ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை வைத்துக் கொண்டு சிறிலங்கா அரசை இந்தியா ‘பணிய வைக்கும்‘ காரியத்தை மேற்கொள்வதாக சிங்களத் தேசியவாதிகள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான இந்தியாவின் ஆதரவு பற்றிய எந்த உறுதி மொழியும் அளிக்கப்படவில்லை.
இந்தியாவின் ஆதரவை பலமாக எதிர்பார்த்திருந்த சிங்களத் தேசியவாதிகளுக்கு இது பலத்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சந்தர்ப்பம் பார்த்து இந்தியா தம்முடன் பேரம் பேசுவதாக அவர்கள் கருதுகின்றனர்.
அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவான சக்திகள் மேலதிக நேரத்தைச் செலவிட்டு, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வுக்கு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதன்காரணமாக சிறிலங்கா அரசு குழப்பமான சமிக்ஞைகளை வெளியிடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் மூத்த சட்டவாளரும், சிங்களக் கடும்போக்காளர்களில் ஒருவருமான கோமின் தயாசிறி,
“ சிறிலங்கா அரசாங்கம் 13வது திருத்தம் பற்றிய இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பது கவலைக்குரியதொரு விடயம்.
இரண்டு ஆண்டுகள் 10 மாதங்கள் பெரும் விலையைக் கொடுத்து சிறிலங்காப் படையினர் போரில் பெற்ற வெற்றியை இது முற்றாகவே அழித்து விடும்“ என்று எச்சரித்துள்ளார்.
அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறும் விடயம் தொடர்பாக இந்தியா கூறியுள்ள ஆலோசனைகளையும் சிங்களத் தேசியவாதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
“ இது தொடர்பாக சிறிலங்காவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் இந்தியா, 1987 தொடக்கம் 1990 மார்ச் வரை வட-கிழக்கில் இந்தியப்படைகள் நிலை கொண்டிருந்த போது நடந்த சம்பவங்களை மறந்து விட்டதா?“ என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“இந்தியப் படையினருக்கு எதிராக தமிழ் அரசியல் கட்சிகள், புலிகள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ள நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் தொடர்பாக இந்தியாவினால் விசாரணை செய்ய முடியாது.
இந்திய– சிறிலங்கா உடன்பாடுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுக்கு இந்தியா உதவி அளித்தது குறித்த அனைத்துலக சமூகம் கண்டு கொள்ளவில்லை.
எனவே சிறிலங்கா படைகள் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்குமாறு இவர்களால் கோர முடியாது.“ என்றும் சிங்களத் தேசியவாதிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவின் அணுகுமுறை விடயத்தில் கொழும்பு அதிருப்தியடைந்துள்ளதாகவும், எனவே சிங்களத் தேசியவாதிகளை இந்தியாவுக்கு எதிராக துண்டிவிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுள்ள குணதாச அமரசேகர அரச அதரவு அணியில் இருப்பவர் என்பதும், சட்டவாளர் கோமின் தயாசிறி விடுதலைப் புலிகளுடன் மகிந்த ராஜபக்ச அரசு நடத்திய பேச்சுக்களில் பங்கேற்ற அரசகுழுவில் இடம்பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.puthinappalakai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக