போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக ஐ.நாவுக்குப் பதிலளிப்பது பற்றி சிறிலங்கா அரசிடம் இருந்த இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்டின் நெஸ்ர்கி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் பேசும்போது, ஐ,,நாவுக்கு முறைப்படியான பதில் அளிக்கப் போவதாகவும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் இதுபற்றிப் பேசியதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கடைசியாக கடந்தமாதம் 23ம் நாளே பான் கீ மூனுடன் தொலைபேசியில் பேசியிருந்தாக ஐ.நா பொதுசெயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்கி தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட முன்னரே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நாவுக்கு பதிலளிப்பது தொடர்பாக சிறிலங்காவிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் அனுப்பப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை, நேற்றுமாலை ஐ.நாவின் வடக்கு லோன் (North Lawn building) கட்டடத்தில் சிறிலங்காவின் ஐ.நாவுக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்து பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாருக்கு விபரித்துக் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, ஐ.நாவின் அறிக்கையை நிராகரித்துள்ள சிறிலங்கா அரசாங்கம் இந்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்காது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அவர் “ஐ.நாவுக்கு பதில் அளிக்கப் போவதாக கூறியுள்ள போதும், அது ஐ.நாவின் நிபுணர்குழுவின் அறிக்கைக்குப் பதிலளிப்பது போன்ற வகையில் அமையாது.
போரின்போதும், போருக்குப் பிந்திய காலத்திலுமான அரசின் செயற்பாடுகள் மற்றும் நிலைப்பாடுகள் பற்றி விளக்கும் அறிக்கையாகவே அது அமையும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.puthinappalakai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக