புதன், 8 நவம்பர், 2006

தமிழ் தளத்தில் ஊடகவியல் 05

நடுநிலையும் சார்பு நிலையும்

மேற்குலக ஊடகங்களும், உலக மேலாதிக்க சக்திகளும் ‘நடுநிலை’ என்ற சொல்லை மிக உன்னதமான பண்புகளைக் கொண்ட ஒரு சொல்லாகவும் அந்தச் சொல்லுக்குரிய அர்த்தமும் அதனூடக கட்டமைக்கப்படுகின்ற கருத்தியலும் மிகச் சிறந்தது, உயர்ந்தது என்று திரும்பத் திரும்ப நமக்குப் போதித்திருக்கின்றன.
ஊடகத்துறையில் பெரிய மேதைகள் விற்பன்னர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலர் ‘ஊடகமென்பது நடுநிலையானதாக இருக்க வேண்டும். ஒரு ஊடகவியலாளனும் நடு நிலையான போக்கையே கடைப் பிடிக்கவேண்டும்’ என்று உபதேசம் செய்வதையும் நாங்கள் பார்க்கலாம்.
பல அச்சு ஊடகங்கள் ‘நடுநிலை நாழிதழ்’ ‘நடுநிலை வாரஇதழ்’ ‘நடுநிலை மாத இதழ்’ என்று பெரிய எழுத்தில் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்வதையும் நாங்கள் அவதானிக்கலாம்.
இலத்திரனியல் ஊடகங்களான பல வானொலிகள் தொலைக்காட்சிகள் இணையத்தளங்கள் கூட இந்த நடுநிலை என்ற சொல்லை தவறவிட்டதில்லை.
அந்தளவு இந்தச் சொல் இன்று ஊடகத்துறையிலே முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது.

நடுநிலை என்பது என்ன?

நடுநிலை என்பதற்கு சரியான அர்த்தம் ‘பக்கம் சாராமல் இருப்பதாகும்’. பக்கம் சாரமால் இருப்பதென்றால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள்,அரசியல் சமூக நலன்கள்,பொருளாதார நலன்கள், இன மொழி உணர்வுகள், இப்படி எந்தவித தாக்கமும் இல்லாமால் அனைத்தையும் அனைவரையும் சமமாக மதித்து அனைவருக்கம் சமமான சந்தர்ப்பம் வழங்கி செயற்படுவது என்று வரையறுக்கலாம். இன்றைய சமுச்சீரற்ற ஏற்றத் தாழ்வான இந்த உலகத்திலே எவராவது அப்படி இருக்கிறார்களா? அரசியல் சமூகம் சமயம் பொருளாதாரம் ஊடகம் என்று எந்தத் துறையிலாவது பக்கம் சாராத நடு நிலை என்று சொல்லக் கூடிய இந்தச் செயற்பாடு இருக்கிறதா? ஏன்றால் உண்மையான பதில் ‘இல்லவே இல்லை’ என்பது தான்.
தனி மனிதர்களில் இருந்து அமைப்புக்கள் நிறுவனங்கள் அரசாங்கங்கள்; என்ற அனைத்துமே சார்புத் தன்மை உடையவையே. தனி மனிதர்கள் கூட இன்னொருவரை சார்ந்திருக்காமல் வாழ முடியாது. தனி மனிதர்களுடைய சொந்தக் கருத்துக்களும் கூட அவர்கள் வாழும் சூழலையோ அந்தச் சூழலிலுள்ள சமுக அரசியல் பொருளாதார அடிப்படைகளையோ , மொழித் தளத்தையோ விட்டு வானத்தில் இருந்து குதிக்க முடியாது.
உதாரணமாக இன்று நமது தாயகத்திலே சிறீலங்கா அரசின் கொடூரமான இன ஒடுக்கு முறையும் இனஅழிப்பு நடவடிக்கைகளும் அதற்கு எதிரான வீரஞ் செறிந்த விடுதலைப் போராட்டமும் நடைபெறுகிறது. ஈழத் தமிழர் ஒருவர் ‘இதில் எனக்கு சம்மந்தம் இல்லை. நான் பக்கம் சாராதவன் நடு நிலைமையானவன் என்று கூறினால் அவரைவிட பெரிய பொய்யன் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் ஒட்டு மொத்தமான தமிழ் மக்களுக்கும் எதிராக சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் போது ‘நான் அதில் சம்பந்தப் படாதவன்’ என்று சொன்னால் அவர் அந்த ஒடுக்கு முறைக்கு எதிராக நடக்கின்ற நியாயத் தன்மையுடைய விடுதலைப் போராட்டத்தை மறுதலிக்கிறார் என்றே அர்த்தமாகும். இதன் மூலம் அவர் ஒடுக்கு முறையை ஏற்றுக் கொள்ளும் அரச சார்புத் தன்மையை கொண்டிருக்கிறார் என்பதே உண்மையாகும். சிறீலங்காவின் படையினர் தமிழர் தாயகப் பகுதியில் விமானக் குண்டு வீசசு நடத்தும்; போதோ எறிகணைத் தாக்குதல்கள் நடத்தும் போதோ அவரையே அவரது வீட்டையோ தவிர்த்துவிட்டுத் தாக்குதல் நடத்தாது. அந்த நபர் விரும்பாவிட்டாலும் சிறீலங்காஅரசின் இன ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் தமிழர்கள் என்ற அடையாளத்துக்குள் தான் அவரும் அடக்கப்படுவார்.
குறிப்பாகச் சொல்வதானால் நடு நிலைமை என்று சொல்வது அநீதிக்கு துணைபோகின்ற ஒரு சந்தர்ப்பவாதமாகும்.தமிழிலே இதற்கு மதில் மேல் பூனையாக இருப்பது என்று ஒரு அர்த்தமும் இருக்கிறது.

எதற்காக நடுநிலை?

உண்மையில் ஊடகத்துறையில் நடுநிலைமை என்று சொல்வது ஊடக நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்ற ஒரு வியாபாரத் தந்திரமாகும். மக்களை திசை திருப்புவதற்காக, ஏமாற்றுவதற்காக மக்களை சந்தைப் பொருட்களாக்கு வதற்காக கையாளப்படும் ஒரு செயல் முறையே இதுவாகும்..‘நடு நிலை என்றால் சரியானதாக இருக்கும், நேர்மையானதாக இருக்கும், உண்மையானதாக இருக்கும்’ என்கின்ற பிம்பம் அல்லது மாயை நமது மனத் தளத்திலே திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.‘சரியானது’ ‘உண்மையானது’ ‘நேர்மையானது’ என்ற இந்த சொற்பதங்கள் அவை குறிப்பிடும் அர்த்தத்தை ஒருபோதும் நூற்றுக்கு நூறு வீதம் வெளிப்படுத்தியதில்லை. உதாரணமாக தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்களப் படையினர் தங்களது செயல் சரியானது என்று நினைக்கின்றனர்.பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நீங்கள் போராடுகின்றீர்கள் என்று சிறீலங்கா அரசாங்கம் சொல்வதை அவர்கள் உண்மை என்று நம்புகின்றனர். தமிழர்களுக்கு எதிராக தாங்கள் கட்டவிழ்த்து விடுகின்ற இனஅழிப்பு நடவடிக்கைகளை அவர்கள் நேர்மையான செயற்பாடு அல்லது தங்களுக்கு விதிகக்ப்பட்ட கடமை என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மை என்பது அதுவல்லவே!
ஓரு மேற்குலக ஊடகம் அல்லது உள்ளுர் ஊடகம் ‘இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்திலும் தங்கள் கடமையை சரிவரச் செய்கின்றனர்.’ என்று செய்தி வெளியிட்டால் மேற்குலக ஊடகக் கோட்பாட்டின் படி அது ஒரு நடு நிலைமையான செய்தியாகும்.
ஈராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பை இன்னொரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ‘ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹ{சைன் பேரழிவு ஆயுதங்களை வைத்திப்பதாகவும் அதனால் உலகிற்கு ஆபத்து’ என்றும் புஷ் நிர்வாகம் கூறியதை மேற்குலக ஊடகங்கள் எல்லாமே வரிந்து கட்டிக்கொண்டு முதன்மைச் செய்திகளாக வெளிட்டன. ஆய்வுகள் விவாதங்கள் விமர்சனங்கள் என்று இந்த ஒரு விடயம் உடகங்களின் முதன்மையான இடத்தை பிடித்துக்கொண்டது. ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்த போது உலகை பேரழிவில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் சதாமின் அடக்கு முறையில் சிக்கியிருக்கும் ஈராக்கிய மக்களை விடுவிப்பதற்காகவும் அமெரிக்கா மேற்கொண்ட உன்னதமான நடவடிக்கையாகவும் அது சித்தரிக்கப்பட்டது. இந்தச் சித்தரிப்புக்கள் எல்லாமே நடுநிலையான ஊடகக் கோட்பாடு என்ற அடிப்படையிலே தான் மேற்குலக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது.
ஆனால் ஈராக் போரின் பின்பு இன்றுவரை அமெரிக்க அரசுத் தலைவர் ஜேர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தின் கூற்றை அடிப்படையாக வைத்து இந்த ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் எவையும் ஈராக்கில் கண்டபிடிக்கப்படவில்லை. சதாம் ஹ{சேன் ஆட்சியில் இருந்ததைவிட பல மடங்கு மோசமான அடக்குமுறைதான் இன்று ஈராக்கில் நிலவுகிறது. அமெரிக்க நலன்களுக்காக சன்னி, சியட் மதப்பிரிவகளுக்கிடையிலான மோதல்கள் கூர்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன. குர்திஷ் இனமக்களுக்கு சதாம் இளைத்த கொடுமை பற்றிப் பேசும் இந்த மேற்குலக ஊடகங்கள் துருக்கியிலே அந்த மக்களுக்கு இருக்கும் அடக்குமுறை பற்றியோ அந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றியோ பேசுவதில்லை.குர்திஷ் இனமக்களின் விடுதலைக்காகப் போராடிய அப்துல்லா ஒச்சலான் இன்றைக்கும் இவர்களைப் பொறுத்த வரை ஒரு பயங்கரவாதியாகும்.. ஈராக்கியப் போரிலே ஒருகுண்டு வெடிப்புச் சம்பவத்தின் போது ஒரு குழந்தையை அமெரிக்க படை வீரர் ஒருவர் காப்பாற்றுவது போன்ற ஒரு காட்சி அமெரிக்க தொலைக்காட்சிகளிலே அடிக்கடி காண்பிக்கப்படும். ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படையினர் மக்களுக்காகவே போராடுகின்றார்கள் என்பதை காண்பிப்பது தான் இதன் நோக்கம்.ஆனால் ஈராக்கில் அமெரிக்கப்படைகளின் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட குழந்தைகளின் காட்சிப்படங்களையும் யுத்தத்தை திணித்ததன் மூலம் சிரழிக்கப்பட்ட அவர்களது எதிர்கால வாழ்க்கையையும் இன்னமும் எவரும் உரிய முறையில் படம்பிடித்துக் காட்டவில்லை.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர்

‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று இப்போது இந்த மேற்குலக மேலாதிக்க ஊடகங்கள் ஒரு கருத்தியலை கட்மைத்துள்ளன. ‘பயங்கர வதம் என்றால் என்ன?’ என்பதற்கு இதுவரை இந்த ஊடகங்களாலேயோ இந்த ஊடகங்களை இயக்ககின்ற மேலாதிக் சக்தினாளினாலேயோ ஒரு தெளிவான வரைவிலக்கணம் கொடுக்கப்படவில்லை. அவ்வாறே பயங்கரவாதத்துக்கும் விடுதலைப் போராட்டங்களுக்கும் இடையிலான வேறுபாடும் வரையறுக்கப்படவில்லை. இந்த நிலையில் தங்களுடைய மேலாதிக்க நலன்களுக்கு எதிரான அல்லது அவற்றைப் பாதிக்க கூடிய அனைத்துமே பயங்கரவாதம் என்றும் தங்களது நோக்கங்களுக்கு துணைபோகின்ற அல்லது அதற்கான புறச் சூழல்களை உருவாக்குகின்ற அனைத்துமே ஜனநாயகச் செயற்பாடுகள் என்றும் விவாதத்துக்கோ விமர்சனத்துக்கோ இடமின்றி இந்த மேலாதிக்க ஊடகங்களால் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகின்றன.

அரசுகளை அதிகாரமிழக்க வைப்பது

இன்றைக்கு பல மேற்குலக மேலாதிக்க ஊடகங்கள் சில சந்தர்ப்பங்களில் அதிரடியாக சில செய்திகளை கட்டுரைகளை ஆவணப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு. ஈராக்கில் அமெரிக்க மற்றும் பிரித்தானியப்படைகள் மேற்கொண்ட சித்திரவதைகள் கியூபாவின் குவாந்தனாமோ சிறையில் அமெரிக்கப்படையினரால் மேற்கொள்ப்பட்ட சித்திரவதைகள், நிக்சன் அமெரிக்காவின் அரசத் தலைவராக இருந்த காலத்தில் இடம்பெற்ற வேட்டர் கேற் ஊழல், கிளின்டனுக்கும் மொனிக்கா லிவின்சிக்கும் இடையிலான பாலியல் தொடர்பு, பிரித்தானிய தலைமை அமைச்சர் ரொனி பிளேயருடை நிர்வாகத்தில் இடம்பெற்ற ஊழல்கள் என்பவற்றை இதற்கான உதாரங்களாகக் காட்டலாம். இவற்றை பார்த்துவிட்டுத் தான் நம்மவர்கள் பலர் ‘இதுவல்லவோ ஊடகத்துறையின் ஐனநாயகப் பண்பு’,இதுவல்லவோ நடுநிலை, ‘இதுவல்லவோ ஊடகத்துறையின் உச்ச வடிவம்’ என்று புழகாங்கிதம் அடைகின்றார்கள்.
உண்மையில் ‘இந்தப் பரபரப்புச் செய்திகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மறுபக்கம் இருக்கிறது’ என்பது பலருக்கத் தெரியாது. இவற்றிக்குப் பின்னால் இடம்பெறும் பேரம்பேசல்களும் பொதுவாக வெளியே தெரிவதில்லை.‘ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது’ என்று தமிழிலே இருக்கும் உவமானம் இந்தப் பரபரப்பு செய்தி வெளியீட்டின் பின்னணியை விளக்குவதற்கு மிகப் பொருத்தமான சொற்றொடராகும்.
அரசு என்பது ஒரு அடக்கமுறைக் கருவி.அது அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டு, அனைத்துவகைப் படைகளையும் வைத்துக்கொண்டு, சிறுபான்மையாகவுள்ள அதிகார வர்க்கத்தின் நலன்களுக்காக பெரும்பான்மையாகவுள்ள உழைக்கும் மக்களை அடக்கி ஆள்கிறது’ என்பது 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசுக்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணமாகும். அது போலவே ‘மக்களாட்சி’ அல்லது ஜனநாயகம் என்பதற்கு ‘மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களுடைய பிரதிநிதிகளால் நடத்தப்படுகின்ற, மக்களுடைய ஆட்சி’ என்று 18 ம் நூற்றாண்டின் இறுதியில் வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டது
20 ம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை இவை பொருத்தமான வரைவிலக்கணங்களாக இருந்தன. ஆனால் இன்று இந்த 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த வரைவிலக்கணங்கள்; பொருத்தமற்றுப் போய்விட்டன.இன்று எந்த ஒரு அரசும் தனக்குரிய அதிகாரங்கள் முழுவதையும் கட்டமைத்து வைத்து எந்தத் தலையீடும் இல்லாது சுயமாக அவற்றைப் பிரயோகிக்கக் கூடிய தன்னுடைய தலைவிதியை தானே தீர்மானிக்கக் கூடிய நிலையில் இல்லை.இன்றைக்கு அரசுகளின் அதிகாரத்தை தீர்மானிக்கின்ற சக்திகளாக உலக வங்கியும் பன்னாட்டு வணிக மற்றும் நிதி நிறுவனங்களும் தான் இருக்கின்றன. அவ்வாறே மக்களாட்சி என்பது இன்று ‘பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு வணக-நிதி நிறுவனங்களுக்காக மக்களைக் கொண்டு தெரிவு செய்யபட்ட பிரதிநிதிகளால் நடத்தப்படுகின்ற ஆட்சி என்று மாற்றம் பெற்றுவிட்டது
. இன்று உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பதில்லை.இந்தக் கட்சியைத்தான் இந்த நபரைத் தான் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்று மக்கள் தீர்மானிக்க வைக்கப்படுகின்றார்கள். உலக வங்கியும் மேற்குலக பெருவணிக நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் இந்த கைங்கரியத்தை ஊடகங்களுடாக திட்டமிட்டுச் செய்ய வைக்கின்றன.
ஆட்சியிலுள்ளவர்களுடைய செயற்பாடுகள் தங்களுடைய பொருளாதார-வணிக நலன்களை பாதிக்கின்ற போது, அதற்கு எதிரான தங்களுடைய கருத்தை ஆட்சிலுள்ளவர்கள் கண்டு கொள்ளாத போது, இந்தப் பன்னாட்டு பெரு வணிக வர்க்கம், எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்ற அல்லது தங்களில் தங்கி இருக்கின்ற உலக மேலாதிக்க ஊடகங்களை செய்திப் புரட்சி செய்யத் தூண்டி விடுகின்றன. இந்த மேலாதிக்க ஊடகங்களின் நடுநிலை செய்திப் புரட்சியைப் பார்த்து வாய்பிளந்து அகல விழிதிறந்து பார்த்து நிற்கிற உலக மக்களுக்கு இந்தச் செய்திப் புரட்சியின் பின்னால் உள்ள பேரம் பேசல்கள் தெரிவதில்லை.
ஈராக் போரின் பின்னர் உலக எண்ணை வர்த்தகத்தில் புஷ் குடும்பத்தினரின் ஆதிக்கம் அந்தப் போருக்கு முன்பிருந்ததை விட அதிகரித்ததே ஈராக்கிலும் கியூபாவின் குவாந்தனாமோ சிறையிலும் அமெரிக்கப்படைகளின் மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளும், புஸ் நிர்வாகத்துக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்கி ஈராக் மற்றம் ஆப்கானிஸ்தான் பேர்களில் பங்கெடுத்ததன் மூலம் ரொனி பிளேயரின் ஆட்சி பிரித்தானிய பெரு வணிக நிறுவனங்களின் மத்திய கிழக்கு மற்றும் மூன்றாம் உலக நாடுகளடனான வர்த்தக உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியதே அவரது ஆட்சியல் ஊழல்கள் பற்றிய செய்திகளும் ; பிரித்தானியப் படையினர் ஈராக்கில் மனத உரிமை மீறலில் ஈடுபட்டது பற்றிய செய்திகளும் வெளிவந்தற்கான பின்னணி எத்தனை பேருக்குத் தெரியும்?.
இது என்ன பைத்தியக்காரத் தனம்? தங்களுடைய நாட்டை தங்களுடைய படைகளின் தவறுகளை நேர்மையாக இந்த மேற்குலக ஊடகங்கள் விமர்சிப்பதை குறை கூறுவதா? என்று சிலர் கேட்கக் கூடும். (வெள்ளைக்காரர்கள் நாயைச் சுட்டாலும் நீதி விசாரணை நடத்தித் தான் சுடுவார்கள் என்று பெருமையாகச் சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் தானே நாங்கள்!)
மேற்குலக மேலாதிக்க ஊடகங்கள் நடுநிலை என்ற சொல்லை முன்நிறுத்தி காய் நகர்த்துவதற்கு நான்கு அடிப்படை நோக்கங்கள் இருக்கின்றன.
1) தமது நிறுவனத்தை உலகின் தீர்மானகரமான ஒரு சக்தியாக நிலை நிறுத்துவது.
2) உலக பெரும் முதலாளிய நிறுவனங்களில் தேவைக்கேற்ப மக்களை தயார்படுத்துவது, அதாவது சந்தைக்கேற்ற உற்பத்தி என்பதற்கு மாறாக உற்பத்திக்கேற்ற சந்தையை உருவாக்குவது.
3) உலகமயமாதலுக்கு தடையாக இருக்கக்கூடிய அரசுகள், விடுதலை இயக்கங்கள், மக்கள் நல அமைப்புக்கள், என்பவற்றை பலவீனப்படுத்துவது.
4) தேசங்கள் தேசிய இனங்களின் மொழித்தளத்தையும் அது சார்ந்த கலாச்சாரத் தளத்தையும் சீரழித்து சிதைப்பது.

சாதாரணமாக இந்த மேற்குலக வல்லாதிக்க ஊடகங்கள் செய்தி சொல்லும் முறையையோ அல்லது அவை கருத்தை வெளிப்படுத்தும் முறையையோ பார்க்கும் ஒருவருக்கு அவற்றிற்கு பின்னால் இருக்கக்கூடிய இந்த நோக்கங்கள் தெரியவராது. உதாரணமாக 'சிறிலங்கா அரச படைகள் தமிழ் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக' ஒரு செய்தி அல்லது அது சார்ந்த ஒரு விவரணத்தொகுப்பு இந்த மேற்குலக ஊடகங்களில் வெளிவந்தவுடன் இந்த ஊடகங்களின் மொழி தெரிந்த ஒரு சராசரி தமிழர் அதைப் பார்த்து பிரமித்துப்போகிறார். அந்த ஊடகம் நேர்மையாக செய்தி வெளியிட்டுள்ளதாக அவர் நினைக்கிறார். ஆனால் ஒரு செய்தி இப்படி வெளியாகும்போது பத்துச் செய்தி தமிழர்களுடைய போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு இலட்சியத்துக்காக தங்களது உயிரை தியாகம் செய்யும் இளையோரை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்ததாக 20 தடவை செய்தி வெளியிடப்பட்டிருக்கும். இவையெல்லாம் அந்தத் தமிழரின் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் ஒரு மேற்குலக ஊடகத்தின் முக்கிய இயங்கு தளமாக உள்ள ஐரோப்பிய அல்லது அமெரிக்க மண்ணிலுள்ள ஒருவருக்கு சிறிலங்காப் படையினர் தமிழ் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக வெளிவந்த ஒரு செய்தியைவிட சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமிழர்கள் நடாத்தும் போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டம் என்று பல தடவை வெளிவந்த செய்தியே பெரிதாகத் தெரியும்.
உண்மையில் இந்த உதாரணத்தில் 30 செய்திகள் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகவும் ஒரேயொரு செய்தி எதிராகவும் வந்திருக்கிறது. இந்த ஒரேயொரு செய்தி வெளிவந்ததன் பின்னணியை யாரும் சிந்திப்பதில்லை. சிறிலங்கா அரசு ஒரு உலகப்பெரு வணிக நிறுவனத்தின் பொருட்களை சிறிலங்காவில் சந்தைப்படுத்துவதற்கு தயக்கம் காட்டியிருக்கலாம். அல்லது சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்களான தேயிலையையோ, றப்பரையோ மேற்குலக பெரு வணிக நிறுவனம் ஒன்றிற்கு கொடுப்பதற்கு சிறிலங்கா அரசு பின்னடித்திருக்கலாம். அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடத்துவதற்காக ஆயுதக் கொள்வனவை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசு மேற்குலகிற்கு விருப்பமில்லாத ஒரு நாட்டுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். இந்த நிலையிலேயே சிறிலங்கா இராணுவம் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளை புரிவதாக ஒரே ஒரு செய்தியோ அல்லது செய்தித் தொகுப்போ வெளியிடப்படும். இதைப் பார்த்தவுடன் ஆடிப்போய்விடும் சிறிலங்கா அரசு வெளியில் வீர சூரத்தனமாக மறுப்பறிக்கைகளை விட்டுவிட்டு இரகசியமாக இந்தச் செய்தியை வெளியிட்ட மேற்குலக மேலாதிக்க ஊடகத்துடனும் அதற்குப் பின்;னால் இருக்கக்கூடிய மேலாதிக் சக்திகளுடனும் பேரம் பேசலில் ஈடுபடும். இந்தப் பேரம் பேசலில் மேற்குலக மேலாதிக்க சக்திகளின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதற்கு ஏற்ற உடன்பாடு எட்டியவுடன் பழையபடி தமிழ் மக்களின் போராட்டம் , பயங்கரவாதப் போராட்டம் என்ற பல்லவி தொடரும்.எனவே நடுநிலை எனபது மக்களை ஏமாற்றுவதற்கான அவர்களது இலட்சியங்களை அடையாளங்களை சிதைப்பதற்கான வடிவம் என்று நாம் தெளிவாக வரையறுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் இந்த உலகத்தில் நூற்றுக்கு நூறு வீதம் பொய்யே சொல்லாத ஒருவன் எப்படி இருக்க முடியாதோ நூற்றுக்கு நூறு வீதம் தவறே செய்யாத ஒருவன் எப்படி இருக்க முடியாதோ அப்படித்தான் நடுநிலமையும் இருக்க முடியாது. இந்த இடத்திலே நடுநிலை கிடையாது என்றால் எல்லாமே சார்புத் தன்மை உடையது என்றால் நம்பகத்தன்மைக்கு இடமில்லாமல் போய்விடுமே என்ற முக்கியமான கேள்வி எழுவது இயல்பானதாகும்.

கருத்துகள் இல்லை: