வியாழன், 5 மே, 2011

ஒசாமா சுட்டுக்கொல்லப்பட்டது சர்ச்சையாகிறது

நிராயுதபாணியாக இருந்த ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது சட்டப்பூர்வமானதா என்ற சர்ச்சை மனித உரிமை நிபுணர்களிடையே ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய அய் கய்டா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின் லேடனை தீர்த்துக்கட்டியது இராணுவ நடவடிக்கையா அல்லது பயங்கரவாதத்தை ஒடுக்கும் சட்ட ரீதியான (காவல் துறை நடவடிக்கை போன்ற) ஒரு நடவடிக்கையா என்பதைப் பொறுத்து ஒசாமா கொல்லப்பட்டது ஏற்கத்தக்கதா அல்லது தவறானதே என்பதை முடிவு செய்ய வேண்டும் என்ற மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

போரில் எதிரி ஒருவன் சரண் அடைய மறுத்தால் அவரை சுட்டுத் தள்ளுவது ஏற்கத்தக்கது ஆகும். ஆனால், போர் நடவடிக்கை சாராத ஆயுத நடவடிக்கையின்போது ஒருவர் ஆயுதமின்றி இருந்த நிலையில், அவர் சரண் அடைய மறுத்தாலும் சுட்டுக்கொல்வது என்பது மனித உரிமை மீறலாகும்.

ஒசாமா சுட்டுக்கொல்லப்பட்ட நடவடிக்கையை இராணுவ நடவடிக்கையாகவே வெள்ளை மாளிகை அறிக்கையும், அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சும் கூறுகின்றன. ஆனால், பன்னாட்டளவில் தேடப்படும் ஒரு குற்றவாளியை உயிருடன் பிடிக்கவே அதிகபட்ச முயற்சி எடுத்திருக்க வேண்டும் என்பது மனித உரிமை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு திட்டதிதன் மூத்த வழக்குரைஞர் ஆண்டிரியா பிராசோ, “உயிரைப் பறிக்கும் கடுமையான ஆற்றலை வெளிப்படுத்தக் கூடாது என்பதுதான் உயர் கடமையாகும்” என்று கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, ஒசாமா பின் லேடன் நிராயுதபாணியாக இருந்தாலும், தன்னை கைது செய்து கொண்டு செல்வதை எதிர்த்தார் என்றும் அதனாலேயே கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது. இதுவே மனித உரிமை தொடர்பான சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

பயங்கரவாதியாக இருந்தாலும் அவரை பலவந்தமாக பிடித்து கைது செய்து சட்டத்தின் முன்தான் நிறுத்தியிருக்க வேண்டுமே தவிர சுட்டுக் கொன்றிருக்கக் கூடாது, அது நியாயம் அல்ல என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: