நம்பகத்தன்மை என்பது என்ன?
நம்புவது என்றால் ஏற்றுக்கொள்வது என்று சாதாரணமாக தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஒன்றை ஒருவர் நம்புவது என்பது அவரது உணர்வு மற்றும் விருப்பம் சார்ந்த விடயங்களாகும். இந்த உணர்வும் விருப்பமும் ஒருவருக்கு ஜெனடிக் எனப்படும் பரம்பரை மரபணுக்கூறுகளால் மட்டும் வந்துவிடுவது இல்லை. அவர் சார்ந்த சமூகத்தின் கலாச்சாரத் தளமும் மொழித் தளமும்தான் அதைக் கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு மனிதனுடைய சமூக அமைப்பும் அவன் வாழுகின்ற சூழலும்தான் அவனது நம்பிக்கைகளுக்கு அடிப்படையாக இருக்கின்றன.
சிறிலங்காப் படையினர் தமிழ் மக்களுடைய எதிரிகள் என்று நாங்கள் சொல்லுகின்ற போது மேலெழுந்த வாரியாக அதைச் சொல்வதில்லை. எங்களுடைய மண்ணை அவர்கள் ஆக்கிரமித்திருப்பதையும் எங்களுடைய மக்களை அவர்கள் கொன்று குவிப்பதையும் அடிப்படையாக வைத்துத்தான் நாங்கள் இந்த முடிவுக்கு வருகின்றோம். தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற பொதுக் குறிக்கோளை அடிப்படையாக வைத்து அவர்கள் செயற்படுவதனாலேயே தமிழ் இனத்தின் எதிரிகள் என்று அவர்களை நாங்கள் வரையறை செய்தகின்றோம்.
இந்த வரையறையை நாங்கள் தமிழர்கள் என்ற ஒரு சார்பு நிலையில் நின்றுதான் எடுத்திருக்கின்றோம். இந்த வரையறையைச் செய்ததில் எந்தவிதமான பொய்களுக்கோ மிகைப்படுத்தல்களுக்கோ நாங்கள் இடம் கொடுக்கவில்லை.
1948 பெப்ரவரி 4 இல் சிங்கள பௌத்த பேரினவாதிகள் இலங்கையின் ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றி தமிழினத்தையும் தமிழர் தாயகத்தையும் அழித்தொழிப்பதற்கு முடிவெடுத்த பின்பு அந்த முடிவை நடைமுறைப்படுத்தும் அடக்குமுறைக் கருவியாக சிறிலங்காவின் அரச படையினர் பயன்படுத்தப்பட்ட பின்பே அவர்கள் எங்கள் எதிரிகள் அவர்களை எதிர்த்து நாங்கள் போராடவேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வருகின்றோம். 1950களில் இந்த எண்ணக்கரு தோன்றி 1958 இனக்கலவரத்தில் அது உறுதிப்படுத்தப்பட்டு 1970களில் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தபோது அதை ஒடுக்குவதற்கு சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட - மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் இந்த எண்ணக்கரு ஒரு தீர்மானகரமான வரையறையாக மாற்றம் பெற்றது.
குறிப்பாக சொல்வதானால் சிறிலங்காப் படைகள் தமிழர்களின் எதிரிகள் என்ற இந்தக் கருத்து எங்களுக்கு முன்பிருந்த முதல் தலைமுறையில் தோற்றம் பெற்று எங்களுடைய தலைமுறையில் வலுப்பெற்று எங்களுக்கு அடுத்த எங்களுடைய பிள்ளைகளின் தலைமுறைக்கு விட்டுச்செல்லப்படுகிறது. அதைவிட இந்த மூன்று தலைமுறையிலும் இந்த கருத்தின் நம்பகத்தன்மை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சார்பு நிலையிலும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
இதேவிடயத்தை மேற்குலக நடுநிலைக் கோட்பாட்டின்படி கருத்துருவாக்கம் செய்கின்றபோது இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான ஒரு நாடு. இலங்கைத் தேசியம் என்பது சிங்களவர்கள், தமிழர்கள் முஸ்லீம்கள், பறங்கியர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியது. இதைச் சிதைப்பதற்கு முயலும் தமிழ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அரச படைகள் தீரத்துடன் போராடி வருகின்றன. இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதற்காக போராடுகின்ற அரச படையினர் தேச பக்தர்கள் என்று குறிப்பிடப்படும்.
உண்மையில் இதிலே எங்கே இருக்கின்றது உண்மையும் நம்பகத்தன்மையும். தமிழர்களை அழித்தொழித்து தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்று நினைக்கும் பௌத்த சிங்கள பேரினவாதிகளைப் பொறுத்தவரை இது ஒரு உண்மையான நடுநிலமையான செய்தியாகும்.
உண்மையும் நேர்மையும்.
நடுநிலமையாக செயற்படும் ஒரு ஊடகத்தில்தான் உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திகள் சொல்லப்படும், தகவல்கள் வெளிப்படுத்தப்படும் என்ற எண்ணம் மக்களுடைய மனங்களிலே பதிய வைக்கப்பட்டிருக்கிறது.
எங்களுடைய தாயகத்திலே எவ்வளவோ அநீதிகளையும் எத்தனையோ கொடுமைகளையும் சிறிலங்கா அரசும் அதனுடைய படைகளும் செய்கின்ற போதிலும் நடுநிலையோடு செயற்படுவதாக சொல்லிக்கொள்ளும் மேற்குலக ஊடகங்கள் இவற்றில பத்தில் ஒரு பகுதியையாவது வெளியே கொண்டு வந்ததில்லை. அல்லைப்பிட்டியில், வங்காலையில், பச்சிளம் குழந்தைகள் படுபாதகமான முறையில் கொல்லப்பட்ட போதும் இந்த ஊடகங்களின் நடுநிலைக்குரிய விடயமாக அவை தென்படவி;ல்லை.
விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் சேர்க்கிறார்கள் என்ற செய்திக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் இந்த மேலாதிக்க ஊடகங்கள் இ;ந்த படுபாதக செயல்களுக்கு நூற்றில் ஒரு பங்கு முக்கியத்துவம் கூட கொடுக்கவில்லை. இங்கே நடுநிலையின் பேரால் உண்மையும் நேர்மையும் புதைகுழிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.
உண்மையான உண்மை
உண்மை என்று ஒன்று இருக்கின்றதா, என்று இந்த உண்மை தொடர்பான பல சர்ச்சைகளும் உலகத்தில் இருக்கின்றன. உண்மை என்பதே சார்புத் தன்மையுடையது, ஒருவர் பார்க்கும் பார்வையைப் பொறுத்தது, ஒருவருக்கு உண்மையாகத் தெரிவது மற்றொருவருக்கு பொய்யாகத் தெரியும் என்பது இந்த உண்மை தொடர்பாக முன் வைக்கப்படும் கருத்துக்களில் முக்கியமானதொன்றாகும். உதாரணமாக விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற விடுதலைப் போராளிகள் என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையான ஒரு கூற்றாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு சில துரோகிகளைத் தவிர மற்ற அனைவருக்கும் இந்தக் கூற்று ஏற்புடையதொன்றாகும். ஆனால் சிங்களவர்களைப் பொறுத்தவரை இது ஒரு பொய்யான கூற்றாகும். அவர்களுடைய பார்வையில் விடுதலைப் புலிகள் என்றால் பயங்கரவாதிகள் ( ஒரு சிலர் விதிவிலக்காக அவர்களை போராளிகள் என்று ஏற்றுக்கொண்டாலும்) என்றே அர்த்தம் கொள்ளப்படுகிறது. இங்கே தமிழர்களுக்கு உண்மையாகத் தெரிவது சிங்களவர்களுக்கு பொய்யாகத் தோன்றுகிறது. இதிலே உண்மை எது பொய்யெது என்பதை தமிழ் தளம், சிங்களத்தளம் என்ற சார்பு நிலைகள்தான் தீர்மானிக்கின்றன. இதிலே மேற்குலக மேலாதிக் ஊடகங்களும் சிங்களத் தரப்பை இறைமையுள்ள அரச தரப்பாகவும் தமிழ் தரப்பை அரசின் இறைமைக்கு எதிராக போராடும் எதிர் தரப்பாகவும் கட்டமைத்து சிங்கள அரசின் பார்வையை உள்வாங்கி விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள், வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதற்கு முயல்கின்றன. இங்கே உண்மை என்பது அதிகாரத்தின் அடிப்படையில் இந்த மேற்குலக ஊடகங்களால் போலியாக கட்டமைக்கப்படுகிறது. இவர்கள் குறிப்பிடும் இந்த உண்மை உண்மையைப்போல் தோன்றும் ஆனால் உண்மையாக இருக்காது.
உண்மையால் கட்டமைக்கப்படும் பொய்.
ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்பது ஜேர்மன் சர்வாதிகாரி அடல்ப் கிட்லரின் ஆட்சியில் பரப்புரைக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் கோயாபல்ஸ் உருவாக்கிய கருத்தியலாகும். பொய்யை உண்மையென்று மக்கள் நம்பும்படி சொல்வதுதான் இன்றைய மேற்குலக ஊடகக் கருத்தியலாகும்.
அதெப்படி பொய் உண்மையாக முடியும் என்று சிலர் கேட்கக்கூடும். உதாரணமாக தீவிரமான கடவுள் நம்பிக்கையுடைய ஒருவரைப் பார்த்து அவர் சிறந்த ஆஸ்திகர் என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரைப் பார்த்து நாஸ்திகர் என்றும் கூறுகிறோம். கடவுள் நம்பிக்கை இல்லாத நாஸ்திகரைவிட கடவுள் நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்தான அதிகளவுக்கு கடவுளை நிந்தனை செய்பவராகவும், கடவுள் மறுப்பாளராகவும் இருக்கிறார் என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை.
ஒரு நாஸ்திகர் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதையோ அவரை வழிபடுவதற்கான வழிபாட்டு முறைகளையோ ஏற்றுக்கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை எல்லாமே பொய்யானவை. மனிதனைவிட மேலான சக்தி இல்லை என்பது அவரது கருத்தாகும். ஆனால் ஒரு ஆஸ்திகரைப் பொறுத்தவரை கடவுள் என்ற ஒருவர் இருக்கின்றார், அவரை வழிபடுவதற்கு சிறந்த வழிமுறைகள் இருக்கின்றன என்பதை அவர் சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்தக் கடவுள் என்பவர் யார்? சிவனா? விஷ்னுவா? கர்த்தரா? அல்லாவா? இவர்களை வழிபடுவதற்குரிய வழிபாட்டு முறைகளில் எது சிறந்தது என்பதில் இவருக்கு பெரிய பிரச்சினை. இந்துக்களில் சைவ சமயத்தவர்களுக்கு சிவன்தான் பெரியவர், முழுமுதல் கடவுள். வைஷ்ணவ சமயத்தவர்களுக்கு விஷ்னுதான் பெரியவர், அவர்தான் முழு முதல் கடவுள். இதில் சிவன் பெரியவரா, விஷ்னு பெரியவரா இரண்டுபேரையும் வழிபடும் ஆஸ்திகர்களுக்கிடையில் பெரிய போட்டி. சிவன் பெரிது என்பவர்கள் அடிமுடி தேடிய கதையையும், விஷ்னு பெரிதென்பவர்கள் பஸ்மாசுரனனிடமிருந்து சிவனை விஷ்னு காப்பாற்றிய புராணத்தையும், சொல்லி தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் என்று நிலைநாட்ட முயலுகின்றார்கள்.
கிறிஸ்தவர்களுக்கு கர்த்தர்தான் பெரியவர், மேன்மையானவர், இயேசு பாலன் அவருடைய திருக்குமாரன். கர்த்தரையும். இயேசுவையும் ஆராதிக்கும் தீவிர கிறிஸ்தவர்களுக்கு ஏனைய மதக்கடவுள்கள் ஏற்புடையவர்களல்ல. சில அதி தீவிர கிறிஸ்தவர்கள் ஏனைய கடவுள்களை சாத்தான்கள் என்று அழைப்பதுமுண்டு.
முஸ்லீம்களுக்கு அல்லா மட்டும்தான் கடவுள். அவருக்கு உருவம் கிடையாது. ஐந்து வேளை அல்லாவைத் தொழுது வழிபடும் இஸ்லாமிய மார்க்கம்தான் உலகில் சிறந்தது. ஏனையவை எல்லாம் இழிந்தவை.
இதிலே இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் என்று மூன்று மதங்களையும் கடைப்பிடிப்பவர்கள் தங்கள் தங்கள் மதக் கடவுள்களையும் அந்த கடவுள்களை வழிபடும் மதச் சடங்குகளையும் நம்பும் - ஏற்றுக்கெ;hள்ளும் அதே நேரத்தில் ஏனைய கடவுள்களையும் மதங்களையும் நிராகரிப்பதுடன் நிந்திக்கவும் செய்கிறார்கள்.
இந்த கடவுள் நிந்தனை என்பது நாஸ்திகர்கள் செய்யும் கடவுள் நிந்தனையை விட அதிகமானதாகவும் வன்முறைசார்ந்ததாகவும் இருக்கிறது. இன்று உலகிலே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளிலே நடைபெறும் பல்வேறு கலவரங்களுக்கு கடவுளே காரணமாக இருக்கிறார். இதிலே முக்கியம் என்னவென்றால் ஆஸ்திகன் என்ற உண்மைக்குப் பின்னால் நாஸ்திகன் என்ற பொய்யும் மறைந்திருப்பதேயாகும். இந்த முறையைத்தான் மேற்குலக மேலாதிக்க சக்திகளும் மேலாதிக்க ஊடகங்களும் தேசங்கள், தேசிய இனங்கள், மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்களை சிதைப்பதற்காக திட்டமிட்டு கட்டமைத்து பரப்பி வருகின்றனர்.
சார்பு நிலைக்கும் நம்பகத் தன்மைக்குமான இடைவெளி
மேற்குலக மேலாதிக்க ஊடகங்கள் ‘நடுநிலை’ என்ற பெயரில் தாங்கள் விரும்புகின்ற பக்கச் சார்பான பொய் கருத்தை உண்மையான கருத்து என்று மக்கள் நம்புகின்ற விதத்தில் மக்களுக்கு விருப்பமான வடிவத்தில் கொடுத்து, உலகமயமாயதலுக்குத் தேவையான நுகர்வுக் கலாச்சாரத்துக்குள் அவர்களை சிக்க வைத்துக் கொண்டிருக்கிற போது, ‘தனது விடுதலைக்காகப் போராடுகின்ற ஒரு இனம் என்ற தளத்தில் இருந்து ஒரு தனித்துவமான ஊடகக் கருத்தியலை உருவாக்க வேண்டும் என்று சிந்திக்கின்ற நாம் எங்களுடைய கருத்தை மக்கள் விரும்புகின்றபடி, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுகின்றபடி எப்படிக் கொடுப்பது ? என்பது ஒரு முக்கியமாகக் கேட்டகப்பட வேண்டிய ஒரு கேள்வியாகும்.
இந்தக் கேள்விக்குரிய விடையை பின்வருமாறு கூறிலாம் 'ஒரு தவறான கருத்தை அது தவறு என்று தெரிந்து கொண்டே அதை மூடிமறைத்து மக்கள் மீது திணிக்க கூடாது. எங்களுடைய கருத்து சரியான கருத்தாகவும் நியாயத்தின் பாற்பட்ட கருத்தாகவும் இருக்க வேண்டும். இதிலே ‘சரியானது நியாயமானது’ என்பதை எங்களுடைய மக்களுடைய தளத்திலே (மக்களுடைய தளம் என்கிற போது இனம் மொழி எல்லாமே அதற்குள் அடங்கும்) நின்று நாங்கள் தீர்மானிக்க வேண்டும். ‘நாங்கள் மக்களோடு நிற்பவர்கள், மக்களுக்காக போராடுபவர்கள் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள்’என்ற எண்ணம் மக்களுக்கு வருகின்ற போது ‘இவர்கள் சொல்வது சரியாக இருக்கும்’ என்கின்ற நம்பகத் தன்மை இயல்பாகவே அவர்களுக்கு ஏற்படும்.
ஏற்கனவே ஊடகவியலில் சார்பு நிலை என்றால் ‘அது பிரச்சாரத் தன்மை உடையது. பொய்கள் நிரம்பியது.மிகைப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டது’ என்ற கருத்து மக்கள் மத்தியிலே விதைக்கப்பட்டிருக்கிறது. இதை முதலில் தகர்த்தெறிய வேண்டும். நடுநிலை என்பது ஒரு சந்தர்ப்பவாதம் என்பதையும் உண்மையான உண்மையையும், உண்மையான களயதார்த்ததையும் மூடி மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு போலி வடிவம் என்பதையும் மக்களுக்கு அம்பலப்படுத்தவேண்டும். சமுக அக்கறையுடனும் சமூகத்தளம் சாhந்தும் எழுதப்படும் எழுத்துக்களே உண்மையானவை என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.இதற்கு ‘தகவல் தெரிவிப்பதற்கும் பிரச்சாரத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு’ என்ன என்பதையும், அதை எப்படிக் கையாள்வது என்பதையும் தெளிவாக வரையறுக்க வேண்டும்.
தகவல் தெரிவிப்பதும் பிரச்சாரமும்
தகவல் தெரிவிப்பதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி தான் இருக்கிறது. ஒரு தகவலை மக்களுக்கு தெரிவிக்கும் விடயத்தில் இந்த இடைவெளி அதிகரிக்கும் போது அது புதினத் தன்மையுள்ளதாகவும், குறுகும் போது பிரச்சாரத் தன்மையுள்ளதாகவும் மாறுகிறது.
ஒரு தகவலை அல்லது சம்பவத்தை ஒரு தடவை அதுவும் முதல் தடவை சொல்லும் போது அது செய்தியாகிறது.(அதில் புதினத் தன்மை இருக்கும்). இரண்டாவது தடவை அதை திரும்பிச் சொல்லும் போது அது பிரச்சாரமாகிறது.
ஏற்கனவே நிகழ்ந்த ஒரு செயல் அல்லது சம்பவம் ஊடகங்களால் மீள் நிகழ்த்தலுக்கு உள்ளாக்கப்படும் போது தான் அதற்குரிய அடையாளமும் வடிவமும் அர்த்தமும் கொடுக்கப்படுகின்றது என்று பார்த்தோம்.இந்த மீள்நிகழ்தல் நடைபெறும் போது அது நூற்றக்கு நூறு விதம் அப்படியே நிகழ்த்தப்படுவதில்லை.
ஒரு செய்தி மறுவாசிப்புக்கு அல்லது பிரதியெடுத்தலுக்கு உட்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் குறைந்தது 10 வீதம் இடைச் செருகல்களுக்கும் புனைவுகளுகக்கும் உட்படுகின்றது.
ஒரு செய்தியில் எந்தளவுக்கு இடைச் செருகல்களும் புனைவுகளும் ஒட்டிக் கொள்கிறதோ அந்தளவுக்கு அந்தச் செய்தி மக்களின் நம்பகத் தன்னமையயை இழந்துவிடும்.சிலர் ஆர்வக் கோளாறு காரணமாகவும் தாங்கள் சிறந்த சார்பு நிலையாளர்கள் என்று காட்டிக்கொள்வதற்காகவும் சில செய்திகளை அவற்றின் செய்திப் பெறுமதிக்கு அப்பால் பூதாகரமாக்கிவிடுகிறார்கள்.இது உடனடியாக மக்கள் மத்தியிலே ஒரு பரபரப்பை எற்படுத்தினாலும் கள யாதார்த்;தம் மக்களுக்கு தெரியவரும் போது அத்தகைய செய்திகளும் அவற்றை வெளியிடும் நிறுவனங்களும் கூட மக்களின் நம்பகத் தன்மையை இழந்துவிடுகின்றன.
மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு ஒரு செய்தியை அதன் செய்திப் பெறுமதிக்கு அப்பால் பூதாகரமாக்காமல் இருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

