ஞாயிறு, 19 ஜூன், 2011

விந்தைகளை உருவாக்கும் தந்தை : இன்று சர்வதேச தந்தையர் தினம்

தந்தையர்க்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) கொண்டாடப்படுகிறது.

இத்தினம் தற்போது பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் கொண்டாட்டங்கள் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் சில பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் தங்களது தந்தைக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கலாம். பாசத்துக்கு எப்போதும் அன்னை தான் உதாரணம். ஆனால் தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். "அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல் வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைக்கு ஒரு பொறுப்புள்ள தந்தையாக செயல்படவேண்டும். அதே நேரத்தில் தந்தையின் தியாகங்களை கருத்தில் கொண்டு, வயதான காலத்தில் குழந்தைகள் அவர்களை பேணிக்காக்க வேண்டும்.

எப்போது தொடங்கியது :அமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர் தனது தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம் ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன் படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால் அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...:தந்தையர் தினத்தில் "அப்பாக்களின்' நினைவுப் பகிர்வுகள்:"தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை... தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றனர். அறிவியலும், விஞ்ஞானமும் அதிகம் அறிமுகமில்லாத அந்தக் காலத்தில், பிள்ளைகளும் அப்படியே வாழ்ந்தனர். இன்று ஒரு பிள்ளையை பேணி வளர்த்து, சான்றோனாக்க வேண்டுமென்றால், சுற்றியுள்ள சூழ்நிலைகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. மழலைப் பருவத்தில் தந்தையின் கைப்பிடித்து பள்ளி சென்று, பாடம் பயின்றோம். கல்லூரிப் பருவத்தில் தோழனாய் பழகினோம். இப்போது தந்தையின், தாயின் ஸ்தானத்தில் நாம் இருந்தாலும், தந்தை காட்டிய தோழமை, நாம் வளர குடும்ப பாரத்தின் சுமைதாங்கியாய் இருந்தது, இன்னும் நம் நெஞ்சில் பசுமையாக நிறைந்திருக்கும். அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர், சில வி.ஐ.பி.,க்கள்.

பி. முருகேஷ் (டி.ஆர்.ஓ., மதுரை): அப்பா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சிமென்ட்ஸில் அலுவலராக இருந்தார். இரண்டு சகோதரிகள் டாக்டருக்கும், நான் இன்ஜினியரிங்கும் படித்தேன். அப்பாவின் ஒற்றை சம்பளத்தில் மூவரின் படிப்புச் செலவையும் கவனித்துக் கொண்டார். படித்து முடித்து பின், தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்தேன். செலவானாலும் பரவாயில்லை என, "சிவில் சர்வீஸ்' படிக்க, டெல்லிக்கு அனுப்பி வைத்தார். ஓராண்டு செலவு, எங்கள் தகுதிக்கு மீறியதாக இருந்தாலும் அப்பா வருத்தப்படவில்லை. குரூப் 1ல் தேர்வாகி, வேலைக்கு சென்ற மூன்றாம் மாதத்தில் கழுத்தெலும்பில் பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்கள் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய நிலை. அப்பா கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல், எல்லா கடமைகளையும் செய்தார். இப்போது நினைத்தாலும், என் நெஞ்சம் விம்முகிறது.வேலைக்கான தேர்வுக்கு செல்லும் போது பேனா, பென்சில், ரப்பர் அனைத்தையும் எடுத்து வைப்பார். பள்ளி நேரம் தவிர, மற்ற நேரங்களில் அப்பாவுடனேயே சுற்றுவேன். இப்படி ஒரு தந்தை கிடைக்க, நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஏ.கணேசன் (டி.எஸ்.பி., திண்டுக்கல்): எனது தந்தை ஆறுமுகம். சொந்த ஊர் திருநெல்வேலி, களக்காடு. ஐந்தாம் வகுப்பு படித்தவர். எனது அண்ணன் ஐ.பி.எஸ்., அதிகாரி. தம்பிகள் அனைவரும் படித்து நல்ல பணியில் உள்ளனர். எனது தந்தை ஜாதி, மதம் பார்க்க மாட்டார். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். அவரது வழியை பின்பற்றி நாங்கள் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறோம்.வீட்டை விற்று எங்களை படிக்க வைத்தார். கடன் வாங்கி அவர் சிரமப்பட்டாலும், நாங்கள் படிப்பதற்கு உறுதுணையாக இருந்தார். படிப்பதற்கு செலவு செய்ய தயங்கமாட்டார். தவறு செய்தால் திருத்துவார். "எந்த வேலை செய்தாலும் நேர்மை வேண்டும். லஞ்சம் வாங்கக்கூடாது' என்பார். எந்த காரியம் செய்தாலும் அவரை வழிப்பட்டு துவங்குவேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது எனது தந்தைக்கு நூறு சதவீதம் பொருந்தும்.

வி.ஆர்.ராஜன்,(தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர், தேனி): என் தந்தை வீரமர் ஜமீனாக பிறந்தவர். சொத்துக்களை உறவுகளுக்காக கொடுத்து விட்டு, தபால்காரராக பணியாற்றினார். சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தினார். அவரது வருவாயில் சிறு பகுதியை குடும்பத்திற்கும், பெரும் பகுதியை பொது மக்களுக்காக செலவிட்டு வாழ்ந்தவர். இதனை தனது டைரியில் குறித்து வைத்துள்ளார். அவரின் டைரிக் குறிப்பு, என் வாழ்க்கை பாதையை செம்மைப்படுத்த உதவியது. வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகள், எதையும் தாங்கும் மனோபலம், வாழும் கல்வி, சேவைக் கல்வி எல்லாமும் என் தந்தையிடம் இருந்தே நான் கற்றுக் கொண்டேன். மற்றவர்களுக்கு உதவி செய்ய கிடைக்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்பார். அதனாலேயே தொண்டு நிறுவனம் ஆரம்பித்து, மற்றவர்களுக்கு உதவி வருகிறேன்.

பி.கனகப்ரியா (மகப்பேறு டாக்டர், ராமநாதபுரம்): நான் இன்று டாக்டராகி ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரபலமாக இருக்க முக்கிய காரணமே எனது தந்தை டாக்டர் அரவிந்த்ராஜ் தான். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, நோயால் கோமா நிலைக்கு சென்றேன். பல டாக்டர்களும் கைவிட்ட நிலையில், மனம் தளராமல் கூடவே இருந்து என்னை காப்பாற்றினார். எனக்கு மறுவாழ்வு கொடுத்தவர் எனது தந்தை.நான் டாக்டராக வேண்டும் என்பதே அவரது விருப்பம். இதற்காக சிறுவயது முதல் எனக்கு நல்ல சிந்தனையையும், ஒழுக்கத்தையும் போதித்து வந்தார். மதுரை மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போது, இரவு பகலாக, நோய்கள் குறித்து பல்வேறு புத்தகங்களில் இருந்து குறிப்பு எடுத்து தந்தார். இது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. எனது தந்தை எனக்கு போதித்த முக்கிய அறிவுரை, ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே. அவருக்கு மகளாய் பிறந்ததில் பெருமை.

டாக்டர் பி.ஸ்ரீதர் (காரைக்குடி): எனது தந்தை பாலகிருஷ்ணன் காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (சிக்ரி) விஞ்ஞானியாக பணியாற்றினார். தாத்தா ராமசாமி, கும்பகோணத்தில் டாக்டராக பணியாற்றினார். விடுமுறை நாட்களில் கும்பகோணத்திற்கு செல்வது வழக்கம். தாத்தாவின் அணுகுமுறை நான் டாக்டருக்கு படிக்க தூண்டுகோலாக அமைந்தது. மனதிற்குள் நானும் டாக்டராக வரவேண்டும் என நினைத்து படித்தேன். எம்.பி.பி.எஸ்., சேர்க்கை கிடைத்த போது, அப்பாவின் மாதச் சம்பளம் 400 ரூபாய். ஆனால் விடுதி, உணவு கட்டணம் சேர்த்து மாதம் 500 ரூபாய், கல்லூரிக்கு கட்ட வேண்டிய நிலை. அப்பா கொஞ்சம் கூட யோசிக்காமல், அவரது பி.எப்., தொகையிலிருந்து செலவு செய்தார். எம்.பி.பி.எஸ்., கண்மருத்துவம் படிக்கும் வரை இதே நிலை தான். இன்று மற்றவர்கள் போற்றும் உயர்ந்த நிலையில் இருக்கிறேன் என்றால், அதற்கு என் தந்தையின் உழைப்பும், தோழமையும் தான் காரணம். மகனாக நினைக்காமல், நண்பனைப் போல பழகுவார். எனது சம்பளத்தில் தந்தைக்கு கார் வாங்கி கொடுத்தது பெருமையாக உள்ளது.

பி.சுந்தரபாண்டியன் (செந்திக்குமார நாடார் கல்லூரி முதல்வர், விருதுநகர்):எனது தந்தை பாண்டியராஜன், பருப்பு வியாபாரி. எனது சகோதரர்கள் இருவரையும் தொழில் செய்ய அழைத்துக்கொண்டு, என்னை மட்டும் படிக்க அனுமதித்தார். படிக்கும் காலத்தில் "ரேங்க் கார்டு' காட்டியவுடன் முகம் சுளிக்காமல்,கேள்வி கேட்காமல் கையெழுத்திடுவார். அவர் அப்படி செய்தததே, எனக்கு படிப்பில் ஆர்வத்தை தூண்டியது. அதிக ஈடுபாட்டுடன் படித்தேன். என்னை எப்போதும் அவர் கட்டுப்படுத்தியதே இல்லை. நானும் அதற்கேற்றாற்போல் நடந்து கொண்டேன். அவரது அரவணைப்பும், தூண்டுதலும் தான் என்னை ஆளாக்கியது. முதுகலை பட்டப்படிப்பு படித்த போது வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டது. அந்த கஷ்டத்திலும் என்னை படிக்கவைத்தார். தந்தை உறவு என்பது மிகவும் புனிதமானது.
http://www.dinamalar.com

1 கருத்து:

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான பகிர்வு.தந்தையர் தினத்தின் முக்கியத்துவத்தை மிகச்சிறப்பாகவும்,தெளிவாகவும்
உணர்வுபூர்வமாகவும் எடுத்துரைத்தீர்கள்.இதில்
உங்கள் தந்தையாரைப்பற்றிச் சொல்லும்போதும்
பிறர்தம் தந்தையாரைப்பற்றிச் சொல்லும்போதும்
என் தந்தை என் உணர்வில்வர எனக்குள் ஏற்ப்பட்ட இந்த மனவலியைச் சொல்ல ஒரு
வார்த்தை இன்றித் தவிக்கின்றேன்!...
என் சார்பிலும் தந்தையருக்கு வாழ்த்துக்கள் சென்றடையட்டும்! பகிர்வுக்கு நன்றி சகோ.....