நினைவழியா வடுக்கள்-7
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வழக்கிலிருந்த குடிமை முறையின் கருத்தியல் தளம் என்பது இந்து மதத்தையும் குறிப்பாக பார்ப்பணிய மயப்படுத்தப்பட்ட சைவ சமயத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தின் குடிமைகளான எங்களுடைய வாழ்வு அந்த மதத்துடனும் அந்த மத வழிபாட்டுத் தலங்களான கோவில்களுடனும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது.இதேவேளை தமிழ் சமுகத்தின் அடித்தட்டு பிரிவினராக இருந்த எமது முன்னோர்கள் இயல்பாகவே கலையார்வம் மிக்கவர்களாகவும், நாட்டுப்புறக் கலைகளில் சிறந்த பரீட்சியம் உடையவர்களாக இருந்தார்கள்.
இந்தக் கலைகளுக்கான நிகழ் களமாக கோவில்களே இருந்ததால் யாழ்ப்பாண அதிகார வர்க்கம் அதை பயன்படுத்தி -பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டு எமது சமூகத்தை பிளவு படுத்தி மோதவிட்டு எமது பொருளாதார வளர்ச்சியை அழிப்பதற்கான வேலைகளை திட்டமிட்டுச் செய்தது.
உதாரணமாக எமது பகுதியில் இருக்கும் வல்லிபுரக் கோவில் திருவிழா என்பது அந்தக்காலத்தில் மிகவும் பேர் பெற்ற திருவிழாவாகும். அதிலும் இந்தக் கோவிலின் சப்பறத் திருவிழா அந்தக்காலத்தில் குடாநாட்டிலிருந்த மற்றக் கோவில்களில் இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக நடக்கும். இந்தக் கோவிலின் பிரமாண்டமான வெளி வீதிகளைச் சுற்றி 25 சிகரங்கள் கட்டப்படுவது அந்தக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனையாகும்.அதேபோல இந்தச் சப்பறத் திருவிழாவின் போது நடக்கும் வாண வேடிக்கையும் மற்ற எந்தக் கோவில்களிலும் இல்லாத அளவுக்கு பிரமாண்டமாகவே இருக்கும். கரகாட்டம் காவடி ஆட்டம் சிலம்படி மல்யுத்தம் என்பவற்றை பகல் முழுவதும் நடத்தவதும் கோவிலின் நான்கு வீதிகளிலும் தனித்தனி மேடைகள் போட்டு நான்கு கூத்துக்களை ஒரே நேரத்தில் இரவுமுழுவதும் நடத்துவதும் இந்தத் திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
ஸ்ரீவள்ளி, சம்பூர்ண இராமாயணம், நல்லதங்காள்,அரிச்சந்திரா,சத்தியவான் சாவித்திரி அகிய கூத்துக்கள் அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வையாகும்.
இதில் ஸ்ரீவள்ளி எனது அப்புவின் தந்தை கந்தன் என்பவரின் குழுவினராலும்,சத்தியவான் சாவித்திரி எங்களது உறவினரான சின்னான் என்பவரின் குழுவினராலும் வருடாவருடம் நிகழ்த்தப்படும்.ஏனையவை மைலிட்டி, வட்டுக்கோட்டை பகுதிகளில் இருந்துவரும் கலைஞர்களாலும் நிகழ்த்தப்படும்.
இதேவேளை இந்தக் கோவில் திருவிழாவுக்கான வாண வெடிகளை தயாரிப்பதற்கென்று வாணக்கார கணபதி என்றும், வாணக்கார வேலன் என்று இரண்டு பேர் இருந்தர்கள்.
கூத்து நடத்துவதிலும் வாணவெடிகளை (பட்டாசுகள்) தயாரிப்பதிலும் ஆரம்பகாலத்தில் எனது உறவினர்கள் ஒன்றாக சேர்ந்தே செயற்பட்டு வந்தார்கள். எங்களது முன்னொர்களின் ஆண்டைகளாக இருந்த அதிகாரவர்க்கமே அவர்களை பிளவு படுத்தி மோதவிட்டதாக அப்பு தெரிவித்தார்.
அப்புவின் தந்தையான கந்தனும் அவரது சிறிய தந்தை முறையான சின்னானும் அண்ணாவிகள் எனப்படும் பரம்பரை கூத்துக்கலைஞர்களாகும் இவர்கள் இருவரும் இணைந்து ஸ்ரீவள்ளி, பவளக்கொடி,அல்லி அருச்சுனா, ஏழுபிள்ளை நல்லதங்காள், சத்தியவான் சாவித்திரி என்ற பல கூத்துக்களை நூற்றுக்கணக்கான திருவிழாக்களில் மேடையேற்றியிருக்கிறார்கள்.
இதேவேளை எங்க@ருக்கு அண்மையிலுள்ள கரவெட்டிப் பகுதியிலும் பல நல்ல கூத்துக் கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களும் அநேகமாக இதேமாதிரியாகன கூத்துக்களையே நடத்திவந்தார்கள்.
ஆரம்பத்தில் எங்களது ஆண்டைகள் அவர்களுக்கும் எங்கள் ஊர்காரர்களுக்கும் இடையில் கூத்து நடத்துவதில் தொழில் ரீதியான போட்டியை தூண்டிவிட்டார்கள்.
“ அவங்கடை கூத்துத்தான் நல்ல கூத்து. உங்கடை கூத்து வாய்கையில்லை.” என்று சொல்வது அல்லது “அவங்கள் வெளியூரிலை இருந்து வந்த திறமா கூத்துப் போட்டுட்டு போறாங்கள். நீங்கள் என்னடா செய்யிறியள்? அடுத்தமுறை அவங்களை விட நீங்கள் திறமா கூத்து நடத்த வேணும்” என்று தூண்டிவிடுவது.அதாவது வஞ்சப் புகழ்ச்சி என்ற முறையை கையாண்டு கூத்திலே எம்மவர்களின் பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க வைத்தார்கள்.
அதற்கு அடுத்த கட்டமாக இந்தத் தொழில் ரீதியான போட்டியை குழுமோதலாக மாற்றி ஒருவரை அடித்தும் வெட்டியும் கொலை செய்யுமளவுக்கு போகச் செய்தார்கள்.
ஆண்டைகளின் கபடநோக்கத்தை அறியாத எங்கள் மக்கள் கூத்துக்காக கொலை செய்துவிட்டு காவல் நிலையத்துக்கும் நீதி மன்றத்துக்கும் நடையாய் நடந்து, வழக்கறிஞர்களிடம்; தங்களது தேட்டம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு கடைசியில் தங்களது வாழ்வை சிறைச்சாலைகளிலும் தூக்கு மேடையிலும் தொலைத்திருக்கிறார்கள்.
என்னுடைய அப்பு அறிந்தவரை எங்களது உறவினர்களான 26 பேர் இந்தக் கூத்துச் சண்டையால் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார்கள்.4 பேர் மரண தண்டனையடைந்திருக்கிறார்கள். 14 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 12 குடும்பங்கள் தங்களது சொத்தை எல்லாம் இழந்திருக்கின்றன.
1920 களின் பிற்பகுதியில் கரவெட்டி பகுதியில் பொதுவுடமை சிந்தாந்தம் பரவியதை அடுத்து கூத்துக் கலைஞர்கள் ஆண்டைகளின் கபடத்தனத்தை புரிந்து கொண்டு ஒதுங்கிவிட்டார்கள்.
அதன் பின்னர் எங்களுடைய ஊர் கூத்துக் குழுவை இரண்டாக உடைத்த ஆண்டைகள் சொந்தச் சகோதரர்களை மோதவிட்டு கூத்துக்காக ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நிலையை உருவாக்கிவிட்டார்கள்.
எனது அப்புவின் தந்தை கந்தன் அவருக்கு எதிரான சின்னான் குழுவிலிருந்த அவரது சொந்தத் தம்பியான வேலனால் கொல்லப்பட்டார். அதற்காக அவரது தம்பி வேலனுக்கு 1941 ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கொலை 1939 ம் ஆண்டு வல்லிபுரக் கோவில் சப்பறத் திருவிழாவில் போடப்பட்ட பவளக்கொடி கூத்துக்கும் சத்தியவான் சாவித்திரி கூத்துக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியால் நடந்ததாக அப்பு தெரித்தார்.
இதை விட 1924 ம் ஆண்டு நடந்த கல்வீட்டு போராட்டமும் ,பெண்களுக்கான மேல் சட்டைப் போராட்டமும் அப்பு எனக்கு சொன்ன வரலாற்றுத் தகவல்களில் மிக முக்கியமானவையாகும்.
1924 ம் ஆண்டு வரை எங்களுரில் நாங்கள் கல்வீடு கட்டி வாழ்வதற்கும் வீட்டுக் கூரைக்கு ஓடு போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் கொட்டில் வீடுகளையும் குடில்களையும் மட்டுந்தான் அமைத்து வாழவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தோம். சிமெந்தும் ஓடும் எங்கள் பகுதிகளுக்கு கொண்டு செல்லமுடியாது தடுக்கப்பட்டிருந்து. வலுவான குடியிருப்புக்களை அமைப்பதன் மூலம் நாங்கள் குடியிருக்கும் நிலங்களுக்கு உரிமை கொண்டாடிவிடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் திருகோனமலை போன்ற பெரிய நகரங்களுக்குச் சென்று தொழில் செய்து வந்த எனது அப்பு கணபதி அவரது தம்பி முருகன் எனது அப்பப்பாவான வினாசி, எனது பெரியப்பாவின் மாமனாரான இளையான் ஆகியோர் இதை எதிர்த்து கல்வீடு கட்டியே தீருவது என்ற முடிவெடுத்திருந்தனர்.
இது தொடர்பாக அப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த எமது சமூகத்தை சேர்ந்த கல்விமான்களான ஏ.பி. இராஜேந்திரா, எஸ் ஆர். ஜேக்கப், ஆகியொரது ஆலோசனையையும் இவர்கள் பெற்றிருந்தார்கள். அல்வாய் வதிரி துன்னாலை கரவெட்டி பருத்தித்துறை ஆகிய பகுதிகளிலுள்ள எங்களது சமூகத்தை சேர்ந்த துணிச்சலான இளைஞர்களது ஆதரவையும் இவர்களுக்கு கிடைத்தது.
1924 ம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்கள் பருத்தித்துறை நகரத்திலிருந்து சீமெந்தையும் ஒடுகளையும் வாங்கி இரவோடு இரவாக மாட்டு வண்டிகளில் இரகசியமாக ஊருக்குள் கொண்டு வந்து சேர்த்துவிட்டர்கள்.
முதலாவது கல்வீடு கட்டுவதற்காக 1924 ம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று எனது பெரியப்பாவின் மாமனார் இளையானின் காணிக்குள் அத்திவாரம் வெட்டப்பட்டது.
சீமெந்தை குழைத்து கல்வீடு கட்டுவதில் அனுபவம் பெற்ற எமது சமூகத்தைச் சேர்ந்த 2 மேசன்மார் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இந்த விடயங்கள் எல்லாம் எங்களுரில் இருந்த கருங்காலிகள் சிலரின் கைங்கரியத்தால் ஆண்டைகளின் காதுகளுக்கு எட்டிவிட்டது.
ஆண்டாண்டு காலமாக மேன்மைகொள் சைவ நீதியின் பெயரால் காப்பாற்றப்பட்டு வந்த சாதிய நீதிக்கு பங்கம் வர ஆண்டைகள் விட்டுவார்களா என்ன?
குண்டர் படையை ஏவி விட்டு சீமெந்து பீப்பாக்களையும் (அந்தக்காலத்தில் சீமெந்து பீப்பாவிலே வந்தது) ஒடுகளையும் அபகரித்துச் செல்லவும் எம்மவர்களின் குடிசைகளுக்கு தீவைக்கவும் முயன்றனர். இதை முன்கூட்டியே எதிர்பார்த்து காத்திருந்த நம்பவர்கள் வரலாற்றில் முதல்தடவையாக ஆண்டைகளின் அடியாட்களுக்கு பதிலடி கொடுத்தனர்.
காலமெல்லாம் கூழைக் கும்பிடு போட்டு குனிந்த குறுகி வாழ்ந்த கூட்டம் முதல் தடவையாக கத்தியோடு புத்தியையும் தீட்டியது. ஆண்டைகளின் அடியாட்கள் கூட்டம் கத்தி வெட்டுக்கும் வாள்வெட்டுக்கும் இலக்காகி சிதறி ஓடியது.
திகைத்துப் போன ஆண்டைகள் எப்போதும் தங்களுக்கு விசவாசமாக தங்களது பிரதிநிதிகளாக இருந்தவந்த காவல்துறையினரை எம்மவர்கள் மீது ஏவிவிட்டனர்.
கல்வீடு கட்ட திட்டமிட்ட எனது அப்பு கணபதி அவரது தம்பி முருகன் எனது அப்பப்பாவான வினாசி, எனது பெரியப்பாவின் மாமனாரான இளையான் ஆகியோர் நள்ளிரவு வீடுபுகுந்து இழுத்துச் செல்லப்பட்டனர்.
பொழுது புலர்வதற்குள் இந்தச் செய்தி அயல் ஊர்களில் எல்லாம் பரவி விட்டது.மறு நாள் காலையில் எங்களது ஆண்டைகள் மந்திகைச்சந்தி புட்டளைச்சந்தி முறாவில் சந்தி வல்லிபுரக் கோவில் என்று பல்வேறு இடங்களில் வைத்து அடி உதைக்கும் கத்தி வெட்டுக்கும் இலக்காகினர். அல்வாய் கரவெட்டி துன்னாலை தம்பசிட்டி தும்பளை பருத்தித்துறை என்று அந்தப் பிரதேசம் முழுவதும் சாதிக் கலவரம் மூண்டது.
பிரித்தானிய காலணிய அரசு தகுதி வாய்ந்த ஒரு அதிகாரியை அனுப்பி இந்தச் சம்பவத்தின் பின்னணி பற்றி விசாரணை நடத்தியது. இறுதியில் அரச பிரதிகளுக்கும் ஆண்டைகளுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தையில் 2 அறைகளும் ஒரு விறாந்தையும் கொண்ட வீட்டை நாங்கள் கட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
வேறு வழியின்றி அதை ஒப்புக் கொண்ட ஆண்டைகள் அந்த வீடு 10அடி உயரம் 15 அடி அகலம் 20 அடி நீளத்துக்கு மேற்படாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாகவும் அப்பு தெரிவித்தார். நாங்கள் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்கள் -செல்வச் செழிப்புள்ளவர்கள் என்பதை வெளியுலகுக்கு காட்டிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த அளவு முறை கொண்டவரப்பட்டுதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பேச்சு வார்த்தையை அடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டாலும் பின்பு நடந்த வழக்கில் அவர்களுக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
இந்தப் போராட்டமும் அதனால் கிடைத்த வெற்றியும் ‘குட்டக் குட்டக் தொடர்ந்து குனிந்திருப்பது எங்கள் தலைவிதி அல்ல என்பதையும், நாங்கள் சுதந்திரமாக வாழவேண்டுமானால் போராடியே தீரவேண்டும் என்ற உண்மையையும்;’ எங்களது மக்களுக்கு அனுபவ ரீதியாக உணர்த்தியது.
இந்தச் சம்பவம் நடந்த 1924 ம் ஆண்டு வரையில் எங்கள் பிரதேசத்தில் உள்ள எமது சமுகத்தைச் சேர்ந்த பெண்கள் மேல் சட்டையோ (ரவிக்கை) உள்சட்டையோ (பிரா) அணிய முடியாது. சேலையை மார்புக்கு குறுக்காகத்தான் கட்டியிருக்கவேண்டும். இதை குறுக்குக் கட்டு என்று சொல்வார்கள்.
1924 ம் ஆண்டு எப்ரல் மாதம் சிறைத் தண்டனை முடித்துவிட்டு வெளியே வந்த எங்களுர் கல்வீட்டு போராட்டக் குழு தங்களது அடுத்த போராட்டமாக மேல்சட்டை அணியும் உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்தது.
அந்த ஆண்டு சித்திரைப் புதுவருட தினத்தன்று எங்களுர் பெண்கள் மேல் சட்டை அணிந்து கொண்டு வல்லிபுரக் கோவிலுக்குச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
12 கன்னிப்பெண்களும் 4 திருமணமான பெண்களும் 10 சிறுமிகளும் மேல் சட்டை அணிய முன் வந்தனர்.
யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒரு இஸ்லாமிய தையல்காரர் அழைத்துவரப்பட்டு அளவுகள் எடுக்கப்பட்டு ஆளுக்கு இரண்டு சோடி சட்டைகள் தைக்கப்பட்டன.
இந்த விடயமும் வழக்கம் போல் ஆண்டைகளுக்கு முன் கூட்டியே தெரிந்துவிட்டது.
ஏற்கனவே நம்மவர்களிடம் ஒரு தடவை அனுபவப்பட்ட ஆண்டைகள் இம்முறை புத்திசாலித் தனமாகக் காய் நகர்த்தினார்கள்.
சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று எங்களுர் பெண்கள் குளித்துவிட்டு வாழ்க்கiயில் முதல் தடவையாக மேல்சட்டை (ரவிக்கை) போட்டு சேலை கட்டிக் கொண்டு நாணிக் கோணி வெளியேவர போராட்டக் குழுவினர் பறையடித்தம் வெடி கொழுத்தியும் அதை ஒரு விழாவாகவே கொண்டாடினார்கள்.
ஆண்டைகளின் அடியாட்கள் வந்து தாக்குவாhர்கள் என்று எதிர் பார்த்து பதிலடி கொடுப்பதற்காக துடிப்பான இளைஞர் கூட்டமொன்ற கத்தி வாள் கொட்டன்களுடன் ஏற்கனவே தயாரக நின்றது.
பறை ஓசையும் வெடியோசையும் காதைப் பிளக்க ஆயுதம் தாங்கிய இந்த இளைஞர்கள் பாதுகாப்பு வழங்க ஊரே திரண்டு , மேற்சட்டை அணிந்து செல்லும்; போராட்டம் ஆரம்பமாகியது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிப் பெண்கள் வல்லிபுரக்கோவிலுக்குச் சென்று வெளியில் நின்று சாமி கும்பிட்டு வெளிவீதியை சுற்றி வரும் வரை ஆண்டைகள் எந்தப் பிரச்சனையும் கொடுக்க வில்லை. கோவிலுக்குள் நின்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது அடியாட்கள் தென்படவேயில்லை.
அவர்களது வஞ்சகத் தனமான வியூகத்தை புரிந்து கொள்ளாத நம்மவர்கள் கல்வீட்டு போராட்டத்தில் கிடைத்த பாடத்தால் அவர்கள் பயந்து விட்டதாக நினைத்து கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள்.
ஆண்டைகள் எதிர்ப்புக் காட்டாததால் பாதுகாப்பு தேவையில்லை என்று நினைத்து ஆளக்கொரு பக்கமாக கலைந்து சென்றுவிட்டார்கள்.
அந்த நேரம்பார்த்து திடீரென்று எமது பெண்களை முற்றுகையிட்ட வெறிகொண்ட கூட்டமொன்று எமது பெண்களின் மேல் சட்டைகளை கிழித்தெறிந்தும் தலைமையிர்களை வெட்டியும் வெளியாட்டம் ஆடியது. சின்னாச்சி என்ற 17 வயதுப் பெண்ணின் மேல் சட்டையை கிழித்து சேலையையும் உரிந்து நிர்வாணமாக்கியது.அவமானத்தால் துடித்துப் போன அந்தப் பெண் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் இருந்த தாமரைக் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டு விட்டாள்.
இந்த வெறிகொண்ட கூட்டத்திடம் தனியாக அகப்பட்ட எனது அப்பு இந்த கயவர்கள் கையால் வெட்டும் அடியும் வாங்கிச் சாவதை விட தன்னைத் தானே வெட்டிக்கொண்டு சாவதே மேல் என்று நினைத்து தன்னிடமிருந்த பாளைக் கத்தியால் தன்னுடைய குதிக்கால் நரம்பை தானே அறுத்தக் கொண்டு மயங்கி விழுந்துவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக