புதன், 4 மே, 2011

சிறிலங்கா அரசுக்கு எதிரான ஐ.நாவின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறார் சரத் பொன்சேகா

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான குற்றசாட்டுகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

தனது கட்டளையின் கீழ் செயற்பட்ட சிறிலங்கா படையினர் ஒருபோதும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அவர் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது கட்டளையின் கிழேயே படையினர் செயற்பட்டதாகவும், அவர்களின் செயற்பாடுகளுக்குத் தானே பொறுப்பு என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் மீது குற்றம் சாட்டியுள்ள பான் கீ மூனின் அறிக்கையை எதிர்கொள்வதற்கு தான் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பின்லேடன் மீதான தாக்குதல் ஒரு திறமையான படை நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள, சரத் பொன்சேகா இதற்காக அமெரிக்கப் படைகளுக்கு வாழ்த்துக் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்லேடனைக் கொன்றதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது கட்அவுட்களை வொசிங்டனில் வைக்கமாட்டார் என்றும், இராணுவத் தளபதியை வீட்டுக்கு அனுப்பமாட்டார் என்றும் தான் கருதுவதாகவும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: