ஞாயிறு, 25 மார்ச், 2007

தலித்தியமும் தமிழ் தேசியமும்

தலித்தியமும் தமிழ் தேசியமும்

தலித்தியம் என்ற ஒரு சொல்லை இப்போது ஈழத் தமிழ்பரப்பில் அறிமுகப் படுத்தும் ஒரு முயற்சி நடக்கிறது. அதை அறிமுகப்படுத்துபவர்கள் புலி எதிர்ப்பையும் அதோடு இணைப்பதால் பலருக்கு அந்தச் சொல்லைக் கேட்டதும் இயல்பான ஒரு கோபமும் எரிச்சலும் வருகிறது. இந்தக் கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்துபவர்கள் தலித்தியம் என்ற அந்தச் சொல் குறிக்கும் அர்த்தத்தை புரிந்து கொண்டு அதை வெளிப்படுத்த வில்லை.அந்தச் சொல்லை தங்களது புலி எதிர்ப்புச் செயற்பாட்டுக்கு பயன்படுத்துவோரை வைத்தே இந்தக் கோபமும் எரிச்சலும் வருகிறது.
தலித் என்பது இந்திய பெருநிலப்பரப்பில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு பொது அடையாளமாக வைத்துக்கொண்ட பெயராகும்;. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த மக்களை ‘ஹரிஜனம்’ (ஹரி என்பது விஷ்ணு) என்று மகாத்மா காந்தி பெயர் சூட்டி அழைத்தார்.அதாவது கடவுளின் குழந்தைகள் என்பது இதன் பொருளாகும்.ஆனால் இந்து மதத்திலுள்ள வர்ணக் கோட்பாடே சாதியத்துக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற கருதிய இந்த மக்களுடைய அமைப்புக்கள் இந்த மதக்குறியீPட்டுச் சொல்லால் தாங்கள் அழைக்கப்பட்டவதை மறுத்து தலித்துக்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

தெற்கே கன்னியாகுமரி கடற்கரையோரத்திலிருந்து வடக்கே இமயமலைக் சாரலிலுள்ள குக்கிராமங்கள் வரை இந்திய பெரு நிலப்பரப்பெங்கும் பரந்து வாழும் அனைத்து ஒடுக்கப்பட்டமக்களும் (சாதியத்தால்)தங்களை தலித்தக்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களுக்குரிய அரசியல் கோட்பாடு தலித்தியம் எனப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அங்குள்ள மக்களுக்குரிய பிரதான முரண்பாடாக சாதிய முரண்பாடே இருக்கிறது. இந்திய தேசியம் என்பது இந்த முரண் பாட்டை கட்டிக் காக்கின்ற அமைப்பாகவே இருக்கிறது. இன்றைக்கும் சாதி குறைந்தவரை மலம் உண்ண வைப்பதும் உயிரோடு எரிப்பதும் உணவகங்களில் தனித் தட்டு தனிக் குவளை வைத்து தனிமைப்படுத்துவதும் தமிழகக் கிராமங்களில் இன்று வரை தொடர்கிறது.
இந்த நிமிடம் வரையில் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்திய சமூகம் முழுவதுமே சாதியச் சமூகமாக பிளவு பட்டுப்போய்கிடக்கிறது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே இருக்கிறது. இன்று வரை சாதியக் கலப்பு எற்பட்டுவிடும் என்பதற்காக காதல் திருமணங்களை ஏற்றுக்கொள்ளாத மனப்பான்மையும் காதல் என்றால் தீண்டத் தகாத ஒன்று என்ற சிந்தனையும் மக்கள் மத்தியிலே இருக்கிறது.கட்சி அரசியலுக்காகவும் அதிகாரவர்க்க நலன்களுக்காவும் சாதியம் கட்டிக்காக்கப்படுவதோடு ஒடுக்கு முறையும் சாதிக்கலவரங்களும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அதிகாரத்தை கையில் வைத்துள்ள மேல்தட்டு வர்க்கம் அடித்தட்டு மக்கள் மீது திணிக்கும் அடக்குமுறைக்கு எதிராக அந்த மக்கள் சாதி அமைப்புக்களின் கீழ் அணி திரள்வது அங்கு தவிர்க்க முடியாததாகிறது. இல்லையென்றால் தஞ்சாவூர் மாவட்டம் கீழ் வெண்மணியில் நிகழ்ந்து போல அவர்கள் குடும்பம் குடும்பமாக எரித்துக் கெல்லப்பட்டுவிடுவார்கள்.இது இந்திய தழிழக நிலப்பரப்பக்குரிய முரண்பாட்டின் தன்மையும் கள நிலமையும ஆகும்.

இதை நாங்கள் அப்படியே கொப்பியடித்துக்கொண்டு வந்த எங்களுடைய நாட்டிலே பொருத்த முடியாது..ஈழத் தமிழர்களான எங்களைப் பொறுத்தவரை சாதிய முரண்பாடு என்பது அடிப்படை முரண்பாடாகும் அது இப்போது பிரதான முரண்பாடாக இல்லை.இப்போது சிறீலங்கா விமானப்படை எமது தாயகத்தின் மீது குண்டுபோடும் போது சாதி பார்த்துக் குண்டு போடுவதில்லை.சிறீலங்கா படையினர் எறிகணைத்தாக்குதல் நடத்தும் போது இது உயர்சாதிக்காரர் வாழும் இடம். இது சாதி குறைந்த வர்கள் வாழும் இடம் என்றெல்லாம் பார்த்து தாக்குதல் நடத்து வதில்லை. சிறீலங்கா அரசினதும்; அதை இயக்குகின்ற பௌத்த சிங்கள பேரின வாதி களினதும் இலக்கு ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்து அல்லது அடக்கி தமது மேலாண்மை நிலைநாட்டுவதாகும்.ஈழத் தமிழ் மக்களான எங்களைப் பொறுத்தவரை இன்று பிரதான முரண்பாடாக இருப்பது இன முரண்பாடாகும்.
தலித்தியத்தை எமது தளத்தக்கு இறக்குமதி செய்ய நினைப்பவர்கள் தங்களது செயலை நியாயப்படுத்துவதற்காக ஈழப் போராட்டம் என்பதே மேட்டுக் குடியினரின் போராட்டம் என்று சித்தரிக்க முனைகிறார்கள்.தமிழீழ தேசியத் தலைவரையும் விடுதலைப்புலிகளையும் மேட்டுக்குடியினரின் நலன்களை பாதுகாப்பவர்களாக சித்தரிக்க விளைகிறார்கள்.
தமிழ் தேசியவாதத்தக்கு சிந்தைனைக்கு வடிவம் கொடுத்தவர்; ஆறுமுக நாவலர் என்றும் சிறீலங்கா அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடி இளைஞர்களே என்றும் நிறுவி அதன் மூலம் தமிழிழ விடுதலைப்போராட்டம் அடித்தட்டு மக்களுக்கு எதிரானது அது அதிகாரவர்க்கத்தின் மேலாண்மையை நிலை நிறுத்தவே நடக்கிறது.அதனால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் தலித்துக்கள் என்று அடையாளத்துக்குள் ஒன்றிணைய வேண்டும் என்ற இவர்கள் வாதிடுகின்றனர்.

முதலாவதாக இலங்கையில் இருந்த சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் ‘ஹரிஜன்கள்’ என்ற பொது இந்துத்துவ அடையாளத்தால் அழைக்கப்படவும் இல்லை அவ்வாறு அவர்கள் ஒரு மத அடையாளத்தின் கீழ் ஒருபோதும் ஒன்றுபட்டுப்போராடவும் இல்லை.யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் என்று குறிப்பிடப்பட்டாலும் பொது அரசியல் வழக்காக சிறுபான்மைத் தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள்.தீண்;டாமையின் விச்சு 1970 களுக்கு முன்னர் இருந்ததைப் போல இப்போது இல்லை.அதேபோல அடிமை குடிமை முறையும் இப்போது இல்லை.ஓடுக்குபவனை திருப்பி அடிக்க திராணியற்று அல்லது உரிமையற்று எல்லாம் தலைவிதி என்று சொல்லிக்கொண்டிருந்த சமூகம் இப்போது தாயகத்தில் இல்லை.இந்தியவில் தலத் தலித்தியம் என்ற சொல்லுருவாக்கத்துக்கு அடிப்படையாக இருக்கும் களயதார்த்தம் ஈழத்தில் இல்லை. ஈழத் தமிழர்களான எங்களைப் பொறுத்த வரை நாங்கள் தமிழர்கள் என்ற பொது அடையாளத்துக்குள் நின்று எங்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கம் எதிராகப் போராடுவதே இன்றைய தேவையாகும்.

ஆறுமுகநாவலர் தமிழ்தேசியவாதத்துக்கு அடித்தளம் இட்டவர் என்று கூறுவதன் மூலம் அவர் சாதிய மேலான்மையை நிலை நிறுத்தியவர் என்று நிறுவி அதனால் தமிழ் தேசியம் என்பதே அதை நிலை நிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டது எனறு காட்ட முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய சிந்தனை என்பது ஒரு சமூகத்துக்குள் இருக்கும் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து அந்த சமூகத்தை ஒரே இனம் என்ற அடிப்படையில் ஒன்றுபட வைப்பதாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ சாதி பார்த்ததன் மூலம் தமிழினத்தை பிளவுபடவைத்தார். ஐரோப்பியர்களின் வருகையால் பிடி தளர்ந்து போன சாதிகட்டமைப்பை சற்சூத்திரக் கோட்பாடு என்ற ஒன்றைக் கொண்டு வந்து இறுக்கமாக்கினார்.ஆங்கிலக் கல்வி கற்று பைபிளை அனைவரும் படித்துப் புரிந்தகொள்ளக் கூடிய இலகு தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்து கிறீஸ்தவ மதமாற்றத்துக்குஆரம்பத்தில் மறைமுகமாக துணைபோன அவர் அடுத்தட்டு மக்கள் மதம்மாறி ஆங்கிலக் கல்வி கற்று வளர்ச்சியடைவது தனது சமூகமேலாண்மையை பாதிக்கும் என்று உணர்ந்துகொண்டதும் கிறீஸ்தவமத எதிர்ப்பை முதன்மைப்படுத்தினார்.(அந்தக்காலகட்டத்தில் பைபளை ஆறுமுகநாவலரைப் போல எழிமையான தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் படி எவரும் மொழி பெயர்க்கவில்லை.)சைவ மேன்மையை வலியுறுத்திய அவர் கிறிஸ்த்தவ மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் அனைவனையும் ஒரே இனம் ஒரே மதத்தவர் என்ற அடிப்படையில் ஒன்றிணைக்கும் தேசியச் சிந்தனை உடையவராக இருந்திருந்தால் அவர் தான் உருவாக்க்pய சைவப்பிரகாச வித்தியா சாலைகளில் தமிழர்கள் என்ற அடிப்படையில் எந்தவித வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி கற்கும்வாய்ப்பை கொடுத்திருப்பார். ஆனால் தான் எழுதி வெளயிட்ட சைவசமயப் பாடப்பத்தகங்களில் எல்லாம் சாதியை வலியுறுத்தி தமிழ் மக்களை பிளவு படுத்தினார்.ஒரு சமூகத்தின் உயிர்நாடியாகவும் தேசிய அடையாளமாகவும் இருப்பது கிராமியக் கலைகளாகும். அந்தக் கலைகளின் நிகழ்களங்களாக ஆலயங்களே இருப்பது வழக்கமாகும் .ஆனால் ஆறுமுக நாவலரோ இழிசனர்களர்கள் என்று தான் கருதிய ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் இந்தக் கலைகள் ஆலயங்களின் புனிதத்தை கெடுப்பதாக கூறி அவற்றை ஆலங்களில் நிகழ்த்தக்கூடாதென்று தடை செய்ததன் மூலம் இன்னொரு விதத்திலும் தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு இடையூறு செய்தார்.ஆறுமுக நாவலர் சிறந்த தமிழ் அறிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.அவர் தமிழுக்கு செய்த நன்மை 30 வீதம் என்றால் தமிழ் சமூகத்துக்கு செய்த தீமை 70 வீதமாகும். எனவே ஆறுமுக நாவலரில் இருந்தே தமிழ் தேசியவாதம் தோற்றம் பெற்றது என்று கூறுவது எற்புடையதல்ல.அவ்வாறே தமிழர்களுடைய உரிமைப்போர் யாழ்ப்பாண மேல்தட்டு பிரிவினரால் அவர்களுடைய வர்க்க நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது என்று கூறுவதும் வரலாற்றை திரிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு முன்வைக்கப்படும்ஒரு கூற்றாகும்.

குடாநாட்டில் சாதி ரீதியாக ஓடுக்ப்பட்ட மக்கள் தாங்கள் குடியிருந்த நிலைத்தை தங்களுக்கு சொந்தமாக்குவதற்கும் சொந்தமாக புதிய நிலங்களை வாங்கும் உரிமையை பெறுவதற்குமாக 1892ம் ஆண்டும் 1904 ம் ஆண்டும் நடந்திய நில உரிமைப் போராட்டங்களும் (மண்ணுக்கான போராட்டங்கள்;1910 ம் ஆண்டும் 1920 ம்ஆண்டும் நடத்திய கற்வி கற்கும் உரிமை மற்றும் மேலாடை அணியும் உரிமை கல்வீடு கட்டும் உரிமை என்பவற்றுக்காக நடத்திய போராட்டங்களும் 1935 மற்றும் 1960 களில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுமே தமிழ் தேசிய சிந்தனையின் உருவாக்கத்திற்கான அடிப்படைகளாகும்.ஒரு சமுகம் எதிர்கொள்ளும் அக-புற முரண்பாடகளின் ஐக்கியமும் போராட்டமும் தான் அந்த சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி தள்ளுகிறது என்பது இயங்கியல்விதியாகும் .இந்த வகையிலேயே தமிழ் சமூகம் முதலில் தனக்குள் இருந்த அகமுரண்பாட்டுகளுக்கு எதிராக போராடி அதன் அடுத்த கட்டமாக தன் மீது புற நிலையில் இருந்து திணிக்கப்பட்ட பௌத்த சிங்கள பேரினவாதத்தக்கு எதிராக தற்போது போராடுகிறது.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுடைய விடுதலை உணர்வை சிதைப்பதற்கும் தமிழ்தேசிய ஒருமைப்பாட்டை குலைப்பதற்கும் பிரதேசவாதம் சாதியம் ஆகிய நட்பு முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக மாற்றும் முயற்சியில் திட்டமிட்ட ஈடுபட்டு வருகிறது.இதற்காக ஒரு பெரிய கருத்தில் போரையே அது தொடுத்திருக்கிறது. அதன் ஒரு அங்கம் தான் விடுதலைப்புலிகள் ஒரு குறிப்ப்pட்ட வர்கக்த்தினரின் நலன்களுக்காக மட்டும்தான் போராடுகிறார்கள் என்று சித்தரிக்க முயல்வதாகும்.புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் போராட்டத்தின் ஆதார சக்தியாக ஒன்ற திரள்வவதை தடுப்பதற்கான வேலைத் திட்டத்தையும் சிறீலங்கா அரசு செய்துவருகிறது.

இந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக இந்துத்துவத்தை நியாயப்படுத்தவது பெரியாரை தூற்றுவது ஆகிய இரண்டு விடயங்கள் நடந்து வருகின்றன. தலித்தியம் பேசபவர்கள் புலி எதிர்ப்பை அதனுடன் இணைப்பதைப் போல இந்துத்துவத்தை நியாயப்படுத்தம் பெரியாரை தூற்றும் பிரிவினர் தமிழ் தேசிய ஆதரவு என்ற விடயத்தையும் தங்களது கருத்தியலுடன் இணைக்கின்றார்கள்.தலித்தியத்தை தாயகத்துக்கு இறக்குமதி செய்யும் நினைக்கும் பிரிவினர் தமிழ் தேசியம் என்பதே மேல்தட்டுப்பிரிவினரின் நலன்களுக்காக அடித்தட்டு மக்களை ஓடுக்குவது என்று கூறிவருவதற்கு சாட்சி செல்வதைப் போலவே இந்துத்துவ ஆதரவு மற்றும் பெரியார் எதிர்ப்பு என்பவற்றை முதன்மைப்படுத்துபவர்களுடைய எழுத்துக்கள் இருக்கின்றன.

இந்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன மதம் என்பது வேறு தமிழர் மதம் என்பது வேறு என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.ஒவ்வொரு சமூகமும் தனக்கென்று ஒரு மெய்யியலை கொண்டிருப்பதைப் போலவே தமிழ் சமூகமும் தனக்கென்று தனித்துவமான மெய்யியலை கொண்டிருக்கிறது. தமிழர் மெய்யியல் எப்படி பார்ப்பணிய மெய்யியலால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை ஆராயுங்கள்.தமிழ் சமூகத்தில் இருந்த ஓதுவார்கள் அல்லது அந்தணர்களும் வர்ணக் கோட்பாட்டையும் அதன் சாராம்சமான புனிதம் தீட்டு என்பவற்றiயும் தங்களது சடங்காசாரங்களாக் கொண்டுள்ள பார்ப்பணியர்களும் ஒன்றல்ல என்பதை உணருங்கள்.சிவன் கந்தன் கண்ணன் காளி ஐயனார் முதலான தமிழ் கடவுள்கள் எப்படி பார்பணியக் கடவுள்களாக மாற்ப்பட்டார்கள் என்பதை ஆராயுங்கள். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் கோவிலான சிதம்பரத்தில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றஅந்தக்கோவில் தீட்சதர்களுடைய மனோபாவம் என்ன என்பதை விவாதியுங்கள். இந்து மதத்தின் மேன்மை சிறப்பு என்பதைபற்றி எல்லாம் மதம் என்ற ஒரு தனியான தலைப்பின் கீழ் ஆராயுங்கள்.இந்து மதத்தில் உள்ள வர்ணக் கோட்பாடு சரியா தவறா என்பதை விவாதியுங்கள். தயவு செய்து அதை விடுத்து தமிழ் தேசியம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அதனுடன் இணைத்து பேசுவதற்கு முற்படாதீர்கள்.இந்துமத மேன்மைக்காவே விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்ற எதிரிகளின் பிரச்சாரத்துக்கு துணைபோகாதீர்கள்.தமிழ் தேசியம் என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் பொதுவானது பாரபட்சம் காட்டாதது.பிறப்பால் தொழிலால் மக்களை இழிவுபடுத்தாதது என்பதை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் காட்டுங்கள்.
அடுத்து பெரியார் பற்றி எழுதுகின்றவர்கள் உங்களுடைய நோக்கம் என்ன என்பதை தயவு செய்து வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள்.பெரியார் என்ன செய்தார்? அவர் சரியா பிழையா என்று விவாதிப்பதற்கு செலவழிக்கும் நேரத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை தமிழ்தேசியத்தின் பால் ஒன்றிணை ப்பதற்கு என்ன செய்யலாம். அடையாளம் இழந்து தெருவுக்கு வரும் இளைஞர் கூட்டத்தை நெறிப்படுத்துவதற்கு என்ன செய்யலாம். என்றெல்லாம் ஏன் சிந்திக்கக் கூடாது.தமிழகத்திலே 1982 ல் இருந்து இன்று வரை தழிழிழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளை பட்டி தொட்டிக் கிராமங்கள் எல்லாம் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்தவர்கள்-இன்றும் செய்து வருபவர்கள் பெரியாரின் திராவிடர் இயக்கத்தினராகும்.தேசியத் தலைவருக்கு தோள் கொடுத்ததில் இருந்து தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான பரப்புரையை தங்கள் சொந்தப் பரப்புரையாக வீடுவீடாக எடுத்துச் சென்று செய்ததில் இருந்து அனைத்து விடயங்களிலும் முன்னணியில் இருந்தவர்கள் திராவிடர் கழகத்தினர்.இன்று வரை தமிழகம் முழுவதும் குறைந்தது திராவிடர் கழகத்தின்; இலட்சக் கணக்கான தொண்டர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் உண்மையான தமிழ்தேசிய ஆதரவை கட்டிக்காத்து வருகிறார்கள்.
இன்றைக்கு தமிழகத்திலும் சரி இந்தியாவிலும் சரி தமிழ்தேசியத்துக்கு எதிராக இருப்பவர்கள் யார் ?அதை நசுக்குவதற்கு முனைபவர்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால் அத்தனைபேருமே பார்ப்பணியர்கள் என்பதை கண்டு கௌ;வீர்கள.; ‘சோ’ இராமசாமியில் இருந்து ‘இந்து’ ராம் சுப்பிரமணியம் சுவாமி மற்றும் ரோவையும் - சவுத் பிளாக் எனப்படும் வெளியுறவுத்துறை கொள்கை வகுப்பு பிரிவையும் ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பணர்கள் தான் என்பதை கண்டு கொள்வீர்கள்.

1982 ல் இருந்து 1987 வரை தமிழகத்தில் தங்கியிருந்த நான் தமிழகத்தின் பட்டி தொட்டி கிராமமெங்கும் பரப்புரைக்காக சென்றபோது அங்கு பெரியார் என்ற அந்த மனிதர் ஏற்படுத்திய தாக்கத்தை நேரில் கண்டிருக்கிறேன்.பெரியார் என்ற மனிதர் இல்லை என்றால் தமிழகத்தின் குப்பனும் சுப்பனும் கட்டியுள்ள கோவணத்தையம் பறிகொடுத்த நிலையில் அம்மணமாகத்தான் இன்றும் இருந்திருப்பார்கள்.இது தான் அங்குள் கிராமங்களின் கள யதார்த்தம்.அது கேரள எல்லையிலுள்ள களியக்காவலையாக இருந்தாலும் சரி கர்நாடக எல்லையிலுள்ள சத்திய மங்கலமாக இருந்தாலும் சரி ஆந்திர எல்லைக்க அண்மையிலுள்ள கும்மிடிப்புண்டியாக இருந்தாலும் சரி நிலைமை என்பது இதுதான்.எங்களுடைய தளத்தில் இருந்துகொண்டு பெரியாரை தூற்றுவதற்கும் விமர்சிப்பதற்கும் இப்போது என்ன தேவை வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.பெரியாரும் அவரது திராவிடர் கழகத்தினரும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது தீங்கிளைத்திருக்கிறார்களா? பெரியாரோ அல்லது அவர் வழி நடப்பதாகச் சொல்லும் திராவிட இயகக்த்தினரே சிறீலங்கா அரசுக்கும் பௌத்த சிங்கள பேரின வாதிகளுக்கும் துணை போயிருக்கிறார்களா?பெரியார் மீது உங்களுக்கு எற்படும் இந்தளவு காழ்ப்புணர்வு தமிழ் தேசித்தை ஒடுக்குவதற்கு அல்லும் பகலும் அயாராது உழைக்கும் -சிறிலங்கா அரசுக்கு நிபுணத்துவ ஆலோசனைகளையும் மறைமுக ஆயுத உதவிகளையும் வழங்கும் பார்ப்பணிய கொள்கை வகுப்பாளர்கள் மீது உங்களுக்கு ஏன் வரவில்லை.?

ஆனால் இந்த பெரியார் எதிர்ப்பு என்பது புலம் பெயர்ந்த தலித்தியவாதிகள் தங்கள் செயல்களை நியாயப் படுத்துவதற்கும் தமிழனத்துரோகிகள் தமிழகத்திலுள்ள தமிழ் தேசிய ஆதரவுதத் தளத்தை சிதைப்பதற்கும் தான் பயன்படும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இன்றைக்கு புலம் பெயர்ந்த நாடுகளிலே 90வீதமான தமிழ் மக்கள் சாதியத்தை கட்டிக்காக்கிறார்கள்.தங்கள் பிள்ளைகளுக்கு சாதிப் பெருமைகளை வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள்.தங்கள் பிள்ளகைள் சாதி விட்டு சாதி திருமணம் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.புலம் பெயர்ந்த தமிழ் இளையோரில் ஒரு குறிப்பிட்ட சத விகிதத்தினர் நன்றாகப் படிக்கிறார்கள் என்றால் அதை விட ஒரு மடங்கு அதிகமான பகுதியினர் சீரழிந்து போகிறார்கள்.இதுதான் யதார்த்தம்.என்று செல்கின்ற போது இல்லை அப்படிக் கிடையாது என்று சொல்வதன் மூலம்; நாங்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறோம்? யாரை ஏமாற்ற நினைக்கிறோம்?

சீரழிந்த போகிற இந்த இளைஞர் கூட்டத்தை பார்த்து ஊத்தையங்கள்.காவாலியள் பொறுக்கிகள் என்று சர்வ சாதாரணமாகச் சொல்லகிறோம். ஆனால் அவர்கள் இவ்வாறு தெருவுக்கு வருவதற்கு என்ன காரணம் என்று நாங்கள் ஆராயத் தயாரில்லை. அவர்களை சமூகப் பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்றும் யாரும் சிந்திப்பதில்லை. எங்களைப் பொறுத்தவரை அவர்கள் திருந்தாத கேசுகள் என்று கூறி ஓதுக்கிவிடுகிறோம்.ஏங்களுடைய நோகக்ம் என்ன ஒரு கறிப்பிட்ட பகுதியினர் டொக்கடர் எஞ்சினியர் எகக்வுண்டன் என்று சொல்லிக் கொண்டு ஊரில் போய் இறங்க இன்னொரு பகுதியினர் காவாலிகள் தெருச்சண்டியர்கள் என்று போய் இறங்கும் நிலையை வளர்த்துவிடுவதா?

1998 ம் அண்டு பாரிஸ் நகரத்தில் நான் நேரடியாக இறங்கி தகவல் திரட்டியதில் 116 இளைஞர்கள் சாதியத்தால் பாதிக்கப்பட்டு படிப்பை கைவிட்டு பெற்றோரை பிரிந்து தெருவுக்கு வந்ததை கணக்கெடுத்திருக்கிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக பாரிஸ் போன்ற பெரு நகரங்களில் பெற்றோருக்கம் பிள்ளைகளுக்கமான முரண்பாடு அதிகரிப்பதற்கும் அவர்கள் அடையாளம் இழந்து போவதற்கும் சாதியம் முக்கியமான காரமாக இருக்க்pறது.இதற்கு நூற்றுக் கணக்கான உதாரணங்களை என்னால் கூறமுடியும்.அடுத்து தமிழ் சமூகத்திடம் உள்ள ஒரு பொதுவான குணாம்சம் என்னவென்றால் ‘நான் பிடித்த முயலுக்க மூன்று கால்’ என்று பிடிவாதம் பிடிப்பது.யதார்த்ததை புரிந்த கொள்ள மறப்பது.அல்லது புரிந்தும் பரியாத மாதிரி நடிப்பது.

தயவு செய்து இந்தப் பிரச்சனையை ஆக்க பூர்வமாக விமர்சிப்பதற்கு முன்வாருங்கள்.நிறைய தேடல்களை செய்யுங்கள். நிறைய நூல்களை படியுங்கள்.ஆகக்பூர்வமான கருத்துக்களை முன் வையுங்கள். தயவு செய்து இந்தப் பிரச்சனையில் விதண்டாவாதம் செய்ய முற்படடாதீர்கள்.

யாழ் இணையத்திற்காக எழுதியது

கருத்துகள் இல்லை: