செவ்வாய், 14 ஜூன், 2011

தேர்தலில் மோசடியாக வென்று நாட்டை ஏமாற்றியவர் ப.சிதம்பரம்: ஜெயலலிதா தாக்கு

எனது ஆதரவு தேவையென்றால் அதை அவர்கள் தான் கேட்க வேண்டும். திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று வரை தொடர்ந்து வருவதால் தான் சோனியா காந்தியை நான் சந்திக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

முதல்வராகப் பொறுப்பேற்ற பின் இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்ற ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடந்த சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசுடன் சுமூக உறவு இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்.

2ஜி வழக்கு விசாரணையில் நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சி்க்கியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகாவிட்டால் அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மத்திய தொகுப்பிலிருந்து தற்காலிகமாக 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்க பிரதமர் உறுதி அளித்துள்ளார். தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும்.

திமுக செய்த சாதனையெல்லாம், நாட்டின் பணத்தை கொள்ளையடித்தது தான். கடந்த ஆட்சியில் திமுகவினர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். தான் செய்த தவறுகளுக்கான விலையை திமுக இப்போது கொடுத்துக் கொண்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலில் வெல்லவே இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அவரை அதிமுக வேட்பாளர் தோற்கடித்தார். ஆனால், மோசடி செய்து தான் அவர் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தில்லு-முல்லு செய்து நாட்டை ‌ஏமாற்றினர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இன்றைய தேதி வரை திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கொண்டுள்ளது. இதனால் நான் சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் தான் சந்திக்கவில்லை.

காங்கிரஸ் தரப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணையும்படி யாரும் என்னிடம கேட்கவில்லை. எனது ஆதரவு தேவையென்றால் அவர்கள் தான் வந்து கேட்க வேண்டும்.

ஊழலை எதிர்த்துப் போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.

புதிய தலைமை செயலகத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தினாலும், அலுவலகம் ஒருபுறம், அமைச்சகம் ஒருபுறம் என்று செயல்படுவது சிரமமான காரியம். எனவே பழைய தலைமை செயலகத்தில் செயல்படுகிறோம் என்றார் ஜெயலலிதா.

தி்முக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கொண்டிருப்பதற்கு ப.சிதம்பரம் தான் முக்கியக் காரணம் என்று ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது. மேலும் டெல்லி வந்த ஜெயலலிதாவை சோனியா சந்திக்காமல் தவிர்த்ததற்கும் சிதம்பரம் தான் காரணம் என்று ஜெயலலிதா கருதுகிறார்.

இதனால் தான் அவர் மீது ஜெயலலிதா பாய்ச்சல் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உங்கள் டெல்லி வருகை காரணமாக திமுக, அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, ஜெயலலிதா பதிலளிக்க மறுத்துவிட்டார். இது குறித்து கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. மேலும் திமுகவுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் தொடர நான் எந்த நிர்பந்தமும் செய்யவில்லை என்றார்.

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: