திங்கள், 16 மே, 2011

2011 தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த மரண அடி

2011 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் சந்திக்காத படுதோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது.

தி.மு.க.வுடன் தீவிரமாக ‘பேசி’ 63 தொகுதிகளைப் பெற்று போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 58 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சாதாரண தோல்வியை அல்ல, படுதோல்வியை சந்தித்துள்ளனர்.


இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் பலம் வாய்ந்த கட்சி அல்ல என்றாலும், 1967 பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி, பெரும் தலைவர் காமராசர் இருந்தவரை பலம் வாய்ந்த கட்சியாகவே இருந்து வந்தது. 1969இல் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி - இந்திரா காந்தியின் எதேச்சதிகாரப் போக்கினால் - அது இரண்டாக உடைந்ததற்குப் பின்னரும் தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையினால பழைய காங்கிரஸ் பலம் வாய்ந்த கட்சியாகவே இருந்தது. திண்டுக்கல் மக்களவை இடைத் தேர்தலில் அ.தி.மு.க.விற்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தது பழைய காங்கிரஸ்.

பெரும் தலைவரின் மறைவிற்குப் பிறகு அது ஜனதா கட்சியாகி பலமற்றுப் போனது. 1969 பிளவின்போது மூப்பனார் தலைமையில் இயங்கிவந்த இந்திரா காங்கிரஸ், 1971இல் தி.மு.க.வுடனும், அதன் பிறகு 1977இல் அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வென்றது. அது முதல் காங்கிரஸ் கட்சி, இரண்டு திராவிட கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்து தமிழக சட்டப் பேரவையிலும், மக்களவையிலும் கனிசமான இடங்களைப் பெற்று அதிகாரம் செலுத்தி வந்தது மட்டுமின்றி, தங்களோடு கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிதான் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியும் என்றும் பேச ஆரம்பித்தது! 1980இல் மக்களவைத் தேர்தலில் அக்கட்சி தி.மு.க.வுடன் போட்டியிட்டு வென்ற பிறகு, அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. (எம்.ஜி.ஆர்.) ஆட்சியை (தி.மு.க. தந்த அழுத்தத்தால்) அரசமைப்புப் பரிவு 356ஐ பயன்படுத்திக் கலைத்தது.

அதன் பிறகு நடந்த தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்தித்தது. அ.இ.அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மை பெற்ற ஆட்சியைக் கைப்பற்றியது. எம்.ஜி.ஆர். 2வது முறையாக தமிழக முதல்வரானார்.

அதற்குப் பிறகு 1984 சட்டப் பேரவை, மக்களவைத் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றது. 1989இல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் (மூப்பனார்) தனித்துப் போட்டியிட்டு 26 இடங்களை மட்டுமே வென்ற நிலையில், அதன் பிறகு நடந்த மக்களவதைத் தேர்தலில் மீண்டும் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து கனிசமான இடங்களை வென்றது.


1991இல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நிலையில் நடந்த தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தது. வெற்றியும் கிடைத்தது. தமிழ்நாட்டில் 1996இல் காங்கிரஸ் உடைந்து தமிழ் மாநில காங்கிரஸ் தோன்றியது. அப்போது காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணியிலும், த.மா.கா., தி.மு.க. கூட்டணியிலும் இருந்தன. இப்போது தி.மு.க. அரசிற்கு இருந்த எதிர்ப்பு போல் அப்போது அ.தி.மு.க. அரசிற்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக த.மா.கா.- தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

அந்த நிலை தமிழகத்தில் இப்போது நடந்த முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மாறியது. இங்கு ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசின் சா(வே)தனைகளோடு, மத்திய காங்கிரஸ் அரசின் சா(வே)தனையும் தேர்தலில் மையப்படுத்தப்பட்டது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், காமல்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் ஆகியனவெல்லாம் காங்கிரஸ் கட்சியின் ‘நற்பெயரை’ ஆட்டங்காணச் செய்தாலும், அதற்கு எதிரான முக்கிய குற்றச்சாற்றாக இருந்து ஈழத் தமிழினத்தை அழித்த ராஜபக்ச அரசிற்கு உதவியதும், சிறிலங்க கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து சுட்டுக்கொன்றபோது, அதற்காக சிறிலங்க அரசைக் கண்டிக்காதது மட்டுமின்றி, அந்நாட்டு அரசோடு நட்புடன் நடந்துகொண்டதும் தமிழகத் தேர்தலில் முக்கியமாக பேசப்பட்டது.

ஈழப் பிரச்சனை 1983ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வமான பிரச்சனையாக இருந்தாலும், 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்தான் முதல் முறையாக மையப்படுத்தப்பட்டது. ஆனால் அந்தத் தேர்தலில், இப்போது நடந்து கொண்ட அளவிற்கு தேர்தல் ஆணையம் கடுமையான அணுகுமுறையை கடைபிடித்திருந்ததால், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களில் வெற்றி பெற்றிருக்காது. அதனால் பணநாயகம் ஜனநாயகத்தை வீழ்த்த முடிந்தது. மக்களவைத் தேர்தலோடு, ஈழப் போரும் முடிவிற்கு வந்ததால், அது ஒரு பிரச்சனையாக இருக்காது என்று காங்கிரஸ் தலைமை கருதியது.

இந்த இடத்தில்தான் அது தவறிழைத்தது. அது பெரும் தேர்தல் பிரச்சனையானது. இலங்கையில் தமிழினத்தை படுகொலை செய்த அந்தப் போர் குறித்து தமிழகத் தேர்தல் களத்தில் பல வினாக்கள் எழுப்பப்பட்டன. அதில் முன்னணியில் நின்றவர் நாம் தமிழர் கட்சியின் சீமான். இவர் எழுப்பிய வினாக்களுக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு தலைவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அது மட்டுமல்ல ஈழ தமிழர் ஆதரவாளர்களும், தமிழின உணர்வாளர்களும் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பெரும்பான்மையான தொகுதிகளில் ஈழப் போரில் தமிழினம் எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது என்பதை காட்டும் புகைப்படங்கள் அச்சிட்ட கைப்பிரதிகளை பெருமளவிற்கு மக்களிடையே விநியோகித்தார்கள், விளக்கிப் பேசினார்கள். இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் கோவத்தை உருவாக்கியது.


ஏற்கனவே, மின்வெட்டு, ஊழல், குடும்ப அரசியல் ஆகியவற்றால் ஆளும் தி.மு.க. மீது கடுப்புடன் இருந்த தமிழக மக்கள், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளை அறிந்து மேலும் கோவமுற்றார்கள். அதுதான் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக எதிரொலித்துள்ளது.

தமிழின உணர்வு அரசியல் கட்சிகளான பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியனவும் படுதோல்வியுற்றதற்கு இதுவே காரணம். அவைகளின் ஈழ ஆதரவு நிலைப்பாடு அரசியல் ஆதாயத்திற்கு உட்பட்டதே என்பதை கண்கூடாக தெரிந்ததன் விளைவும், காங்கிரஸ் கட்சியோடு வைத்த கூட்டணியும் அக்கட்சிகளை அந்நியப்படுத்திவிட்டன.

ஆக, தமிழர் பிரச்சனை மையப்படுத்தப்பட்டதே இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்விக்கும், காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த மரண அடிக்கும் காரணமாகும். ஈழத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க. அரசின் மெளன சம்மதமும் இந்தத் தேர்தலில் பலமாக பேசப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்தத் தேர்தல் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மிகப் பெரிய ஒரு திருப்பு முனையாகும். முன்பு போல், அக்கட்சி தமிழர் பிரச்சனைகள், தமிழ்நாட்டின் பிரச்சனைகள் ஆகியவற்றில் மெளனம் காத்துக்கொண்டு, வலிமையான கூட்டணியை மட்டும் அமைத்துக் கொண்டு வெற்றி பெற்றுவிட முடியாது. இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் பொருந்தும்.

கருத்துகள் இல்லை: