திங்கள், 9 ஏப்ரல், 2007

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

பிரெஞ்சுக் காவல்துறையினர் எங்களது செயற்பாட்டாளர்களை கைது செய்த நடவடிக்கையானது எமது விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது-விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழிப்பதற்கும் அவர்களது செயற்பாடுகளை முற்றுமுழுதாக கட்டுப்படுத்துவதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்து விட்டது. சிறீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை பிரான்ஸ் அரசாங்கம் ஆதரிக்கிறது என்று பலரும் கருகிறார்கள். தேசத் துரோகிகளும் சிறீலங்கா அரசும் இதை அப்படித்தான் சித்தரிக்க முயல்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட போது பல ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்களில் புலிக்கொடி வைத்திருப்பதற்கும் தேசியத் தலைவரது படத்தை வைத்திருப்பதற்கும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் எங்களுடைய விடயத்தில் கண்டும் காணாமல் செயல்படுகின்ற நெகிழ்வுத் தன்மையான ஒரு போக்கையே கடைப்பிடித்து வந்தது.
சந்திரிகா தனது ஆட்சிக்காலத்தில் இங்கு வந்து பிரான்சின் அரசுத் தலைவர் ஜக் சிராக்கை சந்தித்து ரிரின் தொலைக்காட்சியையும் ஏனைய உப அமைப்புக்களையும் தடைசெய்யும் படியும் எமக்கு எதிராக தனது அரசு நடத்தும் போருக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவி வழங்கும்படியும் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். பாரிசின் இதயம் என வர்ணிக்கப்படும் ஈபிள் கோபுரப் பகுதியில் நாங்கள் ‘சாவிலும் வாழ்வோம்’ நிகழ்வை நடத்தவும் அந்த இடத்தில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றவும் பிரான்ஸ் அரசாங்கம் அனுமதிஅளித்தது. இந்த விடயங்கள் பிரான்ஸ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்டவையாக இருந்தன.
ஆனால் இப்போது அதிரடியாக எமது செயற்பாட்டாளர்களை பிரெஞ்சுக் காவல்துறையினர் கைது செய்ததற்குக் காரணம் பிரான்ஸ் அரசின் உள் நாட்டுக் கொள்கையாகும்.
அதாவது எதிர்வரும்; ஏப்ரல் 22 ம் திகதி பிரான்சின் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் வலதுசாரி கூட்டணி அரசுக்கு பிரான்சில் புலம்பெயர்ந்து வந்த வாழும் வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் பரவிவரும் வன்முறைக் கலாச்சாரம் தான் பிரதான சவாலாக உள்ளது. கடந்த வருடம் பாரிசின் புறநகர் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட 2 ஆபிரிக்க இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரான்ஸ் முழுவதிலும் இடம்பெற்ற வாகன எரிப்பு மற்றும் கலவரங்களை அடக்குவதில் தற்போதைய அரசுத் தலைவர் வேட்பாளரும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவருமான நிக்கோலா சாக்கோசி கையாண்ட அணுகுமுறை பலத்த வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.
பல்லினக் கலாச்சாரம் பல்தேசவாதம் என்கிற கோட்பபாடகள் நடை முறைச் சாத்தியமற்றவை வெளிநாட்டு குடியேற்றக்காரர்கள் பிரெஞ்சு சமூகத்தடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு தயாரில்லை. அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த முற்படுவதே பிரச்சனைக்கு காரணமாகின்றது என்ற எண்ணம் வலதுசாரிகளை ஆதரிக்கும் மக்களிடையே ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் நாங்கள் குட்டித் தமிழீழம் என்று சொல்கின்ற லா சப்பல் பகுதிக்கு அண்மையிலுள்ள ஐரோப்பாவின் வடக்குப்பகுதி நாடுகளை இணைக்கும் பிரதான தொடரூந்து நிலையமான ‘கார் து நோட்’ தொடரூந்து நிலையத்தில் ஆபிரிக்க வம்சாவழி இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கம் இடையில் பாரிய மோதல் இடம்பெற்றது.இதில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததுடன் பல கடைகள் சேதமாக்கப்பட்டன. 25க்கும் மேற்பட்ட கறுப்பின இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். பல மணி நேரம் அந்த தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் ஏற்பட்ட இந்தக் கலவரத்தால் ஏறக்குறைய 50 ஆயிரத்தில் இருந்து 1 இலட்சம் வரையிலான பயணிகள் பாதிக்கப்பட்டார்கள்.
தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்ட பின்னர் நடந்த இந்தச் சம்பவம் அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.இந்தக் காலகட்டத்தில் பிரான்சின் இனவாதக்கட்சித் தலைவரான ஜோன் மரி லூ பென் ‘இந்தியாவில் இருந்து சென்ற தமிழர்கள் இலங்கையில் தமிழ்நாடு கேட்பதைப் போல பாரிசையும் தங்களுக்கு பிரித்துத் தரும்படி கேட்பார்கள்.இவர்கள் பாரிசிலுள்ள தங்களது வணிக நிறுவனங்களக்கு தங்களது தாய் மொழியான தமிழ் மொழியில் பெயர் வைக்கலாம் அல்லது பிரெஞ்சு மொழியில் பெயர் வைக்கலாம். எதற்காக ஆங்கில மொழியில் பெயர் வைத்திருக்க்pறார்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியதோடு பிரெஞ்சு சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ இவர்கள் தயாரில்லை என்பதையை இது காட்டுகிறது. இவர்கள் விடயத்தில் பிரெஞ்சு அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.(பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆங்கிலேயர்களைப் பிடிக்காது . அவர்களுக்குள் 600-700 ஆண்டு காலத்துக்கு மேற்பட்ட விரோதம் உள்ளது.)
பிரான்சிலுள்ள இளைஞர் வன்முறைக் கும்பல்களில் அரேபிய மற்றும் ஆபிரிக்க இனத்தவர்களுக்கு அடுத்தபடியாக ஈழத் தமிழர்களே இருக்கிறார்கள்.பாரிஸ் 10 நிர்வாகப் பகுதி மற்றும் பாரிசின் புற நகர் பகுதிகளான லா கூர் நெவ், செல் போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த தமிழ் வன்முறைக் குழுக்களால் கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருந்தார்கள்.இந்த வன்முறைக் குழுக்கள் எல்லாம் விடுதலைப்புலிகளின் பினாமிக் குழுக்கள் என்று காட்டுவதற்கான தீவிர பிரச்சாரத்தில் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகமும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாட்டாளர்களும் ஈடுபட்டு வந்தனர்.லு பிகாரோ போன்ற வலதுசாரி பத்திரிகைகளை இவர்கள் அதற்குப் பயன் படுத்தினார்கள்.
தேர்தல் களத்தில் வெளிநாட்டு இளைஞர் குழுக்களின் வன்முறையை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே எமது தமிழ் தேசிய ஆதரவச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட விடயத்தை பார்க்க வேண்டும்.பாரிஸ் நகரத்தில் அதிகளவுக்கு வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடபடும் ஆரேபிய ஆபிரிக்க வம்சாவளி இளைஞர் குழுக்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அது உடனடியாக பாரிய எதிர் விளைவுகளை எற்படுத்தும் என்பதால் எதைசெய்தாலும் எந்த அடக்குமுறையை பிரயோகித்தாலும் ஒன்றுபட்டு அதற்கு எதிராக போராடுவதற்கு பதிலாக பல குழுக்களாக பிரிந்த நின்று பேசிப் பேசியே காலத்தை கடத்தும் தமிழரின் பலவீனத்தை புரிந்து கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நாம் நடத்தவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தருவது போல தந்துவிட்டு பின்னர் பாதுகாப்பு காரணம் காட்டி அதை நிராகரித்தை உற்றுக் கவனித்தால் இதிலுள்ள அரசியல் புரியும்.இப்போது நாங்கள் செய்ய வேண்டியது எல்லோரும் ஒரணியpல் திரள்வதாகும்.குறுகிய சிந்தனையையும் அவர் வரக்கூடாது இவர் வரக் கூடாது.அவரை மட்டந்தட்டவேண்டும் -இவரை மட்டந்தட்ட வேண்டும், எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு இவருக்கு தகுதியல்லை அவருக்கு தகுதியல்லை என்றெல்லாம் பாhக்காமல் நாங்கள் அனைவரும் எங்களால் முடிந்ததை உடனடியாக செய்ய வேண்டும்.
எங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு அனைத்து ஜனநாயக வழிகளையும் பின்பற்ற வேண்டும்.நாங்கள் ஒவ்வாருவரும் எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு(பிரஞ்சு) எங்களுடன் வேலை செய்யும் பிரஞ்சு மக்களுக்கு எங்கள் தரப்பு நியாயத்தையும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் எடுத்துச் சொல்வதற்கு யார் தடை விதிக்கமுடியும்? தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு அவற்றின் வேட்பாளர்களுக்கு இங்குள்ள ஊடகங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் இலட்சக்கணக்கில் எமது கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.இதை உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் ஒன்றுபட்டுச் செய்வோம்.
பிரான்சிலுள்ளவர்கள் நேரடியாகவும் வெளியில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் நாடுகளிலுள்ள பிரஞ்சுத் தூதரகங்களுக்கும் இந்த எதிர்பை தெரிவிப்பதன் மூலம் நாங்கள் அனைவரும் தேசியத் தலைவரின் பின்னால் அணிதிரண்டு நிற்கிறோம் என்பதை செயலில் காட்டிவிட்டுக் கதைப்போம்.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரான்ஸ் ஹிட்லரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது பிரானஸின் முன்னாள் அரசத்தலைவர் சாள்ஸ் து கோல் லண்டனில் இருந்த கொண்டு ஆயுதப் போராட்டத்துக்கு அணிதிரட்டவில்லையா? நிதிசேர்க்கவில்லையா அதுவும் பயங்கரவாதமா? பிரான்ஸ் அரசுக்கு எதிராக பஸ்ரிய் சிறையையும் கோட்டையை உடைத்தெறிந்து ஆயுதங்களை கைப்பற்றி போராடிய பிரஞ்சுப் புரட்சியாளர்கள் பயங்கரவாதிகளா?சுதந்திரம் சமத்துவம் சகோதரத்தவம் என்ற பிரான்சின் உயர்ந்த அரசியல் இலக்கு வெறும் பேச்சளவில் தானே என்பதை நாங்கள் உரத்த குரலில் கேட்போம்?ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமையே பலம்
யாழ் இணையத்துக்காக எழுதியது

கருத்துகள் இல்லை: