நூறு மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு கோரி சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக மூன்று நாடுகளில் இயங்கும் புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன.கண்கண்ட சாட்சிகள் யாருமின்றி, சனல்4 தொலைக்காட்சியானது போர்க்குற்றங்கள் தொடர்பான போலிக் காணொளிகளை வெளியிட்டு இலங்கையர்களுக்கு அவமானத்தை உண்டுபண்ணியதாக குற்றம் சாட்டியே பிரஸ்தாப வழக்குத் தொடரப்படவுள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் மூன்று ஒன்றிணைந்தே பிரிட்டன் நீதிமன்றத்தில் பிரஸ்தாப வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளன. அதன் பிரதிவாதிகளாக சனல்4 தொலைக்காட்சி சேவையின் ஜோன் ஸ்னோ மற்றும் காணொளியின் தயாரிப்பாளர் கெல்லம் மக்ரே ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். சனல்4 தொலைக்காட்சி சேவையானது போலியான காணொளியொன்றை ஒளிபரப்பியமை, அவர்களுடைய நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு கண்கண்ட சாட்சிகள் யாரும் இல்லாமை, மற்றும் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை மறைக்கத் துணை புரிந்தமை ஆகியனவே சனல்4 வுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாகும்.
வழக்கில் வாதிகள் தரப்பில் ஐந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.
இதற்கிடையே சனல்4 காணொளி தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்த சவாலை சனல்4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கெல்லம் மக்ரே அல்லது அம்னெஸ்டி இன்டர்நெசனல் அமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிய வருகின்றது.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தனது சவாலுக்கு 48 மணிநேரத்துக்குள் பதிலளிக்குமாறு கோரியிருந்ததடன், பிரஸ்தாப 48 மணிநேரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையிலும் அச்சவால் கெல்லம் மக்ரே மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை என்பவற்றால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக