திங்கள், 8 ஜனவரி, 2007

நினைவழியா வடுக்கள்- 2

நினைவழியா வடுக்கள்- 2
ஒரு நிமிட இடைவெளிக்குள் அந்த நெருப்புக் கோளங்கள் மறைந்துவிட்டன. அம்மாவும் ஆச்சியும் மூன்று முறை துப்பிவிட்டு என்னை தங்களுக்கு நடுவில் வரச் சொல்லிவிட்டு பயணத்தை தொடர்ந்தார்கள்.

பயம் விலகாத நிலையில் 'கொள்ளிவால் பேய் என்றால் என்ன?' என்று நான் அம்மாவிடம் கேட்டபோது 'அகால மரணமடைந்த அல்லது தற்கொலை செய்துகொண்டவர்களுடைய ஆன்மாக்கள் சாந்தி அடையாது இவ்வாறு கொள்ளிவால் பேய்களாக அலைந்துகொண்டிருப்பதாகவும் மார்கழி மாதம் கடவுளை நோக்கி தவம் செய்து முடித்துவிட்டு பொழுது புலர்வதற்கு முன்னர்; அவை தங்களது இருப்பிடங்களுக்கு செல்கின்றன என்றும் அவ எனக்கு விளக்கமளித்திருந்தா.

சிறுபிள்ளைகளை அந்த கொள்ளிவால் பேய்கள் அடித்துக் கொன்றுவிடும் என்றும் அப்படி எங்கள் ஊரில் இரண்டுபேர் உயிரிழந்ததாகவும் அம்மா என்னை பயமுறுத்தியிருந்தா.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது விஞ்ஞானப்பாடம் படிப்பித்த சண்முநாதன் ஆசிரியர் இந்தக் கொள்ளிவால் பேய்களுக்கு விளக்கம் சொல்லும் வரை, இருட்டிலும் இரவிலும்; வெளியில் செல்வதற்கு பயப்படும் மனோநிலையே எனக்கு இருந்தது.

பொதுவாக சதுப்பு நிலங்கள் அல்லது ஈரப்பதனுள்ள நிலங்களுக்கு அடியில் அசாதாரணமான நிலையில் தேங்கி இருக்கும் அடர்த்தி குறைந்த வாயுக்கள் அதிக அமுக்கம் காரணமாக பூமியைவிட்டு வெளிவரும் போது தீப்பற்றிக் கொள்கிறன. அந்தரத்தில் மிதக்கும் இந்தத் தீயைப் பார்த்து பயந்து ஒருவர் ஓட முற்படும் போது அவருக்கு பின்னால் ஏற்படும் வெற்றிடத்தை நோக்கி அந்த தீ பிளம்புகளும் நகர முற்படும். ஒரு ஐந்து அல்லது பத்து வினாடிகளுக்குள் நடக்கும் இந்தச் செயலையே கொள்வால் பேய் துரத்துகிறது என்று பாமர மக்கள் கருதிவிடுகின்றார்கள். இப்படியான காட்சியைப் பார்த்து அதீமாகப் பயப்படும் ஒருவருக்கு திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. இதையே கொள்ளிவால் பேய் அடித்து இறந்துவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள்.

இது தான் கொள்ளிவால் பேய் சம்பந்தமாக எனது விஞ்ஞான ஆசிரியர் சண்முகநாதன் தந்த விளக்கமாகும்.

அன்று அந்த கொள்ளிவால் பேயின் தரிசனத்தால் நாங்கள் கோவிலுக்கு செல்வதற்கு நேரமாகிவிட்டது. நாங்கள் கோவிலின் மேற்குப்புற வாசலை நெருங்கும் போதே உதயகாலப் பூசைக்கான ஆயத்த மணி அடிக்க ஆரம்பித்துவிட்டது.

வல்லிபுரக்கோவிலின் விசாலமான நான்கு வெளிவீதிகளின் ஓரங்களிலும் பல யாத்திரிகர் மடங்களும் கிணறுகளும் இருந்தாலும் அவற்றுக்குள் நாங்கள் செல்வதற்கும் தண்ணிர் அள்ளுவதற்கும் அந்தக்காலத்தில் எங்களுக்கு உரிமை இருக்கவில்லை.

எங்களுக்கென்று கோவிலின் தென்கிழக்கு மூலையில் ஓதுக்குப்புறமாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே எங்களுக்கென்று ஒரு மடம் இருந்தது. அந்த மடம் ஆண்டிச்சாமி என்பவரால் கட்டப்பட்டதால் அவரது பெயராலேயே அழைக்கப்பட்டது. அந்த மடத்தில் அருகில் இரண்டு கிணறுகள் இருந்தன.அந்தக் கிணறுகளில் தான் நாங்கள் குளிக்கவும் குடிப்பதற்கு தண்ணி அள்ள முடியும்.

அந்த மடத்தின் கிழக்குப் பக்கமாக உள்ள காணிக்குள் இருக்கும் அடர்ந்த பனைமரக் கூடல்களும், அந்தப் பனைமரங்களுக்கு போட்டியாக வானுயர வளர்ந்து நிற்கும் சவுக்கு மரக்காடும், சூரியன் சுட்டெரிக்கும் நண்பகல் வேளையில் கூட ஒளி ஊடுருவமுடியாத இருண்ட தோற்றத்தை கொடுப்பதுண்டு.

வங்கக் கடலில் இருந்து வரும் வாடைக்காற்று பனைமரங்களின் ஓலைகளைகளையும் சவுக்கு மர இலைகளையும் உரசுவதால் ஏற்படும் சோ-ஊ என்ற ஒரு வித்தியாசமான பேரோசை பகல் வேளையில் கூட எனக்கு அந்தப் பகுதியில் நிற்பதற்கு அச்சத்தை ஏற்படுத்துவதுண்டு.
அதிலும் இருள் விலகாத அதிகாலை வேளையில் அந்த இடத்தில் நின்று குளிப்பது ஏதோ மயானத்துக்கு அருகில் நின்று குளிப்பதைப் போன்ற உணர்வையே எனக்கு ஏற்படுத்தும்
.

அதிலும் அன்று கொள்ளிவால் பேய் என்று அம்மா அச்சுறுத்திவிட்டதால் அந்த இடத்தில் நிற்கவே எனக்கு பயமாக இருந்தது. ஏற்கனவே மார்கழிமாத பனிக் குளிரில் சிலிர்த்துப் போயிருந்த தண்ணிர்; உடலில் பட்டதால் எற்பட்ட நடுக்கத்தோடு கொள்ளிவால் பேயின் பயமும் சேர்ந்து கைகால்கள் வெடவெடத்து ஆடவைத்தது.

ஏற்கனவே பூசைக்கு நேரமாகிவிட்டதால் ஒரு பத்து வாளி தண்ணீரோடு அன்றைய எனது மார்கழி தோச்சல் முடிந்தவிட்டது. அம்மாவும் பாட்டியும் கூட அவசர அவசரமாக குளித்து முடிந்ததும் நாங்கள் உடை மாற்றிக் கொண்டு கோவில் வாசலுக்கு சென்ற போது திருப்பள்ளி எழுச்சிப் பூசை ஆரம்பமாகிவிட்டது.
யாரோ ஒரு விஷ்ணு பக்தை தனது கணீரென்ற குரலில்…. “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்நாராயணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்” என்ற ஆண்டாள் திருப்பாவையை பாடிக்கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு இப்போது இருப்பதைப் போன்ற இராஜகோபுரம் கிடையாது.அதற்கான அடித்தளம் மட்டும் மொட்டைக் கோபுரமாக இருந்தது.அந்த மொட்டைக் கோபுரத்தோடு சேர்த்து ஓடுபோட்ட உயரமான மண்டபம் ஒன்று இருந்தது. அந்த மண்டபம் சுற்சூத்திரர்கள் அல்லாத இடைநிலை சாதியினருக்காக அமைக்கப்பட்டிருந்தது.

அந்த மண்டபத்துக்குள் செல்வதற்குக் கூட அப்போது எங்களுக்கு அனுமதி கிடையாது. எங்களுக்கென்று அந்த மண்டபத்தின் முகப்பிலே ஒரு சாய்ப்பு இறக்கப்பட்டிருந்தது.அந்த சாய்ப்பை இறக்குவதற்கு கூட 1940க்கும் 45 க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரிய போராட்டமே நடத்தப்பட்டதாக எனது தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன்
.

ஆனால் எனது காலத்தில் அந்த சாய்ப்பை மூடி வேயப்பட தகரம் இத்துப் போய் அங்காங்கே பொத்தல் பொத்தலாக காட்சியளித்தது. அந்த தகரச் சாய்ப்புக்குள் நின்று பார்த்தால் கோவிலின் மூலஸ்த்தானம் சரியாகத் தெரியாது. கோவிலுக்கு உள்ளேயும் வெளிமண்டபத்திலும் நின்று கும்பிடுபவர்களின் முதுகு தான் எங்களுக்குத் தெரியும்.

பூசை முடிந்தததும் திருநீறு (அந்த ஆலயத்தில் சைவக் குருக்கள்மாரே பூசை செய்வதால் திருநீறு வழங்கப்படுவது வழக்கம்) துளசி இலை தீர்த்தம் என்பவற்றை ஏனைய பக்த கோடிகளுக்கு வழங்கும் குருக்கள்மார் எங்களுக்கு அவற்றை நேரடியாக வழங்க மாட்டார்கள். கோவில் வாசலில் அவற்றுக்கென இருக்கும் இடத்தில் அவற்றை வைத்து விட்டுப் போய்விடுவார்கள். அவற்றை நாங்களே எடுத்துக் கொள்ளவேண்டும். அவர்களுடைய கைகளால் எங்களுக்கு அவற்றை வழங்கினால் தீட்டுப்பட்டுவிடும் என்று அதற்கு அவர்கள் விளக்கம் கொடுத்திருந்தனர்.

அன்;றும் நாங்கள் அந்த தகரச் சாய்ப்புக்குள் நின்று சுவாமியை தரிசித்துவிட்டு நெற்றியில் பெரிய நாமப் பொட்டும் வைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்படத் தயாரான போது சூரியன் உதித்துவிட்டது.
“நீ விரும்பினதை வாங்கிச் சாப்பிடு” என்று சொல்லி பாட்டி எனக்கு 10 சதம் தந்துவிட்டு தனது மூடல் பெட்டி வியாபாரத்தை ஆரம்பிக்கச் சென்றுவிட்டா.

அந்தக் காலத்தில் 10 சதம் என்பது பெரிய காசு. நிறையப் பொருட்கள் வாங்கலாம். எனக்கு ஐஸ் பழம் என்றால் ரொம்ப பிடிக்கும். 10 சதத்துக்கு அந்தக் காலத்தில் 3 ஐஸ் பழம் அல்லது 2 ஜஸ் கிறீம் ஹோன் வாங்கலாம். அன்று அந்த அதிகாலை நேரத்தில் ஜஸ் பழ வான்கள் ஒன்றும் வரவில்லை. அதனால் 5 சதத்துக்கு ஒரு பெரிய பை நிறைய கச்சான் வாங்கிக் கொண்டு அம்மாவுடன் வீட்டு;க்கு புறப்பட்டேன்.
போகும் போது நாங்கள் தாமரைக் குளத்துக்கு பக்கத்திலுள்ள வீதியால் சென்றதால் ஒரு 15 நிமிடத்தில் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அநேகமாக நாங்கள் வீடு திரும்பிய போது காலை 7 மணி இருக்கும். எனது அப்பாவும் அன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே தனது தொழிலை முடித்துவிட்டு வந்து குளித்துவிட்டு எங்களுக்காக காத்திருந்தார்.

என்னுடைய தந்தை எப்போதும் காலையில் எழுந்தவுடன் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை மைல் (அப்போது கிலோமீட்டர் கணக்கு வரவில்லை) தூரத்திள்ள மந்திகை சந்திக்கு சைக்கிலில் சென்று ஈழநாடு வீரகேசரி ஆகிய பத்திரிகைகளை வாங்கிக் கொண்டு வந்து மேலோட்டமாக தலைப்புச் செய்திகளை படித்துவிட்டுத்தான் தனது தொழிலுக்குச் செல்வார். அடை மழை பெய்தால் கூட அவர் அந்த வழக்கத்தை தவற விட்டதில்லை. ஆனால் அன்று என்னை அந்த புதிய பள்ளிக்கூடத்தக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பதால் அவர் பத்திரிகை வாங்கப் போகவில்லை.
அம்மா அவசர அவசரமாக தேங்காய் துருவி சம்பல் இடித்து தோசை சுட்டுத் தர நானும் அப்பாவும் சாப்பிட்ட பின்னர் தானும் சாப்பிட்டுவிட்டு வந்து எனக்கு கரு நீல நிறத்திலான கால்சட்டையையும் வெள்ளை சேட்டையும் அணிவித்தா.இரண்டுமே புதிதாகத் தைக்கப்பட்டிருந்தன.

அந்தக்காலத்தில் எனக்கு பளிச்சிடும் வெண்மை நிறத்திலான சேட்டும்; அதே போல கருநீல நிறத்திலான கால்சட்டையும் அணிந்து கொண்டு பள்ளிக் கூடம் போவதற்கு சரியான விருப்பம். அத்துடன் காலில் செருப்பும் போட்டுக் கொண்டு பள்ளிக் கூடத்துக்கு போகின்ற போது பள்ளிக் கூடத்தில் வாங்கில்லையும் கதிரை மேசையிலையும் இருந்து படிக்கிற திமிரில் நிலத்தில் இருந்த படிக்கிற எங்களை கேவலமாக பார்க்கின்ற பொடியங்களுக்கும் பெட்டையளுக்கும் ‘நானும் உங்;களுக்கு குறைஞ்சவனில்லை’ என்று சொல்லிக் காட்டுகின்ற மாதிரியான ஒருவித மிடுக்கும் மகிழ்ச்சியும் எனது மனத்தில் இருக்கும்.

ஆனால் வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்துக்கு போய்; வகுப்பறைக்குள் கால் வைத்தவுடன் அந்த மிடுக்கும் மகிழ்ச்சியும் காணாமல் போய் அவமானம் அழுகை ஆத்திரம் எல்லாம் கலந்த இயலாமையுடன் கூடிய ஒருவிதமான துயர உணர்வே மனதில் இருக்கும்.

இங்கே ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட 1962 ம் ஆண்டு வந்த தீபாவளிக்கு இவ்வாறு கரு நீல நிறத்திலான கால்சட்டையையும் வெள்ளை சேட்டும் புதுச் செருப்பும் அணிந்துகொண்டு பாடசாலைக்கு சென்ற போது எனது வகுப்பில் இருந்த கதிரை வாங்கில் கூட்டத்தினர் “ இஞ்சை பார் புதுச் சேட்டு- புது கழிசான் - புதுச் செருப்பு - முதலாளி ஐயா வாறார்” என்று கேலி செய்து மனதை காயப்படுத்தினர். ஏதோ நான் பெரிய ஒரு குற்றம் செய்துவிட்டதாக அவர்கள் பார்த்த பார்வையும், கூறிய ஏளனச் சொற்களும் எனது பிஞ்சு மனதை காயப்படுத்தின.

வகுப்பில் செம்பாட்டு மண்ணுக்குள் சம்மாணி கட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதால் அப்பா வாங்கும் வீரகேசரி பேப்பரில் ஒரு பக்கத்தை அன்று பாடசாலைக்கு கொண்டுபோயிருந்தேன்.

நிலத்தில் அந்த பேப்பர் துண்டை விரித்துவிட்டு அமர்ந்த போது எங்களது ஆசிரியரான கதிர்காமர் வாத்தியார் வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பா நெற்றியில் திருநீற்றுக்குறி சகிதம் வகுப்பறைக்குள் நுழைந்தார். நாங்கள் எல்லோரும் எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்த போது “வாத்தியார் இண்டைக்கு எங்கட வகுப்புக்கு ஒரு பெரிய மனுசன் வந்திருக்கிறார்” என்று முன் வாங்கிலில் இருந்தவர்கள் கூறினார்கள்.
“பெரிய மனிசனா ஆரடா அது?” என்று கதிர்காமர் வாத்தியார் ஆச்சரியத்துடன் கேட்க, அவர்கள் வகுப்பறையின் ஓரத்தில் நிலத்தில் இருந்த என்னைக் காட்டினார்கள்.
தனது கண்ணை அகல விரித்து தான் நின்ற இடத்திலிருந்தே என்னை ஒரு பார்வை பார்த்த அவர் “என்ன பள்ளிக் கூடத்துக்கு படிக்கிறதுக்காக வெளிக்கிட்டு வந்தனியா-இல்லை கோயில் திருவிழாவுக்கு போறதுக்கு வெளிக்கிட்ட்டு வந்தனியா?” என்று ஏளனமாகக் கேட்டார்.
நான் நிலத்திலிருந்து எழும்பி பதில் சொல்லாமல் நின்ற போது கீழே விரித்திருந்த பேப்பர் அவர் கண்ணில் பட்டது.
“என்னடா அது?” என்று அதட்டிக் கேட்டார்.“பேப்பர்….” ஏன்று நான் கிழ்க்குரலில் சொன்னேன்.“அது பேப்பர் எண்டு எனக்குத் தெரியும். அதை ஏன் கீழே போட்டிருக்கிறாய்.அதைச் சொல்லு” என்று கர்ச்சித்தார்.“வெறும் நிலத்திலை இருந்தால் கால்சட்டை ஊத்தையா போயிடுமெண்டு தான்….” என்ற நான் தயங்கித் தயங்கிச் சொல்ல…“நீங்களே ஊத்தையங்கள்.நிலத்தில இருந்தா உங்கடை கால் சட்டை ஊத்தையா பேயிடுமோ? நீங்கள் இருக்கிறதால நிலம்தான்ரா ஊத்தையா போகுது” என்றவர் விறு விறென்று வெளியே போய் பாடசாலை கிணற்றடியில் நின்ற வாழை மரத்திலிருந்து மொத்தமான பச்சைத் தடல் ஒன்றை வெட்டிக்கொண்டு வந்தார்.
வகுப்பறையில் ஒரு நிசப்பதம்.எல்லோரும் பச்சை வாழைத்தடலுடன் வரும் காதிர்காமர் வாத்தியாரை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். எனக்கும் அவர் அதை ஏன் கொண்டு வருகிறார் என்று முதலில் புரியவில்லை. அந்த வாழைத் தடலால் எனது உடம்பில் பத்து பதினைந்து சாத்தல்கள் விழுந்தற்கு பின்பு தான் எனக்கு எல்லாமே புரிந்தது
.

என்னுடைய புத்தம் புதிய வெள்ளைச் சேட்டு கயர் பட்டுப் போனதும் கால்சட்டை செம்பாட்டு மண் பட்டு அழுக்காகிப் போனதும் கதிர்காமர் வாத்தியார் என்ற பெயரிலிருந்த அந்த மனித மிருகம் அடித்த அடியை விட அதிகம் வலித்தது. அன்று நான் அழுத அழுகை இன்றும் என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத அழுகையாக இருக்கிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பின்பு பள்ளிக் கூடத்தக்கு புது உடுப்பு அணிந்து செல்வதென்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு கனவாகவே இருந்தது.

எனவே இந்த புதுப் பாடசாலையிலும் இப்படி நடக்குமோ? கதிர்காமர் வாத்தியாரைப் போல் ஒருவர் அங்கேயும் இருப்பாரே என்ற பயம் எனக்கு எற்பட்டது.

கருத்துகள் இல்லை: