தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கத் தலைவர்களில்; அதிகளவுக்கு விமர்சனத்துக்கு உள்ளான ஒருவர்.
அதேவேளை தமிழிழு விடுதலைப் போராட்ட இயக்கத்தலைவர்களில் சொந்த இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு தலைவரும் அவரே.
அதேபோலத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்த படியாக இந்திய அதிகார வர்க்கத்தால் அதிகளவுக்கு குறிவைக்கப்பட்ட ஒருவரும் கூட.
விடுதலைப்புலிகளால் ‘துரோகி இயக்கக் கட்டுப்பாட்டை மீறியவர்’ என்று சாவொறுப்பு தண்டனை வழங்குவதற்கு இலக்கு வைக்கப்பட்ட போதும் பின்னர் அவர்களது அந்த இலக்கிலிருந்து விலக்களிக்கப்பட்ட ஒரேயோரு தலைவரும் அவரேயாகும்.
அவரை நேசிப்பவர்கள், அவரைப் பெரியையா அல்லது பெரியவர் என்றும் மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி என்றும் அழைக்கிறார்கள்.
அவரை அரசியல் ரீதியாக விமர்சிப்பவர்கள் அராஜகவாதி என்றும் கொலைகாரன் என்றும் சந்தர்ப்பவாதி என்றும் கூறுகிறார்கள்.
அவரைத் தமது வர்க்க நலம் சார்ந்தும் எசமானர்களின் நலம் சார்ந்தும் கொலை செய்தவர்களும் அதற்குத் திட்டமிட்டவர்களும் நம்பிக்கைத் துரோகி என்றும், தலைமை பொறுப்புக்குத் தகுதில்லாதவர் என்றும் கூறுகிறார்கள்
உண்மையில் அவர் யாhர்?ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் ஆளுமை அவருக்கு இருந்தா?அவர் அதை வளர்த்துக்கொண்டாரா?எப்படி அவரால் முதலில்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால தலைவராகவும் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவராகவும் வர முடிந்தது?
அவர் ஒன்றும் பிறவிப் புரட்சியாளரோ, பிறவி அரசியல்வாதியோ அல்ல.
சாதிய சமூகமாகப் பிழைப்புவாத சமூகமாகச் சீரழிந்து போயிருந்த யாழ்ப்பாண சமூகத்தில் 18 பெப்ரவரி 1945 ல் மேல் தட்டுக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஒரு சராசரி மனிதர்.
1984 ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரது வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்கத்தோடு தமிழீழத்தின் குரல் வானொலிக்காக அவரை நான் செவ்விகண்டிருந்தேன்.
அந்தச் செவ்வியில் அவர் குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
1968 வரை சாராசரி யாழ்ப்பாண உயர் குடியினருக்கு இருக்கக்கூடிய சாதிய பெருமையும் சைவ வெள்ளாளிய சாதியப் பார்வையும் தனக்கு இருந்ததாகவும், ஆனால் தனது அயலூரான மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குள் அனைவரும் செல்வதற்கான ஆலய நுழைவு போராட்டமும் அதையொட்டி அரங்கேற்றப்பட்ட கந்தன் கருணை நாடகமும் தன்னை மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்;.
சாதி என்பது பிறப்பால் வருவது, ஒருவர் முற்பிறப்பில் செய்த கருமவினைப் பலனாகவே, அடுத்த பிறப்பில் உயர்ந்த சாதியிலும், தாழ்ந்த சாதியிலும் பிறக்கின்றனர் என்று தனக்குள் இருந்த சைவ வெள்ளாளியக் கருத்தியலை இந்தப் போராட்டமும், இந்த நாடகமும் தகர்த்ததாக அவர் குறிப்பிட்டாரார்.
ஆயுதம் ஏந்தி போராடினால் தான் அடக்குமுறையை ஒழிக்க முடியும். அடிப்பவனுக்கு அடிவாங்குபவன் திரும்பி அடிக்காதவரை அடிப்பவன் அடிப்பதை நிறுத்தப் போவதில்லை என்ற எண்ணக்கருவை அந்தப் போராட்டமும் கந்தன் கருணை நாடகமும் தன்னுள் விதைத்ததாக அவர் கூறினார.;
அதே நேரம் 1970 களின் ஆரம்ப காலகட்டத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மங்கையற்கரசி அமிர்தலிங்கம் முதலான தமிழரசுக்கட்சித் தலைவர்கள் மேடைகளிலே அறிமுகம் செய்த உணர்ச்சி அரசியலின் பால் தான் ஈர்க்கப்பட்டதாவும் ‘தமிழ், தமிழன், தமிழின விடுதலை’ என்ற கருத்துருவாக்கம் இந்தக் காலகட்டத்தில் தன்னுள் நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்;.
அவர் நில அளவையாளராகக் கொழும்பில் பணியாற்றிய காலத்தில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் தீவிர செயற்பாட்டாளராக இருந்திருக்கிறார்.
1974 ல் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய பின்னர் அதன் கொழும்பு கிளையின் செயலாளராக இருந்தார்.
1970 க்கும் 1974 க்கும் இடைப்பட்ட காலகட்டத்திலே கொழும்பு பம்பலப்பிட்டியில் இருந்தவர்கள் அங்குள்ள கதிரேசன் கோவிலில் சிறந்த பக்திமானாகப் பயபக்தியுடன் சுவாமி கும்பிடும் ஒருவராகக் காலையும் மாலையும் அவரைப் பார்த்திருக்க முடியும்.கொழும்பில் நடைபெற்ற வேல் விழா, முதலான இந்து சமய விழாக்கள் மற்றும் கருத்தரங்குகளில் ஒரு தொண்டனாக முன்னணி செயற்பாட்டாளனாக அவரைப் பார்த்திருக்க முடியும்.
சைவமும் தமிழும் தமிழினத்தின் இரண்டு கண்கள் போன்றவை, சிங்களமும் பௌத்தமும் அதற்கு எதிரானவை என்ற குறுங்குழு வாதப்பார்வைதான் அவரிடமும் அந்தக்காலத்தில் இருந்தது.
1974 ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் பிரபல மனோதத்துவ நிபுணரும் பகுத்தறிவுவாதியுமான டொக்டர் ஏபிரகாம் கோவூரை கொழும்பில் சந்திக்கிறார்.
இந்தச் சந்திப்பு அவரது மனக்கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மத அடிப்படைவாதத்தையும் கடவுளையும் முன்நிறுத்தி அதிகாரத்தைத் தக்கவைக்க மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளையும் ஏமாற்றுக்களையும் டொக்டர் ஆபிரஹாம் கோவூர் உமாமகேஸ்வரனுக்கு புரிய வைத்தார்.
“கடவுளால் படைக்கப்பட்ட மனித உயிரியைச் சேர்ந்த ஒரு தாய் தான் பெற்ற பிள்ளைகளிடம் பாராபட்சம் காட்டுவதில்லை. ஒரு பிள்ளைக்குப் புதிய உணவும் மற்றப்பிள்ளைக்கு பழைய உணவும் எந்தவொரு தாயும் கொடுக்கமாட்டாள்.ஒரு பிள்ளையை உயர்ந்த நிலையிலும் இன்னொரு பிள்ளையைத் தாழ்ந்த நிலையிலும் எந்த ஒரு தாயும் வைக்கமாட்டாள்.
ஆனால் மனிதனைப் படைத்த கடவுள் ஒரு சாராரை உயர்ந்தவர்கள் என்றும் இன்னொரு சாராரை தாழ்ந்தவர்கள் என்றும் ஏன் படைத்திருக்கிறார்?ஏழை பணக்காரன், ருசிக்கு உண்பவன், பசிக்கு உணவின்றி தவிப்பவன், மாடமாளிகைகளுக்கு சொந்தக்காரன், வானமே கூரையாக வாழ்பவன் என்று கடவுளின் படைபில் எத்தனை வேறுபாடுகள்? கடவுள் என்பவர் பாராபட்சம் உள்ளவரா?கடவுள் படைத்ததாகச் சொல்லப்படும் மனிதன் தன்னுடைய முயற்சியால் பல மொழிகளைப் படித்துத் தெரிந்து கொள்கிறான். ஏன் கடவுளுக்கு மட்டும் குறிப்பிட்ட ஒரு மொழி மட்டும் தான் தெரிகிறது?” என்று டொக்டர் கோவூர் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அவர் கொடுத்த விளக்கங்களும் சைவ வெள்ளாளிய புத்தி ஜீவியாக இருந்த உமா மாகேஸ்வரனை பகுத்தறிவு வாதியாக மாற்றின.
டொக்டர் ஆபிரகாம் கோவூரின் அறிவுரைப்படி அவர் பெரியாரைப் படிக்க ஆரம்பிக்கின்றார்.
பெரியாருடைய எழுத்துக்கள் பார்ப்பணித்தின் கோர முகத்தை அவருக்குப் புரிய வைத்தன. பார்ப்பணியம் கர்மம் மறுபிறப்பு ஊழ்வினைப்பயன் மற்றும் வரணாச்சிரமம் என்ற சனாதன கோட்பாடுகளைப் பயன்படுத்தி தமிழினத்தை சாதிரீதியாகப் பிளவுபடுத்தி மோதவிட்டு சமூகம் கல்வி பொருளதாரம் மதம் என்று அனைத்து துறைகளிலும் ஆக்கிரமித்து , அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இழி நிலையை அவர் புரிந்து கொண்டார்.
தமிழ் சமூகம் பிழைப்புவாத சமூகமாக ஒற்றுமையில்லாத சமூகமாக, சீரழித்து போயிருப்பதற்கு பார்ப்பணியமே காரணம் என்பதும் யாழ்பாண அதிகாரவர்க்கத்தினரால் தமிழ் காலச்சாரமாக முன்நிறுத்தப்படும் கந்தபுராண காலாச்சாரமும்; ஆறுமுகநாவலரின் சற்சூத்திர காலச்சாரமும் பார்பணிய கலாச்சாரத்தின் நீட்சியே என்பதையும் யாழ்ப்பான வெள்ளாளிய சமூகம் அடிப்படையில் அரை பார்ப்பணிய சமுகம் என்பதையும் அவர் தெரிந்து கொண்டார்.
இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசியல் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.
திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகம் என்பவற்றின் செயற்பாடுகளை அவர் ஊன்றிக்கவனிக்க ஆரம்பிக்கிறார்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி முதலானோர் மீது அவருக்கு அளவுகடந்த பிடிப்பு ஏற்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் புதிய புலிகள் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராக இருந்த பேபி சுப்பிரமணியத்துடன் உமாமகேசுவரனுக்கு தொடர்பு எற்படுகிறது.
பிற்காலத்தில் தமிழீழ கல்விக்கழகத்தின் பொறுப்பாளராக இருந்த இளங்குமரன் என்ற பேபி சுப்பிரமணியமும் பெரியாரிய கொள்கைளில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.
இந்த ஈடுபாடே இருவருக்குமான நெருக்கத்துக்கு காரணமாக அமைந்தது.
இந்த நெருக்கத்தின் காரணமாகப் பேபி சுப்பிரமணியம் உமாமேசுவரனை புதிய புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
புதிய புலிகள் அமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களுக்கு (தலைவர் பிரபாகரன் உட்பட) உமா மகேசுவரனை பிடித்துப் போகிறது.
புதிய புலிகள் இயக்க முத்திய குழு உறுப்பினராகவும் அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவராகவும் இருந்த கணேசன் என்ற ஐயர் தனது நூலில் உமா மகேஸ்வரனைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“கொழும்பிலிருந்த உமாமகேஸ்வரனிடம் இலங்கை அரசின் தேசிய இன அடக்குமுறைக்கு எதிரான உணர்வும் அதற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கியிருந்தது.”
“உமா மகேஸ்வரன் 77 ஆம் ஆண்டு தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளால் அகதிகளான தமிழர்கள் மத்தியிலும் பல வேலைகளை முன்னெடுத்திருந்தார். டொலர் பாம், கென்ட் பாம் போன்றவற்றின் உருவாக்கத்திலும் பங்கு வகித்திருந்தார். டேவிட் ஐயா, ராஜ சுந்தரம் போன்றோரோடும் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார். தனது பல்கலைக்கழகக் காலங்களிலிருந்தே தேசியவாத அரசியலில் ஈடுபட்ட உமா மகேஸ்வரன், அகதிகள் புனர்வாழ்வில் வெளிக்காட்டிய உணர்வுபூர்வமான பங்களிப்பும் ஈடுபாடும் எமக்கெல்லாம் அவர்மீதான மதிப்பை ஏற்படுத்தியது.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக