திங்கள், 2 மே, 2011

உலகத் தமிழருக்கான ஒரு வரலாற்றுக் கட்டளை




இமெல்டா போல்

முள்ளிவாய்க்கால் படுகொலை: இரண்டாம் ஆண்டு நினைவு
ஏமாற்றப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், கூடாரங்களில் அடைக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், பாதுகாப்பின்றி விடப்பட்டவர்கள், நியாயம் கேட்க யாரும் அற்றவர்கள், உலகின் கண்ணில் பரிதாபத்துக்கு உரியவர்கள், எதிரியின் காலடியில் விடப்பட்டவர்கள், பிள்ளைகளை இழந்தவர்கள், உறவினர்களை இழந்தவர்கள், சொந்தச் சகோதரர்களை இழந்தவர்கள், கணவனை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், நண்பர்களை இழந்தவர்கள், சகபாடிகளை இழந்தவர்கள், கூடிக் குலவி விளையாடிய முற்றத்தை இழந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்கள், சொத்தை இழந்தவர்கள், சுகங்களை இழந்தவர்கள், முற்றிலும் நீதி மறுக்கப்பட்டவர்கள், பண்பாட்டின் சுவடுகளே அழிக்கப்பட்டவர்கள், மானபங்கப் படுத்தப்பட்டவர்கள், மாண்ட இன்னுயிர்களின் நினைவு கூரல்கள் மறுக்கப்பட்டவர்கள், வாழ்வே கண்ணீர்க் கடலில் என்று விடப்பட்ட மாந்தரான போதிலும் இழந்த இன்னுயிர்களுக்கு கண்ணீர் சிந்த மறுக்கப்பட்டவர்கள், சிறையிலிடப்பட்டவர்கள், வாயடைக்கப்பட்டவர்கள் என எத்தனை வார்த்தைகளைச் சொன்னாலும் அத்தனையும் வன்னிவாழ் ஈழத்தமிழருக்குப் பொருந்துகிறது. வன்னிக்கு முதல் கிழக்கிலும் இதுவே அரங்கேறியது.
நான்காம் ஈழப்போர் 2006-ம் ஆண்டு வெடிக்கும் போது வன்னியில் வாழ்ந்த மொத்த சனத்தொகை 3,80,000 என்பது அரச பதிவுகளில் உண்டு. ஆனால் யுத்தம் முடிந்த பின்பு முள்வேலி முகாங்களுக்குள் எஞ்சியோர்களின் தொகை அரச புள்ளிவிபரத்தின்படி 2,70,000 மட்டுமே. மேலும் யுத்தக் கைதிகளின் தொகை 13000 மட்டுமே. யுத்தத்தின் பழுவை வன்னி முழு அளவில் சுமக்கும் பொறுப்பை 1988-ம் ஆண்டு இந்திய இராணுவத்துக்கும் - புலிகளுக்கும் இடையான யுத்தம் வெடித்தபோது ஏற்கத் தொடங்கியது. வன்னிக் காட்டுக்கு புலிகளின் தலைமை மாறியதுடன் வன்னியே யுத்தத்துக்கான முதல் நிலைக் களமானது.
1990-ம் ஆண்டின் பின்பு சில ஆண்டுகள் தளர்வு ஏற்பட்டாலும் 1995-ம் ஆண்டு 'றிவிரச' இராணுவ நடவடிக்கையால் ஏற்பட்ட மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வுக்குப் பின்பு 2009 மே மாதம் வரை வன்னி யுத்தத்தின் பெரும் பழுவையும் சுமக்கத் தொடங்கியது. அத்துடன் கிழக்கும் இன்னொரு புறமாய் யுத்தத்தின் அதே பழுவைச் சுமந்து கொண்டிருந்தது. கிழக்கு இராணுவத்தால் 2007-ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட பின்பு வன்னியே குருசேத்திரமாகி யுத்தத்திற்கான 100 வீதப் பழுவையும் சுமக்க வேண்டி ஏற்பட்டது. அனைத்துத் தமிழீழப் பகுதிகளிலும் உலகின் நாலாபுறங்களிலும் பரவி வாழ்ந்த அனைத்து ஈழத்தமிழர்களினது தேவையினையும் இலட்சியத்தினையும் சுமக்கும் பொறுப்பு 3,80,000 வன்னிவாழ் ஈழத்தமிழரின் தோள்களிலும், தலைகளிலும் பொறிந்தது.
குறைந்தளவு மக்களே ஆயினும் பரந்த வன்னி பெருநிலப்பரப்புப் போல வன்னிமக்களின் மனமும் விரிந்து பரந்திருந்தது. குறைவற்ற விருந்தோம்பலுடனும், சலிக்காத மனத்துடனும், இலட்சியத்தையும், யுத்தச் சுமையினையும் கூடவே சுமந்தனர். சொல்லப்பட்ட அத்தனை விதமான வீரத்துக்கும், தியாகத்துக்கும், இழப்புக்களுக்கும், சோதனைகளுக்கும் அயராத உழைப்பிற்கும் அர்ப்பணிப்புக்கும் அந்த மக்களே இலக்கணமாயினர்.
பொருளாதாரத் தடை என்றால் என்ன, தலைப்பேறுகளான பிள்ளைகளை இழந்தால் என்ன, அன்புக்குரிய இன்னுயிர்களை இழந்தால் என்ன, பால்மணம் மாறாத பாலகர்களை இழந்தால் என்ன, கல்வியையும், வாழ்வின் அனைத்து வாய்ப்பு வசதிகளையும் இழந்தால் என்ன, அனைத்துவகை விமான மற்றும் எறிகணைக் குண்டுவீச்சுக்களுக்கு இலக்கானால் என்ன.. எல்லாம் அங்கு வாழ்ந்த மக்களுக்கே என்ற நிலைதான் தோன்றியிருந்தது. எல்லா இழப்புக்களும் அவர்களுக்கே சொந்தமானது. ஆனால் அவர்களுக்கென்று இருந்த ஏனைய சொந்தங்கள் எதுவும் இல்லை.
இந்த மக்களின் இரத்தத்திற்தான் இலங்கையின் அரசியல் தேர்ச் சக்கரம் சுற்றிச் சுழன்று வலம் வருகிறது. எல்லா வெற்றி விழாக்களுக்கும் மகுடங்களுக்கும் ஆதிக்க விருத்திக்கும் இந்த மக்களின் இரத்தமும் தசைத் துண்டங்களுமே உரமானது.
இப்போது யாருக்காக வாழ்வார்கள்? எதற்காக வாழ்வார்கள்? யாருக்காக அழுவார்கள்? யாரை நோவார்கள்? எங்கு முறையிடுவார்கள்? எப்படித் தாங்குவார்கள்? எதிரியின் காலடியில் எப்படிப் பாடுவார்கள்? என்னத்தை யாரிடம் சொல்லியளுவார்கள்? அடுத்தது என்ன? எல்லாமே முடிந்த கதையாய் வெறுமைக்குள் தள்ளுண்டவர்களாய், திசைதெரியாத காட்டில் விடப்பட்டவர்களாய் சூனியத்தில் தவிக்கின்றனர்.
இவற்றைப் பெறுவதற்கு வெறும் அறிவு போதாது. அதற்கென ஒரு மனம் வேண்டும். பசிய இதயம் வேண்டும். புரிதல் மிகு பண்பாடு வேண்டும். எங்கு விடப்பட்டிருக்கிறார்களோ அங்கிருந்தே இவர்களை நோக்க வேண்டும். வரலாறு எம்மை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறதோ அங்கிருந்தே அடுத்த கட்டத்துக்கான பயணத்தைத் தொடர முடியும். விதண்டா வாதங்களிலும், கற்பனைகளிலும் இருந்து எதனையும் ஆரம்பிக்க முடியாது.
இறந்தவர்களைவிட இருப்பவர்கள் அபாக்கியவான்கள். ஏனெனில் இறந்தவர்களின் துயரங்களையும் இருப்பவர்கள் சிலுவையாய்ச் சுமக்கிறார்கள். ஒருபுறம் அன்புக்குரிய இனிய உயிர்களின் இழப்புப் பற்றிய சுமை, மறுபுறம் அவர்களின் வெற்றிடங்களை நிரப்ப வேண்டிய சுமை. குறிப்பாக குடும்பங்களின் உழைப்பாளிகளை இழந்தவர்களுக்கு அன்பை இழந்த சுமையும் அவர்களாலான உழைப்பின் நலன்களை இழந்த சுமையும் என இச்சுமைகள் பெருக்கல் விதிகளைக் கொண்டவை. மேலும் அங்கவீனர்களைப் பராமரிக்க வேண்டியது இன்னொரு சுமை, அவர்கள் படும் துயரைக் கண்டு துயருற வேண்டியது இன்னொரு சுமை, மீண்டும் வரமாட்டாத இனிய நினைவுகளை எண்ணி மாழ்வது இன்னொரு சுமை. இப்படிப் பல பரிமாணங்களில் நாம் ஆழ மனம்பதித்து இம்மக்களின் துயரை நோக்குவதுடன் அவர்களுக்கான எமது அர்ப்பணிப்புக்களை நாம் உயர்த்த வேண்டியிருக்கிறது.
எல்லாப் போட்டி பொறாமைகளுக்கும் குழு உணர்வுகளுக்கும் அப்பால், எரிந்த வீட்டில் கொள்ளி பிடுங்குவதற்கு அப்பால் மிகப் பரந்த மனதுடன் நாம் ஒரு புதுப் பிரயாணத்துக்கு ஆரம்பமாக வேண்டும். 'துயரை மறந்தாலும் துயர் புகட்டிய பாடங்களை மறக்க மாட்டான் புத்திசாலி' என்ற கூற்றுக்கேற்ப நாம் அதிகம் அதிகம் சிந்திக்க வேண்டும். இரத்தமும் தசையுமாய் வரலாறு புகட்டிய பாடத்தில் இருந்து எம்மை நாம் புதுப்பிக்க வேண்டும்.
அடுத்தது என்ன? என்ற கேள்விக்கான பதிலை வரலாறு எம்மை எங்கு கொண்டுவந்து விட்டிருக்கிறதோ அங்கிருந்தே ஆரம்பிக்க வேண்டும். கற்பனை மனவேகத்தால் வரலாறு விட்ட இடத்திற்கு அப்பாலான தொலைதூரத்தில் இருந்து பயணத்தைத் தொடர முடியாது. இப்போது யுத்தத்தின் வடுவிலிருந்து எம்மைச் சுதாகரிக்கத் தொடங்க வேண்டும். எம்மை யௌவனப் படுத்தவேண்டும். நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தையும் அடையவேண்டிய இலக்கையும் அதற்கான பாதையையும், அதில் உள்ள தடங்கலையும், பயணத்தின் தூரத்தையும் துல்லியமாகக் கணித்து பயணத்தைத் தொடரவேண்டிய பல்மடங்கு அதிகரிப்பான பணி எம்முன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிழக்கிலும் வன்னியிலும் திட்டமிட்டு உழைப்பாளிகள் தேர்ந்தெடுத்துக் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் வேண்டுமென்றே விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். பெற்றோரை இழந்த பிள்ளைகளின் தொகை பல்லாயிரக்கணக்கு. தாயையோ அல்லது தந்தையையோ இழந்த பிள்ளைகளின் தொகை ஒருபறம், தாயையும், தந்தையையும் இழந்த பிள்ளைகளின் தொகை இன்னொரு புறம் என கிழக்கினதும் வன்னியினதும் கதையுள்ளது.
'புள்ளிவிபரம் இரத்தம் சிந்தாது' என்று ஒரு கூற்று உண்டு. இதயத்தால்; பாற்போருக்கே கண்களில் குருதி கசியும். இப்போது நாமும் எமது இதயங்களை திறந்து நோக்குவோம்.
ஈழமண்ணிலும், உலகின் ஏனைய பகுதிகளிலும் பரந்து வாழும் ஈழத் தமிழ் மக்களே! இப்போது வன்னியையும் கிழக்கையும் இதயத்தாலும், அறிவாலும், செயல்பூர்வ ஆதரவாலும் நாம் அணைக்க வேண்டும். கல்விமான்களுக்கென இதில் ஒரு பணியுண்டு. ஊடகவியலாளர்களுக்கென இதில் ஒரு பணியுண்டு, அறிஞர்கள், ஆராட்சியாளர்களுக்கென இதில் ஒரு பணியுண்டு. குடாநாட்டு மக்களுக்கென வன்னியையும், கிழக்கையும் நோக்கிப் பெரும் பணி காத்திருக்கிறது. துன்பத்தில் நாம் துவள முடியாது. மாறாக துன்பத்தில் பங்கெடுப்பதால் அதிக அன்பையும், கூட்டு வளர்ச்சியையும் நாம் கட்டியெளுப்ப முடியும்.
இந்த மக்களின் துயரங்களைப் பறை சாற்றுவதில் இருந்து, இந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் இருந்து, இந்த மக்களின் அனைத்துவகை உரிமைகளையும் வலியுறுத்துவதில் இருந்து, இந்த மக்களுக்காக நடைமுறையில் உதவுவதில் இருந்து எல்லாவித பணிகளையும் ஆரம்பிக்க வேண்டியள்ளது.
1990 இன் பின்பு வன்னியில் பிறந்த பிள்ளைகள் நவீன உலகிலிருந்து மறைந்தே இருந்தனர். பெரும்பாலான பிள்ளைகளுக்கு புகைவண்டி தெரியாது. கருவிலுள்ள பிள்ளைகளுக்குக்கூட விமானங்களைத் தெரியும். ஆனால் அவை பயணிப்பதற்குரிய வாகனமென்று அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் விமானம் என்றால் குண்டு பொழிவதற்கு உரியதென்பதுதான்.
2002 ஆம் ஆண்டு பேச்சு வார்த்தைகள் தொடங்கியபோது உலங்கு வானூர்திகள் கிளிநொச்சியில் தரையிறங்கத் தொடங்கின. அப்போது உலங்கு வானூர்தியின் வருகையைக்கண்டு தலைதெறிக்க ஓடியொழித்த பிள்ளைகளின் காட்சி மனதை உருக்க வல்லது. ஆனால் பின்பு அது குண்டு போட வரவில்லை, பேச்சுவார்த்தைகளுக்காக வந்துள்ளது என்ற செய்தி பரவத் தொடங்கவே அதை வேடிக்கை பார்க்க வந்த பிள்ளைகளின் தொகையைப் பார்த்த போது துயரம் மேலுமொரு பக்கம் அதிகரித்தது. அச்சிறுவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பெரும் முயற்சியெடுத்த காட்சி என் மனதில் அகலாதுள்ளது. இந்த அளவுக்கு எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை நிலையும், இராணுவப்பிடியும் காணப்பட்டது.
விமானம் என்றால் முதலில் அது குண்டு பொழிவதற்குத்தான் உரியது என்ற மனநிலை இன்னும் எமது பிள்ளைகளின் மனதைவிட்டு அகன்றிருக்குமென்று இல்லை.
1995 ஆம் ஆண்டு வன்னியில் ஒரு சோடி பனடோல் மாத்திரையின் விலை பத்து ரூபா. 2000ஆம் ஆண்டு வரை மலேரியா ஒரு ஆட்கொல்லி நோய். வீடுகளிலும், வீதிகளிலும், வைத்தியசாலைகளிலும், பொது இடங்களிலும், மலேரியா நோயால் ஆங்காங்கே இறப்பவர்களின் நிலை சகயம். ஆனால் 2000 ஆம் ஆண்டின் பின்பு வெற்றிகரமாக மரணத்தை தாண்டும் நிலை உருவாகி விட்டது. அரசு மேற்கொண்ட தீவிர மருந்துத்தடை இது போன்ற பல்வேறு மரணங்களுக்கு வழிவகுத்தது.
குருவித்தலையில் பனங்காயென போராட்டத்தின் தாங்கமுடியாத முழுச் சுமையையும் வன்னி வாழ் மக்கள் சுமந்தனர். அவர்களே போராட்டத்தின் அச்சாணியாகவும், சுழல் சக்கரமாகவும், சுமைதாங்கியாகவும் இருந்தனர். இன்று அந்த மக்களை பற்றிச் சிந்திப்பதிலிருந்து திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும்.
புலம்பெயர் தமிழரும் யாழ்ப்பாணமும் இதில் முக்கிய பாத்திரம் வகிக்க முடியும். நிறுவனமயப்பட்டு இம்மக்களுக்கு உதவுவதில் அரச தடைகள் இருக்க முடிந்தாலும், உதிரியாக உதவ நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன. முதலாவதாக யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியஸ்தர்கள் சேவை மையங்களை வன்னியில் ஆரம்பிக்க முடியும். பெற்றோர்களை இழந்த, இன்னுயிர்களை இழந்த மாணவர்களின் கல்விக்காக கூட்டாகவோ, தனியாகவோ புலமைப் பரிசில் நிதி உதவிகளைச் செய்யமுடியும்.
இப்பகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் அரசியல் முக்கியஸ்தர்கள் களநிலையில் செயற்பட்டு இதற்கான விடயங்களையும், பாதிக்கப்பட்டோரையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு பணியாற்ற முடியும்.
உணவு, கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் இங்கு பணியாற்ற வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் குவியும் பணத்தை வன்னி, மட்டக்களப்பு மக்களுக்கான சேவைகளுக்கு திருப்ப வேண்டியது முக்கிய சமயப்பணியாகும். 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற வகையில் ஆலய தருமகர்த்தா சபைகள், ஆலய நிதிகளை மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு திருப்ப வேண்டும்.
இனித் தொடர்ந்து வரப்போகும் நாட்கள் ஆலய உற்சவ திருவிழாக் காலங்களாகும். திருவிழாக் கொண்டாட்டத்திற்கான பெரும் தொகையான சோடனைப் பணத்தை மேற்படி மக்கள் சேவைக்கு ஓதுக்க வேண்டும். திருவிழாக்களை எளிமையாகக் கொண்டாடிவிட்டு அக்காலத்தில் கடவுளின் பெயரால் நிதி திரட்டல்களை மேற்கொண்டு இம்மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.
ஆதீனங்கள், தர்மகர்த்தா சபைகள் பரந்தளவில் நிதி திரட்டலில் ஈடுபட்டு வன்னி மட்டக்களப்பு பகுதிகளில் தேவையான பொது மண்டபங்களையும், நூலகங்களையும், மற்றும் சேவை மையங்களையும் நிர்மாணிக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக கூட்டுறவு நிறுவனங்கள் தம் வருமானத்தின் பெரும் பகுதியை மக்களுக்கென திட்டமிட்டு ஒதுக்க வேண்டும்.
தொழிற்துறை சார்ந்து யாழ்ப்பாணத்திலிருந்து சிறு முதலீடுகளை முதலீட்டாளர்கள் இப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும். வன்னியில் காணப்படும் வளங்களை அம்மக்களின் பயன்பாட்டுக்குரிய வகையில் பயன்படுத்தத்தக்க தொழில் முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
இயன்றளவு சுயதொழில் உற்பத்திக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கலாம். ஒரு சமூகப்பொறுப்புடன் இப்பணிகளை ஆற்ற வேண்டும். மக்களை கொள்ளை அடிக்கும் நோக்கத்தைத் தவிர்த்து சமூக சேவை உணர்வுடன் யாழ்ப்பாண இளைஞர்கள் வன்னியில் தொழில் முயற்சிகளிலும், பணியாற்றல்களிலும் ஈடுபட வேண்டும். இந்த காலகட்ட தேவையை உணர்ந்து அதற்கேற்ற மன உணர்வுடன் பணியாற்ற வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு இத்தலைமுறை இளைஞர்களைச் சார்ந்தது.
வன்னியில் கல்வி புகட்ட யாழ்ப்பாண ஆசிரியர்கள், இளைஞர்கள், சமூகத் தொண்டு நிறுவனங்கள், மதநிறுவனங்கள் அதிகம் முன்வர வேண்டும். வன்னியில் பணியாற்றுவதை ஒரு தேர்ந்த பணியாகவும், வரலாற்றுக் கட்டளையாகவும் கொள்ள வேண்டும்.
nanry ponkutamil

கருத்துகள் இல்லை: