புதன், 8 நவம்பர், 2006

தமிழ் தளத்தில் ஊடகவியல் 04

04கருத்தியலை கட்டமைக்கும் வழிமுறைகள்

ஊடகத்துறையில் கருத்திலை கட்டமைப்பதற்கொன்று நேர்கோட்டு முறை, சமாந்தரமுறை, ஊடறுக்கும் அல்லது ஊடுபாயும் முறை, பிரதிபலிப்பு முறை என்று நான்கு வழிமுறைகள் கையாளப் படுகின்றன.

01.நேர்கோட்டு முறை

நேர்கோட்டு முறை என்பது விடயத்தை உள்ளதை உள்ளபடி சொல்வதாகும். யார்த்த வாதம் என்றும் இது குறிப்பிடப்படும். உதாரணமாக ஒரு ஏ9 வீதியில் மெதுவாகச் சென்ற ஒருவாகனத்தை வேகமாக வந்த ஒரு வாகனம் மோதி 5 பேர் இறந்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம.; இதை இந்த நேர்கோட்டு முறையில் ஒரு செய்தியாக்கும் போது ‘கிளிநொச்சிக்கு அருகில் ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதுள்ளர்.இன்று காலை 9 மணியளவில், ஓமந்தையிலிருந்த யாழ்ப்பாணத்துக்கு பயணிகளை எற்றிச் சென்ற சிற்றூந்தும் எதிர் திசையில் வந்த திசையில் வந்த ஹண்டர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.’ ஏன்று எழுதப்படும்.
இதில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்தது. உயிரிழப்பு நேர்ந்தது. மக்கள் காயப்பட்டது என்று எல்லா விடயங்களும் இயல்பாக சொல்லப்படுகின்றன.
இந்த விபத்து நடந்த இடத்தில் நின்ற- அதை நேரில் பார்த்த அனைவரும் இதையே தான் சொல்லியிருப்பர்கள்.மக்கள் பார்த்த அதே பார்வையைத் தான் இந்தச் செய்தியை எழுதிய ஊடகவியலாளனும் பாத்திருக்கிறார் .அதை அப்படியே பதிவு செய்திருக்கிறார். ஒரு ஊடகவியலாளனுக்குரிய தேடல் மாற்றுப் பார்வை பார்த்தல் என்பவற்றுக்கான தேவை இங்கே ஏற்படவில்லை.
இங்கே இந்த விபத்து ஏன் நடந்தது? இதற்கு என்ன காரணம்? என்கின்ற உண்மையான செய்தி வெளிப்படுத்தப்படவில்லை. அதாவது இங்கே கண்ணுக்குத் தெரிந்த யதார்த்தத்தை பதிவுசெய்துவிட்டு கண்ணுக்கு புலப்படாத யதார்த்தம் ஒன்று இருப்பது மறைக்கப்படுறது.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுனர்களும் வீதி ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது அந்த வீதி அமைப்பும் , அந்த வீதியின் தற்போதைய நிலைமையும் கூட இந்த விபத்தக்கு காரணமாக இருந்திருக்கலாம்.ஒரு மனிதன், ஒரு மாடு அல்லது ஒரு நாய் வீதிக்கு குறுக்கே சென்றதால் கூட இந்த விபத்து நடந்திருக்கலாம்.
இப்படி ஒவ்வொரு சம்பவமும் செயலும் நடைபெறும்போது அவற்றக்கான காரண காரியங்களின்றி அவை நடைபெறாது. அந்தக் காரண காரியங்களை ஏன்? ஏதற்கு? எப்படி? யாரால்? என்ற கேள்விகளை எழுப்பிக் கண்டறிந்து வெளிப்படுத்துவது தான் ஒரு ஊடகவியலாளனுடைய தலையாய கடமையாகும்.
இந்த நேர்கோட்டு முறையில் இதற்கான அவசியம் இல்லாமல் போகின்றது.குறிப்பாகச் சொல்வதானால் தேசங்களினதும், தேசிய இனங்களினதும் எழுச்சியை அடக்குவதற்காக உலக மேலாதிக்க சக்திகளாலும் மேற்குலக ஊடக கொள்கை வகுப்பாளர்களாலும் பரிந்துரைக்கப்பட்ட அல்லது அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறையே இந்த நேர்கோட்டு முறையாகும். தேடல் இல்லாத ஒரு இனமும் அந்த இனத்தின் வரலாறும் , அந்த இனத்தின் மொழியும், வளர்சியின்றி அழிந்துபோய்விடும் என்ற வரலாற்று உண்மைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக ஊடகத்துறையில் திட்டமிட்ட இந்த முறை முதன்மைப்படுத்தப்படுகிறது.

02.சமாந்தர முறை

எதிர் எதிர் முரண்பாட்டை கட்டமைத்து விடயத்தை நகர்த்திச் செல்வது சமாந்தர முறை எனப்படுகிறது.உதாரணம் கதாநாயகன் எதிர் வில்லன், விடுதலைப்புலிகள் எதிர் சிறிலங்கா அரசாங்கம் அல்லது படையினர்.பிபிசி உட்பட்ட அநேகமான மேற்குலக ஊடகங்கள் இந்த முறையைத்தான் கையாழுகின்றன. ஒரு விடயத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பு கருத்தையும் சொல்வது தான் இந்த முறையின் உயர்ந்த நோக்கம் என்று கூறப்படுகிறது.உதாரணமாக ‘கொழும்பில் 5 தமிழர்கள் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.’ என்பது ஒரு சம்பவம் என்று வைத்துக் கொள்வோம் இதை இந்த சமாந்தர முறையின் கீழ் செய்தியாக்கும் மேற்குலக ஊடகங்கள் ‘கொழும்பில் சிறீலங்கா காவல்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் பொது விடுதலைப் புலிகள் இயக்க தீவிரவாதிகள் 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் முக்கிய அரசியல் தலைவர்களை கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகளால் வன்னியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சிறீலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் தமது உறுப்பினர்கள் இல்லை என்று விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர்.’ ஏன்று குறிப்பிடுவார்கள்.
சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட போது இந்த முறையில் அதை செய்தியாக்கிய மேற்குலக ஊடகங்கள் ‘சிறீலங்காவின் வெளிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் விடுதலைப்புலிகளால் கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை சினைப்பர் துப்பாக்கி மூலம் விடுதலைப் புலிகளே சுட்டுக் கொன்றதாக சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலையை செய்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விரைவில் குற்றாவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் குற்றசாட்டை மறுத்துள்ள விடுதலைப் புலிகள் இந்தப் படுகொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்’ என்று குறிப்பிட்டன.
இந்த இரண்டு செய்தியிலும் சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகள் என்ற இரண்டு எதிர் மறைகள் கட்டமைக்கப்பட்டு இரண்டு தரப்பு கருத்துக்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கம் என்பது சட்டபூர்வமான அமைப்பு என்ற மேற்குலகின் எழுதப்படாத ஊடகவிதிக்கமைய சிறீலங்கா அரச தரப்பு கருத்து முதன்மைப் படுத்தப்பட்டு விடுதலைப்புலிகள் தரப்புக் கருத்து இரண்டாம் பட்சமாக்கப்பட்டிருக்கிறது. அதாவது இரண்டு தரப்பு கருத்தையும் சொல்கிறோம் என்ற போர்வையில் ஒரு தரப்புக் கருத்தை முதன்மைப் படுத்தி மறு தரப்புக் கருத்தை ஒப்புக்குச் சொல்வது இந்த முறையில் உள்ள முக்கியமான அம்சமாகும்.
சில சந்தர்ப்பங்களில் அத்தி பூத்தாற் போல இந்த மேற்குலக ஊடகங்களில் விடுதலைப்புலிகள் தரப்பு கருத்தை முதன்மைப்படுத்தி செய்திகள் வருவதுண்டு. இப்படியான சந்தர்பங்களில் ‘ஆகா மேற்குலகு என்றால் மேற்குலகு தான்.’ என்று பூரித்துப் போகிறோம். இந்த ஊடகங்களில் அப்படி ஒரு செய்தி வந்தவுடன் ‘எங்களுக்கு அங்கீகாரம் தந்திருக்க்pறார்கள். எங்களது போராட்டத்தின் நியாயத் தன்மையை உலகம் புரிந்துகொள்ளப் போகிறது’ என்று தவறான கணக்குப் போட்டு விடுகின்றோம். இதற்குப் பின்னால் நிறுவன நலன் பேரம் பேசும் தன்மை என்பன அடங்கியிருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
இந்த ஊடகங்கள் கட்டமைத்த வைத்திருக்கின்ற ஆதிக்க கருத்தியல் தளத்தை உடைத்துக்கொண்டு உண்மையான கருத்து உண்மையான செய்தி மக்கள் மத்தியில் சென்றடைவதென்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல.இந்த ஊடகங்கள் வெளியிடும் ஒரு செய்தியை ஒரு கட்டுரையை ஒரு ஆவணப் படத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவற்றின் வாசகர்களும் நேயர்களும் சுலபத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிட மாட்டார்கள். அப்படி ஒரு முடிவுக்கு வர இவர்கள் விடவும் மாட்டார்கள். இன்னொரு மோசமான- பொய்யாக கட்டமைக்கப்பட்ட ஒரு செய்தியை போட்டு அதை தடுத்துவிடுவார்கள்.
உண்மையில் ஊரில் ‘தான் ஒரு பெரிய மனிதன்’ என்ற செல்லிக் கொள்ளும் ஒருவர் ஒரு பெண்னை தொடர்ந்து உத்தமி பத்தினி செல்விட்டு திடீரென்று ஒருநாள் அவள் மோசமான நடத்தை உள்ளவள்.அதை நான் கண்ணால் பார்த்தேன் என்றால் நிச்சயமாக மற்றவர்கள் அதை நம்பிவிடுவார்கள். ‘அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்ற தான் மக்கள் சொல்வார்கள். பிபிசி சொன்னால் அது சரியாக இருக்கும் என்று நம்முடைய அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் நம்புவதற்கும் இந்த முறைதான அடிப்படையாகும்.
ஊடக நிறுவனங்கள் உலகில் தங்களை தீர்மானகரமான சக்திகளாக நிலை நிறத்திக் கொள்வதற்கு இந்த முறையை கையாழுகின்றன. தங்களுடைய மேலதிக்கத்தில் யாராவது குறுக்கிடும் போது அவர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு அவர்களை பேரம் பேசலுக்கு உள்ளாக்க வைத்து பணிய வைத்துவிடுகிறார்கள்.

03 ஊடறுக்கும் ஊடுபாயும் முறை

இது எதிரெதிர் முரண்பாட்டை கட்டமைத்து விடயத்தை சமாந்தரமாக நகர்த்திச் சென்;று முக்கிய திருப்பு முனையில் ஒரு தரப்பை அம்பலப்படுத்தி, மறு தரப்பை நியாப்படுத்துவதாகும். அதாவது ஒரு சினிமாவில் கதாநாயகனையும் வில்லனையும் சமதரப்பாகக் காட்டிச் சென்று முக்க்pய கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் வில்லனை அடித்து வீழ்த்தி வெற்றி கொண்டு நியாயத்தை நிலை நிறுத்துவதாகக் காட்டுவதாகும்பொதுவாக சிஎன்என் முதலான அமெரிக்க ஊடகங்களிலும் ஹொலிவுட் திரப்படங்களிலும் இந்த முறையே கையாளப்படுகிறது. இந்த ஊடகக் கருத்தியில் முறை என்பது அமெரிக்க முதன்மை வாதத்தை கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டது என்ற விமர்சிக்கப்படுகிறது.
ஊதாரணமாக லக்ஷ்;மன் கதிர்காமர் விடயத்தை இந்த முறையில் செய்தியாக்கும் போது சிறீலங்காவின் வெளிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் விடுதலைப்புலிகளால் கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை சினைப்பர் துப்பாக்கி மூலம் விடுதலைப் புலிகளே சுட்டுக் கொன்றதாக சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலையை செய்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் குற்றசாட்டை மறுத்துள்ள விடுதலைப் புலிகள் இந்தப் படுகொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்தகாலத்தில் விடுதலைப்புலிகள் பிரேமதாசா உட்பட்ட பல உயர் அரசியல் தவைர்களை கொலை செய்தததிலிருந்து லக்ஷ்மன் கதிர்காமரையும் அவர்களே கொலைசெய்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் விடுதலைப்புலிகள் அனைத்துவிதமான பயங்கரவாதச் செயல்களையும் கைவிட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.’ குறிப்பிட்டிருந்தார்கள்.
இங்கே சிறீலங்கா அரச தரப்பு விடுதலைப் புலிகள் தரப்பு என்ற இரண்டு தரப்புக் கருததுக்களும் சொல்லப்பட்டு இறுதியில் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்ற அமெரிக்கப் பார்வை முதன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது.

04.பிரதிபலிப்பு முறை

இது எந்த ஒரு விடயத்தையும் சமூக அரசில் தளத்தில் வைத்துப் பார்க்கவேண்டும். பரந்துபட்ட மக்களுக்கான நலனை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்ககத்தை உடையது. இது ஊடக மேலாதிகக் கருத்தியல்களுக்கு எதிராக 60 களில் பிரான்சில் உருவான ஊடக மறுமலர்ச்சி இயக்கத்தின் போது தோற்றம் பெற்றது. ஜோன் போல் சாத்தர்,பியர் போதிலார்,ஜக் தெரிதா போன்ற நவீன தத்துவவாதிகள் பலர் இந்த முறையின் தோற்றத்துக்கு உந்த சக்திகளாக இருந்திருக்கிறார்கள்.
ஒரு சம்பவம் அல்லது ஒரு செயல் நடைபெறும் போது அதன் செய்தி பெறுமதியும் அது தொடர்பான கருத்தியல் பார்வையையும் பரந்துபட்ட மக்களுடைய நலன் என்ற தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்பதே இந்த முறையின் அடிப்படையாகும்.
உதாரணமாக ‘கொழும்பில் 5 தமிழர்கள் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.’ என்ற சம்பவத்தை இந்த முறையின் கீழ் செய்தியாக்கும் போது ‘கைது செய்யப்பட்டவர்கள் யார்? அவர்களை கைது செய்தவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பவேண்டும். அதவாது யார் ? யாரால் ? ஏன் ? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எங்களுடைய தமிழ் தளத்திலிருந்து எழுப்பி, இவற்றிலிருந்து கிடைக்கும் விடைகளுக் கூடாக இதை ஒரு செய்தியாக்குவது.இங்கே இவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை, தமிழர்கள் அதிலும் தமிழர் தாயகப் பிரதேசத்தை சேர்ந்த தமிழர்கள் என்பதாகும். யாரால் கைது செய்யப்பட்டார்கள் என்பதற்கு விடை, சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் என்பதாகும். ஏன் கைது செய்யப்பட்டார்கள்? என்ற கேள்விக்கான விடை புதிதாக கொழும்புக்கு வந்த தமிழர் தாயகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் என்பதால். எதற்கு கைது செய்யப்பட்டார்கள்? என்ற கேள்விக்கான விடை கொழும்பின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் தாங்கள் முனைப்பாக இருக்கிறோம் என்பதை காண்பிப்பது.இதை எப்படிச் செய்தியாக்குவது என்ற அடுத்த கேள்வி எழுப்புகிற போது சிறிலங்கா புலனாய்வுத்துறை, தமிழர் தரப்பு என்ற இரண்டு தரப்புக்கள் வருகிறன.
இதிலே சிறீலங்கா புலனாய்வத்துறையை தமிழர்களுக்கு எதிரான பௌத்த சிங்கள பேரினவதத்தின் பிரதிநிதிகள் என்ற தளத்தில் வைத்துவிட்டுதமிழர் தரப்பில் இதை செய்தியாக எழுதும் போது ‘கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை இன்று முற்றுகையிட்ட சிறீலங்கா புலனாய்வத் துறையினர் 5 அப்பாவித் தமிழ் இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணக் குடா நாட்டைச் சேர்ந்த இந்த 5இளைஞர்களும் வெளிநாட்டுக்கு செல்வதற்காக கொழும்புக்கு வந்ததாகத்தெரிவிக்கப்படுகிறது. இவர்களை விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் என்ற குற்றம் சுமத்தியுள்ள சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் மேலதிக விசாரணைகளுக்காக தமது பணிமனை அமைந்துள்ள நான்காவது மாடியில் தடுத்து வைத்துள்ளனர்.’ என்று எழுத வேண்டும்.தன்னுடைய இருப்புக்கும் விடுதலைக்குமாக போராடுகின்ற ஒரு தேசிய இனம் தனது தேசிய ஊடக கருத்தியலை கட்டமைப்பதற்கு இந்த முறையே சிறந்ததாக இருக்கும் என்று முன்மொழியப்படுகிறது

கருத்துகள் இல்லை: