சிறிலங்காவில் போரின் இறுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்ந்த ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயற்படுமாறு, சிறிலங்கா அரசுக்கு வலியுறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருப்பதாக புதுடெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஜிந்தர் சச்சர் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லியில் தமிழ் மாணவர் அமைப்புக்கள் சார்பில், ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசும் போதே அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.
இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய பின்னர் அவர், பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிடுகையில்,
“ஐ.நா. குழு சிறிலங்காவுக்கு சென்று விசாரணை நடத்த சிறிலங்கா அரசு அனுமதி மறுப்பதன் மூலம், அது எதையோ மறைக்க முனைகிறது.
அதேநேரத்தில், ஐ.நா. உறுப்பினர் என்ற முறையில், ஐ.நா. சபையை நிராகரிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை இலங்கை அரசுக்குப் புரிய வைக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.
ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆயுத ரீதியான தலையீடுகளுக்கு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் இந்தியா ஆதரவு கொடுக்கும் நிலையில், சிறிலங்காவில் மனிதஉரிமை மீறல்கள் நடைபெற்றிருப்பதாக ஐ.நா. குழு அறிக்கை கூறுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தில் இந்தியா மென்மையாக நடந்து கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் ஆயுதம் கொடுக்கிறது என்பதற்காகவா?
அப்படியே இருந்தாலும் கூட, அதைப் பற்றிக் கவலைப்படும் அளவுக்கு இந்தியா பலவீனமான நாடு அல்ல. அதற்கு பலம் இருக்கிறது.
சிறிலங்காவை இந்தியா பொம்மையாகக் கருதவில்லை. நெருங்கிய அண்டை நாடாக, பல விடயங்களில் ஒன்றுபட்ட கலாசாரங்களைக் கொண்ட நாடாகவே கருதுகிறோம்.
இந்த விடயத்தில், தமிழக அரசியல் கட்சிகள், குறிப்பாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள், தேர்தல் நேரத்தில் மத்திய அரசை நிர்பந்திக்கத் தவறி விட்டன.“ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்தக் கருத்தரங்கில், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மணிவண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, லோக்ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், மாக்கிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்வபன் முகர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.
http://www.puthinappalakai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக