புதன், 18 மே, 2011

பீரிசிடம் ‘பிடி‘ கொடுக்கவில்லை இந்தியா - மகிந்தவை அழைக்கிறது புதுடெல்லிக்கு

புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை இந்திய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று புதுடெல்லி ஒப்ரோய் விடுதியில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன், வெளிவிவகாரச் செயலர் நிருபமாராவ், சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன, சிறிலங்கா வெளிவிவகார செயலர் கருணாதிலக அமுனுகம, இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக இந்தியாவின் ஆதரவைத் தேடியே தாம் புதுடெல்லி செல்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் முன்னதாக கொழும்பில் கூறியிருந்தார்.

ஆனால் நேற்றைய சந்திப்புத் தொடர்பாக, இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில், ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாகவோ அதுபற்றி நடத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்தோ எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் விடயத்தில் சிறிலங்கா கடற்படையினர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ள விவகாரத்துக்கே, அதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே “சிறிலங்காவுடனான இந்தியாவின் உறவு இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாத்தியமான வழிகளில் சிறிலங்காவுக்கு இந்தியா உதவி வழங்கும்“ என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கூறியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

“சிறிலங்காவுடனான இந்த உறவின் முக்கியத்துவம் இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. சிறிலங்காவுக்கும் கூட முக்கியத்துவம் வாய்ந்தது தான்.

நாங்கள் எப்போதும் சிறிலங்காவை உண்மையான பங்காளராக- இணைபிரியா நண்பனாகவே வைத்திருக்கிறோம்.

சாத்தியமான விடயங்களில் சிறிலங்காவுக்கு இந்தியா உதவிகளை வழங்கும். எந்த வடிவத்திலும் அவர்கள் கேட்கும் உதவிகளை நாம் செய்வோம்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் விவகாரத்தில் சிறிலங்கா கடற்படை அடக்கமாக- கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளதாக அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது.

அதேவேளை, நேற்றைய சந்திப்பின்போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் இந்தியப் பயணம், மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடனான சந்திப்பு ஆகியன தொடர்பாகவும் இரு நாட்டு அமைச்சர்களும் கலந்துரையாடியதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும், ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் மெளனம் காத்து வருகின்ற அதேவேளை, நேற்றைய சந்திப்பின் போதும் பிடி கொடுக்காத வகையில் நடந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு அழைத்து நேரடியாக அழுத்தம் கொடுக்கவே இந்தியா முனைவதாகக் கருதப்படுகிறது.

இதன் காரணமாகவே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்திக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.com

1 கருத்து:

Yoga.s.FR சொன்னது…

///சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு அழைத்து நேரடியாக அழுத்தம் கொடுக்கவே இந்தியா முனைவதாகக் கருதப்படுகிறது.////1987??????????