இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேனன், வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலார் பிரதீப்குமார் அடங்கிய 'மூவரணி' சிறிலங்காவுக்கு விரைவில் வந்தடைய உள்ளது.
இவ்வகை இந்திய மூவரணி ஒன்று சிறிலங்காவில் யுத்தம் முடிவடைவதற்கு சற்று நெருக்கமான காலகட்டத்திலும் ஒரு தடவை சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்தது. அன்றைய அந்த மூவரணிக்குள் இடம்பெற்ற மேனன் மட்டுமே தற்போதைய மூவரணியில் உள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் மேனன் வெளியுறவுச் செயலாளராக இருந்தபோது பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அதிகளவு அதிகாரங்களை கையில் கொண்டிருந்தார். அவர் சிறிலங்கா சம்பந்தமான விவகாரங்களில் மட்டுமல்லாது பிரபாகரன் தொடர்பாகவும் மிகத் துல்லியமான அறிவினை கொண்டிருந்தார்.
பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து வெளியேறிய அவர் தற்போது ஆளுநராக பதவி வகிக்கிறார். மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலினால் அறியப்பட்ட பாதுகாப்பு ஓட்டைகளுக்கு பொறுப்பு சொல்வதற்காக அவர் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்ற கருத்தும் உண்டு.
பாதுகாப்பு துறையில் காணப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகளும் குறைபாடுகளும் காரணமாக இவரை பதவிவிலகும்படி காங்கிரசின் ஆட்சி அழுத்தம் கொடுத்திருந்ததாகவும் அறியப்படுகின்றது.
சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் கொள்கை வகுப்பில் நாராயணன் கொண்டிருந்த தன்னிச்சையான மனப்போக்கு, இந்தியா சிறிலங்காவின் விடயங்களில் தன்பிடியை இழப்பதற்கும், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை கொடுப்பதற்கான வாய்ப்பை தவறவிடுவதற்கும் காரணமாக இருந்ததாகவும் சில குற்றஞ்சாட்டுகள் உண்டு.
அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் அழிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் வெளிநாட்டு உதவியின் பெயரால் சீனா சிறிலங்காவினுள் பரந்துகாலூன்றியதை நாராயணன் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
இந்நிகழ்வுகளில் முக்கியமாக இந்தியாவின் மூவரணி இலங்கைதீவினுள் வந்தடைவதற்கு முன்னரேயே சிறிலங்கா அரசாங்கம் ஒரு மகிழ்ச்சியான செய்தியொன்றை இந்தியாவுக்கு அனுப்பி இருந்தது. இந்தியாவின் தொடர்ச்சியான கோரிக்கையை பின்தள்ளி மிக நீண்டகாலமாக இழுபறியில் இருந்த காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியை இந்தியாவிடம் கையளிக்க சிறிலங்கா மந்திரிசபை தீர்மானித்துள்ளது என்பதே அச்செய்தியாகும்.
சிறிலங்கா தொடர்பான ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை வெளிவந்ததை தொடர்ந்து சிறிலங்கா மீண்டும் இந்தியாவின் ஆதரவை தேட தொடங்கியுள்ளது.
இலங்கைத்தீவு தொடர்பான இந்தியாவின் பட்டியலில் காங்கேசன் துறைமுகம் முதன்மையாக இருந்தததால் சிறிலங்கா அதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் சம்பூர் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டம் காணப்பட்டாலும், இதுவரை சிறிலங்காவின் சட்டமாஅதிபர் திணைக்களம் அதுதொடர்பாக கேள்விகளை எழுப்பி இழுத்தடித்து வந்தது. தற்போது அரசதரப்பில் இருந்து கிடைக்கும் செய்திகளின்படி அத்திட்டமும் விரைவில் அனுமதிக்கப்பட உள்ளது. அடுத்ததாக CEPA என்னும் வணிக ஒப்பந்தம் கவனிக்கப்பட உள்ளது.
இத்திட்டங்களுக்கெல்லாம் சிறிலங்கா விரைவாக அனுமதி வழங்கினாலும்கூட ஐநாவின் செயலணி அறிக்கையை தோல்வியடையச் செய்வதற்கு சிறிலங்காவுக்கு சார்பாக இந்தியா ஆதரவளிக்குமென கருதிக்கொள்ளமுடியாது.
எவ்வாறு ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டுள்ளனவோ அதேபோன்று மகிந்தவுக்கு எதிராக யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு வருகின்றன.
பிரதான தேசிய கட்சிகளான பாரதிய ஜனதாக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் தலைமையிலான திமுகவின் கூட்டுக்கட்சிகள், ஜெயலலிதாவின் தலைமையில் எதிர்க்கட்சியான அதிமுக என்பன குரல் எழுப்பியுள்ள அதேவேளையில் ஏனைய தமிழ்நாட்டில்உள்ள கட்சிகள் ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவாக போராட்டங்களை தொடங்கி உள்ளன.
இந்தியாவின் ஒவ்வொரு கட்சிகளும் மக்கள்சார் நிறுவனங்களும் சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக மட்டத்தில் விசாரணை செய்வதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி ஆதரவளிக்க வேண்டுமென கோபத்துடன் குரலெழுப்புகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா செயற்படுவது சாத்திமற்ற தொன்றாகவே உள்ளது.
சுருக்கமாக குறிப்பிடால் இலங்கைத் தீவில் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடாக கண்டடைவதே இந்தியாவின் பணியாக உள்ளது. 13வது சரத்திற்கு மேற்சென்று தீர்வினை காண்பதின் ஊடாக இந்தியாவின் சகல தரப்பினரையும் அமெரிக்கா ஐரோப்பா நாடுகளையும் சாந்தப்படுத்துவதுதான் இந்தியாவின் ஆர்வமுள்ள விடயமாக இருக்கும்.
ஐநாவின் குழுவின் அறிக்கை வெளியிடப்படு முன்னரே இந்தியா அதனை முழுமையாக வாசித்திருந்தது என்பதை சிறிலங்கா அறியும். பான்கீமுனின் செயலக ஆளணிகளில் முக்கிய பங்குவகிப்பவரும், சில குற்றச்சாட்டுக்கு உள்ளானவருமான நம்பியார் இவ்வறிக்கையின் உள்ளடக்கத்தை வாசித்து அதுதொடர்பாக இந்தியாவுடன் பரிமாறி இருப்பாரென சிறிலங்கா நம்புகின்றது.
சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்தியா நம்பியாரை பயன்படுத்தி யுத்த நிறுத்த நாடகத்தை ஐநா ஊடாக முன்னெடுத்தது என புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஆழமான கருத்தைக் கொண்டுள்ளது.
மார்ச் 31ம் திகதியில் நிறைவு செய்யப்பட்ட ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை உடனேயே வெளியிடப்படும் பட்சத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கருணாநிதிக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கும் எதிராகப் பயன்படுத்துவார்கள் என்ற காரணத்ததால் திட்டமிடப்பட்டிருந்த தமிழ்நாட்டு மாநில சட்சபைத் தேர்தல்கள் முடியும்வரை அறிக்கையை சிறிலங்காவுக்கு கையளிப்பதை தாமதிக்குமாறு நம்பியார் ஊடாக பான்கிமூனுக்கு அழுத்தத்தை இந்தியா வழங்கியது என்ற வாதமும் உண்டு.
சிறிலங்காவின் யுத்தம் முடியும்வரை காங்கிரஸ் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததா என தேர்தல் காலத்தில் ஜெயலலிதா எழுப்பிய கேள்வி காங்கிரஸ் ஆட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஐநா குழுவின் அறிக்கையை ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் மே யூன் மாத அமர்வுகளுக்கு கொண்டு செல்லவிடாமல் தடுப்பதும், செப்டம்பர் வரை அதனை காலந்தாழ்த்துவதும் கிடைக்கும் அக்கால இடைவெளிக்குள் சிறிலங்காவிடமிருந்து இந்தியா தான் பெற்றுக்கொள்ள வேண்டிய தனது பட்டியலில் உள்ள விடயங்களை பெற்றுக்கொள்வதும், தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை வழங்குமாறு அழுத்தம் கொடுப்பதும் இந்தியாவின் தற்போதைய திட்டமாக உள்ளதெனவும் சில தரப்புகள் குறிப்பிடுகின்றன.
இந்தியாவின் இன்றைய பாரிய சவால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள், புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஆகியவற்றை எவ்வாறு தன் விருப்புக்கு உடன்படச் செய்து தனது குறிக்கோளை அடைவது என்பதாகும்.
இந்தியா கடந்தகாலத்தில் பிரபாகரனையும் ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களையும் கொண்டு இலங்கையில் யுத்தத்தினை தூண்டி அதனூடாக தனது குறிக்கோளினை அடைந்ததனை - இலங்கை இந்திய ஒப்பத்தத்தை ஏற்கச்செய்ததும், திருக்கோணமலை துறைமுகத்தை தனது நேரடிக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தததும் - நினைவில் கொள்ளலாம்.
யுத்தம் முடிக்கப்பட்டதனை தொடர்ந்து இந்தியா தனது கைப்பிடியினை - பேரம்பேசும் சக்தியினை - இழந்து போனது. மாறாக இன்று ஐநா அறிக்கையின் ஊடாக இந்தியா மீண்டும் தனது பேரம்பேசம் திறனை முன்னைவிட சிறப்பாக கெட்டியாக பற்றி உள்ளது
அதேவேளையில் சிறிலங்காவினை அவமதிப்பது தொடர்பாக இந்தியா உள்அச்சம்கொண்டுள்ளது என்ற கருத்தினையும் மகிந்த கொண்டுள்ளார்.
அதேவேளையில், தங்கள் செயற்பாடுகள் சிறிலங்காவை சீனாவை நோக்கி தள்ளிவிடுவதற்கும், சீனாசார் நாடாக சிறிலங்காவை மாற்றுவதன் மூலம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பை தேடிக்கொள்ள வழிவகுக்கலாம் எனவும் இந்தியா அஞ்கின்றது.
இந்தியாவின் அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கம் கையாள முனையும்போது அதனால் ஏற்படும் நிச்சயமற்றதும் ஆபத்தானதுமான சூழலுக்குள் அது இந்தியாவினையும் இழுத்துச்செல்லக்கூடும்.
டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக