வியாழன், 16 ஜூன், 2011

முதல்வரை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அதிருப்தி

டில்லியில் இருந்து, நேற்று முன்தினம் மாலை சென்னை திரும்பிய முதல்வரை வரவேற்க, விமான நிலையம் முதல் சைதாப்பேட்டை வரை வைக்கப்பட்டிருந்த ஏராளமான டிஜிட்டல் பேனர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். எதிலும் எளிமை என்ற கோஷத்துடன் புதிய ஆட்சி துவங்கியுள்ள இந்த நேரத்தில், சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மெகா பேனர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில், "கட்-அவுட்' கலாசாரம் அதிகமாக இருந்தது. அடிக்கு ஒரு டிஜிட்டல் பேனர் என்ற வகையில், பல லட்சம் ரூபாய் செலவில் ஆட்சியாளர்களை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டன. தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்ததற்கு இந்த ஆடம்பரமும் ஒரு காரணம்.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன், ஆடம்பரத்திற்கு முடிவு கட்டப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக பதவி ஏற்ற நிகழ்ச்சியும் சரி, முதல் விழாவான, இலவச அரிசி விழாவும் சரி மிகவும் எளிமையாகவே நடந்தது. இதை சுட்டிக்காட்டி பத்திரிகைகள் பாராட்டின.
"அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.,க்களோ ஆடம்பர வரவேற்பையும், விழாக்களையும் தவிர்க்க வேண்டும்' என்று ஆளும் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முதல்வர் பயணம் செய்யும் போது, வழக்கமான போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டது. புதிய அரசின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பல அமைச்சர்கள், ஆடம்பர பேனர்களை எடுத்தால் மட்டுமே விழாவில் கலந்து கொள்வோம் என்று கூறி, எளிமைக்கு வழி காட்டியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் டில்லியில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பிலும், செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் செந்தமிழன் சார்பிலும், சென்னை விமான நிலையம் முதல், அண்ணா சாலை வரை பிரமாண்டமான வரவேற்பு பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
கிண்டி கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டை வரையில், சாலையின் மீடியனிலும், ஓரங்களிலும் வட்டம், நீள்வட்டம், சதுரம், செவ்வகம், டைமன்ட் என பல அளவுகளில், பிரமாண்ட பேனர்கள் இடம் பெற்றிருந்தன.
இவை, முதல்வரை திருப்திபடுத்துவதற்காக சைதாப்பேட்டை எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான செந்தமிழனால் வைக்கப்பட்டவை. இந்த பேனர்களை நிலை நிறுத்த கட்டப்பட்டிருந்த சாரங்கள், சாலையை மறித்த நிலையில் இருந்ததால், வாகன போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டது.
இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்தித்தனர். ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருவதால், சென்னை விமான நிலையம் துவங்கி, தொடர்ச்சியாக கடும் நெரிசல் நிலவி வரும் நிலையில், முதல்வரை வரவேற்று வைத்த பேனரால் மேலும் நெரிசல் அதிகமானது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், "முதல்வரே ஆடம்பரத்தை ஒதுக்கிவிட்டு, எளிமையை கடைப்பிடிக்கும் நேரத்தில், இதுபோன்ற பேனர்கள் ஆட்சிக்கு கெட்ட பெயர் உருவாக்கும். முதல்வரை திருப்திப்படுத்துவதாக எண்ணி வைக்கப்படும் இதுபோன்ற வரவேற்பு பேனர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே, முதல்வர் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க கூடாது' என்றனர்.

http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: