நேர்காணல்: விதுல் சிவராஜா
ஈழவிடுதலைப் போராட்டத்தில் 'ஓட்டி'களின் பங்களிப்பும் பாத்திரமும் முக்கியமானது. 1980 களில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு - தமிழகத்துக்கு தலைமறைவாகச் சென்ற அத்தனை போராட்ட அமைப்பினைரையும் இந்த ஓட்டிகளே ஏற்றிச் சென்றனர். குறிப்பிட்டுச் சொன்னால், போராட்ட அமைப்புகளின் போக்குவரத்து என்பது இவர்கள் மூலமாகவே நடந்தது. ஆகவே, இவர்களுடைய வாழ்க்கையும் இவர்களோடு வாழ்ந்தவர்களின் நினைவுகளும் யாராலும் மறக்க முடியாதவை.
அவை ஈழவிடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமானவை.
வடமராட்சி கிழக்கில் - ஒரு கடலோரக் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னக்கிளி. வயது 54. சின்னக்கிளி ஒரு நல்ல கடலோடி. மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்பதைப் போல கடலோரக் கிராமத்தில், கடற்றொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த சின்னக்கிளிக்கு கடலையும் கடலோடும் வித்தையையும் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?
சின்னக்கிளி ஒருகாலம் திறமான 'ஓட்டி'.
கடலிலே திரிந்த சின்னக்கிளி எப்படியோ விடுதலைப் போராளிகளுக்காக 'ஓட்டி'யாக மாறினார். அந்தக் காலத்திலிருந்தே சின்னக்கிளியின் வாழ்க்கையும் வேறுவிதமாகவே மாறிவிட்டது. பிறகு கடற்புலிகள் என்ற கட்டமைப்பு வந்து அது வளர்ச்சியடைந்து சின்னக்கிளி போன்றவர்களின் தேவை குறைந்திருந்தபோதும் சின்னக்கிளிக்கிருந்த மதிப்பும் அவருடைய தேவையும் குறையவில்லை.
சின்னக்கிளி வன்னியின் இறுதிப் போர் முடியும் வரை கடலோரமாகவே நகர்ந்து, நகர்ந்து அந்த இறுதி நாட்களைச் சந்தித்தவர். பிறகு அகதி முகாம் வாழ்க்கை. அந்த நாட்களின் வலி அவரைச் சிதைத்திருக்கிறது. அதனால், வாடி, இழைத்துப் போயிருக்கிறார்.
இப்போது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கடலோரக் கிராமத்தில் தன்னுடைய சொந்தக் கடற்கரைக்குப் போவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
பொங்குதமிழுக்காகச் சின்னக்கிளியைச் சந்தித்தோம்.
00
நீங்கள் ஒரு 'ஓட்டி'யாக இருந்திருக்கிறியள். இப்ப போராட்டமே நெருக்கடிக்குள்ளாகி அப்படியிருந்த நிலைமையை எல்லாம் மாத்திப் போட்டுது. உங்கட அனுபவத்தில அந்த நினைவுகளையும் இந்த மாற்றங்களைப் பற்றியும் சொல்லுங்கள்?
எல்லாம் மாறித்தான் போச்சு. ஆர் நினைச்சது, இப்பிடியொரு நிலைமை வருமெண்டு? நான் ஓட்டியா ஒரு காலம் இருந்திருக்கிறன். இப்ப அகதி. முந்தி நினைச்ச இடத்துக்கு நினைச்ச நேரத்தில போய் வந்த நான், பலரையும் ஆச்சரியப்பட வைச்ச நான், இப்ப என்ரை சொந்த ஊருக்கு, சொந்தக் கடற்கரைக்குப் போகமுடியேல்லை. இப்ப என்ரை இந்த நிலைமை எனக்கே ஆச்சரியத்தைத் தருகிது.
ஆனால், கடலில திரியிறவனுக்கு எல்லாம் சமன். ஆழச் சமுத்திரத்தில எங்க பாத்தாலும் தண்ணியாகத்தான் இருக்கும். எங்க பாத்தாலும் நீலமாத்தானிருக்கும். நாங்கள் இப்ப எங்கட வரலாற்றில அப்பிடியொரு கட்டத்திலதான் இருக்கிறம் எண்டு நினைக்கிறன். 'அற நனைஞ்சவனுக்குக் குளிர் என்ன கூதல் என்ன எண்டு சொல்லுவினம்'.
நாங்கள் இப்ப எங்கட சமனிலையைக் குழம்ப விடக்கூடாது. அது குழம்பினால், எல்லாம் குழப்பியிடும். எல்லாம் ஒரு சுற்றுத்தான். பூமியும் ஒரு சுற்றிலதான் சுற்றிக்கொண்டிருக்கு. வரலாறும் அப்பிடித்தான் சுற்றிக் கொண்டிருக்கு. கடலில நீரோட்டம் எப்பவும் இருக்கும். ஆனால், வெளியில இருந்து பாக்கிறவைக்கு அது லேசில புலப்படாது.
எங்கட வரலாறும் எங்களுக்குத் தெரியாமல் நகர்ந்து கொண்டுதானிருக்கு. அதில ஏராளம் சுழிப்புகள், ஏராளம் திசைமாற்றங்கள் நிகழும். ஆனால், அதின்ரை நகர்வைத் தடுக்க ஏலாது.
நான் ஒரு காலம் ஓட்டியா இருந்திருக்கிறன் எண்டு சொன்னன். ஓட்டியெண்டால், ஆர்? பாரதப் போரில தேரோட்டி கிருஷ்ணன். ஈழப்போரில என்னைப் போல இருந்த ஆட்கள் ஓட்டி. ஆனால், அந்தக் கிருஸ்ணன் தேரோட்டி மட்டுமல்ல, நல்லதொரு ராசதந்திரியாகவும் இருந்திருக்கிறார். நாங்கள் அப்பிடியிருக்கேல்ல எண்டது உண்மை எண்டாலும் எங்கட போராட்டத்துக்காக நாங்கள் ஓட்டிகளாக இருந்து பாடுபட்டிருக்கிறம்.
நான் முதல்ல ஓட்டியா கோடிக்கரைக்குப் (தமிழகத்துக்கு) போனது 1983 இலதான். எங்கட மாமா பேரம்பலமும் இன்னொரு சொந்தக்காற ஆளும் நானுமாகப் போனம். அதில கண்ணாடி ஜீவன் எண்டு பிறகு சொன்ன, எங்கட ஊருக்குப் பக்கத்து ஊரில இருந்த பெடியனும் வந்திருந்தான். ஐஞ்சுபேரை ஏற்றிக் கொண்டு போனம். இரண்டு என்ஜின். அப்ப நேவிக்கரைச்சல் எல்லாம் பெரிசா இல்லை.
ஆனால், பிறகு அப்பிடியில்லை. இரவு கடலுக்கே வானத்தில இருந்து வெளிச்சம் போட்டுத் தேடினாங்கள். அப்ப சீப் பிளேன், ஹெலிகொப்ரர் எல்லாத்திலை இருந்தும் லைற் போட்டுத் தேடினாங்கள். எண்டாலும் நாங்கள் ஓடிறதை விடேல்ல.
ஒரு தடவை கடலில நேவியோட முட்டுப்பட்டிட்டம். அவன் கலைக்கத் தொடங்கீட்டான். வண்டியில இருந்த பாரத்தைக் குறைக்கிறதைத் தவிர, வேற வழியில்ல. கொண்டு வந்த பொருட்களைத் தூக்கிக் கடலுக்குள்ள போட்டிட்டு வண்டியைக் கொண்டு வந்திட்டம்.
அந்தப் பொருட்களை கோடியாக்கரையில (தமிழகத்தில) இருந்து ஏத்திக்கொண்டு வரப்பட்ட பாடு. ஆனால், என்ன செய்ய ஏலும்?
அந்த நாளையில ஒவ்வொரு இயக்கத்துக்கும் தனித்தனியாகத் துறை இருந்தது. ஈரோஸ்காரர் அநேகமாக நாவாந்துறை, வலைப்பாட்டுப் பக்கத்தில இருந்துதான் வெளிக்கிடுவினம். புலிகள், முதல்ல வல்வெட்டித்துறை, மயிலிட்டிப் பக்கத்தில இருந்து வெளிக்கிட்டவை. பிறகு அந்தப் பகுதிகளில சிறிலங்கன்ரை நேவியும் பொலிசும் ஆமியும் நோட்டமிடத் துடங்க, துறையை மாத்தி, எங்கட பக்கம் (வடமராட்சி கிழக்குப் பக்கத்தில) இருந்தும் மாதகல் பக்கத்தில இருந்தும் போய்ச்சினம். மாதகல் பக்கத்தில இருந்து புளொட்காரரும் போய்வந்து கொண்டிருந்தினம். பிறகு புலிகள் அங்க இருந்த இடத்தை மாத்திச்சினம். இதைவிட, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, பேரவை, என்.எல்.எவ்.ரி எண்டு ஆயிரத்தெட்டு இயங்கங்கள். எல்லாருக்கும் பாதைகளும் ஓட்டிகளும் இருந்திது.
சிலவேளை கடல்லயோ கரையிலயோ அந்தரப்படேக்க ஆளாளுக்கு உதவின காலமும் இருந்திது. நாங்கள் ஒருமுறை கோடிக்கரையில இருந்து வரும்போது, பேரவைக்காரற்றை வண்டிக்கு (படகுக்கு) உதவி தேவையா இருந்திது. அந்த நேரத்தில என்ன செய்யேலும்? ஆட்களை மாத்தி ஏத்திக் கொண்டு வந்ததுதான். ஆனால், இதை எங்கட ஆக்கள் (விடுதலைப் புலிகள்) விரும்பேல்ல. அது சரிதான்.
ஏனெண்டால், அப்ப பாதுகாப்பு எண்டது பெரிய பிரச்சினை. தகவல் வெளியில கசிஞ்சால், பிறகு அந்த இடம் நோண்டிதான். (கண்காணிப்புக்குரியதாகிவிடும்). இப்பிடி வேற ஆட்களை ஏத்தினால், நாங்கள் எப்ப வாறம், எது வண்டி, ஆர் ஓட்டி, எங்க துறை? எண்ட ரகசியம் எல்லாம் மற்றவைக்குத் தெரிஞ்சு போகும். பிறகு பிரச்சினை. அதால நாங்கள் அவையை வேற இடத்தில இறக்கிப் போட்டு பிறகு மேல ஏறி எங்கட துறைக்கு வந்தம்.
இந்த மாதிரி வேலையள் எல்லாரையும் பாதிக்கும். ஆபத்தில உதவத்தான் வேணும். அதுக்கும் ஒரு எல்லையிருக்கு எண்டு சொன்னார் அப்ப பொறுப்பில இருந்த சிங்கன்மாமா.
இந்தியன் ஆமி வந்ததுக்குப் பிறகும் ஓடியிருக்கிறன். பிறகு கடற்புலிகள் வந்த பிறகு அவையளே எல்லாத்தையும் பாப்பினம். ஆனால், எங்களைப் பழைய ஆட்கள் மறக்கேல்ல. கேணல் சூசை என்னைக் கூப்பிட்டு கடற்புலிப் போராளிகளுக்கு அறிமுகப்படுத்துவார்.
முந்தி நாங்கள் ஓடின மாதிரிப் பிறகு அவ்வளவு கஸ்ரம் எல்லாம் இல்லை. பிறகு நல்ல வளம் வந்திட்டுது. இந்தியாவுக்குப் போற தேவையும் குறைஞ்சு போச்சு. பிறகு கடல்ல சண்டையே நடக்கத் துடங்கீட்டுது. கடற்சண்டைக்கு நீங்கள் ஏன் அண்ணை எண்டு சொல்லி மெல்லமாக எங்களை இறக்கிப்போட்டுத் தாங்கள் ஏறீட்டினம்.
எண்டாலும் முந்தி ஓட்டிகளாக இருந்த ஆட்களைத் தேடிப் பிடிச்சு ஒருக்காத் தலைவர் சந்திச்சார். சூசைதான் இந்த ஏற்பாட்டைச் செய்தது. அப்ப ஒரு 'பாட்டுக் கசெற்'றும் வெளியிட்டவை. அதில ஒரு பாட்டு எங்களைப் பற்றி இருக்கு. 'ஓட்டிகளே... படகோட்டிகளே...' எண்டு. கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதினது.
அதெல்லாம் ஒரு காலம். இப்ப அதையெல்லாம் கதைச்சு என்ன பலன்? எவ்வளவு கஸ்ரப்பட்டிருக்கிறம்? எத்தினை பேரின்ரை குருதி சிந்தியிருக்கு? எவ்வளவு பேரை இழந்திருக்கிறம்? (சின்னக்கிளியின் கண்கள் கலங்கி விட்டன. அவர் மௌனமாகி விட்டார். பிறகு கொஞ்ச நேரத்தில் விம்மி விம்மி அழத் தொடங்கினார். அவரைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. பின்னர், அரை மணிவரை தாமதித்தே பேச்சைத் தொடர்ந்தோம். ஆனால், அவர் பழைய விசயங்களைப் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டார்).
இப்பிடி அகதியாக இருந்து அலையிறதுக்கே நாங்க போராடினம்? சொன்ன நேரத்துக்கு இந்தக் கரையில (வடமராட்சி கிழக்குக் கரையில) இருந்து கோடியாக்கரைக்கோ தனுஸ்கோடிக்கோ போய்வாற நாங்கள் இப்ப எங்கட கரைக்கே போகேலாமற் கிடக்கு. அதுவும் இப்பிடியெல்லாம் போராடிக் கஸ்ரப்பட்ட பிறகும்.
இதைவிடப் பெரிய துக்கம் வேற என்ன சொல்லுங்கோ பாப்பம்?
சரி, இந்த நிலைமையை எப்பிடி மாற்றலாம்? அதுக்கு யாரெல்லாம் என்ன செய்ய வேணும் என்று நீங்கள் நினைக்கிறீங்கள்?
நான் அரசியல் படிக்கேல்லை. ஆனால், ஏறக்குறைய ஒரு முப்பது வருசமாய் இயக்கத்தோடயும் போராளியளோடயும் வாழ்ந்திருக்கிறதால சொல்லிறன். எனக்கு வேற இயக்கக்காரரோடயும் அப்ப மெல்லிய பழக்கம் இருந்திது. எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுச் சொல்லிறன்.
எங்களுக்கு இப்ப கிடைச்சிருக்கிறது பெரிய தோல்விதான். அதை நாங்கள் மறுக்கேலாது. இல்லையெண்டால் இப்பிடி நாங்கள் ஊருக்கே போகமுடியாமல் இருப்பமா?
நாங்கள் போராடியிருக்கிறம். வேற ஆரும் போராடாத அளவுக்கு எங்கட போராட்டம் இருந்திருக்கு. எண்டாலும் நாங்கள் எங்கயோ தவறு விட்டிருக்கிறம். ஏனெண்டால், இல்லையெண்டால் இந்த அளவுக்கு எங்களுக்குத் தோல்வி வராது. நாங்கள் ஒரு அரசாங்கத்தை வைச்சிருந்த ஆக்கள். தனி நிர்வாகம். தனியான படைகள்.
சர்வதேச உலகமும் இந்தியாவும் சேர்ந்துதான் எங்களை அழிச்சிருக்கிறாங்கள். இவங்களை வழிக்குக் கொண்டுவாறதெண்டது சாதாரண காரியமில்லை. இனி இதையெல்லாம் விளங்கி, ஆர் அரசியலைச் செய்யப்போகினம்?
பின்ன, இஞ்ச இருக்கிற ஆக்கள் எல்லாம் அரசாங்கத்துக்கு எடுபிடிகளாகத்தான் இருக்கினம். இதில அவர் இவர் எண்டு எந்த விதிவிலக்கும் இல்லை. சிலபேர் வெளிவெளியாச் செய்யினம். சிலபேர் ரகசியமாகச் செய்யினம்.
சனங்கள் பாவம். பிள்ளைகளைக் குடுத்ததுகள். தங்கட சொத்து சுகங்கள் வாழ்க்கை எல்லாத்தையும் இந்தப் போராட்டத்துக்குக் குடுத்துப் போட்டு இப்ப நடுத்தெருவில நிக்குதுகள்.
முதல்ல இந்தத் தெருவில சனங்கள் நிக்கிற நிலைமையை மாத்த வேணும். இதைத்தான் முந்தித்தொடக்கம் இயக்கமும் (விடுதலைப்புலிகளும்) சொன்னது. இதைச் செய்து போட்டுத்தான் மற்ற அரசியலைச் செய்ய வேணும். றோட்டில பசி, பட்டினியோட சனங்களை வைச்சுக் கொண்டு போராடேலாது. அதுக்குச் சனங்களும் ஒத்துழைக்காது. சனங்கள் நல்லாக் களைச்சுப் போச்சுதுகள். ஆருக்குக் காயம் இல்லைச் சொல்லுங்கோ பாப்பம்?
பலருக்கு உடல்ல காயம். பலபேருக்கு மனசில காயம். இந்தக் காயங்களை ஆற்றிப் போட்டுத்தான் இவையளைப் போராட அழைக்க வேணும். எங்கட காலம் இனி மெல்ல மெல்ல முடியப்போகிது. நானும் காயப்பட்டிருக்கிறன். கடலில இவ்வளவு காலம் ஓடித்திரிஞ்ச என்னை அப்ப ஆரும் ஒண்டும் செய்ய முடியேல்ல. ஆனால், மாத்தளனில சும்மா வெளியில நிக்கும்போது வெடி பட்டது. இப்பவும் பின் முள்ளந்தண்டில ரவை இருக்கு. அதை எடுத்தால் நிமிர்ந்து நடக்கேலாது எண்டு சொல்லியிருக்கினம்.
பாருங்கோ மனசிலயும் பாரம். உடல்லையும் பாரம். இப்ப நிமிர்ந்து படுக்கக்கூட வழியில்லை. அப்பிடிப் படுக்க மனசும் விடுகிதில்லை. உள்ளுக்குள்ள இருக்கிற ரவையும் விடுகுதில்லை.
இந்த நிலைமையை மாற்றுவதற்கான வழிகள், அதற்கான தலைமைகளைப் பற்றி நீங்கள் தெளிவாகச் சொல்லவில்லையே!
'உள்ளத்தில ஒளியுண்டானால் வாக்கினிலே தெளிவு வரும்' எண்டு பாரதியார் சொல்லியிருக்கிறார். இப்ப நாங்கள் இருக்கிறது ஒரு குழப்ப நிலையே. அதாவது, எங்கட தனிப்பட்ட நிலைமையை நான் சொல்லேல்ல. நான் சொல்லிறது, அரசியல் நிலைமையை. நீங்களே சொல்லுங்கோ பாப்பம், இப்ப ஆர் இந்த மக்களுக்குத் தலைமை தாங்கிற சக்தியோட – திறமையோட இருக்கினம்?
போராட்டம் மிக மோசமாக ஒடுக்கப்பட்டிருக்கு. இதை மீட்டெடுத்து, இதில இருக்கிற சரி பிழைகளை எல்லாம் கணக்கில எடுத்து, அதையெல்லாம் சீர்ப்படுத்திக் கொண்டு போற வல்லமை – அதுக்கான ஆற்றல் உள்ள ஆக்கள் எண்டு இப்ப ஆர் இருக்கினம்.
ஆளாளுக்கு ஏதோ எல்லாம் கதைச்சுக் கொண்டிருக்கினம். ஆனால், சனங்களின்ரை நிலைமை, அதுகளின்ரை மன ஓட்டம் எல்லாம் என்ன எண்டு தெரியாமல் அரசியல் செய்யிறவைதான் இண்டைக்கு அதிகம். சனங்கள்தான் போராடுறவை. அவையளுக்குத்தான் போராட்டம். அதோட சர்வதேச நிலைமைகள் எப்பிடியிருக்கு? எண்டதைப் பற்றிய கணக்கும் அவசியம்.
இதெல்லாத்துக்கும் பொருத்தமாக ஒரு தலைமை, ஒரு சூழல் வரும் எண்டு நிச்சயமாக நான் நம்பிறன். இதைத்தான் முதல்லயே நான் சொன்ன எல்லாமே ஒரு சுற்றுத்தான் எண்டது. வாழ்க்கை ஒரு சக்கரம். பிரபஞ்சமே ஒரு சக்கரம்தான். அதிலதான் எல்லாமே சுற்றிக் கொண்டிருக்கு.
இந்த உலகத்தில என்னதான் புதுசு? அடக்குமுறையும் பழசு. அதுக்கெதிராப் போராடுறதும் பழசுதான். நாங்கள் ஒண்டையும் புதுசாச் செய்யத் தேவையில்லை. எல்லாத்தையும் சீராகச் செய்தாற் போதும்.
உங்களுடைய காலத்தில் ஓட்டிகளாக இருந்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளின் கடற்புலி ஓட்டிகளுக்கும் இருந்த வித்தியாசம் என்ன?
நான் இப்போதைக்குக் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க விரும்பயில்லை. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கிறதாக இருந்தால், இப்ப நாங்கள் இருக்கிற காலம் சிறப்பாக இருக்க வேணும். இப்ப இருக்கிற காலம் பிழையாக – பாதகமாக இருக்கும்போது கடந்த காலத்தைத் திரும்பிப் பாக்கிறது எண்டிறது மிகப் பயங்கரமான ஆபத்துக்குரியது.
இப்ப பாருங்கள் நாங்கள் கடந்த காலத்தை இப்ப பகிரங்கப்படுத்தினால், அது, எதிரித்தரப்புக்கு நாங்கள் அவல் குடுக்கிற மாதிரித்தான் இருக்கும். எங்களை அது நல்லாய் பலவீனப்படுத்திப் போடும். அதைப்போல கடந்த காலத்தை விட நாங்கள் இப்ப கஸ்ரப்படுகிறதால அந்தக் காலம் எண்டிறது, எங்களைக் கலங்க வைச்சிடும். அதால நான் எதையும் கதைக்க விரும்பேல்ல. என்ரை மனநிலையையும் நாங்கள் இருக்கிற சூழலையும் புரிஞ்சு கொள்ளுங்கோ. என்னைப் பொறுத்தவரை இப்பிடிப் புரிஞ்சு கொள்கிறதே ஒரு அரசியல் வேலைதான்.
நாங்கள் முதற்படியை – முதற்கோட்டை உருவாக்கினம். கடற்புலிகள் அடுத்த கட்டம். அதுவொரு வளர்ச்சி. நாங்கள் ஓட்டிகளாக மட்டும் இருந்தம். ஆனால், கடற்புலிகள் ஓட்டிகளாக, சண்டையிடும் போராளிகளாக, அரசியல் வேலை – நிர்வாக வேலை எனப்பல வேலைகளைச் செய்யிற ஆட்களாக எல்லாம் இருந்திருக்கிறார்கள். கரும்புலிகளாகவே பல கடற்புலிகள் இருந்திருக்கினம்.
மட்டுமில்ல, நாங்கள் இந்தியாவுக்கு அப்பால், தமிழ் நாட்டுக்கடற்கரைக்கு அப்பால் போகவில்லை. ஆனால், கடற்புலிகள் இந்த உலகத்தையே அளந்திருக்கிறார்கள்.
ஒரு ஓட்டி என்பவர் போராட்டத்துக்கான பாதையாகவும் பயணியாகவும் பயணத்துக்குத் துணையாகவும் சுமைகளைக் காவும் கருவியாகவும் இருந்த பாத்திரம் எங்கள் போராட்டத்தில் உண்டு. எனவே இந்தப் பின்னணியில் இனிவரும் காலத்திற்கு எப்பிடி நீங்கள் பங்களிக்கலாம் என்று நினைக்கிறீங்கள்?
எதுவும் முடிந்து விடுவதில்லை. அதிலயும் ஒடுக்கப்பட்டிருக்கிற எங்கட சமூகத்தின்ரை நிலைமை எங்களை ஒரு போதும் நிம்மதியாக இருக்க விடாது. 'மரம் அசைய விரும்பாவிட்டாலும் காற்று அதற்கு அனுமதிக்காது, அதைச் சும்மா விடாது' என்று மாவோ சொல்வார்.
நாங்கள் எப்பிடிச் சும்மா இருக்க முடியும்?
இறுதியாக ஒரு கேள்வி. நீங்கள் ஊருக்குப் போகக் கூடிய நிலைமை இப்போதிருக்கா? அங்கே போகக்கூடிய நிலைமை வந்தால் என்ன செய்ய உத்தேசம்?
எங்கட ஊரில இன்னும் சனங்கள் குடியிருக்க அனுமதியில்லை. ஆனால், கோவில் பெருநாளுக்கெண்டு அங்க போக விட்டாங்கள். அப்ப போய்ப்பாத்தம். வீடுகள் அதிகம் பாதிப்பில்லை. சிலபேருக்கு அழிஞ்சிருக்கு. ஆனால், இறுதிச் சண்டை எங்கட பக்கத்தில நடக்கவில்லை எண்டதாலை கொஞ்சம் தப்பியிருக்கு.
ஆனால், சுனாமிக்குள்ளயும் அதுக்கு முந்தின சண்டைக்குள்ளயும் அழிஞ்ச ஊர் எங்கட.
இனிப் போனால், பிறகென்ன? கடலும் கரையுமாகவே வாழ்க்கையிருக்கும். ஆனால், அந்தக் கரை எங்கட கரையாக இருக்குமா எண்டுதான் தெரியேல்ல. ஏனெண்டால் மடியுக்குள்ள நெருப்பை வைச்சுக் கொண்டு நிம்மதியாகத் தூங்கலாம் எண்டு எனக்குத் தோன்றயில்லை.
http://www.ponguthamil.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக