ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின், கோர்ட் மூலம் அனுப்பப்படும் சம்மனுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜரானால், அவரை சிறைக்கு அனுப்ப முடியுமா? இதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, அனைத்து தரப்பிலும் எழுந்துள்ள கேள்வி.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவிடம், சி.பி.ஐ., தொடர்ந்து விசாரணை நடத்தியது. பின், அவரை கைது செய்தது. கடந்த மாதம் ராஜா உள்ளிட்ட சிலர் மீது, முதல் குற்றப்பத்திரிகையை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது. இரண்டாவதாக, துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகையில் தான் முதல்வரின் மகளும், எம்.பி.,யுமான கனிமொழி சேர்க்கப்பட்டுள்ளார். கலைஞர் "டிவி' பங்குதாரரான சரத்குமார் மற்றும் "சுவான்' நிறுவனத்தைச் சேர்ந்த, ராஜிவ் அகர்வால், கரீம் மொரானி, ஆசிப் பல்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட ஐந்து பேரும் இன்று கோர்ட்டில் ஆஜராக, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. கோர்ட் அனுப்பும் சம்மனுக்கு கனிமொழி ஆஜராவார் என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். எனவே, இன்று கோர்ட்டில் கனிமொழி ஆஜராவார் என்பதில் சந்தேகமில்லை. அப்படி கோர்ட்டில் ஆஜராகும் போது, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
சி.பி.ஐ.,யைப் பொறுத்தவரை, கனிமொழியிடம் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விட்டது. எல்லா வழக்குகளிலும், யாரையும் எடுத்த எடுப்பில், சி.பி.ஐ., கைது செய்வதில்லை. முன்னாள் அமைச்சர் ராஜா மீது சில கட்ட விசாரணைக்குப் பின் தான் கைது செய்தது. அதேபோல், காமன்வெல்த் விளையாட்டு ஊழலிலும், பல கட்ட விசாரணைக்குப் பின் தான், காங்கிரஸ் எம்.பி.,யான கல்மாடி கைது செய்யப்பட்டார். குற்றப்பத்திரிகை தாக்கல் ஆவதற்கு முன்னே, இவர்கள் கைது செய்யப்பட்டனர். கனிமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, "வாரன்ட்' வழக்கு என்றாலும், கோர்ட் நினைத்தால், "சம்மன்' அனுப்ப முடியும். அப்படி தான் கனிமொழி ஆஜராக, "சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. "சம்மன்' படி, கோர்ட்டில் கனிமொழி ஆஜராகும் போது, கோர்ட்டுக்கு உள்ள தனிப்பட்ட உரிமைபடி நீதிபதி முடிவெடுக்கலாம்.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு, 167ன்படி பார்த்தால், கைது செய்யப்படும் நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போது, விசாரணைக்காக அவர் தேவைப்படும் பட்சத்தில் போலீஸ் தரப்பில் கோரும் போது, அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடலாம். 309(2)ன் படி பார்த்தால், ஒருவர் காவலில் இருக்கும் பட்சத்தில் அவரை, தொடர்ந்து காவலில் வைக்க உத்தரவிடலாம். பிரிவு, 437 ன்படி பார்த்தால், ஒருவர் கோர்ட்டில் ஆஜராகும் போது அல்லது கோர்ட்டுக்கு கொண்டு வரப்படும் போது, அவரை ஜாமீனில் விடலாம் அல்லது ஜாமீன் மறுக்கப்படலாம். ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் வகையில், தண்டனைக்குரிய குற்றச்சாட்டுகள் இருந்தால், ஜாமீன் வழங்க முடியாது. பிரிவு, 88 ன்படி பார்த்தால், கோர்ட்டில் ஆஜராகும் நபரிடம், மறுபடியும் கோர்ட்டில் ஆஜராவதை உறுதி செய்யும் வகையில் உறுதிமொழி ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதி கோரலாம். அவ்வாறு தாக்கல் செய்யும் பட்சத்தில், அவரை விட்டு விடலாம்.
பொதுவாக கோர்ட் அனுப்பும் சம்மனுக்கு ஒருவர் ஆஜராகும் போது, அடுத்த தேதி குறிப்பிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைப்பார். மறுபடியும் விசாரணைக்கு அவர் ஆஜராவதை உறுதி செய்வார். இதே வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவன நிர்வாகிகள் ஐந்து பேரும், சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராகினர். தங்களை ஜாமீனில் விடக் கோரி மனுக்களும் தாக்கல் செய்தனர். இவர்கள், சாட்சியங்களை கலைக்கக் கூடும் என, சி.பி.ஐ., தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் மனுக்களை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்தது. தற்போது இவர்களின் ஜாமீன் மனுக்கள், டில்லி ஐகோர்ட்டில் உள்ளன. தானாக முன்வந்து கனிமொழி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டால், அதற்கு, சி.பி.ஐ., தரப்பில் பதில் அளிக்க வேண்டும். இருதரப்பு வாதங்களுக்குப் பின், தகுதி அடிப்படையில், சி.பி.ஐ., கோர்ட் முடிவு செய்யும். ஜாமீன் மனு தாக்கல் செய்யாமல், கோர்ட் அனுப்பிய சம்மன்படி ஆஜரானால், அதன்பின், சி.பி.ஐ., கோர்ட் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஏழு நாட்களே உள்ளன. தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று, அரசு அமைக்கும் வாய்ப்பு ஏற்படுமானால், அதற்கு கனிமொழி கைது சம்பவம் பெரும் இடறலாக அமையும். இதனால், உடனடியாக கைது சம்பவம் நடக்காது என்றே டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக