வெள்ளி, 20 மே, 2011

வெளிநாட்டு அழுத்தங்களில் இருந்து தப்பிக்க சிறிலங்காவுக்கு இந்தியா கூறியுள்ள ஆலோசனைகள்

போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒரே வழி என்று சிறிலங்காவுக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது.

புதுடெல்லி அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘ஹிந்து‘ நாளேடு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று புதுடெல்லியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உயர்மட்டங்களுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், நடத்திய பேச்சுக்களின் போதே இந்தியாவின் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் அறிக்கையில் சிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றசாட்டுகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

“நாம் அவர்களுக்கு கூறியுள்ள செய்தி- உள்ளக ரீதியான நடவடிக்கைகளை எடுங்கள் என்பதே. அதற்கு இந்தியா உதவும்.

போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் அரசியல் நல்லிணக்கம் உள்ளிட்ட பல கவலைகள் இந்தியாவுக்கு உள்ளன.

அவர்கள் உள்ளக ரீதியாக நடவடிக்கைளை எடுக்கத் தவறினால், வேறு இடங்களில் இருந்து அழுத்தங்கள் வரும்“ என்று இந்திய அரசாங்க வட்டாரம் ஒன்று கூறியுள்ளது.

அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதைத் துரிதப்படுத்துமாறும் இந்தியத் தலைவர்கள் சிறிலங்காவிடம் கேட்டுள்ளனர்.

13வது திருத்தத்தின் அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஒன்றை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் போரின் பின்னர் காணாமற்போனவர்களின் பட்டியல் ஒன்றை தயாரிக்கும் படியும், அவர்களின் மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்காவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

அத்துடன் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கி, அவசரகாலச் சட்டத்தையும் விலக்கிக் கொள்ளுமாறும் இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும் ஹிந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: