செவ்வாய், 14 ஜூன், 2011

பிரதமருடன் ஜெயலலிதா சந்திப்பு: சோனியாவுடன் சந்திப்பில்லை

டெல்லி வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவை இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நேற்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தையும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஜெயலலிதாவை சந்தித்துள்ள முதல் முக்கிய காங்கிரஸ் தலைவர் ஷீலா என்பது குறிப்பிடத்தக்கது. அதை விட முக்கியமாக, சோனியாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஷீலாவும் ஒருவர். எனவே இந்த சந்திப்புக்கு அரசியல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சோனியா சார்பில் ஜெயலலிதாவை ஷீலா சந்தித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

டெல்லி சென்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு அங்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து ஜெயலலிதாவை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வந்து சந்தித்தனர். அதில் முக்கியமானவர் ஷீலா தீட்சித்.

தமிழ்நாடு இல்லம் வந்த ஷீலா தீட்சித், ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த அவரிடம் செய்தியாளர்கள் என்ன பேசினீர்கள் என்று கேட்டபோது, இது கர்ட்டசி கால் (மரியாதை நிமித்தமான சந்திப்பு). முதல்வராகப் பதவியேற்றதற்காக ஜெயலலிதாவுக்கு வாழ்தது தெரிவித்தேன் என்றார் ஷீலா.

அதற்கு மேல் செய்தியாளர்கள் கேட்டபோது பதிலளிக்க மறுத்து விட்டார் ஷீலா. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஷீலா கூறினாலும் கூட சோனியா சார்பாகத்தான் ஷீலா வந்து சந்தித்திருப்பதாக கருதப்படுகிறது.

ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தின்போது சோனியாவை அவர் சந்திக்கக் கூடும் என்று பேச்சு நிலவி வந்தது. இருப்பினும் இந்த சந்திப்பால், திமுகவுடனான கூட்டணி முழுமையாக முறிந்து போய் விடலாம் என்று கருதிய சோனியா கடைசி நேரத்தில் சந்திப்பைத் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தன் சார்பில் ஷீலாவை அவர் அனுப்பி வைத்ததாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதேபோல பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், சிபிஐ தேசியச் செயலாளர் ராஜா ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

சந்திப்பு குறித்து ராஜா கூறுகையில், ஜெயலலிதாவுடனான சந்திப்பின் போது அரசியல் பற்றி பேசவில்லை. மின்சார பற்றாக்குறையாலும், கடன்சுமையாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதும் ஜெயலலிதாவுக்கு பாரதீய ஜனதா சார்பில் வாழ்த்து தெரிவித்தேன். அப்போது டெல்லி வரும் போது சந்திப்பதாக தெரிவித்தார். அதன்படி இந்த சந்திப்பு நடைபெற்றது என்றார்.

பிரதமருடன் சந்திப்பு

இந் நிலையில் இன்று ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழகத்திற்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் தர வேண்டும், உரப் பற்றாக்குறையை தீர்க்க உதவ வேண்டும். ரேஷனில் வழங்குவதற்காக 65,140 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரிடம் அவர் முன் வைத்தார்.

மேலும் தமிழகத்திற்கான வருடாந்திர நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், தமிழக அரசின் நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்தார்.

இலங்கைப் பிரச்சனை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைத் தாக்குதல் குறித்தும் முக்கியமாக ஜெயலலிதா விவாதித்தார்.

இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் ஒன்றையும் அவர் நிறைவேற்றியுள்ளார். இதுகுறித்து முக்கியமாக பிரதமருடன் அவர் விவாதித்ததாகத் தெரிகிறது.

பிரதமரை சந்தித்து முடித்த பின்னர் தமிழ்நாடு இல்லம் வரும் ஜெயலலிதா அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்ர். பின்னர் இன்றே அவர் சென்னை திரும்புகிறார்.

சோனியாவுடன் சந்திப்பில்லை..

அதே நேரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதா-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்திப்புக்கு இரு தரப்பிலும் முயற்சி செய்யவில்லை.

http://thatstamil.oneindia.in

1 கருத்து:

vijayan சொன்னது…

மன்மோஹனுடனான ஜெயலலிதாவின் இந்த சந்திப்பு கருணாநிதிக்கு பின்னாடி பச்சை மொளகாய் வெட்ச மாதிரி இருக்கும்,nobody can help it .ஜெயலலிதாவும் கவனமாக இருக்கவேண்டும்,ஏனென்றால் இந்திரா கட்சியை நம்பியவன் யாரும் உருப்பட்டதில்லை.