திங்கள், 9 மே, 2011

ஐ.நா போர்க்குற்ற அறிக்கை: சிறிலங்கா அரசுக்குள் கருத்து முரண்பாடுகள் - செய்தித் துளிகள்

தமிழினிக்கு தடுப்புக்காவல் நீடிப்பு

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தடுப்புக்காவல் உத்தரவை கொழும்பு பிரதம நீதிவான் நீடித்துள்ளார்.

இன்று கொழும்பு நீதிமன்றத்தில் தமிழினியை முன்னிலைப்படுத்திய சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள், சட்டநடவடிக்கை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகக் கூறினர்.

அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய தமிழினியை எதிர்வரும் ஜுன் 6ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டார்.


ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்குள் கருத்து முரண்பாடுகள்

http://www.puthinappalakai.com


ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்குள் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

இந்த அறிக்கையை வெளியிட்டதற்காக ஐ.நாவுக்கு எதிராக நடத்திய போராட்டங்களால் சிறிலங்கா அரசு அனைத்துலக அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
இதையடுத்து தருஸ்மன் குழுவின் அறிக்கைக்கு எதிரான போராட்டமாக சிறிலங்கா அரசு முன்னெடுத்து வருகிறது.

ஆனால், பான் கீ மூனின் இந்த அறிக்கையை தருஸ்மன் குழுவின் அறிக்கை என்று பரப்புரை செய்வதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச போர்க்கொடி தூக்கியுள்ளார்.

நாவலப்பிட்டியவில் வீடமைப்புத் திட்டம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த அறிக்கை பான் கீ மூனின் ஆசியுடன் தயாரிக்கப்பட்டது என்றும், தருஸ்மன் வுறுமனே தனது பெயரை மட்டுமே அதில் போட்டுள்ளார் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதமின்றி இருந்த பின்லேடனை இன்னொரு நாட்டுக்குள் புகுந்து கொன்ற அமெரிக்காவைக் கேள்விக்குட்படுத்தாமல், பிரபாகரனின் மரணம் பற்றியும், வெள்ளைக்கொடி விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்புவதற்கு ஐ.நா பொதுச்செயலர் யார்? என்றும் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

சரத் என் சில்வாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம்

சரத் என் சில்வா பிரதம நீதியரசராக இருந்த போது, மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று சிறிலங்காவின் நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் 19வது திருத்தத்தைச் செய்து நீதித்துறை அதிகாரங்களைக் கைப்பற்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக சரத் என் சில்வா கூறியுள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சரத் என் சில்வாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவர் மக்களை தவறாக வழிநடத்த முனைகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் மீது சிறிலங்கா காவல்துறை தாக்குதல்

ஐரிஎன் தொலைக்காட்சியின் அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான நிரோசன் பிறேமரத்ன சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கப்பட்டு படு காயமடைந்துள்ளார்.

வாதுவவில் இருந்து வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இருவர் பாணந்துறையில் இவரை இடை மறித்துள்ளனர்.

அப்போது இவர் தான் ஐரிஎன் தொலைக்காட்சி அறிவிப்பாளர் என்று கூறி, தமது நிர்வாகத்திடம் தொலைபேசி மூலம் முறையிட முனைந்துள்ளார்.

இதையடுத்து நிரோசன் பிறேமரத்னவை இழுத்துச் சென்ற சிறிலங்கா காவல்துறையினர் சுவர் ஒன்றுடன் தலையை மோதி கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் இவரது இடது கண்ணில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதுடன், பல் ஒன்றும் உடைந்துள்ளது.

தாக்கப்பட்ட தொலைக்காட்சி அறிவிப்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், இவரைத் தாக்கிய இரண்டு காவல்துறையினரை உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்தி மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுபற்றி விசாரணை நடத்த உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஊடகவியலாளர் போராட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் சாந்த பாலசூரியவை விடுதலை செய்யக் கோரியும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் கொழும்பு கோட்டே தொடருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்துக்கான ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தமது கருத்தை வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்புக்கான வதிவிடப் பிரதிநிதி பேனாட் சவேஜிடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரபூர்வ கருத்து வெளிப்படுத்தப்பட்டால் மட்டுமே தன்னால் கருத்து கூற முடியும் என்று பேனாட் சவேஜ் கூறியுள்ளார்.

இதுபற்றி எந்த தகவலும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: