
பென்சில் விடும் தவறுகளை அழி இரப்பர் திருத்துகின்றது. ஒரு நாள் பென்சில் மிகவும் உருக்கமாக அழி இரப்பரிடம் கூறியது; நான் விடும் தவற்றை திருத்திகொள்கின்றீர்கள் கூடவே உங்களை அழித்துத்தானே என்னை திருத்துகின்றீர்கள் என்றது.
.
அழிரப்பர் சொன்னது அதைப்பற்றி நீ கவலைப்படாதே நீ தவறு விடக்கூடாது என்றுதான் நான் நினைக்கின்றேன். நான் தேய்வடைவதைப்பற்றி கவலைப்படவில்லை என்றது.
.
ஆம் பென்சில் பிள்ளைகளாகவும் அழி இரப்பர் அம்மாக்களாகவும் இருக்கின்றது.
.
தாய் தன் பிள்ளை தவறு விடக்கூடாது என்பதற்காகவே தன்னையே சிறுக சிறுக தேய்த்துக்கொள்கின்றாள். அன்னையின் ஒரே நோக்கம் தன் பிள்ளை நன்றாக வரவேண்டும் என்பதே.
.
ஆம் என் தாயும் அப்படித்தான் சின்ன வயசில் நான் சரியான குளப்படி யாருடைய சொல்லும் கேட்கமாட்டேன். நான் நினைத்ததுதான் சரி என வாதிடுவேன். பெரியோர்கள் என்றும் பார்க்காமல் எதிர்த்து பேசுவேன்.
.
கோபம் வந்தால் ஆக குறைந்தது இரண்டு நாள் கூட சாப்பிடாது விட்டிருக்கின்றேன். அம்மாவை திட்டி இருக்கின்றேன். அம்மாவும் எனக்கு மொங் மொங்கென இடைக்கிடையே முட்டிக்கு முட்டி தட்டுவார். அப்போது நீங்கள் தானா என்னை பெற்றீர்கள் எனவும் கேட்ட ஞாபகம். கடவுளே எப்படி இந்த வார்த்தைகள் என் அம்மாவை சுட்டிருக்கும்.
.
ஆனால் நான் வளர்ந்து வரும் நாட்களில் ஏன் அம்மா அப்படி செய்தார் என்பதனை புரிந்து கொண்டேன் ஏன் இப்போதும் கூடத்தான் எங்கு சென்றாலும் என் அம்மாவின் வளப்புத்தான் என்னை காப்பாற்றி வழி நடத்துகின்றது. எல்லா தாய்மாரும் அப்படித்தான்.
.
என் சகோதரர் பிறந்து ஒரு மூன்று நான்கு மாதம் என்று நினைக்கின்றேன். அவனுக்கு சரியான சளி பிடித்துவிட்டது. எனக்கு ஐந்து வயசு இருக்கும். அம்மா என்ன செய்தார் என்றால் சின்ன சகோதரனின் மூக்கில் தன் வாயை வைத்து சளியை மெல்ல மெல்ல உமிழ்ந்து எடுத்தார். நான் அந்த சின்ன வயசிலேயே முகத்தை சுழித்தேன். அம்மா சொன்னா உனக்கும் அப்படித்தான் செய்தேன் என்றார்.
.
ஏன் நான் வளர்ந்து பெரியவனானதும் சரி செங்கண் மாலை, சின்னமுத்து, பொக்குழிப்பான், என வருத்தங்கள் வந்தபோதும் எந்தவித தற்காப்பும் இல்லாமல் தன்ரபாட்டிற்கு என்னை பராமரித்தார். அப்போது சின்ன வயசில் அம்மாவை திட்டியது பற்றி நான் கவலைப்படுவேன்.
.
சின்ன சின்ன விசையங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான் ஆனால் இங்கு பதிவு செய்கின்றேன்...
அம்மாக்கள் பிள்ளைகள் பிறந்த பிறகு இரவு பகலாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள்.. ஆண் பிள்ளைகளுக்கு ஒரு விதம் பெண் பிள்ளைகளுக்கு ஒரு விதமாக.. உடல் அமைப்பை பிடித்து விடுவார்கள்.. மூக்கு பிடிப்பார்கள், கண் இமை, வாய், கை, கைவிரல், கால் , கால் விரல், ஏன் பிறப்பு உறுப்புக்களைக்கூட கூர்ந்து அவதானித்து பிடித்து விடுவார்கள். உண்மையில் தனது பிள்ளை பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, இறக்கும்வரை தன் தாய் திட்டமிடுகின்றாள்.
.
என் அம்மவும் அதற்கு விதி விலக்கு அல்ல ஏன் வளர்ந்த பின்னரும் கூட அம்மாவிற்கு நான் குழந்தைதான்.
.
என்னை இந்திய இராணுவம் பிடித்து நல்ல போடு போட்டு சிறை வைத்தார்கள் சிறையில் இருந்து விடுவித்தபோது என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. படக்கூடாத இடம் எல்லாம் சித்திரவதை செய்து என்னை ஜடமாகவே ஆக்கி விடுவித்தார்கள். ஆனால் என் தாய்தான் என்னை இரவு பகலாக பார்த்து மீண்டும் இயங்க வைத்தார்.என்னைப்போல்தான் என் தந்தைக்கும் இந்திய இராணுவம் பதம் பார்த்தது. தந்தையையும் அம்மாதான் மீட்டெடுத்தாள்.
என்னை இந்திய இராணுவம் விடுவிக்க வேண்டும் என்பதற்காக பல கோயில்களில் நேர்த்திக்கடன் வைத்தார். என்னால் நேர்த்திக்கடன்கள் செய்ய முடியாது என அடம் பிடித்தபோது தானே எல்லாவற்றையும் தன்னை வருத்தி செய்து முடித்தார். வருடத்தில் அரைவாசி நாட்கள் விரதம் இருப்பார் ஏனென்றால் எல்லாம் பிள்ளைகளுக்காகவே.
உலகத்தில் எங்குமே இல்லாத பல்கலைக்கழகம் எங்கள் பெற்றோர்கள்தான்.
சாப்பிடும்போது கைவிரலை நீட்டக்கூடாது, சாப்பிடும்போது சப்பு சப்பு என வாயைத்திறந்து கொண்டு சத்தம் போட்டு சாப்பிடக்கூடாது, நகம் வளர்த்தால் அடி,முடியை அலங்கோலமாக விட்டால் குட்டு,உடுப்புக்களை களுவாது விட்டால் திட்டு, பெரியோர்களை எதிர்த்து பேசினால் திட்டு,பின்னேரம் கால் கை கழுவாது விட்டால் இரவு சாப்பாடு கட். மாலை நேரம் படிக்காது விட்டால் சாப்பாடு கட். பொய் பேசினால் கட்டாயம் அடி... பம் பண்ணிவிட்டு அல்லது டொய்லட் போய்விட்டு சோப் போட்டு கை கழுவாது விட்டால் விரல் மொழிகளில் தட்டு. நீண்ட நேரம் விடிய விடிய தூங்கினால் அகப்பை தடி முதுகில் கட்டாயம் விழும்... மாரி காலம் ஆனதும் கொதித்து ஆறி வடித்த நீர்தான் கட்டாயம் குடிக்க தருவார்...இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் இவ்வளவு தண்டனைகளையும் கொடுத்டுவிட்டு என் அம்மா சாப்பிடாமல் இருந்திருக்கின்றார், தனியாக இருந்து அழுதிருக்கின்றார்,கடவுளிடம் மன்றாடி இருக்கின்றார். உண்மையில் அம்மாவின் அடியை விட இவைகளே என்னை காலப்போக்கில் அம்மாவிடம் எதிர்ப்பு காட்டாமல் இருக்க செய்தது.
எவ்வளவோ கஸ்டப்பட்டு, எவ்வளவோ துன்பப்பட்டு, விரதமிருந்து, தன் பிள்ளைகளை வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கிய என் அம்மா தானே இயக்கத்திற்கு போ என்று என் மூத்த சகோதரனை 1984 இல் அனுப்பி வைத்தார். அதிலும் பிரபாகரனின் இயக்கத்திற்குத்தான் என்றும் அம்மாவே வழிகாட்டினார்.
அது ஒரு மறக்கவே முடியாத நிகழ்வு..
1984 யூலை மாதம் மாலை நேரம் இரவு சாப்பாட்டிற்காக அம்மா அரிசியை இடித்து மாவாக்கிக்கொண்டிருந்தாள்.. எனக்கு 14 வயது நான் அம்மாவிற்கு உதவி செய்து கொண்டு அரிசியை வாயில் போட்டு இடைக்கிடையே குட்டும் வாங்கிக்கொண்டிருந்தேன். என் அண்ணர் வந்தான் அம்மா நான் இயக்கத்திற்கு போகப்போறேன் என்றான். அம்மா இடித்துகொண்டு இருந்த உலக்கையை அப்படியே நிறுத்தினார். நீண்ட நேரம் ஒன்றுமே பேசவில்லை. சிறுது நேரத்திற்கு பிறகு எந்த இயக்கத்திற்கு போகப்போறாய் என்று அம்மா கேட்டார். பின்னர் தானே பதிலும் சொன்னார். போவதென்றால் பிரபாகரனின் இயக்கத்திற்கு போ. இவ்வளவுதான் அண்ணா பறந்துவிட்டான். பின்னர் அம்மா அரிசியை இடிக்க தொடங்கினார், கூடவே தன் கண்ணீரை தனது சேலையால் துடைத்துக்கொண்டார். தனக்குத்தானே ஆறுதலும் சொன்னார்... என்ர பிள்ளை என்னிடம் ஒன்றுமே கேட்கமாட்டான், இதுதான் முதல் தடவை நாட்டிற்காகத்தானே போகட்டும் என்று சொன்னாள். பரவாயில்லையே அம்மா நல்ல அம்மா என நினைத்துக்கொண்டு நானும் கேட்டேன் அம்மா நானும் போகட்டா என்றேன்.. நல்ல காலம் அடுத்த இடி உரலில் விழாமல் என் தலையில் விழுந்திருக்கும். அதற்கு பிற்பட்ட காலங்களை அடுத்த அன்னையர் தினத்தில் எழுதுகின்றேன்.
அன்னையர் தினமான இன்று என்னைப்பெற்றெடுத்து ஆளாக்கிய என் தாய்க்கு நான் கொடுத்தது என்ன? அந்த தாயை அனாதரவாக முள்ளிவாய்க்காலிலும், நோயிலும் , பிணியிலும், துன்பத்திலும், விட்டுவிட்டு எங்கேயோ இருக்கின்றேன்.தன் மகனின் பெயரைக்கூட சொல்ல முடியாத சிங்கத்தின் கோட்டைக்குள் என் அம்மா.. எழுபது வயதிலும் எங்கு போவதென்றாலும் இராணுவத்திடம் கடிதம் வேணுமாம். நான் கேள்விப்பட்டேன் இப்போதும் அவர் எனக்காக விரதம் இருப்பதாக.. அடுத்ததாக என்னை சிறுவயதில் இருந்து அம்மா போல் வளர்த்த என் சிறியதாய் ஓர் முதியோர் இல்லத்தில் பல்வேறு உபாதைகளுடன் தன் இறுதிக்காலத்தை கழித்துக்கொண்டு இருக்கின்றார். என் சிறிய தாய் ஒரு கன்னியாஸ்திரி எனக்கு ஐந்து வயதில் டயறியா வந்தது. என்னை அப்படியே தூக்கிக்கொண்டு மூன்று கிலோ மீட்டர் ஓட வெளிக்கிட்டவா வைத்தியசாலையை அடைந்ததும் சிறியதாயார் மூச்சிரைத்து போனார்..அப்படிப்பட்ட என் சிறியதாய் தன் பிள்ளையை இனிமேல் பார்க்க முடியாதா என்ற ஏக்கத்துடனேயே காலத்தை கடத்துகின்றார்.
உண்மையில் தன் பிள்ளைகளை எந்தக்காலத்திலும் தன் உயிரைக்கூட தானம் செய்து காப்பாற்றத்துடிப்பவர்களுள் அம்மாக்களுக்கே முதலிடம். உலகத்தில் அம்மா என்ற உறவைத்தான் இறுதிக்காலம் வரை யாராலும் பிரிக்க முடியாதது.
.
எனக்கு சுனாமி ஞாபகம் என் மனதை விட்டு அகலாது. வடமராட்சியில் ஒரு தாய் சுனாமி அடித்த வேளை தன் பிள்ளை ஒன்றினை முதுகில் சுமந்து கொண்டு தென்னை மரத்தில் ஏறிவிட்டாள்.. ஆனால் குழந்தை கைதவறி கீழே விழுந்து விட்டது..கடல்தண்ணீர் கடலுக்குள் தன் பிள்ளையை இழுத்துக்கொண்டு சென்றதைப்பார்த்த அந்த தாய்... அப்பா நீங்கள் பெரியவனைக்கொண்டு போங்கோ நான் என்ர குட்டியோடு போகின்றேன்.. கவலைப்படாதையுங்கோ என்று தன் கணவனுக்கு சொல்லிவிட்டு தானும் தண்ணிக்குள் குதித்து உயிரை விட்டாள்.
**
தாய் நாட்டிற்காக தம் பிள்ளைகளை ஆயிரம் ஆயிரம் அன்னையர்கள், தங்கள் தேடற்கரிய செல்வங்களை கொடுத்திருக்கின்றார்களே, வாழ்க்கையில் என்றுமே இனி மீழ பெற்றுக்கொள்ள முடியாத தம் பிள்ளைகளை தொலைத்துவிட்டும் நடைப்பிணமாக திரிகின்றனர் , சிறைகளில் தம் பிள்ளைகள் கிடப்பதனை கண்னால் பார்த்து பார்த்து அழுகின்றனர். சில அம்மாக்கள் இயங்க முடியாத தம் பிள்ளைகளை உயிருடன் வந்ததே போதும் என இப்போதும் பிச்சை எடுத்து பராமரித்துக்கொண்டு இருக்கின்ரார்கள்.
அன்னையர் தினத்தில் நான் கடவுளிடம் கேட்பது.. நீ யோக்கியனாக இருந்தால் உனக்கு சமனான எம் தாய்மார்களை வதைக்காதே...அது முடியாது போனால் , சரி; எம்மை அடுத்த பிறப்பிலாவது அவர்கள் வயிற்றிலேயே பிறக்க செய்து அவர்களுக்கு பணிவிடை செய்ய ஏற்பாடு செய்.
தாய் நாட்டை மீட்க போராடப்புறப்பட்ட நாம் எம் தாய்மாரைக்கூட கைவிட வேண்டிய மிக மோசமான சூழல்...இந்த சூழலை மாற்றி எம் தாய் நாட்டையும் எம் தாய்மாரையும் மீட்க உயிர் உள்ளவரை செயற்படுவோம் என இந்த நாளில் உறுதி எடுப்போம்.
நன்றி
பகலவன் ( போராளி)
nanry ஈழ நாதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக