புதன், 30 மார்ச், 2011

தமிழ் தளத்தில் ஊடகவியல்

ஊடகவியல் என்றதும் அது தமிழில் இல்லாத ஒரு துறை. தமிழர்களுக்கு அது புதியது. ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட-உருவாக்கப்பட்ட ஒரு நவீன துறைஎன்ற எண்ணம் நம்மவர்கள் பலரிடம் இருக்கிறது.

அது இதழியலாக இருந்தாலும் இலத்திரனியல் சார்ந்த ஒலி ஒளி வடிவங்களாக இருந்தாலும் அதற்கு மேற்குலகத்தினரே சொந்தக்காரர்கள் என்றும் அவர்கள் உருவாக்கிய வழி முறைகளே சிறந்தது என்றும் அதை நாம் அப்படியே பின்பற்றுவது தான் நம்முடைய ஊடகத்துறையை வளர்பதற்கு சிறந்த வழி என்றும் கருதுகின்ற நிலைப்பாடுதான் இன்னும் நம்மிடையே இருக்கிறது.

இன்றும் கூட தமிழ் சமூகத்திலுள்ள அறிவு சார்ந்த பிரிவினரிடையே ஐரோப்பிய ஆங்கில வானொலிகளும் தெலைக்காட்சிகளும் சொல்வது தான் செய்தி என்றும் அவற்றில் ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது உண்மை என்றும் கண்மூடித்தனமாக நம்புகிற போக்கு எம்மிடையே காணப்படுகிறது.

இந்த வானொலிகளும் தொலைக்காட்சிகளும் செய்தியை சொல்லுகின்ற முறைதான் ஊடகத்துறையின் உச்சம் என்றும் தாங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பச் சொல்கின்ற போக்குத் தான் இன்னமும் நம்மவர்களிடத்திலே இருக்கிறது.

இதழியல், சினிமா, சின்னத்திரையில் கூட மேற்குலக முன்மாதிரியை அச்சொட்டாக பின்பற்றுவதன் மூலம் தரமான சிறந்த படைப்புக்களை தர முடியும் என்று தான் இன்றுவரை பலர் நம்புகிறார்கள்.

இந்த காலணித்துவ அடிமை மனோபாவமும் அடிமைச் சிந்தனையும் தான் தமிழ் தேசிய ஊடகக் கருத்தியல் ஒன்று இதுவரை உருவாகமல் போனதற்கும் தமிழ் ஊடகத்துறை தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை கட்டமைக்கத் தவறியதற்கும் காரணம் என்பதை நாம் உணரவேண்டு.ம்.

நாம் நாமாக எமது சுயத்தை இழந்துவிடாமல் இருந்துகொண்டு எமது அனுபவங்களின் அடிப்படையில் எங்களுக்கென்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொண்டு அதன் பின்னர் மற்றவர்களுடைய அனுபவங்களை அதனுடன் இணைப்பதன் மூலமே எங்களுடைய அடையாளத்தை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு எங்களுடைய அனுபங்களை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு அடுத்தவர்களுடைய அனுபங்களையும் அடையாளங்களையும் நாம் பின்பற்ற முற்பட்டால் நாம் எமது சுயத்தையும் சொந்த அடையாளத்தையும் தொலைத்து விடுவோம்; என்பதையும் உணர வேண்டும்.

ஊடகவியல் என்பது ஒரு இனத்தின் சமூகத்தின் கருத்தியல் தளத்தில் காத்திரமான- தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கின்ற ஒன்றாகும். இந்தத் தளத்தை ஒரு தேசிய இனம் தனது சுய அடையாளங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பத் தவறுமாக இருந்தால் இந்தத் தளத்துக்குள் ஊடுருவல்களையும், ஆக்கிரமிப்புக்களையும் அனுமதிக்குமாக இருந்தால்

அந்த இனம் படிப்படியாக தனது சுயத்தையும் அடையாளத்தையும் இழக்கும்.

சிறுகச் சிறுகச் கொல்லும் விசத்தைப் போல ஒரு தேசிய இனத்தின் கருத்தியல் தளத்துக்குள் புகுந்துகொள்ளும் ஆக்கிரமிப்புக் கருத்தியலும் படிப்படியாக அந்த இனத்தின் பண்பாட்டுத் தளத்தை சிதைத்து கடைசியில் அந்த இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் அழித்துவிடும்.

உலகமயமாதல் சூழலில் மனிதர்களையே சந்தைப் பொருட்களாக மாற்றுவதற்காக தேசங்களினதும் தேசிய இனங்களினதும் வரலாற்றiயும் பண்பாட்டையும் கலை கலாச்சார விழுமியங்களையும்; அழிக்கின்ற, மழுங்கடிக்கின்ற கைங்கரியத்தை செய்வதில் ஊடகவியல் மிக முக்கியமான பங்களிப்பை செய்கின்றது.

ஊடகத்துறை என்பது மக்களுக்கான தகவல்களைச் சொல்கின்ற, அறிவூட்டுகின்ற, மகிழ்வுட்டுகின்ற பணியைச் செய்வதாகச் சொல்லிக் கொண்டாலும் அடிப்படையில் மக்கள் மீது கருத்தை திணிக்கின்ற- சந்தைப் பொருளாதார வலைப்பின்னல்களுக்குள் அவர்களைச் சிக்க வைக்கின்ற பணியைத் தான் பல ஊடகங்கள் குறிப்பாக உலக மேலதிக்க ஊடகங்கள்திட்டமிட்டுச் செய்துவருகின்றன.

உலகில் நிமிடத்துக்கு நிமிடம் , விநாடிக்கு விநாடி எத்தனையோ ஆயிரக்கணக்கான சம்பவங்களும் செயல்களும் நிகழ்ந்தாலும் எவை செய்தியாக்கப்பட வேண்டும், எப்படிப்பட்ட செய்திகளாக அவை ஆக்கப்படவேண்டும், என்ன கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை விரல்விட்டு எண்ணக் கூடிய இந்த மேலாதிக்க ஊடகங்கள் தான் தீர்மானிக்கின்றன.

அரசபயங்கரவாதச் செயற்பாடுகளை ஜனநாயகச் செயற்பாடுகளாகவும், தேசிய விடுதலைப்போராட்டங்களை பயங்கரவாதச் செயற்பாடுகளாகவும் இந்த மேலாதிக்க ஊடகங்கள் கட்டமைத்துக் கதை சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஊடகங்களையும் இவற்றின் ஊடகக் கோட்பாடுகளையும் தமிழ் தேசிய இனம் தன்னுடைய ஊடகக் கருத்தியலை திர்மானிப்பதற்கான வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி முக்கியமாக கேட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை: