சிறையிலிருந்து நேற்று கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட கனிமொழியை, அவரது தாயார் ராஜாத்தி நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, கனிமொழியை கட்டியணைத்து கண்ணீர் விட்டு ராஜாத்தி அழுதார். தனது தாயாரை கனிமொழி ஆறுதல்படுத்தினார். இந்த உருக்கமான காட்சியால், கோர்ட்டில் குழுமியிருந்த தி.மு.க., பிரமுகர்கள் உட்பட அனைவருமே மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்தனர்.
முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதியின் மகளான கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நேற்று முன்தினம் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். "ஸ்பெக்ட்ரம் ஊழலில் இவர் கூட்டுச் சதி செய்தார்' என்ற குற்றத்தை சி.பி.ஐ., சுமத்தியுள்ளது. ஜாமின் வழங்க வேண்டுமென்று கனிமொழி தரப்பில் வைத்த கோரிக்கை மனுவை, சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டது. "குற்றத்தின் ஆழம், முக்கியத்துவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான ஏராளமான வலுவான ஆதாரங்கள் இருப்பதாலும், சாட்சிகளை கலைக்கும் முயற்சிகளில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளதாலும் கனிமொழிக்கு ஜாமின் தர முடியாது' என்று நீதிபதி சைனி உத்தரவிட்டதையடுத்து நேற்று முன்தினம் இரவு முழுக்க திகார் சிறையில் கழித்த கனிமொழி, நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். காலை 10:15 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். இரண்டு பெண் போலீசார் அவருக்கு பாதுகாவலாக உடன் வந்தனர். நேராக சைனியின் கோர்ட் அறைக்குள் அமர வைக்கப்பட்டார். கனிமொழிக்கு முன்னதாகவே அவரது தாயார் ராஜாத்தி கோர்ட்டிற்கு வந்திருந்தார். அவர் நேரடியாக கோர்ட் அறைக்குள் செல்லாமல், அறைக்கு முன்னதாக இருக்கும் ஒரு வராண்டாவில் அமர வைக்கப்பட்டிருந்தார். கனிமொழியும், அவரது தாயாரும் சந்தித்துக் கொள்வது எப்படி இருக்கும், என்ன பேசுவர் என்பதை அறிவதற்காகவே நேற்று மீடியாக்கள் ஆவலாக இருந்தன.
இதை முன்கூட்டியே தெரிந்துவிட்ட தி.மு.க.,வினர், இதை தடுக்கும் வகையில், கனிமொழி உள்ளே போய் அமர்ந்ததும், அவரைச் சுற்றிலும் அரணாக 15 தி.மு.க.,வினர் அமர வைக்கப்பட்டனர். கனிமொழிக்கு அருகே இருந்த இருக்கையில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் ராமச்சந்திரன் அமர்ந்திருந்தார். பின்னர், வெளியே இருந்த ராஜாத்தி உள்ளே அழைத்துச் செல்லப்பட, ராமச்சந்திரன் எழுந்து கொள்ள, கனிமொழி அருகில் அமர வைக்கப்பட்டார். அருகில் இருந்த பெண் போலீசாரும் அங்கிருந்து நகன்றனர். இதனால், யாரும் அவ்வளவு நெருக்கமாக என்ன நடக்கிறது என்பதையோ, இருவரும் பேசிக் கொள்வதையோ கேட்டு விட முடியாத நிலை உருவாக்கப்பட்டது. இதனால், பல நிருபர்கள் அப்செட் ஆனார்கள். கனிமொழியை பார்த்ததுமே ராஜாத்தி கட்டியணைத்து அழுதார். கண்ணீர் பொங்கும் கண்களுடன் இருக்கும் தனது தாயாரை பார்த்து, கனிமொழி சற்று ஆறுதல்படுத்தினார். இந்த உருக்கமான காட்சியை கண்டு கொண்டிருந்த தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் பலரும் ஆழ்ந்த வருத்தமடைந்தனர். கனிமொழியிடம் சில நிமிடங்கள் ராஜாத்தி பேசியபடி இருந்துவிட்டு, பின்னர் சரத்குமார் ரெட்டியிடமும் சில நிமிடங்கள் பேசினார். பின்னர் ராஜாவையும் அழைத்து ராஜாத்தி பேசிக் கொண்டிருந்தார்.
நேரம் நகன்று கொண்டிருக்கவே, மதிய உணவு இடைவேளை குறுக்கிட்டது. கனிமொழி, சரத்குமார் ரெட்டி, ராஜா உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரும், அருகில் உள்ள சி.பி.ஐ., லாக்அப் அறைக்கு உணவுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், ராஜாத்தியை தி.மு.க., வக்கீல்கள் மதிய உணவுக்காக அழைத்துச் சென்றனர். உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் கோர்ட் அறைக்கு திரும்பிய ராஜாத்தி, அங்கேயே மாலை வரை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சினியுக் உரிமையாளர் கரீம் மொரானியின் வக்கீல் சித்தார்த் பியாத்ரா நேற்று ஆஜராகி வாதாடினார். நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் மொரானிக்கு ஜாமின் வழங்கும்படி கோரினார். வரும் திங்கட்கிழமை தனது உத்தரவை அளிப்பதாக சைனி தெரிவித்தார். அதேபோல, அசீப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோரது ஜாமின் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. இதன் மீதான உத்தரவை வரும் 24ம் தேதி அளிப்பதாக சைனி குறிப்பிட்டார். இதற்கிடையில் கனிமொழியை ஜாமினில் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி மூலம் http://www.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக