விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த இரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 27ம் நாள் கொழும்பில் நடைபெறவுள்ளன.
அத்துடன் எதிர்வரும் 19ம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 19ம் திகதி வரையான ஒரு மாதக் காலப்பகுதியை போரில் உயிரிழந்த படையினரை நினைவு கூரும் மாதமாகவும் சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல்களை சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
போர் வெற்றி கொள்ளப்பட்டதை நினைவு கூரும் வகையில் வெற்றி விழாக் கொண்டாட்டம் எதிர்வரும் 27ம் திகதி காலை காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
அன்று மாலை போரில் மரணமான சிறிலங்காப் படையினருக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் சிறி ஜெயவர்த்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபியில் இடம்பெறும்.
பொன்சேகாவுக்கு ஓய்வு தேவையாம்
சிறைச்சாலையில் சுகவீனமுற்றிருந்த சரத் பொன்சேகா இன்று கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு, சிறப்பு மருத்துவரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு ஒன்று அல்லது இரண்டு வார காலஓய்வு அவசியம் என்று சிறப்பு மருத்துவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலஸ் தெரிவித்தார்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான சரத் பொன்சேகாவின் நுரையீரல் சேதமடைந்துள்ளதால் தூசுகளை சுவாசிப்பது உகந்ததல்ல என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால், சிறைச்சாலையில் தூசு இல்லாத இடத்தில் சரத் பொன்சேகாவை தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரிரான் அலஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா அறிக்கையை சிங்களத்தில் வெளியிடுகிறது சிறிலங்கா
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை நிராகரித்துள்ள சிறிலங்கா அரசாங்கம் அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்து விநியோகிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த அறிக்கையை வெசாக் விடுமுறைக்குப் பின்னர், பிரதேச செயலகங்கள் ஊடாக விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மக்களுக்கு இந்த அறிக்கையை ஆங்கிலத்தில் படிக்க முடியாது என்பதால், அரசாங்கம் இதற்காக ஏற்பாட்டை செய்துள்ளது.
இந்த அறிக்கையில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.
அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவே ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக பத்து இலட்சம் கையொப்பங்களைத் திரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் போராளிகளின் விடுதலை தாமதம்
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேரை வெசாக் பண்டிகையை முன்னிட்டு விடுவிக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்த போதும், இவர்களின் விடுதலை தாமதமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெசாக் விடுமுறைகள் என்பதால், தம்மால் எதையும் செய்ய முடியாதுள்ளதாகவும், இந்தமாத இறுதியிலேயே முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவர் என்றும் சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க கூறியுள்ளார்.
எனினும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2600 கைதிகளை சிறிலங்கா அரசாங்கம் வெசாக்கை முன்னிட்டு விடுவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இனிவரும் தேர்தல்கள் புதிய வாக்காளர் பட்டியலின் படியே நடக்கும்
பிற்போடப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் 2010ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 17ம் நாள் சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்டபோது, பல்வேறு காரணங்களுக்காக 90 சபைகளுக்கான தேர்தல் நடைபெறவில்லை.
எதிர்வரும் 31ம் நாளுடன் 2009ம் வாக்காளர் பட்டியல் காலாவதியாகவுள்ளதால், அதன் பின்னர் இந்தப் பட்டியலின் கீழ் தேர்தலை நடத்த முடியாது.
எனவே இந்தத் தேர்தலில் உள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு பவ்ரல் அமைப்பு சிறிலங்காவின் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சிடம் கோரியிருந்தது.
இதுதொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் நிகால் ஜெயக்கொடி, இதற்காக தேர்தல் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் செய்யாது என்று கூறியுள்ளார்.
எதிர்வரும் 31ம் நாளுக்குப் பின்னர் நடைபெறும் எல்லாத் தேர்தல்களும் 2010ம் ஆணடின் வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே நடத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வாக்காளர் பட்டியலில் பெருமளவு இளைஞர்கள் சேர்க்கப்படவுள்ள நிலையில், அவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் சிறப்புப் பாதுகாப்புத் திட்டம்
மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற அடுத்தடுத்த இரண்டு படுகொலைகளை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
அங்கு சிறப்புப் பாதுகாப்புத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய கடந்த சனிக்கிழமை மட்டக்களப்புக்குச் சென்று நிலைமைகளை அவதானித்த பின்னரே புதிய பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி சிறிலங்கா காவல்துறையினர் முக்கியமான பல இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்தவுள்ளனர்.
இதனிடையே,கடந்தவாரம் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கருணா ஆதரவாளர் என்றும், மற்றவர் பிள்ளையான் ஆதரவாளர் என்றும் உரிமை கோரப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்தக் கொலைகளுக்கு அரசியல் பின்னணியே காரணம் என்று கூறப்படுவதையும் சிறிலங்கா காவல்துறை நிராகரித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பௌத்த சங்கம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பௌத்த சங்கம் ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சங்கத்தில் சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம் மாணவர்கள் 50 பேர் இணைந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சங்கத்தின் தலைவராக அமித் புஸ்பகுமார என்ற மாணவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக லதீப் என்ற மாணவரும், ஹாசினி சசித்ரா செயலாளராகவும், தங்கராஜா பிரதீப் துணைச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக பௌத்த சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை 2600 வது சம்புத்வ ஜெயந்தியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சுமார் 1200 படையினர் பங்கேற்ற பிரார்த்தனை நிகழ்வு ஒன்றும் நேற்று இடம்பெற்றுள்ளது.
புலிகளுக்கு உதவவில்லை - நோர்வே தூதரகம்
விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 12 பேர் சிறிலங்காவை விட்டுத் தப்பிக்க நோர்வே தூதரக அதிகாரிகள் உதவியதாக வெளியான செய்தியை கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
“சிறிலங்கா ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டதைப் போல புலிகள் இயக்க உறுப்பினர்கள் 12 பேர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நோர்வே உதவியது என்பதில் உண்மையில்லை.
இந்த நடவடிக்கை நோர்வே நாட்டு சட்டத்துக்கு இணங்க நோர்வே நீதியமைச்சின் பங்களிப்புடனேயே இடம்பெற்றது.
அரசியல் புகலிம் மற்றும் ஏனைய வதிவிட அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தவர்கள் சிலரின் விண்ணப்பங்களின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோருக்கு நோர்வே உதவியது என்பதே உண்மை.
இது அனைத்துலக மற்றும் நோர்வேயின் சட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கான பயணச்சீட்டுகளை நோர்வே தூதரகம் வழங்கவில்லை. விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கும் உதவவில்லை.
எமக்குத் தெரிந்த வகையில் எந்தவொரு விடுதலை புலிகள் இயக்க உறுப்பினருக்கும் கொழும்பிலுள்ள நோர்வே தூதரக அதிகாரிகள் உதவில்லை“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக