புதன், 11 மே, 2011

விடுதலைப் புலிகள் சரணை ஏற்க மறுத்ததார் கோத்தபய: விக்கிலீக்ஸ்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலைப் போரின் இறுதி கட்டத்தில் எந்த நிபந்தனையுமின்றி சரணடையத் தயாராக உள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்ததை சிறிலங்க அரசு ஏற்க மறுத்துவிட்டது என்று விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்ட ஆவணத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் சரணை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் முன்னிலையில் ஏற்றுக் கொள்ளுமாறு அமெரிக்க அரசு விடுத்த கோரிக்கை, “அந்த கட்டத்தை நாங்கள் கடந்துவிட்டோம்” என்று கூறி பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச மறுத்துவிட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

சரணை ஏற்க மறுத்தது மட்டுமன்றி, அந்த நடவடிக்கைக்காக போர் முனைக்குச் செல்ல தயாராக இருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பால் கேஸ்டில்லாவிற்கு அனுமதியளிக்கவும் கோத்தபய ராஜபக்ச மறுத்துவிட்டதாகவும் அமெரிக்க ஆவணம் கூறுகிறது.

விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் வெளியிட்ட அமெரிக்க ஆவணத்தை நார்வே நாளிதழ் ஆஃப்டன்போஸ்டன் வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்ட அந்த அமெரிக்க ஆவணத்தின்படி, விடுதலைப் புலிகள் எந்த நிபந்தனையுமின்றி, மூன்றாவது தரப்பிடம் சரண்டைய முன்வந்துள்ளதாக தன்னிடம் செல்வராசா பத்மநாபன் (என்கிற கே.பி) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக நார்வே தூதர், அமெரிக்கத் தூதருக்குத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கதின் பன்னாட்டுத் தொடர்பாளராக அப்போது செல்வராசா பத்மநாபன் செயல்பட்டு வந்தார். புலிகள் சரண்டைய முன்வந்திருப்பதையும், மூன்றாவது தரப்பு ஒன்றிடம் அவர்கள் சரண்டைய விரும்புவதாகவும் கூறியிருப்பதை அமெரிக்கத் தூதர் கோத்பய ராஜபக்சவிடம் கூறியுள்ளார்.

அதனை கோத்தபய ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார். சரணடையப்போகும் புலிகளின் தலைவர்கள் பட்டியலை அளிக்குமாறும் கோத்தபய கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு, புலிகளின் சரணை ஏற்க, போர் முனைக்குச் செல்ல தயாராக இருக்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் அமெரிக்கத் தூதர் வலியுறுத்தியுள்ளார்.

சரண்டைவோர் பட்டியலை அளிக்குமாறு புலிகள் இயக்கத்தினரிடம் நார்வே கேட்டும், அப்படிப்பட்ட பட்டியல் எதையும் புலிகள் தரவில்லை. முதலில் மூன்றாவது தரப்பிடம் புலிகள் சரணடைவதை ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்ச, பிறகு அதனை மறுத்துவிட்டார். புலிகள் சரணை ஏற்க முடியாது என்றும், அந்த கட்டத்தை தாங்கள் தாண்டிவிட்டதாகவும் கோத்தபய ராஜபக்ச ஆக்ரோஷத்துடன் மறுத்துவிட்டார் என்றும் அமெரிக்க ஆவணம் தெரிவிக்கிறது என்றும் அச்செய்தி கூறுகிறது.

புலிகளின் சரணை முதலில் ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்ட கோத்தபய ராஜபக்ச, பிறகு “அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டோம்” என்ற பதிலை அளிக்கக் காரணம் என்ன என்பதையும், அதன் பிறகு எவ்வாறு ப.நடேசன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்கள் சரணடைய வந்தனர் என்பது போன்ற விவரங்கள் எதுவும் அந்த ஆவணத்தில் இல்லை.

http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: