2ஜி வழக்கில் முன் பிணை கோரி கனிமொழி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, அவரை காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று சிபிஐ சார்பில் வாதிடப்பட்ட நிலையில், பிணை மனு மீதான தீர்ப்பை வருகிற 14 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2ஜி வழக்கு தொடர்பாக தம்மைக் கைது செய்யாமலிருக்க, தமிழக முதல்வர் கருணாநிதி மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.
சிபிஐ சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் யூ.யூ.லலித், தனது வாதத்தின்போது கூறியதாவது:
கலைஞர் டி.வி.யில் அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாரைப் போலவே கனிமொழிக்கும் 20 விழுக்காடு பங்குகள் இருக்கின்றன.கனிமொழி வெறும் பங்குதாரராக மட்டுமே இருந்தார் என்பதை ஏற்க முடியாது.கலைஞர் டி.வி.யின் நிர்வாகத்தில் கனிமொழி முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கும் கனிமொழிக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவதற்காக அரசியல் தரகர் நீரா ராடியா மூலமாக கனிமொழி பரிந்துரை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.
கலைஞர் டி.வி. தொடங்கப்படும்போது ராசாவுடன் கனிமொழி அடிக்கடி பேசியிருக்கிறார். இவற்றின் காரணமாக எந்த ஆவணமும் இல்லாமல் கலைஞர் டி.வி.க்கு பணம் கைமாறியிருக்கிறது.
கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் குற்றவியல் சட்டம் 88 சியின் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டு அவரைக் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அவரது வாதத்தை தொடர்ந்து கனிமொழி தாக்கல் செய்த பிணை மனு மீதான தீர்ப்பை வருகிற 14 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக் நீதிபதி அறிவித்தார்.
http://tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக