திங்கள், 2 மே, 2011

சிறிலங்கா முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போர்: உண்மையில் நடந்தது என்ன?

சிறிலங்காவினது இனப்போரின் உச்சக்கட்டம்தான் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சம்பவங்கள். பொதுமக்களின் உயிர் தொடர்பாக எள்ளளவும் கருத்திலெடுக்காது தொடுக்கப்பட்ட மூர்க்கமான போர் இங்குதான் அரங்கேறியது.

இதன்போது பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. ஆனால் இந்தச் சம்பவங்கள் எந்தப் புறநிலையில் இடம்பெற்றன என்பதைத் இதுவரை வெளிவந்த செய்திகள் எவையும் கொண்டிருக்கவில்லை.

இன்று வருந்துதற்குரிய வகையில் முள்ளிவாய்க்கால் என்பது ஓர் அரசியல் கருவியாகவே பெரிதும் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும்.

அத்துடன், அனைத்துத் தரப்பிலுமுள்ள இனம்சார் தேசியவாதிகள் அனைவரும் தங்களது தீவிரவாதக் கருத்துக்களை விதைத்து தமக்கான ஆதரவினைத் திரட்டுவதற்கானதொரு ஒரு மார்க்கமாகவும் முள்ளிவாய்க்கால் என்பது பயன்படுத்தப்படுகிறது.

2009ம் ஆண்டு வெளிவந்த இனப்படுகொலை தொடர்பான அறிக்கைகளில் முள்ளிவாய்காலில் ஏற்பட்ட பேரவலத்திற்கான பின்னணி மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தொடர்பான தகவல்கள் அரிதாகவே காணப்பட்டன. இடம்பெற்ற இந்தப் பெரும்துயரத்திற்கு விடுதலைப் புலிகள் மீதுதான் குற்றம் சுமத்தப்பட்டது.

"உண்மையும் நியாயமும் ஒருபோதும் சாவதில்லை. உண்மைகள் என்றும் நிலைக்கும்" என 1810ம் ஆண்டு தோமஸ் ஜோன்சன் வணக்கத்துக்குரிய சாமுவேல் கொனெக்சிற்கு எழுதியிருந்தார்.

வன்னியின் முள்ளிவாய்க்கால் என்ற கிராமம் சிறிலங்கா அரச படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்தக் கிராமத்தில் மக்கள் செறிவாகக் காணப்படுகிறார்கள் என்பதை மறந்து சிறிலங்கா இராணுவத்தினர் விடுதலைப் புலிகள்மீது மூர்க்கமுடன் போர் தொடுத்தமைதான் இந்தப் படுகொலைக்கான காரணம்.

அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பதாக உறுதியளித்த சிறிலங்கா அரச படையினர், 'பாதுகாப்பு வலயங்கள்' எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகள் மீதும் வகைதொகையற்ற தாக்குதல்களை நடாத்தும் வகையில் பலப் பிரயோகத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இந்தக் காலப்பகுதியில் ஐ.நா 'நடுநிலையுடன்' கூடியதொரு நிலைப்பாட்டினையே கொண்டிருந்தது. இங்கு நடு நிலையுடன்கூடியதொரு நிலைப்பாடு எனும்போது நடைமுறையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டபோதும் ஐ.நா எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாததொரு நிலைமையே காணப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தினர் 'பாதுகாப்பு வலயப் பகுதிகள்' மீது தாக்குதல் நடாத்தினார்கள் இல்லையேல் போரிடும் தரப்புகள் உடன்பாட்டினை மீறும் வகையில் செயற்பட்டிருக்கிறார்கள்.
இந்த உண்மை எவ்வளவு கசப்பானதாக இருப்பினும் கூறித்தான் ஆகவேண்டும், குறிப்பிட்டதொரு குழுமத்தினை இலக்கு வைத்த முழு அளவிலான வதையில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், அந்தக் குழுமத்தின் பெண்களையும் நீங்கள் விட்டுவைக்கப்போவதில்லை. ஏனெனில் இந்தக் குழுமம் தொடர்ந்தும் தங்கிவாழவேண்டுமெனில் பெண்கள்தான் அதன் அடிப்படை. பல இளைஞர்களும் யுவதிகளும் கொல்லப்பட்டு மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டார்கள்.

இந்தப் போரிள் ஒவ்வொரு நாட்களும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக மிகவும் மோசமாக வெளியே சொல்லமுடியாத கொடூரங்களைக் கண்டது. சிறிய நிலப்பரப்பினுள் தொடர்ச்சியான சிறிலங்காவின் குண்டுத் தாக்குதல்கள் மத்தியில் நித்திரையின்றி விரக்தியுடன் இருந்த ஆயுதம் தரிக்காத ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மரண பயத்துடனும் நிர்க்கதியாகவும் வாழ்ந்தனர்.

அனைத்துலகம் தலையீடு செய்யாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க, கொடூரங்கள் அரங்கேறிய ஒரு இடம் மட்டுமல்ல முள்ளிவாய்க்கால். அனைத்துலக சமூகத்தின் செயற்பாடுகள் தாக்குதலாளிகளுக்கு ஊக்கமளித்து உதவியதுடன், சிறிலங்காவிற்குத் தைரியமும் வழங்கியது எனலாம்.

முள்ளிவாய்க்கால் தோல்வி என்பது நடந்திருக்கவே தேவையில்லை. ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகள் வடகிழக்குக் கரையோரத்தில் சிதறியிருக்கத் தேவையில்லை. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தமது தந்தை, தாய், சகோதரர்கள், மாமன்மார் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட கதையைக்கூறி வளர்க்கப்படவேண்டிய தேவையில்லை.

எத்தனை பேர் இறந்துபோனார்கள்?

போரின்போது காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்கள் எத்தனைபேர் என்பது தொடர்பில் பல்வேறுபட்ட கணக்குகள் வெளிவருகின்றன. 10,000 பேர் வரை கொல்லப்பட்டிருந்தார்கள் என ஒரு தரப்பினரும் கொல்லப்பட்டவர்களின் தொகை 100,000 என பிறிதொரு தரப்பினரும் கூறுகிறார்கள்.

கொடூரமாகத் தொடர்ந்த இந்தப் போரில் காணாமற்போனவர்களது தொகையும் மேற்குறித்த இந்த இறந்தவர்களது தொகையில் இணைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது உலகப்போருக்குப் பின்னான இந்த யுகத்தில் மிகவும் மோசமான குறுகிய நிலப்பகுதியில் வைத்து அதிகளவானோர் கொல்லப்பட்ட சம்பவம் இது.

முள்ளிவாய்க்கால் முற்றுகையின்போது ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதில் எந்தவிதமான குழப்பமும் கிடையாது. சிறிலங்கா இராணுவத்தினரால் முள்ளிவாய்க்கால் முற்றுகை இறுகியபோதுதான் இவர்களில் பலர் கொல்லப்பட்டனர். மே 18 2009க்குப் பின்னர்தான் இந்த முற்றுகையிலிருந்து குறிப்பிட்டுக் கூறக்கூடிய தொகையினர் வெளியேறினர்.

முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிகண்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தப் பிரச்சினை தொடர்பாக எண்ணற்ற விடயங்கள் ஏலவே எழுதப்பட்டுவிட்டன. ஆனால் இவ்வாறு வெளிவந்த அறிக்கைகளில் பெரும்பான்னையானவை ஊடகத்; தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையே.

இதுவிடயம் தொடர்பான ஆழமான ஆய்வுகள் குறைவாகவே வெளிவந்திருக்கின்றன. இக்கொலை மற்றும் பாரிய மனிதப் புதைகுழிகள் என்பவற்றுடன் மாத்திரம் முள்ளிவாய்க்கால் தொடர்பாக கலந்துரையாடல்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடக்கூடாது.

இந்த மனிதப் படுகொலைக்கு வழிவகுத்த உண்மையான காரணங்களை விளங்கிக்கொள்ளும் வகையில், இடம்பெற்றுவிட்ட சம்பவங்களின் புறநிலைகளையும் கவனத்திலெடுக்கும்வகையில் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஆழமான, அவதானத்துடன் கூடிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமானது.

சிறிலங்காவில் தொடர்ந்த 25 ஆண்டுகாலப் பேரின் அரச பயங்கரவாதத்தின் உதாரணம்தான் முள்ளிவாய்க்காலா? உண்மை உரைக்கப்பட வழிசெய்வோம். அனைத்துலக சமூகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினராலும் பதிலளிக்கப்படவேண்டிய கேள்வியிது.

யார்தான் பொறுப்பு?

கரையோரத்தினைக் கொண்ட முள்ளிவாய்க்கால் வெட்டை வெளியான நிலப்பரப்பினைக் கொண்டது. இதுபோன்ற தரைத்தோற்றம் வலிந்த தாக்குதலில் ஈடுபடும் படையினருக்கு சிறந்த அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்கவல்லது.

இந்தியத் தேர்தல் முடிவுறும் வரைக்கும் தனது இறுதிக்கட்டத் தாக்குதலை நடாத்ததாது சிறிலங்கா படையினர் காத்திருந்தார்கள்.

இந்தக் காலப்பகுதியில் இரண்டு தரப்பினருக்கும் கிடைக்கப்பெற்ற வளங்களை அடிப்படையாகக் கொண்டு, தரைத்தோற்றத் தன்மையினையும் கருத்திலெடுத்து, போர் இடம்பெற்ற பகுதியில் பொதுமக்களும் இருக்கிறார்கள் என்பதை நினைவிற்கொண்டு தன்னைத் தற்காத்துக்கொள்ளக்கூடிய பலத்தினையும் வழிவகைகளையும் சிறிலங்கா அரச படையினர் கொண்டிருந்தார்கள். எவ்வாறிருப்பினும் இவ்வாறு நடக்கவில்லை.

சிறிலங்கா அரசபடையினர் படைத்துறை அனுகூலங்களைக் கொண்டிருந்த புறநிலையில், முள்ளிவாய்க்கால் முற்றுகையின்போது அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களிடத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் காட்டிய அவமதிப்பினை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. பொதுமக்களின் இராணுவ எதிர்ப்புகள் எதுவுமற்ற நிலையில் இவர்களை இலக்குவைத்து முழு அளவிலான போரை அரச படையினர் தொடுத்தனர்.

பெருந்தொகையான பொதுமக்கள் இழப்புக்கள் தவிர்த்திருக்கக்கூடியதே. மோதல்களில் நடுவே சிக்குண்டு பாதிக்கப்பட்ட இந்த மக்களிடம் கூறுவதற்கு ஏராளம் கதைகள் உள்ளன.

இந்த முற்றுகையிலிருந்து தப்பிப்பிழைத்த 300,000 பொதுமக்கள் தங்களது துயரக் கதைகளை பகிர்ந்துகொள்வதற்குத் தயாராகவே இருக்கிறார்கள். இந்த மக்களின் கதைகளைக் காதுகொடுத்துக் கேட்பதற்கு இன்று எவரும் தயாராக இல்லை. முள்ளிவாய்க்காலில் இந்த மக்கள் சந்தித்த கடும் கொடூரம் நிறைந்த கதைகள் இன்னமும் வெளியே சொல்லப்படவில்லை.

இந்தப் படுகொலைக்கான பொறுப்பினை அனைத்துலக சமூகமும் தாங்கிக்கொள்ளவேண்டும். ஐ.நா தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தியிருந்தால் இந்த பெரும் மனிதப் படுகொலைகளை உலகம் தடுத்திருக்கும்.

படுகொலைகளின் பின்னர்

இறந்தவர்களின் உடல்களை அடையாளப்படுத்தும் வகையிலும் அவற்றை முறையாக அடக்கம் செய்யும் வகையிலும் முள்ளிவாய்க்காலில் பெரும் மனிதப் படுகொலை இடம்பெற்ற இடங்களில் முறையான விசாரணைகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.

சிறிலங்கா இராணுவத்தினரைத் தவிர அங்கு வேறு எவரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இது படுகொலையில் எச்சங்களை படையினரே துப்பரவுசெய்வதற்கு வழிசெய்திருக்கிறது. இறந்த உடல்களை இராணுவத்தினர் என்ன செய்தார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு ஒன்றிணைந்த நினைவாலயம் அல்லது அவர்கள் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்ட இடம் எதுவும் இருக்கிறதா?

முள்ளிவாய்ய்காலில் இறந்துபோன ஆயிரமாயிரம் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்களை இந்தப் பேரவலத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் நினைவுகளை அனைத்துலக ரீதியில் எடுத்துச்செல்லும் இந்த மக்கள் உண்மை வெளிவரும் வரைக்கும் ஓயப்போவதில்லை.

காணாமற்போன ஆண்களதும் பெண்களதும் சிறுவர்களதும் விதி என்ன என்பதை வெளிப்படுத்தும் வகையில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனக்கோரி மே 2009ல் போர் முடிவுக்குவந்தது முதல் புலம்பெயர் நாடுளில் வசிக்கும்தமிழர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

01.இந்தப் படுகொலையின் முழுமையான விபரங்கள் வெளியிடப்படவேண்டும் அல்லது வெளிப்படுத்தப்படவேண்டும்.

02. எந்தவிதமான தாமதமுமின்றி இறந்தவர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவேண்டும்.

03. தற்போது தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்காலில் தப்பிப்பிழைத்த அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.

இதுதான் இன்றைய நிலைமை. போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் நாங்கள் ஒரே கோரிக்கைகளையே இன்னமும் முன்வைக்கிறோம்.

முள்ளிவாய்க்காலில் தங்களது உறவுகளைப் பறிகொடுத்த குடும்பங்களைப் பொறுத்தவரையில், இந்தத் துயரத்திலிருந்து அவர்கள் சற்று மீண்டிருக்கின்றபோதும் அவர்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை.

இடம்பெற்ற இந்தப் பெருந்துயரத்தினை இவர்கள் மறப்பதற்கு இது போதுமானதாக இல்லை. தாங்கள்தான் படுகொலையினைப் புரிந்தோம் என இவர்கள் கூறி அதற்கான பரிகாரத்தினை மேற்கொண்டாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் நீதி கிட்டப்போவதில்லை. ஏனெனில், இறந்தவர்களை உயிருடன் மீண்டும் மீளக்கொண்டுவர முடியாது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர், அரசியலை விடுத்து, தங்களது பதவியினை விடுத்து மனிதாபிமானம் தொடர்பாகச் சிந்திக்கக்கூடிய முதன்மையான அரசியல் தலைவர்கள் எவருமே இன்று சிறிலங்காவில் இல்லை.

செயலாளர் நாயகம்

ஐ.நாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் செயலாளர் நாயகம் பொறுப்புடையவரல்ல - அல்லது பாதுகாப்புசபையினால் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களுக்கு செயலாளர் நாயகம் பொறுப்பாக மாட்டார்.

எவ்வாறிருப்பினும் பான்.கீ மூன் தானே மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அவர்தான் பொறுப்பு. 2009ம் ஆண்டினது மோசமான இந்த நாட்களில் பான் கீ மூனுக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன.

அரசியல்வாதிகளை வெட்கித் தலைகுனியவைக்கும் வகையில் ஐ.நா பாதுகாப்பு சபையினை எதிர்த்து நிற்பது அல்லது தலையினைக் கீழே கவிழ்ந்தவாறு என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது என்பது போலப் பாசாங்கு செய்வது.

இங்கு பான் கீ மூன் இரண்டாவது தெரிவினைத் தேர்ந்தெடுத்தார். எதனைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாது அமைதியாக இருத்தல் என்ற பான் கீ மூனினது முடிவு அரசாங்கத்தினைத் திருப்திப்படுத்தியதோடு வழமைபோலவே இவர்கள் தங்களது நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு வழிசெய்தது.

நான் எதனையும் பார்க்கவுமில்லை எதுபற்றியும் கேட்கவுமில்லை என்ற எண்ணத்தில் பான் செயற்பட்டார்.

பாதுகாப்பு சபையானது சிறிலங்காவினது விடயத்தில் தலையீட்டினை மேற்கொள்வதில் 'ஆர்வம் காட்டவில்லை' அல்லது விருப்பம் காட்டவில்லை என வாதிடப்பட்டது. இது எழக்கூடிய குற்றச்சாட்டிலிருந்து பான் கீ மூனைக் காத்தது. சிறிலங்கா மீது பலத்துடன்கூடிய தலையீட்டினை மேற்கொள்வதற்கு அரசியல்வாதிகள் பலரும் தயக்கம் காட்டினர் என ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனால் ஐ.நாவின் ஒரு செயலாளர் நாயகம் குரல்கொடுக்கவேண்டும் என நாம் விரும்பும் மிகவும் முதன்மையான தருணம் இதுவல்லவா? அல்லது வேறு வகையில் கூறுவதானால், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதில் உலகநாடுகளின் அரசியல் தலைவர்கள் தலையீடுகளை மேற்கொள்ள முடியும் எனில், ஐ.நாவுக்கான செயலாளர் நாயகம் என்ற பதவி நிலை எமக்கு ஏன் தேவைப்படுகிறது?

தொடரான இந்தப் படுகொலை முடிவுறும் தறுவாயில் இருந்தவேளையில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகியன மேற்கொண்ட தலையீடுகள், அனைத்துலக சமூகம் விரைந்து நடவடிக்கையினை எடுக்கக்கூடியவகையிலான பொதுமக்கள் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தியிருந்தது எனலாம்.

ஐ.நா முறையான தலையீட்டினை மேற்கொள்ளவேண்டும் என பான் கீ மூன் உறுதியுடன் வலியுறுத்தியிருந்தால், விசாரணைகள் இடம்பெறவேண்டும் என வலியுறுத்துவதன் ஊடாக பொதுமக்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்த பாதுகாப்பு சபையில் அங்கம் வகித்த இதர நாடுகளுடன் பான் கீ மூன் முட்டி மோதியிருப்பார்.

இவ்வாறு பன் நடந்திருந்தால், தனது கையினை அவர் சுத்தம் செய்திருப்பார். எவ்வாறிருப்பினும் அரசியல் மற்றும் இதர காரணங்களுக்காக பான் இவ்வாறு நடந்துகொள்வதில்லை என முடிவெடுத்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் உபாயங்கள் எந்தவிற்கு மோசமாக இருந்த போதிலும், இதுபோல பெருமெடுப்பிலமைந்த மனிதப் படுகொலை இடம்பெற்றமைக்கான பொறுப்பில் பெரும்பகுதியை ஐ.நாவே தனது தோள்களில் தாங்கவேண்டும்.

தவறுகள், தவறான முடிவுகள் மற்றும் சிறிலங்காவினைச் சரியாக எடைபோடத் தவறியமை ஆகியவற்றின் ஊடாக முள்ளிவாய்க்கரில் பெருந்தொகையில் மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கு ஐ.நா தவறிவிட்து.

ஐ.நாவின் உறுப்பு நாடுகளின் மீதும் இந்தக் குற்றச்சாட்டுப் பகிரப்படவேண்டும்.

போரின் இறுதி நாட்களில், இறுதி மணித் துளிகளில் களமுனையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கண்காணிக்கும் திறன் இந்தியா மற்றும் அமெரிக்கப் புலனாய்வாளர்களிடம் இருந்தபோதும், அனைத்துலகம் விநோதமான முறையில் முழுமையாக அமைதியினைக் கடைப்பிடித்தது. விபரிக்கவே முடியாத கொடுமைகளுடனும் இழப்புக்களுடனும் முள்ளிவாய்க்கால் முடிவுக்குவந்தது.

முள்ளிவாய்க்கால்- நீதிக்கானதொரு அழைப்பு

இந்த விடயம் தொடர்பாக விபரிக்கவோ அன்றி வாதிடவோ வேண்டிய தேவை எதுவுமில்லை என சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகிறது. நாட்டில் புரையோடிப்போயிருந்த பயங்கரவாதத்தினை நாங்கள் இல்லாதொழித்திருக்கிறோம், அவ்வளவும்தான் என்கிறார்கள் இவர்கள்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சரியாகத் தெரியாத அளவுடைய கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டியதொரு விடயம் இல்லையாம்.

போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றது எதுவோ அவை தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனக் காத்திரமான அனைத்துலக அழுத்தங்கள் முன்வைக்கப்படுகின்றபோதும் இந்தவிடயம் தொடர்பாக விசாரணை நடாத்தவேண்டிய தேவை எதுவுமில்லை என்றே சிறிலங்கா அரசாங்கம் வாதிடுகிறது. அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதே, இனியேன் விசாரணை எனச் சிறிலங்கா அரசாங்கம் கேள்வி எழுப்புகிறது.

எவ்வாறிருப்பினும் தமிழர்களைப் பொறுத்தவரையில் 'முள்ளிவாய்க்கால்' என்பது வெறுமனே ஒரு இடத்தினது பெயரன்று, மாறாக தாம் சந்தித்த பெரும் பயங்கரத்தினைக் குறிக்கும் சொல்லிது.

அப்பாவித் தமிழ் பொதுமக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கும் சொல்தான் முள்ளிவாய்க்கால். பொய்களை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதா முள்ளிவாய்க்கால் என்ற இந்தக் கதை?

சிறிலங்கா தொடர்பாக இதற்கு முன்னர் எவ்வகையிலும் தொடர்புபடாத திறன்பொருந்தியவர்களைக் கொண்ட வல்லுநர்கள் குழு, சிறிலங்காவில் இடம்பெற்றது எதுவோ அதற்கு முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

தன்னிடம் எந்தக் குற்றமுமில்லை எனச் சிறிலங்கா கருதினால், போரின் இறுதிநாட்களில் இடம்பெற்றது எதுவோ அதனை அனைத்துலக ரீதியில் விசாரணை செய்வதற்கு அனுமதிக்கலாமே.

மீண்டும் கூறுகிறோம், உண்மை உரத்து உரைக்கப்படுவதற்கு வழிசெய்வோம்.
- By Sivanendran புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.]

1 கருத்து:

தனிமரம் சொன்னது…

எல்லாம் முடிந்த்தது என நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாளும் உங்களுக்கு நேரம் இருந்தால் 30/4/2011 இல் நீரூபனின் கருத்துக்கு பதில் சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் தெரிந்த ஊடகவியளார் நட்புடன் 
நேசன்!