற்கு சாதியத்தை கையில் எடுப்பதாகும்.
புலம் பெயாந்த நாடுகளில் சாதி பார்க்கப்படுகிறதா? அது எந்த வகையில் பார்க்கப்படுகிறது? ஏன் பார்க்கப்படுகிறது? என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். ‘நான் திருமணம் செய்யும் போது சாதி பார்ப்பது எனது தனிப்பட்ட உரிமை’ என்று கூறுவது தொழில் நிறுவனங்களில் சுவரை வெட்டி கண்னாடி பொருத்தியும் அறைக்கு அறை கமெராக்கள் பொருத்தியும் வேலை செய்பவர்களை எஜமான் பண்ணையார் ஸ்டைல்களில் கண்காணித்து பழைய அடிமை குடிமை முறைக்கு புத்துயிர் அளிப்பது. அதை நிர்வாகச் செயற்பாடாக நியாயப்படுத்துவது. ஒரு மனிதனுக்கு தான் கண்காணிக்கப்படுகிறேன் என்ற உணர்வு ஏற்படும் போது அவனால் சுதந்திரமாகவும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்முடியாது என்ற அடிப்படை உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பது. நடுத் தெருவில் ஆட்களை நிறுத்தி அவர்கள் மீது தமது அதிகாரங்களை செலுத்தி தங்கள் மேலாண்மையை நிலை நிறுத்துவது.ஐரோப்பிய சமூகத்தில் கோட்சூட் போட்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் ரை கட்டுவது என்பது பரம்பரையாக வரவேண்டும் என்று சொல்வது. சாதி பார்ப்பவர்களை மறைமகமாக தட்டிக்கொடுத்து அவர்களது செயல்களை ஊக்கவித்துவிட்டு மறு புறத்தில் நமது சமூகம் இன்னும் திருந்தவில்லை என்ற பம்மாத்து விடுவது இப்படி எராளமான விடயங்கள் புலம்பெயாந்த சமூகத்தில் நடக்கின்றன. இவற்றுக்கான அடிப்படைகள் எவை. இந்த போக்குகள் எப்படி புலம்பெயாந்த இளைய சமூகத்தை அந்நியப்பட வைக்கின்றன. இவை எப்படி தமிழ் தேசித்துக்கு துரோகம் செய்கின்றன என்பதை அடுத்த கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.
யாழ் இணையத்துக்காக எழுதியது