செவ்வாய், 7 நவம்பர், 2006

எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்


வணக்கம்;


எனது வாழ்க்கை அனுபவங்கள் சமூக அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டம்-தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்ற இரண்டு தளங்களைக் கொண்டது.இந்தத் தளங்களிலே நான் பெற்றுக் கொண்ட அனுபவங்கள்,சந்தித்த அவமரியாதைகள் எனது வெற்றிகள் தோல்விகள் எனது பலம் பலவீனம் என்பவற்றை இங்கே பதிவதற்கு முற்படுகிறேன்.


குறைந்தபட்சம் 4 தசாப்த கால வரலாறு என் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. எந்த சமூக ஓடுக்குமுறைக்கு எதிராக நான் எனது வாழ்நாள் எல்லாம் போராடினேனோ எந்த சாதிய அரக்கனை ஒழிப்பதற்கு என் இளமைக் காலமெல்லாவற்றையும் அர்ப்பணித்தேனோ-அந்த அரக்கன் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் உயிராலும் இரத்தத்தாலும் எமது தேசத்தின் வீர வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் சகாவரம் பெற்று இங்கே புலம்பெயர்ந்த நாட்டுக்கு விமான மேறிவந்து ‘தகுதி என்பது பிறப்பால் வரவேண்டும்?’ என்று என் முன்னால் நின்று கெக்கலிகொட்டிச் சிரித்துக்கொண்டிருக்கிறான்.


வாழ்வதற்காய் போராடியது எனது வாழ்க்கையின் முற்பகுதி. போராட்டமே வாழ்க்கையாகியது எனது வாழ்க்கையின் பிற்பகுதி.எனது இந்த அனுபவப் பதிவுகளை படிப்பவர்கள் எங்கள் தமிழ் சமூகத்துக்குள்ளே புரையோடிப் போயிருக்கும் பிற்போக்கத் தனங்கள் தமிழ் தேசியத்துக்கு செய்யும் துரோகத்தனத்தை புரிந்து கொண்டு தமிழ்தேசியத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதற்காக இன்னும் உத்வேகமாக உழைத்தால் நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்

1 கருத்து:

மலைநாடான் சொன்னது…

சிவா சின்னப்பொடி!

வணக்கம். இன்னமும் உங்கள் பதிவுகள் வாசிக்கவில்லை. ஆனாலும் உங்களை அறிவேன்.(உங்களை அறியாதவரா?:) ) உங்கள் எழுத்துக்கள் நிச்சயம் நல்ல பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் என நம்புகின்றேன். நல்லதொரு தருணத்தில் தமிழ்மணத்தில் வந்துள்ளீர்கள். வாங்கோ!