சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக கலந்துரையாட இந்தியாவின் உயர்மட்டக் குழுவினர் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளை இருநாட்டு அதிகாரிகளும் மறுத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக இந்திய, சிறிலங்கா உயர்மட்டக் குழுவினர் விரைவில் சந்தித்துப் பேசவுள்ளனர் என்று இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு தகவல் வெளியிட்டுள்ளன.
ஆனால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவின் உயர்மட்டக்குழு சிறிலங்கா செல்லவுள்ளதாக வெளியான தகவல்களை அந்த வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.
“இரண்டுதரப்பு உயர்மட்டப் பிரதிநிதிக் குழுக்களும் மிகவிரைவில் சந்திக்கவுள்ளன. இந்தச் சந்திப்புக்கான நாளோ அல்லது இடமோ இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அது கொழும்பாகவும் இருக்கலாம். புதுடெல்லியாகவும் இருக்கலாம்.“என்றும் புதுடெல்லி இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான மேலதிக செயலர் ரஞ்சித் உயங்கொடவும் இந்தியக் குழுவின் பயணம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
அதுபற்றிய முறைப்படியான எந்த அறிவிப்பும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை சந்தித்து ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, எதிர்வரும் 16ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் புதுடெல்லி செல்கிறார்- அது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை பற்றிய விவாதம் நடக்கவுள்ளது. அத்துடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சிறிலங்காவுக்கு இந்தியாவின் உதவி தேவைப்படுவதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
http://www.puthinappalakai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக