திங்கள், 2 மே, 2011

தற்கொலை தாக்குதல்களால் உலகை மிரள வைத்த பின்லேடன்

பின்லேடன் என்ற பெயரைக் கேட்டதுமே அவன், மிகப்பெரிய தீவிரவாதி என்பது எல்லாரது மனதிலும் தோன்றிவிடும். அவன் ஏன் தீவிரவாதியாக மாறினான்? எப்படி மாறினான்? என்பதற்கு பல மாறுபட்ட தகவல்கள் உள்ளன. அவனைப் போலவே அந்த தகவல்களும் புரியாத புதிர்களாக உள்ளன.

பின்லேடனின் முழுப்பெயர் ஓசாமா பின்முகம்மது பின் ஆவாட் பின்லேடன். 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதி சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் பிறந்தார். பின்லேடனின் தந்தை பெயர் முகம்மது பின்லேடன். சவூதி அரேபியாவில் கட்டுமானத் தொழிலில் இவர் முதன்மையானவராகத் திகழ்ந்தார். சவூதியில் உள்ள 80 சதவீத சாலைகளை அமைத்தது இவரது நிறுவனம்தான்.

கோடீசுவரரான இவருக்கு 22 மனைவிகள் இருந்தனர் என்று கூறப்படுகிறது. 22 மனைவிகள் மூலம் முகம்மது பின்லேடனுக்கு 55 குழந்தைகள் பிறந்தனர். ஆனால் சிலர் 70 குழந்தைகளுக்கு மேல் உள்ளனர் என்று சொல்கிறார்கள். இதுவரை அந்த கணக்கு யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

இஸ்லாமிய சட்டத்துக்கு பயந்து முகம்மது பின்லேடன் 4 மனைவிகளை மட்டுமே கணக்கில் காட்டி இருந்தார். மற்ற மனைவியர் எல்லாரும் அதிகாரப்பூர்வமற்ற மனைவிகளாக இருந்து வந்தனர். அத்தகைய மனைவிகளில் ஒருவர் அமிதியா அல் அட்டாஸ். இவர் முகம்மது பின்லேடனின் 10-வது மனைவி என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

முகம்மது பின்லேடன்- அமிதியா அல் அட்டாஸ் தம்பதியருக்கு ஒரே ஒரு மகன் பிறந்தான். அவன்தான் ஒசாமா பின்லேடன். தந்தை வழியில் ஒசாமாவும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டான். கோடி, கோடியாக பணம் சம்பாதித்தான். ஒசாமா பின்லேடனுக்கு சிறு வயதில் இருந்தே இஸ்லாமியக் கோட்பாடுகளில் அதிக பற்று ஏற்பட்டது. சில கணிப்புகள்படி ஒசாமா அவரது தந்தைக்கு 7-வது மகன் ஆவார். இதனால் சிறு வயதிலேயே ஒசாமா பின்லேடன் செல்வ செழிப்பில் மிதந்தான். என்றாலும் இஸ்லாமிய நெறிமுறைகளை ஒரு போதும் அவன் மீறியதே இல்லை.

படிக்கும் வயதில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டான். இஸ்லாமிய நாடுகளில் வல்லரசு நாடுகள் செலுத்திய ஆதிக்கம் இவனது இளம் வயதில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 1979-ம் ஆண்டு தன் 22-வது வயதில் பின்லேடன் சொகுசு வாழ்க்கையைத் துறந்து இஸ்லாமிய மக்களுக்காக போராட முன்வந்தான்.

முதலில் அவனது எதிர்ப்பு போராட்டங்கள் சாத்வீகமாகத்தான் இருந்தது. ஆனால் சில போராளி குழுக்கள் அவனுடன் தொடர்பை ஏற்படுத்துக் கொண்ட பிறகு அவனது போராட்ட களம் மாறி விட்டது.

நாளடைவில் அவன் தீவிரவாதியாக மாறினான். 1988-ம் ஆண்டு அல்கொய்தா எனும் தீவிரவாத இயக்கத்தை ஒசாமா பின்லேடன் தோற்றுவித்தான். இஸ்லாமிய நாடுகள் மீதான வெளிநாட்டு பாதிப்புகளை ஒழித்து கட்ட வேண்டும். அதன் பிறகு முகம்மது நபி காலத்தை ஒத்த ஒரு தலைவருக்குக் கீழ் உலகளாவிய இஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும். இந்த இரண்டும் தான் அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய கொள்கைகளாக இருந்தன.

1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ரஷிய படைகள் வெளியேறின. இதையடுத்து அந்த நாட்டை அல்-கொய்தா தீவிரவாதிகள் கொஞ்சம், கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தலிபான்களின் ஆட்சியை ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் அல்கொய்தா தீவிரவாதிகள் சுதந்திரமாக ஆயுதப் பயிற்சிகள் பெற வாய்ப்பும் வசதியும் கிடைத்தன. ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் முகாம்கள் உருவாக்கி அல்-கொய்தா தீவிரவாதிகள் பயிற்சி எடுத்தனர். அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் ஏராளமான உதவிகள் செய்தது.

தீவிரவாத இயக்கத்தை பலப்படுத்திக் கொண்ட பிறகு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஒசாமா பின்லேடன் சவால் விட தொடங்கினான். ஜிகாத் கொள்கைகள் உருவாக்கப்பட்டது. இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று முதன் முதலாக 1996-ம் ஆண்டு ஒசாமா பின்லேடன் பட்வா வெளியிட்டான். அமெரிக்க மக்களையும், அமெரிக்க ராணுவ வீரர்களையும் பழிக்கு பழி வாங்க கொல்லப்போவதாக அறிவித்தான்.

ஆனால் பின்லேடனை சுண்டைக்காய் பயல் என்று அமெரிக்கா விமர்சித்தது. ஆனால் இதுபற்றி கவலைப்படாத ஒசாமா பின்லேடன் இஸ்லாமிய நாடுகளில் தன் படைகளை பலப்படுத்தினான். 1998-ம் ஆண்டு மீண்டும் ஒரு தடவை அவர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தான். இஸ்லாமியர்களை கொன்றால், அமெரிக்க மக்களுக்கு எதிராக புனிதப்போர் நடத்தப்படும் என்றான்.

பின்லேடனின் 2-வது எச்சரிக்கையையும் அமெரிக்கா அலட்சியம் செய்தது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் 1998-ல் இரண்டு நகரங்களில் அமெரிக்க தூதரகங்களில் குண்டுகள் வெடித்தது. 2000-ம் ஆண்டு ஏதென் துறைமுகத்தில் நின்ற அமெரிக்க கடற்படை கப்பல் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களுக்கு பிறகே பின்லேடன் பற்றி அமெரிக்கா கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தது.

அல்-கொய்தா இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஐ.நா. சபையும் அல்-கொய்தா அமைப்புக்கு தடை விதித்தது.

இதையடுத்து ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், ஜப்பான், ஆலந்து, ரஷியா, சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் அல்-கொய்தாவுக்கு தடைவிதித்தன. ஐரோப்பிய ஒன்றியமும் அல்கொய்தாவை உலகின் அதி பயங்கரமான தீவிரவாத அமைப்பாக அறிவித்தது.

இந்த காலக்கட்டத்தில் அல்-கொய்தா அமைப்பில் இருந்து தனித்து இயங்கும் சிறு, சிறு குழுக்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் தற்கொலை தாக்குதல்களை நடத்தின. அந்த சிறு குழுக்களின் மூலத்தை கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தது.

உலகம் முழுவதும் அல்-கொய்தா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. என்றாலும் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி அமெரிக்கா மீது அல்-கொய்தா நடத்திய பயங்கரமான தற்கொலை தாக்குதல்கள் சம்பவத்துக்கு பிறகுதான் பின்லேடன் பற்றி உலக மக்களுக்கு பரபரப்பு தகவல்கள் தெரியத் தொடங்கின.

2001-ம் ஆண்டு அமெரிக்க மீது மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை அல்-கொய்தா நடத்தப் போவதாக சுமார் 52 நாடுகளின் உளவுத்துறை அமெரிக்காவை எச்சரித்து உஷார்படுத்தியது. ஆனால் அமெரிக்கா, எதையும் கண்டு கொள்ளவில்லை. அதிநவீன படைகளை வைத்துள்ள அமெரிக்கா, எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் தங்களை நெருங்ககூட முடியாது என்ற உறுமாப்புடன் இருந்தது.

அந்த இறுமாப்பை 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி அல்-கொய்தா தீவிரவாதிகள் தவிடு பொடிஆக்கி விட்டனர். அன்றைய தினம் அமெரிக்கர்களுக்கு துக்க தினமாக விடிந்தது. அதிகாலை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்ட குறிப்பிட்ட 4 பெரிய விமானங்களை ஒரே சமயத்தில் 19 அல்-கொய்தா தீவிரவாதிகள் கடத்தினார்கள்.

விமானிகளை துரத்தி விட்டு அல்கொய்தா தீவிரவாதிகளில் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றிருந்த தீவிரவாதிகள் அந்த 4 விமானத்தையும் ஓட்டினார்கள். அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான, பென்டகன் மீது முதல் விமானம் மோதியது. இதில் பென்டகனின் ஒரு பகுதி அழிந்தது.

இந்த அதிரடி தாக்குதலால் அமெரிக்கா நிலை குலைந்தது. அமெரிக்காவின் முப்படைகளும் மிரண்டு போயின. அவர்கள் சுதாரித்து பதிலடி தாக்குதல் நடத்துவதற்குள் இரண்டு விமானங்களை அல்-கொய்தா தீவிரவாதிகள் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது மோத செய்து தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள்.

இரட்டை கோபுர தாக்குதலை அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்தது. உலகம் முழுவதும் அந்த தற்கொலை தாக்குதலை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் நடுநடுங்கிப் போனர்கள்.

110 மாடிகளுடன் கம்பீரமாக நின்ற இரட்டை கோபுரம் சில நிமிடங்களில் இடிந்து தகர்ந்து தரை மட்டமானது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் பிணமானார்கள். ஒட்டு மொத்த அமெரிக்காவும் இதை கண்டு கதறியது.

இந்த நிலையில் அல்-கொய்தா தீவிரவாதிகள் 4-வது விமானத்தை அமெரிக்க அதிபர் மாளிகையான வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை மீது மோத முயன்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வெள்ளை மாளிகை மீது கொலை தாக்குதல் நடத்துவது மட்டும் முறியடிக்கப்பட்டது.

உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த தற்கொலை தாக்குதல்கள் காரணமாக ஒசாமா பின்லேடன் பரபரப்பாக பேசப்பட்டான். சன்னி முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு உலகம் முழுவதும் இஸ்லாமிய நாடுகளில் பராட்டுக்கள் செய்யப்பட்டன.

பின்லேடனை இஸ் லாமிய போராளி என்று புகழ்ந்தனர். அதன் பிறகே பின்லேடன் சாதாரணமான ஆள் இல்லை என்பதை அமெரிக்கா உணர்ந்தது. பின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்து கொண்டு தற்கொலை தாக்குதல்கள் நடத்துவதை அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்தது.

இதையடுத்து பின்லேடனை பிடிக்க ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்கள் நடத்தியது. இதில் அந்த நாடே துவம்சம் ஆகிப் போனது. என்றாலும் பின்லேடனை உடனடியாக அமெரிக்காவால் கண்டுபிடிக்க இயலவில்லை.

அதிநவீன சாடிலைட்கள் மூலம் தேடி பார்த்தும் பின்லேடன் பதுங்கிய இடம் தெரியவில்லை. மலைக்குகைக்குள் அவன் இருக்கலாம் என்று நினைத்து மலைகளுக்குள் துளைத்து சென்று வெடிக்கும் குண்டுகளை சரமாரியாக அமெரிக்கா வீசிப் பார்த்தது. எந்த பலனும் கிடைக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக பின்லேடன் பிடிபடவில்லை. கண்ணுக்குள் விழுந்த தூசியாக அவன் அமெரிக்க படைகளுக்கு உறுத்தல் ஏற்படுத்திக் கொண்டே இருந்தான். அமெரிக்காவின் அதிநவீன கருவிகள் எல்லாம் அவனிடம் செல்லுபடி ஆகவில்லை.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லையில் உள்ள மலைக்காடுகளும், மற்றும் பழங்குடி இன மக்களும் பின்லேடனுக்கு பெரும் ஆதரவாக இருந்தனர். எனவே அந்த மலைக் காடுகள் மீது ஏவுகணைகளை அமெரிக்கா வீசி பார்த்தது. அதுவும் கை கொடுக்கவில்லை.

பின்லேடனின் தலைக்கு பல நூறு கோடி பரிசு அறிவித்தும் புதிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அமெரிக்கா உளவுத்துறை புதிய நடவடிக்கைகளை கையாண்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்த புதிய நடவடிக்கைக்கு பலன் கிடைத்தது.

பின்லேடன் பாகிஸ்தானில் நடமாடும் இடங்கள் தெரிய வந்தன. அந்த இடங்களில் அமெரிக்க உளவுத்துறை மெல்ல, மெல்ல வலை விரித்து வைத்திருந்தது. ஏதாவது ஒரு வலையில் பின்லேடன் சிக்குவான் என்று அமெரிக்க உளவுத்துறை கடந்த சில மாதங்களாக காத்து இருந்தது. நேற்று அதற்கு உரிய பலன் கிடைத்தது.

இஸ்லாமாபாத் அருகே பின்லேடனை அமெரிக்க உளவுத்துறை சுற்றி வளைத்தது. துப்பாக்கி சண்டையில் பின்லேடன் கொல்லப்பட்டான். 54 வயதில் அவன் கதை முடிந்து போனது.

nanry malaimalar

கருத்துகள் இல்லை: