சனி, 21 மே, 2011

15க்கு10 அடி சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி

திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி.

சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கனிமொழி வருமான வரி செலுத்துபவர் என்பதால் அவருக்கு சிறை அறையில் மின்விசிறி, டிவி, கட்டில் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

நேற்று சிபிஐ நீதிபதி ஷைனி, கனிமொழியின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து உடனடியாக அவரைக் கைது செய்ய உத்தரவிட்டபோது கனிமொழி அழுது விட்டார். அருகில் இருந்த தனது கணவர் அரவிந்தனின் தோள் மீது சாய்ந்து அவர் அழுதார்.

இதைப் பார்த்து அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரியும் கலங்கிப் போய், கனிமொழியை அணைத்து ஆறுதல் கூறினார்.

43 வயதான கனிமொழி திஹார் சிறையின் 6வது சிறைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது அறையில் அடைக்கப்பட்டார். அது தனி அறையாகும்.

கோர்ட்டிலிருந்து சிறைக்கு கனிமொழியை பெண் காவலர்கள் துணையுடன் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

கனிமொழியை சந்திக்க அவரது தாயார் ராசாத்தி அம்மாள் டெல்லி வந்துள்ளார். முதல்வர் கருணாநிதியும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: