யானையில் இருந்து மீண்டும் விழுந்தார் ‘துட்டகெமுனு‘
சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா இன்று காலை படப்பிடிப்பின்போது யானையில் இருந்து வீழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அமைச்சர் மேர்வின் சில்வா சிங்களத் திரைப்படம் ஒன்றில் துட்டகெமுனு மன்னராக பாத்திரமேற்று நடித்து வருகிறார்.
சிகிரியாவில் இன்று காலை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அவர் யானையில் இருந்து தவறி விழுந்ததாகவும், உடனடியாக அவரது பாதுகாவலர்கள் அவரை மீட்டுச் சென்றதாகவும் அதை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
துட்டகெமுனுவாக நடிக்கத் தொடங்கிய சில நாட்களில் மேர்வின் சில்வா யானையில் இருந்து வீழ்வது இது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பு தலைவர்களை இன்று மீண்டும் சந்திக்கிறார் பிளேக்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் இன்று மீண்டும் சந்திக்கவுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களுக்கான பயணங்களை மேற்கொள்ளும் பிளேக் நாளை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீஎல்.பீரிசை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்தநிலையில் மீண்டும் இன்று கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக நாளை மறுநாள் மீண்டும் பிளேக்குடன் சந்திப்பு இடம்பெறும் என்று நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருந்தார்.
நேற்றிரவு கூட்டமைப்பின் தலைவர்களை பிளேக் சந்தித்துள்ள நிலையில், மீண்டும் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது பற்றி மேலதிக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
அனைத்துலக சட்டங்களை அமெரிக்கா மீறவில்லையா?
பின்லேடனைக் கொன்ற சம்பவத்தில் அமெரிக்கப் படையினர் அனைத்துலக சட்டங்களை மீறவில்லையா என்று சிறிலங்காவின் பிரதமர் டி.எம். ஜெயரட்ண கேள்வி எழுப்பியுள்ளார்.
புறக்கோட்டையில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசியபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
“ இறைமையுள்ள இன்னொரு நாட்டுக்குள் புகுந்து ஒருவரைக் கொலை செய்வதற்கான உத்தரவை அமெரிக்க அதிபரால் எப்படி வழங்க முடியும்?
நாங்கள் பிரபாகரனைக் கொல்வதற்கு உத்தரவிடவில்லை. போர் நடந்துகொண்டிருந்த போதே அவர் கொல்லப்பட்டார்.
பின்லேடனின் மரணத்துக்கும், பிரபாகரனின் மரணத்துக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.
பின்லேடனின் சடலத்தை அமெரிக்கர்கள் மறைத்தே வைத்துள்ளனர்“ என்றும் டி.எம்.ஜெயரட்ண மேலும் தெரிவித்துள்ளார்.
ரஸ்யத் தூதுவரை ஆச்சரியப்பட வைத்த ஐ.நா அறிக்கை
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி தொடர்பாகவும், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் தான் ஆச்சரியமடைந்து போனதாக சிறிலங்காவுக்கான ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசின் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
“சிறிலங்காவின் தமிழ் மற்றும் சிங்கள மக்கள்“ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், இது சிறிலங்காவில் இரண்டு வேறுபட்ட மக்கள் உள்ளனர் என்ற அர்த்தத்தை கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகள் ஒரு மிகவும் ஒழுக்கம் நிறைந்த தேசியவாத போராளிக் குழு என்று கூறப்பட்டுள்ளதாகவும், ஒரு தீவிரவாத அமைப்பு என்று அடையாளப்படுத்தப்படவில்லை என்றும் ரஸ்யத் தூதுவர் குற்றம்சாட்டியுள்ளார்
nantry http://www.puthinappalakai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக