03 கருத்தியலைக் கட்டமைப்பதில் மொழியின் பாத்திரம்
மனித வரலாற்றில் மொழி வகிக்கும் பங்கு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்தி மனிதனாக உருவாக்கியதிலும் அவன் இயற்கையை வென்று அதை ஆளுமை செய்யும் வல்லமையைப் பெறவைத்ததிலும் மொழியே முதன்மையான பாத்திரத்தை வகித்தது.
ஒரு மனிதன் தன்னையும்; தன்னைச் சூழவுள்ள உயிருள்ள – உயிரற்ற அனைத்தப் பொருட்களையும் தான் வாழும் இந்த உலகத்தையும் இந்தப் பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்வதற்கும் மொழிதான் அடிப்படையாக இருந்தது.
மனிதன் தான் தெரிந்;து கொண்டவற்றை அல்லது புரிந்து கொண்டவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதிலும் அதன்; மூலம் மற்றவர்களுக்கும் தனக்கும் இடையிலான சமூகப் பிணைப்பை உருவாக்கியதிலும் மொழியின் பாத்திரமே முதன்மையாக இருந்தது.
குறிப்பாக சொல்வதானால் பொருளுக்கும் மனிதனுக்கும் அல்லது உலகிற்கும் மனிதனுக்கும் அல்லது பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள வெளியானது மொழியாலேயே நிரப்பப்படுகிறது.
நாம் வாழும் இந்தப் பூமியிலுள்ள கற்பாறை ஒன்றையும், ஒரு மனிதனையும் உதாரணமாக எடுத்துக் கொண்டால் பாறை உயிரற்ற ஒரு அசையாப்பொருள். மனிதன் உயிருள்ள ஒரு அசையும் பொருள். பாறையால் மனிதனைப் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் மனிதனால் பாறையைப் பார்க்கவும் உணரவும் முடியும்.
தனக்கு முன்னால் இருப்பது கற்பாறை என்பதை ஒரு மனிதன் பார்த்தல் உணர்தல் என்கின்ற செயற்பாடுகள் மூலம் தெரிந்து கொண்டாலும், மொழி தான் இந்த இடத்திலே அதற்குரிய அர்த்தத்தை அவனுக்கு உணர்த்துகிறது. அதாவது இங்கே பாறைக்கும் மனிதனுக்கும் உள்ள வெளி மொழியினால் நிரப்பப்படுகிறது.
குறிப்பாக சொல்வதானால் ஒரு மனிதன் தன்னையும் தன்னைச் சூழவுள்ள உயிருள்ள-உயிரற்ற அனைத்துப் பொருட்களையும்; தன்னுடைய மொழிக்கூடாகத் தான் புரிந்துகொள்கிறான்.
மனிதனுடைய அறிவும் சிந்தனைத் தளமும் மொழியினாலேயே கட்டமைக்கப்படுகின்றன. மனித இனத்தினுடைய அடையாளமும் இருப்பும் வரலாறும் மொழியினாலேயே அர்த்தப் படுத்தப் படுகிறது.
வீரச்சாவும் உயிரிழப்பும்
உதாரணமாக ‘ஒரு மனிதனுடைய இறப்பு’ என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால் இறந்தவர் ஒரு போராளியாக இருந்தால் அதிலும் அவர் ஒரு சண்டையின் போது சாவடைந்திருந்தால் நாங்கள் அவர் ‘வீரச்சாவடைந்தார்’ என்கிறோம்.அவர் வீரச்சாவடைந்த அதே சண்டையில் ஒரு சிறிலங்கா படையினனும் உயிரிழந்திருந்தால் ‘படையினன் கொல்லப்பட்டான் அல்லது உயிரிழந்தான் ’ என்கிறோம். இதே சம்பவத்தை ஒரு சிங்கள ஊடகம் சொல்லும் போது ‘ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்’ என்றும், ஒரு இராணுவ வீரர் உயிரிழந்தர் என்றும் கூறுவார்கள்.
இங்கே ஒரு போராளியினுடைய சாவை வீரமரணம் என்றும், ஒரு படையினனுடைய சாவை உயிரிழப்பு என்றும் நாங்கள் அர்த்தப்படுத்துவதென்பது தற்செயலான ஒன்றல்ல. அது ஒரு நீண்ட விடுதலைப்பேராட்ட வரலாற்றுக்கு ஊடாகவே கட்டமைக்கப்படுகிறது. அதே போலவே ஒரு போராளியை பயங்கரவாதியாக சித்தரிக்கும் சிங்கள மனோபாவமும் ஒரு நீண்ட பௌத்த சிங்கள பேரினவாத வரலாற்றுக் கூடாகவே கட்டமைக்கப்படுகிறது.
இங்கே விடுதலைப் போராட்டம்- பயங்கரவாதம் என்ற எதிர்மறைகளை கட்டமைப்பதில் தமிழ் மொழியும் சிங்கள மொழியும் வவவேறு வேறு தளத்தில் நின்று செயற்படுகின்றன.
தமிழ் தளம் என்பது என்ன?
தமிழ் தளம் என்பது இன ஒடுக்குமுறையையும் அதற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது. (தமிழகத்திலுள்ள தமிழ்த் தளம் கட்சி அரசியலையும் சாதி மற்றும் மத அடையாளங்களையும் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது) சிங்களத் தளம் என்பது சிங்கள பௌத்த மேலாண்மை அடிப்படையாகக் கொண்டது.
தமிழ் தளத்தில் இருந்து உருவாகும் கருத்துருவாக்கம் இன ஒடுக்கு முறையையும் தேசிய விடுதலையையும் புறந்தள்ளிவிட்டு உருவாக முடியாது. நாங்கள் ஒரு சமரில் போராளிக்கு ஏற்படும் மரணத்தை உயிரிழந்தார் என்றோ, கொல்லப்பட்டார் என்றோ சதாரணமாகச் செல்லிவிட முடியாது. அவ்வாறே அதே சமரில் ஒரு படையினனுக்கு ஏற்படும் மரணத்தை வீரச் சாவடைந்தார் என்று நாங்கள் செல்லிவிட முடியாது. ஏனென்றால் தமிழ் கருத்தியல் தளமும் அதை கட்டமைப்பதில் காத்திரமான பங்கை வகிக்கின்ற தமிழ் மொழியும் தமிழ் தேசிய இனத்துக்கு எதிரான பௌத்தசிங்கள போரிவாத ஒடுக்குமுறைகளும் அவற்றுக்கெதிரான தேசிய விடுதலைப் போராட்டமும் என்கிற வரலாற்றின் நீட்சியோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.
இந்த வரலாற்றுப்; போக்கிலிருந்து தமிழ் கருத்தியலையும் தமிழ் மொழியையும் பிரித்தெடுத்துவிட்டால் இரண்டுக்குமே அர்த்தமில்லாமல் போய்விடும். உதாரணமாக விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 2 படையினர் வீரச்சாவடைந்துள்ளனர் என்று ஒரு தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டால் அது தமிழர்களுடைய வரலாற்றை மறுதலித்திருக்கிறது என்றே அர்த்;தங்கொள்ள வேண்டும். இப்படியான ஒரு செய்திக்குரிய மொழி நடையும் சொற் குறியீடும் நிச்சயமாக தமிழ் மக்களை ஆத்திரப்பட வைக்கும்.
‘வீர மரணம்’ என்ற சொல் இந்த இடத்திலே ஒரு நீட்சியற்ற தனிமமாகி அர்த்தமற்ற வெறும் ஒலிக் குறியீடாக குறுகிவிடுகிறது. தமிழ் தளத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதே சிறிலங்கா படையினருக்குரிய குறியீடாகும். ஒரு ஆக்கிரமிப்பாளனுடைய மரணத்தை அவன் சார்ந்த அதிகார அதிகார வர்க்கத்தை தவிர அவனால் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்ட எவரும் விரச்சாவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்த இடத்திலே ஒரு போராளி வீரச்சாவடைந்தார் என்கிற போது‘வீரச்சாவு’ என்ற அந்தச் சொல்லுக்கூடாக ஈகம் பற்றிய ஒரு மேன்மையான ஒரு அர்த்தமும், ஒரு பெறுமதிமிக்க வீரம் செறிந்த விடுதலைப்போராட்ட வரலாற்றின் நீட்சியும் மறு வாசிப்புக்கு உள்ளாக்கப்படுகிறது.அந்த வீரச் சாவு என்பது ஒரு சாதாரண குடும்ப வட்டத்திற்குள் நிற்கக் கூடிய ஒரு ஒரு துன்பியில் நிகழ்வாக அல்லாமல் தமிழ் தேசிய இனம் என்கின்ற ஒரு பரந்துபட்ட மக்கள் கூட்டத்தின் உணர்வுகளில் கலக்கின்ற உயரிய விடயமாக அர்த்தப்படுத்தப்படுகிறது.
சொல்லும் அர்த்தமும்
மொழியியலில் ஒரு சொல் அல்லது ஒரு சொற் தொடர் பிற சொற்களின்றியோ, அல்லது பிற சொல் தொடர்களின்றியோ நிலைக்க முடியாது.அதாவது ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு வாக்கியமும் மற்றொன்றில் தொக்கி நிற்கும் அல்லது தங்கிநிற்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மற்றதினால் விளக்கம் கொடுக்கப்படுவதற்கு ஏற்புடனும் இருக்கிறது. ஒவ்வொரு சொல்லும் அல்லது சொற் தொடரும் எதையாவது சொல்லும் விருப்பத்தை உள்ளடக்கி இருக்கிறது. உதாரணமாக ‘வீரச் சாவு’ என்று நாங்கள் எடுத்துக் கொண்ட சொற்றொடர் வீரம், சாவு என்ற இரண்டு விடயங்களையும் அந்த வீரச்சாவுக்கான சமர்க்களத்தையும் அந்தச்சமர்க்களத்தில் நடந்த சமரையும் விளக்கும் தன்மையை உள்ளடக்கியிருக்கிறது. இங்கே ஒரு சொல்லுக்கூடாக ஒரு சொற்றொடருக்கூடாக ஒரு செய்திப்பரிமாற்றம் நடக்கிறது.
இயக்கம் மிகுந்ததும் இடம் மாற்றிக் கொள்ளக் கூடியதுமான மொழிக் குறியீடுகளான சொற்களை கையாளும் போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஊடகத் துறையில் நாம் கையாளும் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் மிக்கதாகவும் இயங்கியல் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இந்த இடத்திலே தான் மேற்குலக ஆதிக்க ஊடகங்களும் மேற்குல ஆதிக்க சக்திகளும் விடுதலைக்காகப் போராடும் தேசிய இனங்களினதும், மூன்றாம் உலக நாடுகளினதும் கருத்தியல் தளத்துக்குள் தந்திரமாகப் புகுந்து அவற்றை திசைமாற்றிச் சிதைக்கும் வேலையைச் செய்கின்றன.
இந்த சக்திகள் ஜனநாயகம்-பயங்கரவாதம், தனிமனித உரிமை- சிறுவர் உரிமை, கருத்துச் சொல்லும் உரிமை-பேச்சுரிமை-எழுத்துரிமை நடுநிலைமை என்று சில சொற்களையும் சொற்றொடர்களையும் கட்டமைத்து வைத்திருக்கின்றன.
இவர்களைப் பொறுத்தவரை ஒரு அரசு என்பது சட்டபூர்வமானது.அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் விடுதலை இயக்கங்கள் சட்ட பூர்வமற்றவை. ஒரு அரசுக்கும் ஒரு விடுதலை இயக்கத்துக்கும் இடையில் நடக்கும் ஒரு சம்பவத்தை செய்தியாக்கும் போது அரசின் பக்கத்தை முதலில் சொல்லி விடுதலை இயக்கத்தின் பக்கத்தை பின்பு சொல்வது இவர்களது எழுதப்படாத விதிமுறையாகும்.
உதாரணமாக விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு சண்டை நடந்து இரண்டு தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டால் அதை செய்தியாக்கும் போது சிறீலங்காவின் அரச படைகள் மீது விடுதலைப்புலித் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டள்ளனர்.விடுதலைப்புலி தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளுக்கு சிறிலங்கா அரச படையினர் பதிலடி கொடுத்ததில் 2 தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்படுவது தான் இவர்களுடைய பாணியாகும். இதை ஒரு நடுநிiயான செய்திப்பாணி என்றும் இவர்கள் சொல்லிக் கொள்வார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் இந்தச் செய்தியில் இரண்டு தரப்பை பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு தரப்புக்கும் எற்பட்ட இழப்பை வெளிப்படுத்துவதில் ‘கொல்லப்பட்டார்கள்’ என்ற ஓரே சொல்; பயன்படுத்தப்பட்டிருக்கிறது . ஆனால் இந்தச் செய்தியின் இடையிலே பயன் படுத்தப்பட்டிருக்கிற தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்ற சொல் ‘கொல்லப்பட்டார்கள்’ என்ற மற்றச் சொல்லுக்கு நியாயம் கற்பிக்கும் ஒரு அர்த்தத்தை கொடுக்கிறது..
இங்கு தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் அரசபடைகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொல்வது அநியாயமானதாகவும், அரச படைகள் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளை கொல்வது நியாமானது என்கின்ற கருத்தியல் மிகவும் தந்திரமான முறையில் கட்டமைக்கப்படுகிறது. இங்கே ‘கொல்லப்பட்டார்கள்’ என்ற ஒரு சொற் குறியீட்டின் மூலம் ‘வீரச் சாவடைந்தார்கள்’ என்று நாங்கள் சொல்வதால் எற்படக்கூடிய வரலாற்றின் நீட்சியும் கருத்தியல் பார்வையும் திட்டமிட்டு தடுக்கப்படுகிறது.
இன்னொரு உதாரணம் ஒரு இரண்டு வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன்.. அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சியில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஒரு ஏழுவயதுச் சிறுமியின் கடிதத்தை படித்துக் காட்டியிருந்தார்.சிறுமியின் தந்தை ஒரு விமானி;. ஆஃப்கானிஸ்தானில் இருக்கிறார். அந்தக் கடிதத்தில் அவள் தந்தையிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தாலும், நாட்டுக்காக தன் தந்தையை இழக்கத் தயாராகியிருப்பதாய் குறிப்பிட்டுள்ளாள். புஷ் இதை அமெரிக்க தேச பக்தி என்கிறார். இதையே ஒரு,தமிழீழச் சிறுமி சொல்வதாக இருந்தால் அதை நமது தேசியத் தலைவர் அவர்கள் படித்துக்காட்டுவதாக இருந்தால் இந்த மேற்குலக ஊடகங்களினதும் ஆதிக்க சக்திகளினதும் எதிர்வினை எப்படி இருக்கும்? மோசமான அடிப்படைவாதம், சிறுவர் உரிமை மீறல்- சிறு குழந்தையை எப்படி கெடுக்கிறார்கள் பாருங்கள்? ‘சிறுவர்களை படையில் சேர்ப்பதற்கு பிரச்சாரம் செய்கிறார்கள்’ என்றெல்லாம் கூச்சல் போட்டிருப்பார்கள்.
எங்களுக்கு புதிய சிந்தனைகளைத் தருவதோ, அல்லது புதிய வழிமுறைகளை கற்றுத் தருவதோ இவர்களுடைய உண்மையான நோக்கம் அல்ல. நாங்கள் எங்களுக்கென்று தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பை புதிய சிந்தனைத் தளத்தை உருவாக்க விடாமல் தடுப்பது தான் இவர்களுடைய ஒரே நோக்கமாகும்.
தனக்கொன்று ஒரு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பும் இயங்கியல் தன்மை இல்லாத சிந்தனைத் தளத்தையும் கொண்ட ஒரு இனம் தனது வரலாற்றை இழந்தவிடும்.
ஒரு இனத்தின் வரலாறு சீரழியும்போது மொழியின் சீரழிவும் அதனுடன் பிணைந்து விடுகிறது. இந்நிலையில் உயிர்துடிப்பில்லாத குறியீடுகளின் தொகுதியாக மொழி மாறுகிறது. எல்லா மனிதர்களும் ஒரே சொற்களைப் பயன்படுத்தினாலும் அந்தச் சொற்களின் நீட்சி எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் சொற்களின் அர்த்தம் பற்றிய ஒரு பொது உடன்பாட்டை அடைவதற்கும் முடியாத நிலையை ஏற்படுத்திவிடுகிறது.
லத்தீன் அமெரிக்க அறிஞரான அமில்கார் கப்ரால் என்பவர் மொழியினால் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் தளத்ததையும் அதனால் கட்டமைக்கப்படும் ஒரு இனத்தின் கலாச்சார வாழ்வையும் அடக்கு முறையாளர்கள் ஏன் அழிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை பின் வருமாறு கூறுகிறார்..
‘ஒரு மக்கள் சமூகத்தின்; மீது அன்னியர்களின் அடக்குமுறை ஆட்சி நடத்க்கும் போது வெறும் பொருளாதாரச் சுரண்டலை மட்டும் செய்வதில்லை. பொருளாதாரச் சுரண்டலை தீவிரமாக நடத்துவதற்காக மக்கள் சமூகத்தின் கலாச்சார வாழ்வை அடக்குமுறையாளர்கள் திட்டமிட்டு நசுக்கி இருக்கிறார்கள் என்பது வரலாறு கூறும் உண்மையாகும். அடக்கப்பட்ட மக்கள் சமூகத்தினுள் கலாச்சார ரீதியாக இயங்கக் கூடியவர்களை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் அடக்குமுறையாளர்கள் தங்கள் ஆட்சியை உறுதிப்படுத்துகின்றனர்.’
‘மக்களின் கலாச்சார வாழ்வினை அழிப்பதற்கும், வீரியமிழக்க வைப்பதற்கும், முடக்குவதற்கும் அடக்குமுறையாளர்கள் ஆயுதத்தை மட்டுமல்ல அறிவையும் பிரயோகிக்கிறார்கள். ஏனெனில் ஒரு உறுதியான உள்நாட்டுக் கலாச்சார வாழ்வு இருக்குமிடத்தில் அந்நிய ஆட்சி நிரந்தரமாக இருக்க முடியாது.’
சிறீலங்கா அரசின் சிங்கள பௌத்த மேலாதிக்க அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களாகிய எமக்கும் அமில்கார் கப்ராலின் இந்தக் கூற்று மிகப் பொருத்தமான ஒன்றாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக