சனி, 20 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறு பக்கம் 15

15
புளொட் ஒரு முற்போக்கான இயக்கம், அது முற்போக்கான கொள்கைகளைக் கொண்டிருந்தது. என்று எவராவது சொன்னால் அவர் ஒன்றில் முற்போக்கு என்பதற்கு அர்த்தம் தெரியாதவராக இருப்பார். அல்லது யாழ்ப்பாண சாதி அமைப்பு எப்போதும் தகர்ந்து போகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட ஒரு சாதிமானாக இருப்பார்.

1970களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் அடியெடுத்து வைத்த காலத்தில் தமிழீழ கோரிக்கை உருவாகுவதற்கான பிரதான காரணியாக தரப்படுத்தல், கொள்கை முன்வைக்கப்பட்டது. அதாவது தமிழ் இளைஞர்களுடைய உயர் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டதால் அவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது.

உண்மையில் கல்வி உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றுதான். அந்த அடிப்படை உரிமைகளில் பாரபட்சம் காட்டப்படும் போது அதற்கெதிராக கிளர்ந்தெழுவது என்பதும் நியாயமானதுதான். ஆனால் யாழ்ப்பாண சமூக அமைப்பைப் பொறுத்தவரை 1980களின் பிற்பகுதிவரை உயர் கல்வி என்பது ஒட்டுமொத்தமான தமிழ் சமூக அமைப்பின் நலனை நோக்கமாகக் கொண்டதாக இருக்கவில்லை. மாறாக சமூக அந்தஸ்துக்கும் வரதட்சனைக்குமான அளவுகோலாகவே அது இருந்தது. அதாவது ஒரு வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ ஆவதென்பது நமது சமூகத்திற்கு சேவை செய்வதற்காக இருக்கவில்லை. கொழுத்த சீதனத்துடன் சாதி அந்தஸ்து பார்த்து திருமணம் செய்து கொள்வதற்கும் அந்த சீதனப்பணத்தைக் கொண்டு லண்டனில் சென்று குடியேறும் லண்டன் கனவையும் மட்டுமே அது அடிப்படையாகக் கொண்டிருந்தது.

ஒரு சிலர் இதுக்கு விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் தங்களது உயர் கல்வியை லண்டன் கனவுக்கான அடிப்படைத் தகுதியாகவே பார்த்தார்கள் என்பதே உண்மை.

யாழ்ப்பாண சமூக அமைப்பைப் பொறுத்தவரை 30 வீதமானவர்கள் கடற்தொழிலை ஆதாரமாகக் கொண்ட மீனவர்கள். 31 சதவீதமானவர்கள் தொழில் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள். 24 சதவீதமானவர்கள் சிறு விவசாயம், சிறு வியாபாரம், சாதாரண தரத்திலான அரசு ஊழியம் என்பவற்றில் ஈடுபட்ட நடுத்தர வர்க்;கத்தினர். மிகுதி 15 வீதமானவர்கள் மட்டுமே கல்வியை தங்களது சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்கும் அதன் மூலம் யாழ்ப்பாண சாதிய சமூக அமைப்பு தகர்ந்து போகாமல் பார்ப்பதற்குமான மூலதனமாகப் பயன்படுத்தியவர்கள், யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனான சங்கிலியனை போர்த்துக்கேயர் வீழ்த்தி யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போது அவர்களுக்கு நில பாவடை விரித்து வரவேற்ற காலம் முதல் பிரித்தானிய எஜமானர்கள் தங்களுடைய நலனுக்காக உருவாக்கிய ஒற்றை ஆட்சி என்ற சிறிலங்கா சிறைக்குள் தமிழீழ தேசத்தை அடைத்த போது தங்களுடைய இலட்சியக் கனவான லண்டன் கனவுக்காகவும், தென்னிலங்கையில் இருந்த தங்களது சொத்துக்களுக்காகவும் மாட்சிமை தங்கிய பிரித்தானிய மகாராணியை எதிர்க்க விரும்பாமல் அதற்கு ஒத்துழைத்து சம்மதமும் தெரிவித்து முதற்கொண்டு இவர்களே யாழ்ப்பாண சமூக அமைப்பினது மட்டுமல்ல ஒட்டுமொத்தமான சமூக அமைப்பினதும் தலைவர்கள் என்று முடிசூடிக்கொண்டு உலா வந்தார்கள்.

1947 பெப்ரவரி 4ம் நாள் பிரித்தானிய எஜமான் இலங்கைத் தீவைவிட்டு போனபோது இவர்களுக்கு லண்டன் கனவோடு புதிய கனவொன்றையும் உருவாக்கித் தந்துவிட்டுப் போனான். அதுதான் பாராளுமன்ற நாற்காலிக் கனவு. இந்த நாற்காலி என்பது சிறைக்குள் அடைக்கப்பட்ட தமிழீழ தேசத்தை காவல் புரியும் அடிமை நாற்காலி என்பதை மறைத்து தமிமீழ மக்களுக்கு விமோசனம் பெற்றுத் தரப்போகின்ற உரிமை நாற்காலியாக இவர்கள் கபடத்தனமாகப் பொய் சொன்னார்கள். தாங்கள் இந்த நாற்காலிகளை அடைவதற்கும் அதன் மூலம் தங்களது பிரிவைச் சார்ந்தவர்களது நலனைப் பேணுவதற்கும் ஒட்டுமொத்தமான தமிழீழ மக்களை இவர்கள் படிக்கற்களாகப் பயன்படுத்தினார்கள்.


உண்மையில் தரப்படுத்தல் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்பே கிழக்கிலும் வடக்கின் எல்லைப்புறங்களிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களது பாரம்பரிய பிரதேசம் அபகரிக்கப்பட்டது. இத்தகைய சிங்களக் குடியேற்றங்கள் மூலமும் துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் தமிழ் விவசாயிகளின் நிலத்தில் பாய்ந்த மகாவலி நீரை திசை திருப்பி புதிதாக உருவாக்கிய சிங்கள குடியிருப்பு விவசாயிகளுக்கு வழங்கியதன் மூலமும் பரம்பரை பரம்பரையாக தமது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த தமிழ் விவசாயிகளினது (விவசாய) தொழில் உரிமை பறிக்கப்பட்டது. முல்லைத்தீவு, மணலாறு முதற்கொண்டு அம்பாறைவரை திட்டமிட்ட சிஙகள மீனவக் குடியேற்றங்களை உருவாக்கியதன் மூலமும் தமிழீழத்தின் கடற்பரப்புக்கூட சிறிலங்கா அரசால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. காலகாலமாக இப்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழ் மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. தமிழ் மண் பறிக்கப்பட்டபோது பரந்துபட்ட தமிழ் மக்களின் வாழ்வுக்கான உரிமை பறிக்கப்பட்ட போது இவர்கள் தமிழீழ தேசியம் பற்றியோ, தமிழீழம் பற்றியோ கதைக்கவில்லை. மாறாக தரப்படுத்தல் இவர்களது லண்டன் கனவில் கையை வைத்த போது இவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அடைந்தால் தமிழீழம், இல்லையேல் சுடுகாடு; செய்து முடிப்போம் இல்லையேல் செத்து மடிவோம் என்றெல்லாம் வீரமுழக்கம் செய்தார்கள். உண்மையில் இது கூட ஒருவகை மோசடிதான்.

இவர்களது அதாவது இந்த மேட்டுக்குடி தமிழ் குழுக்களது தமிழீழ கோசம் என்பது முன்பு வாக்குச்சீட்டை வைத்து சிறிலங்கா அரசுடன் பேரம் பேசியதைப் போல இப்போது கொஞ்ச ஆயுதத்தை வைத்துக் கொண்டு விடுதலைப்புலிகளைக் ;காட்டிக் கொடுப்பதாகக் கூறி சலுகைகளுக்காக பேரம் பேசுவதை நோக்கமாகக் கொண்டதே அன்றி உண்மையான தமிழீழ இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டதில்லை. இது சிறிலங்கா அரசுக்கே தெரியும்.

ஒரு சமயம் அத்துலத்முதலி உமாமகேஸ்வரனுடன் பேசிய போது நாங்கள் உங்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் நீங்கள் யாழ்ப்பாண சமூக அமைப்பின் மேல் மட்டத்தில் இருந்து வந்தவர்கள். நீங்கள் எப்போதும் சமரசத்திற்கு வருவீர்கள் என்பது எமக்கத் தெரியும். எங்களது கவலையெல்லாம் பிரபாகரனைப் பற்றித்தான். ஏனேன்றால் அவர் உங்களைப் போல் அற்ப சலுகைகளுக்காக மாறிவிடுபவர் அல்ல. பரந்துபட்ட மக்களின் துயரங்களைப் புரிந்து கொண்டவர் என்று குறிப்பிட்டார்.
உண்மையில் தங்கள் பிள்ளை 10வது படித்தாலே போதும் என்று நினைக்கும் மீனவர்களக்கும், மரமேறுபவர்களுக்கும், பறைமேளம் அடிப்பவர்களுக்கும், துணி தோய்ப்பவர்களுக்கும், தோட்டி வேலை செய்பவர்களுக்கும் தரப்படுத்தல் ஒன்றும் பாதிப்பைக் கொடுக்கவில்லை. மண்ணும் கடற்பரப்பும் பறிக்கப்படுவதும் தொழில் செய்யும் உரிமை மறுக்கப்படுவதும் தான் அவர்கள் முகங்கொண்ட உடனடிப் பிரச்சினை.

லண்டன் கனவாளர்களைப் பொறுத்தவரை மண்ணும் கடலும் பறிக்கப்படுவதும், தொழில் செய்யும் உரிமை மறுக்கப்படுவதும் அவர்களுக்கு சம்மந்தமில்லாத விடயங்கள். அவர்களைப் பொறுத்தவரை பட்டம், பதவி. அந்தஸ்து, சாதிப் பெருமை, குலப் பெருமை, பணப் பெருமை இவைகள் பாதிப்புள்ளாகாமல் இருந்தால் சரி.

இத்தகைய பின்னணியில் ஆயுதப் போராட்டம் உருவெடுத்த போது உருப்பெற்ற தலைவர்களில் தங்கள் பிரிவிலிருந்து வந்த உமாமகேஸ்வரன் இவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக தெரிந்தார். உமாமகேஸ்வரனை பலப்படுத்துவதன் மூலம் தங்களுடைய சாதிய சமூக நலன்களைப் பலப்படுத்துவதற்கென்றே இவர்கள் ஆயிரக்கணக்கில் புளொட் அமைப்பில் சேர்ந்தார்கள்.

1983, 84 பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எங்கெல்லாம் சாதி அமைப்பு மிக இறுக்கமாக இருந்ததோ, எங்கெல்லாம் சாதிய அடக்குமுறை கூர்மையாக இருந்ததோ அந்த இடங்கள் எல்லாம் புளொட்டின் கோட்டைகளாக இருந்தன. தமது சொந்தச் சகோதரர்களே சாதியின் பெயரால் ஒதுக்கிவைத்த ஒடுக்கி வைத்த பிரிவினரே புளொட்டின் அமைப்பாளர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் இருந்தனர்.

புளொட்டில் இருந்த இந்தச் சாதிய கனவான்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று தங்களது உடல் பலத்தின் மூலம் வன்முறை கொண்டு மற்றவர்களை அடக்கியாண்டு பழக்கப்பட்டவர்கள், இரண்டாவது தங்களது மூளைப்பலத்தின் மூலம் மிகத் திட்டமிட்ட தந்திரமாக மற்றவர்களை அடக்கியாண்டு பழக்கப்பட்டவர்கள்.

முதலாவது பிரிவினருக்கு அரசியல் ஒன்றும் தெரியாது. எப்போதும் சாகாசங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும். மற்றவர்களை அதிகாரம் செய்து கொண்டிருக்க வேண்டும். சக தோழர்கள் மத்தியிலும், சமூகத்திலும் தாங்கள் ஹீரோக் (கதாநாயகர்) களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

இரண்டாவது பிரிவினர் மூளைசாலிகள் இவர்களது மூளை என்பது ஏறத்தாள பார்ப்பணிய மூளைதான். இன்றைக்குத் தங்களை மாக்ஸிட்டுக்களாகவும், மனித உரிமைவாதிகளாகவும் சொல்லிக் கொள்ளும் இவர்களைக் கேட்டால் தங்களை பரம்பரை மார்க்ஸிச வாதிகளாகச் சொல்வார்கள். புளொட்டிற்கு வரும் போது உண்மையில் இவர்களுக்குத் தோழர் முற்போக்கு, பிற்போக்கு, ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் போன்ற இப்படி சில மார்ஸிச சொற்கள் தான் தெரியும். புளொட்டிற்கு வந்த பின்தான் இவர்கள் மாக்ஸிசத்தை கற்க முனைந்தார்கள். அதுவும் இவர்கள் கற்றதென்னவோ பார்ப்பணிய மூலாம் பூசி மெருகூட்டப்பட்ட இந்திய மொடல் மாக்ஸிசம்தான். மக்கள் விடுதலை, மக்கள் ஜனநாயகம், மக்கள் போராட்டம் என்றெல்லாம் கொள்கை வகுத்து மக்கள் மயங்கும்படி மாஜாஜால பிரசாரம் செய்த இவர்கள் இந்தக் கொள்கைகளை வகுப்பதற்கு முன் புளொட்டினதும் அதன் தலைவர் உமாமகேஸ்வரனதும் வர்க்கக் குணாம்சம் என்ன என்பதை ஒரு போதும் சிந்தித்துப் பார்க்கவில்லை. ஏனென்றால் இவர்களுக்கு அந்தத்தேவை இருக்கவில்லை. இவர்களது அன்றைய நோக்கம் சமதர்மம், சமத்துவம், என்றெல்லாம் பேசி மக்களை புளொட்டின் பக்கம் இழுத்து தங்களது சாதியத் தலைமையை பலப்படுத்தி தங்களது சாதிய நலனை தக்க வைத்துக் கொள்வதுதான்.

எனவே, இவர்கள் முதலில் தங்களை புளொட்டினது அமைப்பாளர்களாகவும் பிரதேசப் பொறுப்பாளர்களாகவும் நிலைநிறுத்திக் கொண்டு தங்களுக்கு கூலிப்படையாக இருந்து போராடுவதற்கென்று தாழ்த்தப்பட்ட மற்றும் மன்னார், வன்னி, கிழக்கு, மாகாணங்களின் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களை ஆறு மாதம் பயிற்சி, பயிற்சி முடிந்தபின் கையில் ஆயுதம், ஆயுதம் வந்ததும் பரந்துபட்ட மக்கள் போராட்டம் என்று கவர்ச்சிகரமாக பிரசாரம் செய்து பிடித்துப் பார்த்தார்கள்.

இவர்களது இந்த ஆள் பிடிப்பது என்பது மலையகத் தோட்டத்திலே வேலை செய்ய தமிழகத்தில் 18ம் 19ம் நூற்றாண்டில் பிரித்தானியர்களின் கைக்கூலிகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஒப்பானது

காந்தி தேசத்தின் மறுபக்கம் 14

14
கரவையார் DPLF வேட்பாளராக மலையகத்தில் நிறுத்துவதற்கு கூட்டி வந்த ஆள் அங்குள்ள ஒரு பிரபல கேடியாகும். ஒரு கற்பழிப்பு வழக்கிலும் சிறை சென்று திரும்பி வந்தவன். மலையகத்தில் தொடர்பை விட்டு 15 வருடத்திற்கு மேலாகி விட்டதால் அவனைப்பற்றிய விடயங்கள் அவருக்குத் தெரியாது.

ஆனால் புளொட்டுக்காக வேலை செய்த மலையக உறுப்பினர்கள் மலையகத்தையே உறுப்பினர்களாக கொண்டவர்களாதலால் அவனது முழுச் சரித்திரமே அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவனுடன் தொடர்பு வைத்திருந்தாலே மக்கள் தங்களையும் அவனைப் போன்றவர்கள் என்று நினைத்துவிடுவார்கள் என்று அவர்கள் பயந்தார்கள். அத்தோடு இப்படிப்பட்ட ஆட்களுடன் நீங்கள் தொடர்பு வைத்திருந்தால் நாங்கள் உங்களுக்கு வேலை செய்யமாட்டோம் என்றும் கதிரவனிடம் சொன்னார்கள்.

கதிரவன் கரவையருக்கு சரியான டோஸ் கொடுத்து இனி நீங்கள் ஒன்றும் ஆள் பிடிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அதன்பின் மலையகத்தில் போட்டியிடும் முடிவை விட்டுவிடலாம் என கதிரவன் நினைத்த போது மலையகத் தோழர்கள் அதை மறுத்து சந்திரசேகரனை அணுகும்படி ஆலோசனை சொன்னார்.

தற்போது சிறிலங்கா அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் சந்திரசேகரன் முன்பு தொண்டமானது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினது இளைஞர் அணியின் முன்னணி உறுபபினர். ஆனால் இச்சம்பவம் நடந்த காலத்தில் அமைச்சர் தொண்டமானுக்கும் அவருக்கும் பெரிய கருத்து முரண்பாடு தோன்றியிருந்தது.

தொண்டமான் அமைச்சர் பதவிக்காக அரசாங்கத்துடன் சேர்ந்திருந்து மலையக மக்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றாரே அன்றி மலையக மக்களின் உரிமைகளைப் பெற போரடவில்லை என்பது சந்திரசேகரனது எண்ணம்.

மலையக மக்களுக்கு அமைச்சர் தொண்டமான் பிரஜா உரிமையைப் பெற்றுக் கொடுத்தாலும் அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. தோட்டத் தொழிலாளர் குடியிருக்கும் எட்டடிக் குச்சு லயம் கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. அவர்கள் குடியிருக்கும் நிலம் அவர்களுக்குச் சொந்தமில்லை. நாட்டின் பிறபகுதியிலே வாழுகின்ற மக்களைப் போல் கிராமம் வட்டாரம், கிராமசேவகர், உதவி அரசாங்க அதிபர், பிரிவுகள் என்ற அடிப்படையில் இல்லாமல் தோட்டத்துரைமாரின் நேரடி நிர்வாகப் பிரிவுகளுக்கு உட்பட்ட நவீன கொத்தடிமைகளாகவே அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தோட்டத்துரை தோட்டத்தைவிட்டு விரட்டிவிட்டால் அவர்கள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டிய நிலை பிரஜா உரிமை கிடைக்காமல் நாடற்றவர்கள் என்ற நிலையில் இருக்கும் தொழிலாளர்களின் நிலை இன்னமும் மோசம். இவற்றையெல்லாம் நீக்குவதற்கு அமைச்சர் தொண்டமான் முயலவில்லை என்பது சந்திரசேகரன் தரப்புவாதம்.


வடக்கு கிழக்கிலே நடந்து கொண்nருக்கும் ஆயுதப்போராட்டத்தின் தாக்கம் “உரிமைகளைப் போராடித்தான் பெறவேண்டும்” என்ற மனப்பான்மையை மலையக இளைஞர்கள் மத்தியில் அரும்பச் செய்தது.

70களில் கூட்டணித் தலைமையின் மீது வடபகுதி இளைஞர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதைப் போல மலையக இளைஞர்களுக்கு இ.தொ.க. தலைமை மீதும் அதிருப்தி ஏற்படத் தொடங்கியது.

அமைச்சர் தொண்டமானும் சரி, மற்றைய இ.தொ.க. தலைவர்களும் சரி, இந்த அதிருப்திக்கான காரணத்தை அவற்றின் நியாயத்தன்மையைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்குப் பதில் அதிருப்திக்குள்ளான இளைஞர்களை வடபகுதிப் பயங்கரவாதிகளின் கையாட்கள் இ.தொ.க.வின் ஒற்றுமையை குலைக்க முயலும் சதிகாரர்கள் என்றெல்லாம் பகிரங்கமாக வசைமாரி பொழிந்தார்கள்.


மலையக மக்களின் வாக்குப்பலத்தை சிதறிப்போகாமல் தக்கவைத்து அதன்மூலம் பதவிக்கு வரும் அரசாங்கங்களை தன்னைச் சார்ந்திருக்கும்படி செய்யும் அமைச்சர் தொண்டமானின் தந்திரோபாயம் 50, 60களில் யாழ்ப்பாண தமிழ் தலைமைகள் செய்ததைப் போன்றதுதான். இது மலையக மக்களுக்கு தற்காலிகமாக சில நன்மைகளையும், பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தாலும் தொண்டமானின் மறைவுக்குப்பின் அவரின் இடத்தை நிரப்பக்கூடிய அவரைப் போல் மலையக மக்களை ஒன்றுபடுத்தி வைத்திருக்கக்கூடிய புதிய தலைமை உருவாக்கப்படவில்லை என்பதும், இது அந்த மக்களை மிக மோசமான இன ஒடுக்கு முறைக்கும், நிற்கதியான நிலைக்கும் தள்ளிவிடும் என்றும் மலையக இளைஞர்கள் கவலைப்பட்டதிலும் நியாயம் இருந்தது.


இந்த இளைஞர்களுக்கு சந்திரசேகரன் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார். அவரை வடபகுதி இளைஞர் தலைமைகளுடன் ஒப்பிட முடியாது. அவருக்கு வடபகுதி இளைஞர் தலைவர்களைப் போல் அரசுக்கெதிரான ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டுமென்ற எண்ணமோ, அதற்கான துணிச்சலோ கிடையாது. மலையகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இளைஞர்களைக் கவரும் வசீகரமும் அவரிடம் நிறைய இரு;தது. குறிப்பாகச் சொன்னால் அமைச்சர் தொண்டமான் சரியானமுறையில் அவரை வழிகாட்டியிருந்தால் அவரது பாணியிலான அசைக்க முடியாத அரசியல் வாரிசாக சந்திரசேகரன் இருந்திருப்பார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத் திகதி அறிவிக்கப்பட்ட நிலையிலும் சந்திரசேகரன் இ.தொ.கட்சியை விட்டு விலகுவதா? இல்லையா? தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது இ.தொ.கட்சியை தனக்கு தொகுதி ஒதுக்கித் தரும்படி நிர்ப்பந்திப்பதா என்று ஊசலாடிக்கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், புளொட் ஆகிய 3 அமைப்புக்களும் அவரைத் தங்கள் அணியில் போட்டி போட வைக்க முயன்றன.

ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ், இரண்டும் தங்களது அகண்ட ஈழம் வரைபடத்தின் கீழ் மலையகத்தை தங்களது வடக்கு கிழக்கு நடவடிக்கைகளுக்கு பணம் ஈட்ட கொள்ளையிடும் தளமாக பயன்படுத்தியிருந்தன. மலையத்தில் நடந்த இவர்களது கொள்ளை மற்றும் குண்டு வைப்பு முயற்சிகள் காரணமாக நூற்றுக்கணக்கான மலையக இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருடக்கணக்காக சிறையில் வாடிக்கொண்டிருந்தார்கள். இது யாழ்ப்பாணத்தாங்கள் வந்து நம்மடை பிள்ளைகளை சிறைக்கு அனுப்பியிட்டாங்க என்ற துவேச மனப்பான்மையை மலையகத்திலேயே வளர்த்திருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இ.தொ.கவும் யாழ்ப்பாண பயங்கரவாதிகள் மலையகத்தை சீர்குலைக்க சதி செய்கிறார்கள். எச்சரிக்கையாயிருங்கள் என்று பகிரங்கமாகப் பிரசாரம் செய்தது.

எனவே, சந்திரசேகரன் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல.எப். ஆகிய இரண்டு கட்சிகளிலும் போட்டியிட முடியாதென்று மறுத்துவிட்டார். புளொட்டின் சார்பில் கதிரவன் அவரை அணுகிய போது அவரால் அதை மறுக்க முடியவில்லை. சந்திரசேகரனுக்கு உமாமகேஸ்வரனைப் பற்றி நல்ல அபிப்பிராயமும் பெரிய தலைவர் என்ற எண்ணமும் இருந்தது. பொதுவாகவே அக்காலகட்டத்தில் பிரபாகரன், உமாமகேஸ்வரன் ஆகிய இருவருமே மலையக மக்கள் அறிந்த வடபகுதி இளைஞர் தலைவர்களாக இருந்தார்கள். மற்றவர்களை அவர்கள் கொள்ளைக் கோஸ்டிகளாகத்தான் நினைத்தார்கள். புளொட்டினது உட்பூசல்களும், பிளவும் அங்கே அவர்களுக்குத் தெரியாது.

சந்திரசேகரன், டி.பி.எல்.எப் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட சம்மதிப்பதற்குமுன் சில நிபந்தனைகளை முன் வைத்தார்.

அதாவது நான் ஈ.பி.டி.பி.எல்..எப். சின்னத்தில் போட்டியிட்டாலும் மலையகத்தில் மலையக மக்கள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்குவேன். அந்த அமைப்பு புளொட்டுக்கோ, டி.பி.எல்.எப்.க்கோ கட்டுப்பட்டதல்ல. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அது.

கதிரவன் இந்தவிடயத்தை உமாமகேஸ்வரனுக்கு தெரிவித்த போது அவர் அதற்கு ஒத்துக்கொண்டார்.

இந்த இடத்திலே உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்ட சுடலை ஞானம் பற்றி வாசகர்களுக்கு தெரிவிப்பது நல்லதென்று எண்ணுகின்றேன்.

உமாமகேஸ்வரன் என்னதான் புலிகளின் நடவடிக்கையை தனிநபர் பயங்கரவாதம் என்று விமர்சித்து பிர்ந்து வந்தாலும் புலிகளின் இராணுவக் கட்டுப்பாடு அமைப்புக்காகவும், நாட்டு விடுதலைக்காகவும் அவர்கள் செலுத்துகின்ற உண்மையான அர்ப்பணிப்பு இவை இரண்டும் அவர் மனதை உறுத்தவே செய்தது. புளொட்டினது சீரழிவிற்கும் தொடர்ச்சியான தோல்விகளுக்கும் இவை இரண்டும் இல்லாமையே காரணமென்று அவர் நினைத்தார். உண்மையிலேயே இயக்கத்திற்கும், போராட்டத்திற்கும் விசுவாசமான அடிமட்ட உறுப்பினர்களது தியாகங்கள் உழைப்பு என்பவையெல்லாம் கூட சாதிய பிரதேச மற்றும் குறுகிய சுயநலம் கொண்ட நபர்களின் கூட்டுக் கதம்பமாக இருக்கும் புளொட் என்ற அமைப்புக்குள் வீணடிக்கப்படுவதாக அவர் நினைத்தார். யாழ்ப்பாண சைவ வேளாளர் என்ற தனக்கிருந்த ஒரே தகுதிக்காக தன்னை நோக்கிஅணிதிரண்ட கூட்டம் தங்களுடைய சாதிய, பிரதேச நலன்களை தக்கவைத்துக்கொள்ள தன்னை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டுவிட்டது என்பதை அவர் உணர்ந்தார். தன்னுடைய தலைமை மீது நம்பிக்கை வைத்த இயக்கத்திற்காக உயிரைக்கூடக் கொடுத்த சமூகத்தின் கீழ் நிலையில் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து வந்த உண்மையான தொண்டர்களின் உண்மையான உழைப்பைக்கூட தான் தனது சந்தர்ப்பவாத போக்கால் அனைவரையும் அரவணைத்துப் போக வேண்டும் என்ற சமரச எண்ணத்தால் மதிக்கத் தவறிவிட்டதாக அவர் வருத்தப்பட்டார்.

மக்கள் விடுதலை, மக்கள் போராட்டம் என்பதெல்லாம் யாழ்ப்பாணத்து மேட்டுக்குடியினர் போராட்டத்தின் போரால் தங்களின் நலன்களை தக்கவைத்துக்கொள்ள போட்டுக்கொண்ட வேசம் என்று அவருக்குப் புரிந்தது. தன்னுடைய தவறுகளிலிருந்து தான் மீள வேண்டுமானால் புளொட்டை புலிகள் போல் கட்டுப்பாடு மிகுந்த அமைப்பாக மாற்ற வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் அவருக்குத் தெரிந்தது. ஏனென்றால் பல பத்துக்கணக்கானவர்களைத் தட்டினால் தான் அது முடியும். எனவே, புளொட்டுக்குப் பதிலாக இரகசியமாக கட்டுப்பாடு மிகுந்த வேறு ஒரு அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பு நிலை பெற்றதும் புளொட்டைக் கலைத்து அதிலிருக்கும் உண்மையான, நேர்மையான போராளிகளை அந்த அமைப்புக்குக் கொண்டு போவதன் மூலம் அதைச் செய்யலாம் என அவர் நினைத்தார்

காந்தி தேசத்தின் மறுபக்கம் 13

13

பிரேமதாசாவைச் சந்தித்து விட்டு வந்த பின் பெரும் சுமை ஒன்று இறங்கியதைப் போல் இருந்தது உமாமகேஸ்வரனுக்கு. கொஞ்சக்காலம் பிரச்சினை இல்லாமல் கொழும்பில் இருக்கலாம் என்று அவர் நம்பினார். எதற்கும் பிரேமதாசாவிற்கு எதிராக தன்னிடம் உதவி கோரிய ஐ.தே.கட்சியின் “முதலான” பிரமுகரையும் சந்தித்து சமாதானப்படுத்திவிட்டால் இன்னும் நிம்மதியாக இருக்கலாம் என்று அவர் நினைத்தார்.

அதே சமயம் இந்த முதலான பிரமுகருக்குக்கூட ளுவுகு அல்லது பச்சைப் புலிகளைக் கொண்டு உமாமகேஸ்வரனது கதையை முடித்துவிட்டால் அந்தப் பழி தன் மீது விழுந்துவிடுமோ என்று பயம் வந்துவிட்டது. அதாவது உமாமகேஸ்வரன் தன்னைப்பற்றி பிரேமதாசாவிடம் சொல்லியிருந்தால் இந்தச் சமயத்தில் அவரைக் கொலை செய்வது அதை உறுதிப்படுத்துவதோடு தன்னை அந்தக் கொலையோடு நெருக்கமாக முடிச்சுப் போட்டுவிடும் என்று அவர் பயந்தார். எனவே உமாமகேஸ்வரனை உடனடியாக கொலை செய்வதற்குப் பதில் தன் பக்கம் இன்னும் நெருங்கிவர வைத்து கொஞ்சக் காலம் பயன்படுத்திவிட்டு அப்புறம் தேவைப்பட்டால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொலை செய்து விடலாம் என்று அசருக்குத் தோன்றியது.

உமாமகேஸ்வரன் அவரைச் சந்திக்க வந்த போது தனக்கு அவர் மேல் மனஸ்தாபம் இருப்பதாக அவர் காட்டிக்கொள்ளவில்லை. உங்களுக்கென்ன ஜனாதிபதியின் நேரடி தொடர்பு கிடைச்சாச்சு, எங்கட தயவு எனி தேவைப்படாது தானே என்றும் உமா பிரேமாவை சந்தித்த விடயம் தனக்குத் தெரியும் என்பதை நாசுக்காகச் சொன்னார்.

உமாமகேஸ்வரனுக்கு உடனடியாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனாலும் சுதாகரித்துக் கொண்டு புது சிNநிகதத்திற்காக பழைய சிநேகிதத்தை விட முடியுமா? என்று சமாளித்தார். தான் பிரேமதாசாவைச் சந்தித்த விடயம் அவருக்குத் தெரிந்திருக்காது என்று தான் அவர் நினைத்திருந்தார். அதற்கேற்றபடி இருவருக்குமுள்ள முரண்பாட்டை பயன்படுத்த திட்டமிட்டே இவரைச் சந்திக்க அவர் வந்திருந்தார். ஆனால் தற்போது முதலானவரும் பிரேமதாசாவும் ஒன்று சேர்ந்துவிட்டார்களோ என்ற சந்தேகமும் அவருக்கு வந்தது. அரசியல்வாதிகளின் பேச்சும், நட்பும், பகைமையும் என்றென்றைக்கும் மாறாமல் .நிரந்தரமாக இருப்பதில்லை என்பது அவருக்குத் தெரியும்.

ஆனால் அவர் சந்தேகப்பட்ட அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை. முதலானவர் தொடர்ந்து பேசிய சில விடயங்கள் அவர் இன்னமும் பிரேமதாசா மீது பனைமையே கொண்டுள்ளார் என்பதை காட்டியது.

உமா தான் பிரேமதாசாவைச் சந்தித்து வெறும் சம்பிரதாயத்திற்காகவே தான் என்றும், தான் என்போதும் அவர் பக்கம் தான் என்றும் முதலானவருக்கு காதில் பூ சுற்றிவிட்டு வந்தார்.

இந்தச் சந்திப்பு நடந்த சில நாட்களுக்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளி வந்தது.

அதனைத் தொடர்ந்து ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த திட்டம், யாப்புக்கள் பிரகாரம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (னுPடுகு) என்ற தனது கட்சியை உமாமகேஸ்வரன் சிறிலங்கா அரசியலமைப்பு விதிக்கு அமைய பதிவு செய்து தேர்தல் சின்னமாக நங்கூரம் சின்னத்தையும் தெரிவு செய்து கொண்டார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்திக்கு அண்மையிலிருந்த புளொட்டினது கொழும்பு அலுவலகம் டி.பி.எல்.எப் கட்சியினது தேர்தல் அலுவலகமாக மாற்றப்பட்டது. முதலில் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே தேர்தலில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் அதிக அக்கறை காட்டாததாலும் மன்னார் மாவட்டத்தில் புளொட்டின் இராணுவ முகாம்கள் உள்ள இடங்களில் தேர்தலில் போட்டியிட்டு அதில் தோற்றுப் போய்விட்டால் பின்பு மக்கள் தங்களை மதிக்கமாட்டார்கள் என்ற பயத்தாலும் அந்த இரண்டு மாவட்டங்களிலும் போட்டியிடுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.
தற்போது யாழ்ப்பாண மாவட்டம் தான் எஞ்சியிருந்தது. அங்கு புளொட்டுக்கோ, டி.பி.எல்.எப்.இற்கோ ஆட்கள் யாரும் கிடையாது. பிரச்சினையை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே வசந்தனுக்கு யாழ்ப்பாண மாவட்டத்து ஈ.பி.எல்.எப். அமைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் அவன் யாழ்ப்பாணம் போவதாகச் சொல்லி விட்டு கொழும்பு வந்து தமிழ் நாட்டுக்குச் சென்றுவிட்டான். இது உமாமகேஸ்வரனுக்குத் தெரியும். எனவே இப்போது அவர் உண்மையிலேயே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கும் கட்சிக்கு சேவை செய்வதற்கும் ஆட்களைத் தேட ஆரம்பித்தார்.

கொழும்பிலுள்ள பல யாழ்ப்பாண மாவட்ட பிரமுகர்களை அணுகி இது பற்றி கதைத்தார். அவர் தேர்தல் பேச்சை எடுத்தவுடனேயே எல்லாப் பிரமுகர்களும் ஐயோ தம்பி ஆளை
விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடிவிட்டார்கள். புலிகளை விரோதித்துக் கொண்டு ஒருவர் கூட டி.பி.எல்.எப் சார்பில் தேர்தலில் நிற்க முன்வரவில்லை.

இந்தச் சமயத்தில் கரவைக் கந்தசாமியினது அறிமுகம் உமாமகேஸ்வரனுக்கு கிடைத்தது. அந்த அறிமுகம் கூட சுவாரசியமான விடயம் தான்.

புளொட்டின் மலையகப் பொறுப்பாளராக இருந்த கதிரவன் - சண்முகதாசனுடைய ஆதரவாளர்களில் ஒருவர். அவர் மலையகத்திலிருந்த சண்முகதாசனது கட்சியின் புதிய செங்கொடிச் சங்கத்துடன் (தொழிற்சங்கம்) இணைந்து வேலை செய்வதற்காக சண்முகநாதனைச் சந்திக்கச் சென்ற போது அவர் கதிரவனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

தோழர் என்னிடத்தில் ஒருவர் இருக்கிறார். ஆரம்பகாலத்தில் அவர் மிக நல்ல தோழர். எங்களது கட்சி நடவடிக்கைகள் பலவற்றில் அவர் பங்புபற்றினார். ஆனால் இப்போ கட்சியினது கொள்கைக்கே அவர் விரோதமாக போய்விட்டார். இப்ப எங்கட கொழும்பு அலுவலகத்தில் தங்கியிருந்து கொண்டு என்ர பெயரை கெடுக்கிறதுக்கெண்டே சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். தண்ணி அடிக்கிறதுக்காக ஒரு நாளைக்கு ஒரு தரம் என்றாலும் ஏமாத்துறது அதுவும் மாக்சிசம் பேசி தோழர் என்று சொல்லி ஏமாத்துறது எனக்கு மகா கேவலாமாக இருக்கு. நான் எத்தனையோ தடவை சொல்லிப் பாத்திட்டன் அவர் திருந்திறதாயில்லை. வலுக்கட்டாயமாக நீ அலுவலகத்தில் தங்கியிருக்க வேண்டாம். வெளியே போ என்று சொல்ல எனக்கு மனம் வரயில்லை. நீங்கள் அவரை இங்கேயிருந்து கூட்டிக் கொண்டு போனால் அத எனுக்கு செய்யிற பெரிய உதவியாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டதுதான் அந்த வேண்டுகோள்

கதிரவன் இதைச் சென்று உமாமகேஸ்வரனிடம் தெரிவித்த போது, பெரிய சந்தோசப்பட்ட உமாமகேஸ்வரன் குடிக்கிறது என்ன பெரிய தப்பா. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலவீனம் இருக்கும். நாங்கள் அவரை பயன்படுத்தலாம். கூட்டிக் கொண்டு வாரும் என்று சொன்னார்.

கதிரவனள் கரவையாரை அழைத்து வந்து உமாமகேஸ்வரனை சந்திக்க வைத்ததும் தேர்தலில் போட்டியிடும் விடயத்தை உமா அவருக்குச் சொன்னார். உடனேயே கரவையார் எனக்குப் பயம் கிடையாது, யாழ்ப்பாணத்தில நான் நிற்கிறன் உங்கட கட்சியின் சார்பில் மலையகத்திலும் போட்டியிடலாம். எனக்கு அங்கே 25 வருடத் தொடர்பு இருக்கு என்றும் சொன்னார்.

உமாமகேஸ்வரனுக்கு உடனே அது சரி என்றுபட்டது. கதிரவனிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு கதிரவன் அங்கேயும் நாங்கள் போட்டியிடலாம். ஆனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாங்கள் அங்கை வேட்பாளரா நின்றால் ஒருத்தரும் எங்களக்கு ஓட்டுப் போட மாட்டாங்கள் என்றார். அதைக் கேட்ட உமா, நாங்கள் ஏன் நிக்கோணும், அங்கேயுள்ள ஆட்களை நிப்பாட்டுவம். நீர் கரவை அங்கிளையும் கூட்டிக் கொண்டு போய் உடனே ஏற்பாடு செய்யும் என்று கதிரவனுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின் தேர்தலில் நிறுத்த ஆள் பிடிக்க கதிரவன் கரவையாரை அழைத்துக்கொண்டு நுவரெலியாவிற்கு திரும்பினார்.

நுவரெலியாவிற்கு சென்ற அன்றே, இன்றைக்கே ஆள் கொண்டு வாறன் என்று சொல்லிப் புறப்பட்டுப் போன கரவையார், அன்று மாலை ஹட்டன் பகுதியிலிருந்து வாட்டசாட்டமான நடுத்தர வயதுக்காரர் ஒருவரை பிடித்து வந்தார்.

அந்த நேரம் கதிரவன் வீட்டிற்கு வந்திருந்த மலையகத் தோழர்கள் அந்த ஆளைப் பார்த்ததும் ஐயோ என்று தலையில் கைவைத்தார்கள்

காந்தி தேசத்தின் மறுபக்கம்-12

12

ரஜீவ்காந்தியின் பிள்ளைகளைக் கடத்தி பணயம் வைக்க திட்டமிட்ட விடயம் றோவுக்கு தெரிய வந்ததையிட்டு உமாமகேஸ்வரனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் (உமாவின் நண்பர்) தான் முதலில் இந்தத் தகவலை அவருக்கு தெரிவித்திருந்தார். அதுவும் இப்படியாக முட்டாள்தனமான காரியங்கள் எதிலும் இறங்க வேண்டாம் என்றும் நேரு குடும்பத்தில் கை வைத்தால் இந்தியா தனது முழுச்சக்தியையும் பயன்படுத்தி உங்களை ஒழிக்க முற்படும் என்றும் எச்சரிக்கை கலந்த ஆலோசனையை உமாமகேஸ்வரனுக்கு தெரிவித்தார்.
அதன் பின்பே உமா, பாலஸ்தீன நண்பர் ஹமால்டினுடன் தொடர்பு கொண்டு தனது கடுமையான ஆதங்கத்தை தெரிவித்துக் கொண்டார். தன்னுடைய தரப்பிலிருந்து நிச்சயமாக இந்த விடயம் வெளியே போயிருக்காது என்று அவர் உறுதியாக நம்பினார். தன்னுடன் கராச்சிக்கு துணையாக வந்த ராபினுக்குக் கூட இந்த விடயத்தைப் பற்றி அவர் சொல்லவில்லை. ஹமால்டின் தரப்பில் இருந்துதான் இது வெளியாகியிருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.

ஹமால்டினுக்குக் கூட இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பாருக்தாதா மீது தான் அவருக்குச் சந்தேகம் வந்தது. இஸ்லாமிய நலனை மட்டுமல்லாமல் வியாபார நலனையும் குறியாக கொண்ட அவர் தன்னுடைய சுயலாபத்துக்காக இந்த விடயத்தை றோவுக்கு தெரிவித்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. நடந்த சம்பவத்திற்காக உமாமகேஸ்வரனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர் நடந்த தவறை ஈடு செய்ய மாலைதீவு சகாக்களை மீட்கும் நடவடிக்கைக்கு தான் முக்கியமான வேறு பங்களிப்பை செய்வதாக உறுதி கூறினார்.

ஆனால் அவரது இந்த உறுதி மொழி உமாமகேஸ்வரனது கவலையை போக்கவில்லை. அவர் தனது வதிவிடத்தை கராச்சிக்கு மாற்றுவதையிட்டு பெரும் நம்பிக்கை கொண்;டிருந்தார் கொழும்பு நிலைமை நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற முன்னமே ஜனாதிபதி வேட்பாளரான பிரேமதாசாவை ஒழித்துவிட உமாமகேஸ்வரனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பிரேமதாசாவிற்கு எதிரான ஐக்கியதேசியக் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் அவரது உதவியை நாடினார். பிரேமதாசா ஒழிந்தால் தான் வேட்பாளராக இருக்கலாம் என்பது அவரது எண்ணம்.
ஆனால் உமாமகேஸ்வரன் மாலைதீவு சம்பவ நேரத்தில் தனக்கு கைகொடுக்கத் தவறிய அந்த ஐ.தே.கட்சி முக்கியஸ்தருக்கு சமயம் பார்த்து பதிலடி கொடுக்கும் விதத்தில் தன்னால் அவர் சொல்லும் காரியத்தை செய்ய முடியாதென தீர்க்கமாக மறுத்து சொல்லிவிட்டார். படையினர் மத்தியிலும் கொழும்பு அரசியல் குண்டர்கள் மத்தியிலும் பெரும் செல்வாக்குப் பெற்ற அந்த முக்கியஸ்தர் இதைக்காரணமாக வைத்து தனக்கு நெருக்கடி தரக்கூடும் என்று அவர் அஞ்சினார்.


வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி அது பிரேமதாசாவாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால் என்ன வெற்றி பெற்றால் தன்னுடைய செயற்பாடுகளுக்கு அது தடையாக இருக்குமென்று அவருக்குத் தோன்றியது. அதனால் எதிர்க்கட்சி வேட்பாளரான சிறிமா அம்மையார் வெற்றி பெறுவதற்கு உழைக்குமாறும் தங்களுடைய கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் சிறிமா அம்மையாருக்கு வாக்களிக்குமாறு மக்களை தூண்டும்படியும் இயக்கத்தின் சகல பொறுப்பாளர்களுக்கும் உமா அறிவித்திருந்தார்.

ஆனால் அவருடைய கஸ்ர காலம் அவர் எதிர்பார்த்ததிற்கு மாறாக ஐ.தே.கட்சியே தேர்தலில் வெற்றி பெற்றது. பிரேமதாசாவே ஜனாதிபதியானார். உமாமகேஸ்வரனுக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. கராச்சி விடயம் முடியாதென்று ஆகி விட்டது. கொழும்பு நிலைமைகள் போகப் போக எப்படி ஆகும் என்று சொல்ல முடியாது. வவுனியா பகுதிக்குச் சென்றால் , புலிகள் இந்திய - இராணுவம் இரண்;டு பகுதியினராலும் நெருக்கடியை எதிர்பார்க்க வேண்டும். மலையகத்தில் வேண்டுமானால் தற்காலிகமாக கொஞ்சக்காலம் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் நீண்ட நாளைக்கு அது முடியாது. இப்படி அவர் சிநத்தித்துக் கொண்டிருந்த போது ஐனாதிபதி பிரேமதாசாவின் மிக நெருங்கிய நண்;பரான முஸ்லிம் தலைவர் ஒருவர் வந்து, அவரைச் சந்தித்து பிரேமதாசா அவரைச் சந்திக்க விரும்புகிறார் என்ற செய்தியைத் தெரிவித்தார். இந்தச் செய்தி தாகத்தால் தவித்த ஒருவனுக்கு தண்ணீர் கிடைத்ததைப் போல் இருந்தது உமாவுக்கு.

பிரேமதாசாவை பொறுத்தவரை, சிறிலங்கா அரசியலில் அவர் சாதி அந்தஸ்தில் குறைந்தவர். சிறிலங்காவின் ஆட்சி பீடம் எப்போதும் தங்களது பரம்பரைச் சொத்தாக எண்ணிவரும் கண்டிய கொயிகம உயர் சாதியினர் தன்னைத் தொடர்ந்து ஆட்சி செலுத்த அனுமதிக்கமாட்டார்கள் என்ற பயம் அவருக்கிருந்தது. பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் உட்பட அனைத்துத் துறையிலும் கொயிகம சாதியினரது அதிகாரமே கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்த்தனா தலைமையிலான பச்சைப் புலிகள், விசேட அதிரடிப்படை (ளுவுகு) ஆகியவற்றால்கூட தனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என அவர் பயந்தார். பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துறைகளில் தன்னுடைய ஆட்களைப் போட்டு தன்னுடைய அதிகாரத்தை உறுதி செய்யும் வரை, அவருக்கு இராணுவ ரீதியாக நம்பிக்கைக்குரிய அடியாட்கள் படை தேவைப்பட்டது. அரசியல் ரீதியாக அவருக்கென்று கொழும்பின் அடிமட்ட சேரிப்பகுதிகளில் பெரிய குண்டர் படை ஒன்று இருந்தாலும் அது இராணுவ ரீதியாக பயிற்றப்பட்டதல்ல. புலிகளுடன் அவர் பேச விரும்பினார். ஆனால் புலிகள் ஒருபோதும், தான் சொல்கிறபடி செய்வதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று அவருக்குத் தெரிந்தது. எனவே அவர்களைவிட்டால் புளொட் ஒன்றுதான் தன்னால் அணுகக்கூடிய இயக்கமாக அவருக்குத் தோன்றியது.


பிரேமதாசா அடிப்படையில் ஒரு இந்திய எதிர்ப்பாளர் அல்ல. கொழும்பிலுள்ள இந்திய முதலாளிகளில் பெரும் பகுதியினர் அவரது நண்பர்கள். தில்லுமுல்லுகளும், சுத்துமாத்துக்களும் நிறைந்த பாராளுமன்ற அரசியலில் சிறுவயதிலிருந்தே ஈடுபட்டு அனுபவம் பெற்ற அவர் இந்திய எதிர்ப்பை, வாக்கு வேட்டைக்கான ஒரு கருவியாகவே பயன்படுத்த முற்பட்டிருந்தார். எனவே, இந்திய எதிர்ப்பாளர்களாக உள்ள தமிழ் இயக்கங்களை தன்னுடைய நண்பர்களாக்கிக் கொள்ள அவர் விரும்பினார். புலிகள், புளொட் இரண்டும்தான் இந்திய எதிர்ப்பு இயக்கங்களாக அவருக்குத் தெரிந்தது. புளொட்டைப் பொறுத்தவரை அது இந்தியாவுடனும், றோவுடனும் முன்பு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது பிரேமதாசாவுக்குத் தெரியாது. அவர் மாலைதீவு தாக்குதல் காலத்தில் உமாமகேஸ்வரன் விட்ட இந்திய எதிர்ப்பு அறிக்கைகளைப் பார்த்து புளொட்டும் இந்திய எதிர்ப்பு இயக்கம் என்று முடிவுகட்டிவிட்டார். மாலைதீவு புரட்சியை இந்தியா முறியடித்துவிட்டதால் உமாமகேஸ்வரனுக்கு இந்தியா மீது ஆத்திரம் இருக்கும் என்றும் அவர் நம்பினார்.

இந்தப்பின்னணியில் பிரேமதாசா பதவிறே;ற மூன்றாவது வாரம் அவரது கொழும்பு இல்லத்தில் உமாமகேஸ்வரன் அவரைச் சென்று சந்தித்தார்.

உமாவை அன்புடன் வரவேற்ற பிரேமதாசா அவருடன் மனம் திறந்து பேசினார். சிறுவயதில் தான் பட்ட கஸ்ரம் தன்னுடைய சமூக அமைப்பினால் அரசியலுக்குள் தான் அடைந்த அவமானங்கள் தன்னுடைய விடாமுயற்சியினாலும், கடுமையான உழைப்பினாலும் தான் ஜனாதிபதியாக உயர்ந்த பதவிக்கு வந்திருக்கும் நிலை இவற்றை எல்லாம் விபரமாகச் சொன்ன அவர் தனக்குள்ள பிரச்சினைகளையும் எடுத்துச் சொன்னார். சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள ஒருவன் உயர்ந்த பதவியை அடையும் போது மேல் நிலையில் உள்ளவர்கள் ஒரு நாளும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எப்போதும் அவனுக்கு இடைஞ்சல் செய்யவும் அவனை ஒழித்துவிடவுமே முயற்சி செய்வார்கள். இந்த நிலைதான் என்னுடைய இப்போதைய நிலையும் என்று குறிப்பிட்டதோடு தான் அதிகாரிகள் மட்டத்தில் சகல துறைகளிலும் மாற்றங்களைச் செய்து தனது ஆட்களைப் போடும் போது தனக்கு ஏதாவது சவால்கள், அச்சுறுத்தல்கள் வந்தால், அந்தச் சயத்தில் உமாமகேஸ்வரன்தான் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உமாமகேஸ்வரனிற்கு பிரேமதாசாவின் மனம் திறந்த பேச்சு மிகவும் பிடித்துவிட்டது. தான் தேவைப்படும் போது கண்டிப்பாக அவருக்கு உதவி செய்யக் காத்திருப்பதாக உறுதியளித்த உமா, தான் கொழும்பில் தொடர்ந்து தங்கியிருக்க பிரேமதாசாவின் ஒத்துழைப்புத் தேவை என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு, நீங்கள் கொழும்பில் தங்கியிருக்க வேண்டும் என்பது தானே என்னுடைய விருப்பமும் என்று சிரித்துக் கொண்டே சொன்ன பிரேமதாசா ஆனால் தயவு செய்து கொழும்பில் எனக்குத் தெரியாமல் ஏதாவது செய்து, எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விட வேண்டாம். வவுனியாவிற்கு அப்பால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் அந்தச் சந்திப்பு முடிந்தது.

ஜே.ஆரை முன்பு உமாமகேஸ்வரன் சந்தித்த போது முக்கியப்படுத்தப்பட்டது போல் இந்த பிரேமா உமா சந்திப்பு பகிரங்கப்படுத்தப்படவில்லை. பிரேமதாசா தன்னுடைய தேவைகளையொட்டி இதைப் பகிரங்கப்படுத்த அனுமதிக்கவில்லை.

ஆனாலும் இது எப்படியோ பிரேமதாசாவைக் கொலை செய்ய உமாவின் உதவியைக் கோரிய ஐ.தே.கட்சி முக்கியங்தருக்குக் தெரிந்துவிட்டது. மடியில் நெருப்பைக் கட்டியது போல் அவர் இருப்புக் கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தார். தன்னைப் பற்றி உமாமகேஸ்வரன் ஏதாவது பிரேமதாசாவிடம் சொல்லியிருப்பாரோ என்று அவர் பயப்பட ஆரம்பித்தார்.
பச்சைப் புலிகள் அல்லது stf ஐக் கொண்டு உமாமகேஸ்வரனைத் தட்டிவிட்டால் என்ன என்று அவர் யோசனை செய்தார்.

காந்தி தேசத்தின் மறுபக்கம் -11

11

மாணிக்கதாசன் ஈரோஸ் ஐயாவையும் அவரது சகாவையும் கொலை செய்தது முகாம்களில் இன்னும் பெரிய குழப்பத்தை உண்டுபண்ணியது. பெரியவர் (உமா) விடுதலைச் செய்யச் சொன்ன பின்பு அவர்களை இவர் சுடுவதென்றால் இவர் பெரியவரை விடப் பெரியவரா? ஏன்று அடிமட்ட உறுப்பினர்கள் கூட குமுறி எழுந்தனர்..

நாங்கள் யாரை மன்னித்தாலும் ஈரோஸ்காரரை மன்னிக்க முடியாது. அவர்கள் எங்களது நடேசனை (புளொட்டின் மன்னார் பொறுப்பாளர்) புலிகளுக்குக் காட்டிக் கொடுத்தவர்கள். அதனால் அவர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் தான் என்று மாணிக்கதாசன் தன்னுடைய தன்னிச்சையான கொலைகளுக்குச் சொன்ன விளக்கம் முகாம்களில் எடுபடவில்லை.

இந்த விடயம் சங்கிலியினால் கொழும்பு அலுவலகத்தினூடாக நுவரேலியாவில் தங்கியிருந்த உமாமகேஸ்வரனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாகவே மாணிக்கதாசனிடமிருந்து ஆயுதங்களை வாங்கும்படியும் அவனை தற்காலிகமாக சகல பொறுப்புக்களிலுமி;ருந்தும் நீக்கியிருப்பதாக அறிவிக்கும்படியும் சங்கிலிக்கு தகவல் அனுப்பினார்.
வசந்தனைப்போல், மாணிக்கதாசனை தட்டச்சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. சிறிலங்கா இராணுவத்துடன் தொடர்பு கொள்வதற்கு அவனை விட்டால் வேறு ஆள் இல்லாதது அதற்கு ஒரு காரணம். அதனால் அவனை முற்றுமுழுதாக ஒதுக்கிவிடாமலும் வசந்தன் குழுவின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாமலும் தடுத்து நிறுத்த உமா தீர்மானித்தார்.

ஆனால் அப்போதிருந்த சூழ்நிலையில் மாணிக்கதாசனுக்கு சாதகமாக எதைச் செய்தாலும் அது முகாம்களில் எதிர்மாறான விளைவுகள் உண்டாக்கும் என்றும் அவருக்குத் தோன்றியது. எனவே, முதலில் எல்லோருடைய கவனத்தையும் திருப்ப எதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைத்தார்.
இது பற்றி மலையகப் பொறுப்பாளர் கதிரவனுடனும் அவர் ஆலோசித்தார். அதற்கு கதிரவன் மாநாடு ஒன்றை கூட்டி பிரச்சினைகளை விவாதிப்பது நல்லது என்று கருத்துச் சொன்னார். ஆனால் அதை உடனடியாக செயற்படுத்துவது சாத்தியம் இல்லை என்று உமாமகேஸ்வரனுக்குத் தோன்றியது.

மாநாடு என்று ஒன்று கூட்டும் போது மாலைதீவு விவகாரம், மாணிக்கதாசன் விவகாரம் என்று சூடான விவாதங்கள்; அங்கே தோன்றும். அது கைகலப்புக்கள், மோதல்கள் உருவாக்கிவிடக் கூடும் என்றும் அதனால் நிலைமை இன்னும் மோசமடையலாம் என்றும் அவர் எண்ணினார்.

அப்போது நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருந்தது. புளொட்டை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து தேர்தலில்; போட்டியிட்;டு முகாம்களில் முடங்கிக் கிடப்பவர்களை தேர்தல் பிரசாரம் அது இது என்று பரவலாகத் திர்ந்து வௌ;வேறு இடங்களுக்கு அனுப்பிவிட்டால் அவர்களது கவனம் திசை திரும்பிவிடும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது.

தேர்தல் வருவதற்கு எப்படியும் 4 அல்லது 5 மாதங்களாவது ஆகும் அதற்குள் கட்சி ஒன்றை உருவாக்கி முகாம்களில் பிரச்சினைகளை உண்டாக்குபவர்களை கட்சிப் பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள் என்யு நியமனம் கொடுத்து முகாம்களுக்கு வெளியே மாவட்ட ரீதியாக அனுப்பிவிட்டால் தலையிடி தீர்ந்துவிடும் என்று அவர் நம்பினார்.



இதுபற்றி கதிரவனிடம் சொன்ன போது நீங்கள் பிரச்சினைகளை சமாளிக்க பார்க்கின்றீர்களே அல்லாமல் அவற்றை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை என்று அவர் விமர்சனம் செய்தார்.

“பிரச்சினைகளை ஒருநாளும் நிரந்தரமாக தீர்க்க முடியாது. தீர்க்க, தீர்க்க பிரச்சினைகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கும். சமாளித்துக் கொண்டு போவதுதான் புத்திசாளித்தனம்” என்று அதற்கு விளக்கம் சொல்லிவிட்டு கொழும்பு திரும்பிய உமாமகேஸ்வரன் முதல் வேலையாக கட்சியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

ஒரு வாரம் சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள் என்று பலரைச் சந்தித்து ஆலோசனைக் கேட்டு கட்சியின் அமைப்பு வடிவம் மற்றும் யாப்பு, கொள்ககைத்திட்டம் என்பன தயாரிக்கப்பட்டன. கட்சிக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி DPLFஎன்று பெயர் வைக்கப்பட்டது.
இயக்கத்தில் பிரச்சினைக்கு உhரியவர்களாக இருந்த நபர்கள் கட்சியினது முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். வசந்தனுக்கு யாழ் மாவட்ட அமைப்பாபளர் பதவி கொடுத்து யாழ்ப்பாணம் சென்று இரகசியமாக புளொட் ஆதரவாளர்களைச் சந்தித்து கட்சியின் உறுப்பினர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு சொல்லப்பட்டது.
வசந்தனது ஆதரவாளர்கள் சிலருக்கு மன்னார் நகர, முல்லைத்தீவு நகர, மட்டக்களப்பு நகர அமைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த இடங்கள் அனைத்தும் இந்திய இராணுவத்தின் கண்காணிப்புக்கு மத்தியிலும் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியிருந்த பகுதிகள் நிச்சயமாக அங்கே போய் வேலை செய்ய முடியாது என்பதும் இவர்கள் அங்கே போக மாட்டார்கள் என்பதும் உமாமகேஸ்வரனுக்குத் தெரியும்.

ஆனால் இராணுவ வேலைக்குத்தான் ஆயுதமும் பாதுகாப்பும் தேவை. அரசியல் வேலை ஆள் தெரியாமல் இருந்து மிக இரகசியமாகச் செய்யலாம். லெனின், மாவோ, சேகுவாரா, பிடல் காஸ்ரோ, எல்லாம் நெருக்கடிக்கு மத்தியிலேதான் அரசியல் வேலை செய்தார்கள் என்று காரணங்கள் சொல்லி அவர்களது பொறுப்புகளுக்கான உத்தரவு கடிதங்களை அனுப்பிவைத்தார். அவரது நோக்கம் அவர்கள் தாங்களாகவே இயக்கத்தை விட்டு தப்பி ஓடும் அளவிற்கு அவர்களுக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்பதே. அப்படி வெளியே சென்ற பின் அவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம் என்று அவர் எண்ணினார்.

உமாமகேஸ்வரன் கொழும்பில் இருந்து கொண்டு வசந்தன் குழுவிற்கு தண்டனை கொடுக்க தீர்மானித்துக் கொண்டிருந்த நேரத்தில் கராச்சியிலிருந்து றோவிற்கு ரஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்த உமாமகேஸ்வரன் திட்டமிட்ட விடயம் இரகசியமாக தெரிய வந்தது. யார் மூலம் இது தெரிய வந்தது என்று இன்னமும் சரியாகத் தெரியாது. பாருக்தாதா தான் இதைச் சொல்லியிருக்க வேண்டும் என்றும் தான் அதற்காக மிக மிக வருத்தப்படுவதாகவும் ஹமால்டின் (பாலஸ்தீன நண்பர்) உமாவிற்கு அறிவித்திருந்தார்.

றோ, உமாமகேஸ்வரன் இப்படி ஏதாவது செய்யக்கூடும் என்று எதிர்பார்த்துத்தான் இருந்தது. ஆனால் ரஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்தும் அளவிற்கு அவர் துணிவார் என்று எதிர்பார்க்கவில்லை. கடுமையான பாதுகாப்பு வலயத்திற்குள் நடமாடும் அவர்களை கடத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை. என்றாலும் பாகிஸ்தான் பாலஸ்தீன் ரீதியில் தொடர்புகள் இருப்பதால் இதை சாதாரண விடயம் என்று ஒதுக்கித் தள்ள அவர்களால் முடியவில்லை. எனவே எப்படியும் உமாமகேஸ்வரனது கதையை விரைந்து முடித்து விட வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள்

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறுபக்கம் -10

10
கராச்சிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பிய உமாமகேஸ்வரனுக்கு பெரும் நெருக்கடி காத்திருந்தது. முள்ளிகுள கொலையும் மாணிக்கதாசன் விவகாரமும் இயக்கத்தை விட்டு நீக்கி அவனைக் கைது செய்து விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் பெரும் பிரச்சினைகயாக இருந்தன.
சங்கிலி மாணிக்கதாசன் ENFLF பக்கம் சாய்ந்து விட்டான்; என்றும் அவர்களின் திட்டப்படி இயக்கத்தை உடைப்பதற்கென்றே அவர் திட்டமிட்டுச் செயல்படுகின்றான் என்றும் நீண்ட விரிவான ஒரு கடிதத்தை எழுதி தனது நம்பிக்கைக்குரிய ஒருவர் மூலம் உமாமகேஸ்வரனிடம் சேர்க்கும்படி கொழும்புக்கு அனுப்பியிருந்தான்;.
அந்தக் கடிதத்தை படித்த உமாமகேஸ்வரனுக்கு இதெல்லாம் வசந்தனின் வேலை என்று உடனேயே புரிந்தது. வசந்தன் மாணிக்கதாசனையும் தன் பக்கம் மாற்றிவிட்டான் என்று அவர் நம்பினார். உடனேயே சங்கிலியை கொழும்பு வரும்படி தொலைத்தொடர்பு சாதனத்தின் வழியாக செய்தி அனுப்பியிருந்தார்.
முள்ளிக் குளத்திலிருந்து கற்பிட்டியூடாக சங்கிலி கொழும்பு வந்து சேர்ந்ததும் வசந்தனுடைய திட்டம் பற்றி எடுத்துச் சொல்லி அவரை உடனே தட்டிவிடும்படி உத்தரவிட்டார்.
சங்கிலிக்கு முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. வசந்தன் இப்படிச் செய்வான் என்று அவனால் நம்பமுடியவில்லை. அவரைப் பற்றி உமா சொன்ன விடயங்களுக்கும் அவன் எழுதிய கடிதமும் முள்ளிக்குளத்தில் தனக்கு விசுவாசமானவன் போல நடந்து மாணிக்கதாசன் பற்றி சொன்ன தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்த போது அவன்தான் குழப்பத்தின் சூத்திரதாரி என்று சங்கிலிக்குப் புரிந்தது.
ஆனால் அப்போதிருந்த சூழ்நிலையில் வசந்தனைத் தட்டினால் அது இயக்கத்திற்குள இன்னும் பெரிய குழப்பத்தை உண்டு பண்ணிவிடும் என்றும் அவனை தனது கண்காணிப்பிலேயே விடும்படியும் சமயம் வரும் போதுதான் அவனைத் தட்டிவிடுவதாகவும் சங்கிலி உமாமகேஸ்வரனைக் கேட்டுக்கொண்டான்;.
உமாமகேஸ்வரனுக்கும் அவன் சொல்வது சரி என்று பட்டது. வசந்தனைத் தட்டுவதற்கு முன் மாணிக்கதாசனின் அதிகாரங்களைக் குறைத்து அவனுக்குச் சார்பான பொறுப்பாளர்களை அவர்களது பொறுப்புக்களிலிருந்து அகற்றிவிட்டு தனக்கு எப்போதும் விசுவாசமாக நடக்கக்கூடிய சங்கிலியின் ஆட்களைப் பொறுப்பாகப் போட அவர் தீர்மானித்தார்.
முகாம்களின் நிர்வாக அமைப்பு முறையையும் முற்றாக மாற்றி ஒவ்வொரு முகாமையும் கண்காணிப்பதற்கென்று ஒவ்வொரு கண்காணிப்புக்குழுக்களை அமைக்கவும் அவர் முடிவு செய்தார். முகாம்களிலேயே தங்கியிருக்கும் இந்தக் கண்காணிப்புக்குழுக்கள் தான் அனைத்து ஆயுதங்களுக்கும் பொறுப்பாக இருக்கும் முகாம் பொறுப்பாளர்கள் இந்தக் கண்காணிப்புக் குழுவுக்கு கட்டுப்பட்டவர்கள். எல்லாக் கண்காணிப்புக் குழுக்களும் தனது நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டும் என்று அதிகாரங்களை வரையறை செய்தார்.
முள்ளிக்குளம் பொறுப்பாளர் சங்கிலிக்கு நம்பிக்கையானவர் அதுபோல் குஞ்சுக்குளம் பொறுப்பாளரும் மாணிக்கதாசனுக்கு எதிரான பாருக் ஆதரவாளர். செட்டிக்குளம் பொறுப்பாளர், வவுனியா நகரப் பொறுப்பாளர் ஆகியோரே மாணிக்கதாசனின்; ஆட்கள். தன்னால் உடனடியாக அந்த இரு பொறுப்பாளர்களுக்கும் வேறு பொறுப்பு கொடுப்பதாகவும் அவர்களது இடத்திற்கு வேறு இருவரை (சங்கிலியன் ஆட்கள் ) நியமிப்பதாகவும் கடிதம் எழுதி சங்கிலியிடம் கொடுத்து அவனை முள்ளிக்குளத்திற்கு திரும்பிப்போய் நிலைமையை சீர் செய்யும்படியும் மாணிக்கதாசன்; தொடர்பான பிரச்சினைகளுக்கும், முள்ளிக்குளம் கொலைக்கும் விசாரணைக்குழு ஒன்று அமைத்து விசாரிக்கப்படும் என்று சொல்லும்படியும் சொல்லி அனுப்பினார்.
இதற்கிடையில் நுவரெலியாவிலிருந்து ஜே.வி.பி. தலைவர்கள் தங்களை உடன் வந்து சந்திக்கும்படி உமாமகேஸ்வரனுக்கு தகவல் அனுப்பியிருந்தனர். அப்போது நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாசாவை ஆதரிப்பதா, அல்லது தேர்தலை முற்றாக நிராகரிப்பதா என்பதில் அவர்களுக்குள்ளேயே (ஜேவி.பி) பிரச்சினை இருந்தது. இதில் உமாமகேஸ்வரன் யாரை ஆதரிக்கின்றார் என்பதை அறிய அவர்கள் விரும்பினார்கள்.
உமாமகேஸ்வரனுக்கு அவரது முகாம் பிரச்சினைகள் பெரும் தலையிடியாக இருந்தாலும் ஜே.வி.பி.யினரது அழைப்பு அவற்றைவிட முக்கியமானதாகப் பட்டது. அவர் அன்றே ராபினை அழைத்துக் கொண்டு நுவரெலியாவிற்குச் சென்றார்.
மறுநாள் காலை பத்து மணிக்கு நுவரெலியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ஒருவர் வீட்டில் ஜே.வி.பி.யினருடனான அந்தச் சந்திப்பு நடந்தது. ஜே.வி.பி.யின் தரப்பில் ரோஹண விஜயவீராவும், உபதிஸ்ஸ கமநாயக்காவும், சரத் ரூபசிங்க என்பவரும் கலந்து கொண்டனர். புளட்டின் சார்பில் ஜே.வி.பி தொடர்பாளரும் மலையகப் பொறுப்பாளருமாகிய கதிரவனும் உமாமகேஸ்வரனும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்புத்தான் விஜய வீர கமநாயக்கா, உமாமகேஸ்வரன் மூவரும் கொலை செய்யப்பட முன் சந்தித்த இறுதிச் சந்தர்ப்பமாகும். ஜே..வி.பி.க்கு ஜனாதிபதித் தேர்தலை முற்றாகப் பகிஸ்கரிக்கும் நோக்கம் இருக்கவில்லை. தேர்தலில் குழப்பத்தை உண்டுபண்ணி , அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி , ஆட்சியைக் கைப்பற்றுவது அவர்களது நோக்கமாக இருந்தது. விஜய வீர, சிறிமாவோவை விட பிரேமதாசாவை ஆட்சிக்குக் கொண்டு வருவதுதான் நல்லது என்று கருதினார்.
சிறிமாவோ ஓரளவுக்கு படித்தவர் அரசியல் பாரம்பரியம் உள்ளவர் . ஏற்கனவே பிரதமராக இருந்த அனுபவம் உண்டு. இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு உள்ளவர். ஆனால் பிரேமதாசா படிக்காதவர் 5ம் வகுப்பு அரசியல்வாதி, அவருடைய பலம் அவரைச்சுற்றியிருக்கும் குண்டர் படைதான். அந்தக் குண்டர் படையின் முக்கிய தலைவர்களைத் தட்டிவிட்டால், பிரேமதாசாவைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியை சுலபமாக கைப்பற்றிவிடலாம் என்று தனது கருத்துக்கு அவர் விளக்கம் சொன்னார்.
ஆனால் உபதிஸ்ஸ கதநாயக்கா, சிறிமாவோவை ஆட்சிக்குக் கொண்டு வருவதுதான் நல்லது. அவரது கட்சிக்குள் தங்களுடைய ஆட்கள் இருக்கின்றார்கள். கட்சிக்காரரை வைத்தே, சிறிமாவோவை விழுத்திவிடலாம் என்று மாறுபட்ட கருத்தைச் சொன்னார். கமநாயக்காவின் கருத்தையே உமாமகேஸ்வரனும் ஆதரித்தார்.
ஐ.தே.கட்சி தொடர்ந்து ஆட்சியிலிருந்து வரும். கட்சி. அவர்களிடம் பணப்பலம் மட்டுமல்ல, பாதுகாப்புப்படைகளிலும் அவர்களுடைய ஆட்கள்தான் இருக்கின்றார்கள். சிறிமாவோ பதவிக்கு வரும் போது, அவருக்கு உடனடியாக பணபலம் கிடையாது. பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகளை மாற்ற முயற்சி எடுக்கும் போது பிரச்சினை வரும். அந்தச் சமயத்தில், சரியாக காய் நகர்த்தி ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தை நீங்கள் கைப்பற்றிக்கொள்ளலாம். இந்திய இராணுவத்தின் வருகைக்கு எதிராக இந்தத் தேர்தலை நீங்கள் பயன்படுத்தினால் ஆட்சிக்கு வருகின்ற எவரும் உங்களை அழிக்க இந்திய உதவியை நாட முடியாமல் செய்யலாம் என்று அவர் தனது கருத்தை விளக்கிச் சொன்னார்.
சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற அந்தச் சந்திப்பில் அரசியல் குண்டர்களை ஒழிப்பது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை குழப்புவதன் மூலம் மட்டுப்படுத்துவது முதலான பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்ட போதும் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றிதங்களது மத்திய குழுவில் கலந்து ஆலோசித்து தங்களது முடிவை உமாமகேஸ்வரனுக்குத் தெரிவ்ப்பதாகச் சொல்லிவிட்டு ஜே.வி.பி தலைவர்கள் சென்றுவிட்டனர்.

உமாமகேஸவரன் இவ்வாறு ஜே.வி.பி தலைவர்களுடன் பேச்சு நடந்து கொண்டிருந்த நேரத்தில், சங்கிலி கற்பிட்டி முள்ளிக்குளம் வழியாக செட்டிகுளம் சென்று உமாவின் கடிதத்தின் பிரகாரம் பொறுப்பாளர்களை மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டான். மாணிக்கதாசன் எங்கே என்று அவன் கேட்ட போது ஐயாவையும் மற்றவரையும் விசாரிக்க அவன் குஞ்சுக்குளம் சென்றிருப்பதாக அங்குள்ளவர்கள் சொன்னார்கள்.
முள்ளிக்குளம் முருகதாசின் கொலை விவகாரத்தின் பின் உமாமகேஸ்வரன் எடுத்த இன்னொரு முடிவு பொதுமக்கள் யாரையும் மறு அறிவித்தல் வரை கைது செய்யக்கூடாது. அவ்வாறு கைது செய்யப்பட்டு யாராவது சிறைவைக்கப்பட்டிருந்தால் அவர்களை உடன் விடுவிக்க வேண்டும் என்பதாகும். இதை அவர் சங்கிலியிடம் கொடுத்து அனுப்பிய கடிதத்தில் எழுதியிருந்தார்.
சங்கிலி, உடனே குஞ்சுக்குளம் பொறுப்பபளருடன் வோக்கிடோக்கியில் தொடர்பு கொண்டு ஐயாவையும் மற்றயவரையும் விடுவிக்கும்படியும் இது உமாமகேஸ்வரனின் உத்தரவு என்றும் தெரிவித்தான். சங்கிலி சொன்னதால் குஞ்சுக்குளம் பொறுப்பாளர் உடனேயே அவர்கள் இருவரையும் அழைத்து அவர்களது உடமைகளை அவர்களிடம் கொடுத்து பிரச்சினை இல்லை நீங்கள் போகலாம், உங்களை விடுவிக்கும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என்று சொன்னார்;.

அவர்கள் மிகுந்த சந்தோசத்துடன் அங்கிருந்தவர்களுக்குச் சொல்லிவிட்டு குஞ்சுக்குளம் சந்திக்கு பஸ் ஏறுவதற்கு புறப்பட்டனர். அவர்கள் சென்ற ஒரு 5 நிமிடத்தில் அங்கு வந்த மாணிக்கதாசன் முகாம் பொறுப்பாளரிடம் எங்கே அவர்கள் என்று வினவினான்.
இப்பத்தான் அவர்களைவிட்டனாங்கள். பெரியவர் (உமா) விடச்சொல்லியிட்டார் என்றான் அவன். மாணிக்கதாசனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்தது. ஆரட்டைச் சொல்லி அனுப்பினவர் என்று திரும்பக் கேட்டான். சங்கிலியிடம் என்று பொறுப்பாளர் சொல்ல , அவன் அங்கு நிற்கவில்லை. தான் வந்த ஜீப்பை எடுத்துக் கொண்டு குஞ்சுக்குளச் சந்தியை நோக்கி விரைந்தான்.
குஞ்சுக்குளம் சந்தியில் ஒரு 200 மீற்றர் தூரத்தில் ஐயாவும் அவரது சகாவும் மகிழ்ச்சியோடு சிரித்துக்கதைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். மாணிக்கதாசன் தனது ஜீப் சாரதிக்கு வேகத்தை குறைக்கும்படி சொல்லிவிட்டு தனது ரி 56 ரக துப்பாக்கியை ஓட்டோவில் விட்டு அவர்களைக் குறி வைத்து விசையை இழுத்தான்.
ஜீப் சத்தத்தோடு வெடிச்சத்தமும் கேட்டு அவர்கள் திடுக்கிட்டு திரும்பமுன் சரமாரியாகச் சன்னங்கள் அவர்களது உடலை த்துளைத்தன. இருவரும் சுருண்டு விழுந்தனா

காந்திதேசத்தின் மறுபக்கம்-09


09வில்பத்துக் காட்டுக்குள்ளிருந்து கடும் பசியோட திரும்பி வந்த ஒரு குழு செல்வரத்தினத்தையும், முருகதாசையும் இழுத்துவர இன்னொரு குழு
அங்கிருந்த சங்கக்கடையை பதம் பார்த்தது. பிஸ்கட் பெட்டிகள், சோடா கேஸ்கள், அரிசிமூட்டைகள் என்று எல்லாவற்றையும் அந்தக் குழுமுகாமுக்கு தூக்கிச் சென்றது.
இவற்றைவிட இன்னொரு குழு காட்டுக்குள் சென்று மான் ஒன்றை வேட்டையாடி வந்தது. மதியம் 1.00மணிக்கு மான் கறியுடன் சாப்பாடு முடிந்ததும் செல்வரத்தினத்தின் மீதும், முருகதாஸ் மீதும் விசாரணை ஆரம்பமாகியது.
முள்ளிக்குள முகாமின் வடகிழக்கு மூலையில் இருந்த பெரிய வாகை மரத்தின் கீழேயே விசாரணை நடந்தது. செல்வரத்தினமும், முருகதாசும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்றும், புளொட்டினது எதிரிகள் அல்ல என்றும் 20 பேருக்கு சாப்பாடு சமைத்து எடுத்துவர முடியாத காரியம் என்றும் அப்படி பெருமளவுக்கு சாப்பாடு சமைப்பதைக் கண்டாலே இந்திய இராணுவம் தங்களை கைது செய்துவிடும் என்ற பயத்திலேயே தாம் சாப்பாடு கொண்டு வர மறுத்ததாக தங்கள் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.
விசாரித்தவர்களுக்கு அவர்கள் சொன்னது சரி என்றுபட்டது. ஆனால் தங்களுடைய ஆட்களுக்கு முருகதாஸ் அடித்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதற்காக அவனுக்கு தண்டனை கொடுக்காவிட்டால் பின்பு மற்றவர்களுக்கு இது ஒரு முன்மாதிரியாய் போய்விடும் என்று அவர்கள் நினைத்தார்கள். செல்வரத்தினத்தை போகலாம் என்று அனுப்பிவிட்டு முருகதாசை நிறுத்தி வைத்து "எதற்காக நீ எங்கட ஆட்களுக்கு அடிச்சனி" என்று அவர்கள் கேட்டார்கள்.
"ஐயோ, அண்ணாமாரே நான் சத்தியமாய் அவைக்கு அடிக்கல்ல அவை தான் எனக்கு அடிச்சவை. அடி தாங்க ஏலாமல் நான் அதை தட்டிவிட்டனான்" என்று மன்றாடும் பாணியில் அவர் அவர்களுக்கு பதில் சொன்னான்.
“டே, பொய் சொல்லாத உண்மையில் நீ அடிச்சனிதானே" என்று அவர்கள் மீண்டும் மிரட்டிக் கேட்க முருகதாசுக்கு அழுகை வந்துவிட்டது. ஐயோ, சத்தியமாய் நான் அடிக்கல்ல என்று அழுது கொண்டு சொன்னான். விசாரித்தவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
3 பேர் அந்த விசாரணைக்குழுவில் இருந்தார்கள். அதில் சங்கிலியினது முன்னால் பாதுகாப்புப் படையிலிருந்த சுட்டி தன்னுடைய ரி 56 ரக ரைபிளை லோட் பண்ணி சேப்ரி லொக்கில் (வெடிப்பதற்கான விசையைத் தடுக்கும் சாதனம்) விட்டுவிட்டு செம்மறி நாயே என்னடா எங்களுக்கு காது குத்தவா பார்க்கிறாய் உண்மையைச் சொல்லு நீ எல்.ரி.ரி.யினுடைய ஆள் தானே. சொல்லேல்லேயோ சுட்டுவிடுவன் என்று பல்லை நறுமி கண்களை உருட்டிக் கொண்டு டிகரில் (விசையில்) கையை வைத்துவிட்டான். அடுத்த கணம் டுமில் என்ற சத்தத்துடன் நெருப்பைக் கக்கிக் கொண்டு குண்டு சீறிப்பாய்ந்தது.
"ஐயோ, அம்மா" என்று அலறியவாறு முருகதாஸ் நிலத்தில் விழுந்தான் உயிர் போய்விட்டது. நெஞ்சுப்பகுதியில் இருதயப் பகுதியை பிய்த்துக்கொண்டு குண்டு வெளியேறி சென்றுவிட்டது.
ஒரு 100 மீற்றர் தூரம் சென்றிருக்காத செல்வரத்தினம் "ஐயோ, என்ர தம்பி ராசா" என்று அலறிக்கொண்டு திரும்பி ஓடி வந்தார். சுட்டி திகைத்துப் போய்விட்டான். 'சேவ்ரி லொக் போட்டுத்தானே இருந்தேன், எப்படி வெடித்தது' என்று அவன் தனது துப்பாக்கியைத் தூக்கிப் பார்த்தான். விசாரணைக்குழுவில் இருந்த மற்ற இருவரும் பேய் அறைந்த மாதிரி ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்துப் போய்விட்டார்கள்.
முகாமில் மற்றப் பகுதியில் தங்கியிருந்த சங்கிலி உட்பட மற்றவர்கள் தங்களுடைய துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு பதற்றத்துடன் அங்கே ஓடிவந்தார்கள். அதற்குள விசயம் அறிந்த மற்றவர்களும் அங்கு வந்து கூடிவிட்டார்கள். முருகதாசின் இளம் மனைவி கணவனின் உயிரற்ற உடல் மீது விழுந்து கதறிய கதறல் பார்க்க பரிதாபமாக இருந்தது. புளொட் குழுவில் வாய் திறந்து யாரும் எதுவும் பேசவில்லை. அவர்களது மௌனம் ஊரவர்களுக்கு மேலும் பயத்தைத் தந்தது.

முகாம் பொறுப்பாளரும் சங்கிலியும் சுட்டியை விசாரித்தனர். அவன் தான் மிரட்டுவதற்காகத்தான் துப்பாக்கியை காட்டியதாகவும், அது வெடிக்கும் என்று நினைக்கவில்லை என்றும் தனது துப்பாக்கியின் சேப்டி லொக் வேலை செய்யவில்லை என்றும் சொன்னான்.
சங்கிலி அவனது துப்பாக்கியை வாங்கிப் பரிசோதித்து பார்த்த போது அதன் சேப்டி லொக் உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. உன்ர துவக்கின்ரை சேப்டிலொக் உனக்குத் தெரியாமல் எப்படி உடையும் என்று சங்கிலி சுட்டியைக் கேட்க, அவன் அதுதான் எனக்கும் தெரியவில்லை என்றும் , தான் சாப்பிடப் போகும்போது தனது துப்பாக்கியை ஆயுத தளபாடப் பகுதியில் வைத்துவிட்டுச் நென்றதாகவும் , அங்கு யாரோ வேண்டுமென்று இதை உடைத்திரக்க வேண்டும் என்றும் , இதில் ஏதோ சதி இருக்கின்றது என்றும் சொன்னான். சாப்பாட்டு நேரத்தில் ஆயுதத்தளபாடக் பகுதிக்கு போனது யார் என்று இரகசியமாக விசாரித்துப் பார்த்தும் யாரையும் கண்டு பிடிக்க முடியவில்லை. சங்கிலி இது மாணிக்கதாசனின் காரியமாகத்தான் இருக்க வேண்டும் என்றும் , அவன்தான் தனது ஆட்களைக் கொண்டு இரகசியமாக இதை செய்திருக்கலாம் என்றும் சந்தேகப்பட்டான்.
இந்த சந்தேகத்தை உறுதி செய்ய மாணிக்கதாசனின் ஆட்கள் யார் யார் முள்ளிக்குள முகாமில இருக்கிறார்கள் என்று சங்கிலியும் அந்த முகாம் பொறுப்பாளரும் சேர்ந்து கண்டுபிடிக்க முயன்றனர். வசந்தன் குழு தாங்கள் எதுவும் தெரியாத நல்ல பிள்ளைகள் போல நடந்து கொண்டு மாணிக்கதாசனின் ஆட்களை தேடும் சங்கிலியின் முயற்சிக்கு ஒத்துழைத்தனர்.
முள்ளிக்குளம் இப்படி அமளிதுமளிப்பட்டுக் கொண்டிருக்கும் போது முள்ளிக்குளத்துக்குக் கிழக்கே இருந்த புளொட்டின் மற்றொரு முகாமான குஞ்சுக்குளத்தில் இன்னொரு சம்பவம் நடந்தது.
மன்னாரிலிருந்து மதவாச்சி செல்லும் சாலையிலுள்ள குஞ்சுக்குளம் சந்தியில் புளொட்டினது சோதனைச்சாவடி இருந்தது. அந்த சாவடி தான் குஞ்சுக்குளம் முள்ளிக்குளம் முகாம்களுக்கான உணவு விநியோகச் சாவடி என்றும் சொல்லலாம். மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்களும் (லொறி முதல் கார் வரை) கொழும்பிலிருந்து மன்னாரை நோக்கி வரும் வாகனங்களும் இந்தச் சோதனைச்சாவடியில் சோதனை செய்யப்படும். இந்தச் சோதனையின் போது சோதனைக் குழு கேட்கும் பணத்தை மட்டுமல்ல அவர்கள் விரும்பிய சாமான்களையும் கொடுத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.
கருவாட்டு சிற்பங்கள், அரிசி மூட்டைகள், கொக்கோ கோலா, பன்ட்ரா கேசுகள், ரின்பால் மற்றும் உலர் பால்மா பெட்டிகள், உடுப்புகள், அவர்கள் எதையெல்லாம் விரும்புகின்றார்களோ அதை எல்லாம் பயணக்காரர்கள் கொடுத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். இவையெல்லாம் பயணத்திற்காக அவர்கள் அறவிடும் வரிப்பணத்தில் அடக்கமில்லை. என்ன தம்பியவ இப்படி அநியாயம் செய்யிறியள் என்று கேட்கக்கூட வேண்டாம் தங்களுக்குள் முணுமுணுத்தாலே போதும் அடுத்த கணம் முணுமுணுத்தவர்கள் புலிகளின் ஆள் என்று முத்திரை குத்தப்பட்டு அடித்து உதைத்து இழுத்துச் செல்லப்படுவதோடு அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு விடும்.

அதுபோல் அவ்வழியால் வரும் பஸ்கள், மினி பஸ்கள், கார்கள், வான்கள் எல்லாம். நிறுத்தி வைக்கப்பட்டு அவற்றில் புலிகளின் ஆதரவாளர்கள் (அதாவது புளொட்டிற்கு எதிரானவர்கள்) வருகின்றார்களா என்று தீவிரமாக கண்காணிக்கப்படும். இந்தக் கண்காணிப்பாளர்கள் வரும் போது யாராவது பயத்தில் முளிசிவிட்டால் போதும் உடனே அவர்கள் புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவார்கள். அவர்களது பயணம் கொழும்பை நோக்கியோ மதவாச்சியை நோக்கியோ இருக்காது. புளொட்டின் பிரதான முகாமாக செட்டிகுளத்தை நோக்கித் தான் இருக்கும்.
வவுனியாவிலும் சரி குஞ்சுக்குளத்திலும் சரி வரிவசூல் மற்றும் சோதனைச் சாவடிகளை நிர்ணயிக்கும் பொறுப்புக்களை வன்னிமாவட்ட இராணுவ பொறுப்பாளரான மாணிக்கதாசன் தான் நேரடியாக கையாண்டு வந்தான். சோதனைச் சாவடிகளில் கைது செய்யப்படுபவர்கள் குஞ்சுக்குள முகாமிலோ, முள்ளிக்குள முகாமிலோ வைக்கப்படுவதில்லை.
மாணிக்கதாசனின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுள முகாமிற்கே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அந்த முகாமில விசாரணைக் கைதிகளை விசாரிப்பதற்கென்றே ஒரு தனியான வதைகூடம் இருந்தது. மாணிக்கதாசனுக்கு புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுகின்றவர்களைச் சீண்டி வதைத்து விளையாடுவதில் ஒரு தனி சந்தோசம். இது அவனுக்குள்ள ஒரு மனநோய் என்று கூடச் சொல்லலாம்.
புலி எதிர்ப்பு சாகசம் என்ற பெயரில் அவன்; செய்த இந்த மனிதவதைகளை நேரடியாகவும், பகிரங்கமாகவும் எதிர்த்தவர்களில் குஞ்சுக்குளம் முகாம் பொறுப்பாளராக இருந்த பாருக் என்ற கணேசலிங்கமும் ஒருவர். இவர் இயக்கத்தில் மாணிக்கதாசனுக்கு சமகாலத்தவர், போராளிகளில் நீண்டகாலம் சிறையில் இருந்தவரும் கூட. ஆனாலும் ஆனைக்கோட்டை காலத்திற்கு முன் இவர் ஈரோஸ் உறுப்பினராக இருந்தவர். அதையே இவருக்கான குறைவாக மாணிக்கதாசன் சொல்லிவந்தான்.
இந்தப் பின்னணியில் ஈரோஸ் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரான ஐயா என்பவரையும் இன்னொருவரையும் குஞ்சுக்குள சோதனை சாவடிக்குழு புலிகள் என்று சொல்லி பிடித்து வந்தது. அவர்களை முன்பே அறிந்திருந்த பாருக் அவர்கள் புலிகளல்ல ஈரோhஸ்காரர்கள் அவர்களை செட்டிகுளம் கொண்டு போக வேண்டாம். குஞ்சுக்குளத்தில் வைத்தே நான் விசாரிக்கின்றேன் என்று அழைத்துச் சென்றுவிட்டார்.
இது மாணிக்கதாசனை கோபமடையச் செய்துவிட்டது. அவன்; தனது அதிகாரத்தை பயன்படுத்திக் கேட்டும் பாருக் அவர்களை அவரிடம் ஒப்படைக்கவில்லை. உமாமகேஸ்வரன் சொன்னால் மட்டுமே அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று பாருக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
மாலைதீவு தாக்குதலுக்கான தயாரிப்பு நேரத்தில் இது நடந்ததால் உமாமகேஸ்வரன் இதை கவனத்தில் எடுக்கவில்லை. பாருக் மாலைதீவில் சென்று மாபட்டிக் கொண்டதும் மாணிக்கதாசனுக்கு வசதியாகப் போய்விட்டது. ஆனால் உடனடியாக அவன் காரியத்தில் இறங்கவில்லை.
தற்போது தனக்கெதிராக குற்றம் சுமத்துபவர்களுக்கு தன்னுடைய சக்தி என்ன என்பதை நிருபிக்க வேண்டிய தேவை அவனுக்கு ஏற்பட்டது. அதனால் குஞ்சுக்குளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஐயாவையும் மற்றவரையும் கொலை செய்ய அவன்; அங்கு புறப்பட்டுச் சென்றான்

காந்திதேசத்தின் மறுபக்கம்-08

08
மாலைதீவு விவகாரம் தோல்வியில் முடிவடைந்த உடனேயே றோ உமாமகேங்வரனை கொல்லுமாறு ENDLF க்கு சமிக்ஞை காட்டியது. ENDLF இன் நம்பிக்கை நட்சத்திரமான வசந்தன் முள்ளிக்குளத்தில் முடக்கப்பட்டிருந்ததும், சங்கிலி அங்கு உடன் இருந்ததும் அதற்குப் பாதகமான விடயங்களாக இருந்தன.
சங்கிலி பொறுப்பு எதுவும் இல்லால் சாதாரனமான உறுப்பினராக இருந்தாலும் ஒரு பொறுப்பாளனுக்கு இருக்ககூடிய அதிகாரங்களைவிட அதிகளவு அதிகாரங்களை கொண்டவராகவே இருப்பதாக மற்றவர்கள் நம்பினார்கள்.
ஒரு பொறுப்பாளருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைவிட அதிகளவு மரியாதையை அவர்கள் அவருக்கு கொடுத்தனர். நீண்ட நாட்கள் வேலை எதுவும் இன்றி அவர் அங்கு தங்கியிருந்தது அங்கிருந்தவர்களக்கு பயத்தையும் சந்தேகங்களையும் உருவாக்கியது.

ஏற்கனவே வசந்தன், சங்கிலி மலையத்தில் கொலைப்படை ஒன்றை உருவாக்கி வைத்திருக்கின்றான்; என்று பிரச்சாரம் செய்தது வேறு அவர்களுக்கு கிலியை உண்டாக்கியது. அதிலும் சங்கிலி தனது முன்னைய பாணியிலல்லாதது கீழ் மட்ட உறுப்பினர்களுடனும் சகஜமாக நெருங்கிப் பழகியது பலருக்கு வியப்பாக இருந்தாலும் அதுவே இனம்புரியாத ஒரு அச்சத்தையும் கொடுத்தது.
வசந்தனைப் பொறுத்தவரை தான் எதற்காக முள்ளிக்குளத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றேன் என்பதை அறியவில்லை. தான் நடாத்தி முடிக்க திட்டமிட்டிருக்கின்ற விடயமும் உமாமகேஸ்வரனுக்குத் தெரியும் என்பதும் அவருக்குத் தெரியாது. ஏதோ அவன் பொறுப்பாக இருந்து பிரச்சாரப் பிரிவு கணக்குகளில் பிரச்சினை என்பதாலேயே அங்கு அனுப்பப்படுவதாக உமாமகேஸ்வரன் அவனுக்குச் சொல்லியிருந்தார்.
எனவே வசந்தன் சங்கிலிக்கு சந்தேகம் வராத விதத்தில் நடந்து கொண்டு அவனது நம்பிக்கையைப் பெறும் அதே நேரத்தில் தனக்கு விசுவாசமானவர்களை வைத்து மிக இரகசியமாக சங்கிலிக்கெதிரான குழு ஒன்றையும் தூண்டிவிட முயற்சி செய்தான்;.
சங்கிலியை அங்கிருந்து எடுப்பிக்கும் நிர்ப்பந்தத்தை உமாமகேஸ்வரனுக்கு கொடுக்கும் அதே நேரத்தில் முகாம்களில் குழப்பத்தை உண்டுபண்ணி அவர் முள்ளிக்குளத்திற்கு வரவேண்டிய தேவையை உருவாக்கி அங்கு வைத்து அவரை கொலை செய்வது என்பது வசந்தனின் திட்டம். தனது இந்தத் திட்டத்தை செயற்படுத்த அவர் தன்னுடன் ஆறு பேரை கூட்டுச் சேர்த்துக் கொண்டதாக நம்பப்படுகின்றது.
இந்த ஆறு பேரும் பின்பு நடந்த உமாமகேஸ்வரன் கொலையில் சம்மந்தப்பட்டவர்களல்ல. பின்பு உமாமகேஸ்வரனைக் கொலை செய்தவர்கள் அன்று வசந்தனின் நடவடிக்கைக்கு இடைஞ்சலாக இருந்து உமாமகேஸ்வரனைப் பாதுகாத்தவர்கள்.
ஆனால் அன்று வசந்தனோடு சேர்ந்து உமாவைக் கொலை செய்ய முயன்றவர்கள் இன்று உமாமகேஸ்வரனை கொலை செய்தவர்களை துரோகிகளாக்கி தங்களை உமாமகேஸ்வரனது விசுவாசிகள் என்றும் அவரது கொள்கை வழி நடப்பவர்கள் என்றும் சொல்லி கதையையே தலைகீழாக மாற்றிவிட்டார்கள்..

வசந்தன் குழுவினர் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாக்குவதற்கான காய் நகர்த்தலின் முதல் கட்டமாக இயக்கத்தின் முக்கிய இராணுவ பொறுப்பாளர்களில் ஒருவரான மாணிக்கதாசனை குறிவைத்தார்கள்.
இந்த மாணிக்கதாசன் ஒரு காலத்தில் யாழ் ஆஸ்பத்திரி சுவர்களில் வீர வசனங்கள் எழுதி புகழ் பெற்றவன்;. ஆனைக்கோட்டை கிளிநொச்சித் தாக்குதல் காலத்திலிருந்தே இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்தவன்;. எப்போதும் சாகசங்கள் நிகழ்த்தி காட்ட வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவன்;. லெபனான் பயிற்சிக் காலத்திலேயே இஸ்ரேலிய இராணுவத்தை அடித்து சாதனை நிகழ்த்திய தன்னை மாலைதீவு தாக்குதலுக்கு பொறுப்புத்தந்து அனுப்பாததையிட்டு அவன்; மிகவும்ம னஸ்தாபம் கொண்டிருந்தான்;.
அனுபவம் இல்லாதவர்களை அனுப்பியதால் தான் மாலைதீவுத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது என்று அவர் வெளிப்படையாகவே உமாமகேஸ்வரன் மீது விமர்சனம் வைக்கத் தொடங்கியிருந்தான்;.
ஏற்கனவே சங்கிலிக்கு அவனுக்கும் ஒத்துவருவதில்லை. தன்னுடைய நிர்வாகப் பகுதிக்குள் (மாணிக்கதாசனே PLOT வன்னி மாவட்டப போறுப்பாளர்) சங்கிலியை தங்கவைத்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. இது தன்னை அவமானப்படுத்த மேற்கொண்ட முயற்சி என்று அவர் மனம் புழுங்கிக் கொண்டிருந்தான்;.
ஆனால் உமாமகேஸ்வரன் மாணிக்கதாசனை மாலைதீவுக்கு அனுப்பாததும் , வன்னி மாவட்டத்திற்கு அப்பால் நடக்கும் இயக்க நடவடிக்கைகளில் பங்குபற்ற அழைக்காததற்கும் வேறு காரணம் இருந்தது.
மாணிக்கதாசன் சிறீலங்கா இராணுவத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவன்;. அராலித்துறையில் கொலையுண்டு போன ஜெனரல் கொப்பேகடுவ உட்பட சிறிலங்கா இராணுவத்தில் உள்ள பல்வேறு முக்கிய அதிகாரிகள் அவனுக்கு நண்பர்களாக இருந்தார்கள். *
உமாமகேஸ்வரன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்தவன்; அவன்தான்.
அவ்வாறே 1984இல் உமாமகேஸ்வரன் அத்துலத்முதலியுடன் நட்புக் கொள்வதற்கும் பாலம் அமைத்து கொடுத்தவனும்; அவன் தான். அவனது தாய் ஒரு சிங்களவராக இருந்ததும்; அவனது தாய்வழி உறவினர்கள் பலர் சிறிலங்கா இராணுவத்தில் அதிகாரிகள் தரத்தில் இருந்ததுமே அவனுக்கு இதெல்லாம் சாத்தியமானதாக ஒரு முறை உமாமகேஸ்வரனை தெரிவித்திருந்தார்.
எங்கே அவன மூலம் சிறிலங்கா இராணுவத்திற்கும் அரசுக்கும் தகவல் தகவல் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே மாலைதீவு மற்றும் JVP நடவடிக்கைகளை உமா அவனுக்குத் தெரிவிக்கவில்லை.
மாணிக்கதாசன் மாலைதீவு விரக்தியால் பேசித்திரிந்த பேச்சுக்களை அவதானித்த வசந்தன் குழுவினர் இந்த முரண்பாட்டைப் பயன்படுத்தத் தீர்மானித்தனர். வன்னி மாவட்டத்தில் வரி வசூல் மூலம் சேகரித்த 60 லட்சம் ரூபாவை சுருட்டிக் கொண்டு மாணிக்கதாசன் கனடாவுக்குச் செல்லப் போவதாக முதலில் அவர்கள் ஒரு புரளியைக் கிளப்பிவிட்டார்கள்.

அடுத்து அவன் இயக்க உறுப்பினர்களுடன் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் வெள்ளைநிற பொடியளை அவன் இரவு தன் படுக்கைக்கு அழைத்துச் செல்கின்றார் எனவும் கதை பரப்பப்பட்டது. கேட்பவர்கள் நம்பும்படியாக சுவாரசியமாகப் பரவிய இந்தக் கதைகளைக் கேட்ட கீழ் மட்ட உறுப்பினர்கள் பலரும் அவனைக் கைது செய்ய வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று பலமாகக் குரலெழுப்பினார்கள் .
மாணிக்கதாசனது சாகசங்களால் கவரப்பட்டு எப்போதும் அவருடனேயே சுற்றிக் கொண்டிருக்கும் அவனது அபிமானிகள் கூட இதனால் அவனுடன் நெருங்கப் பழகப் பயந்தார்கள். அவனுடன் நெருங்கிப்பழகினால் தங்களையும் மற்றவர்கள் வேறு விதமாக எண்ணிவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் றோவின் ஆலோசனையின் பேரில் சங்கிலியைக் கைது செய்து வசந்தன் குழுவின் நடவடிக்கையை இலகுவாக்குவதற்காக இந்திய அமைதிப்படை மீண்டும் ஒரு தடைவ முள்ளிக்குளம் பகுதியை முற்றுகையிட்டது.
மாலைதீவு தாக்குதல் நடப்பதற்கு முன்பு புலிகள் அப்பகுதிக்கு வராமல் தடுப்பதற்காகவும் PLOT யையும் தாம் கண்காணிக்கின்றோம் என்று பாசாங்கு செய்யவும் இந்திய அமைதிப்படை அந்தப்பகுதிக்கு வந்தது. அப்போது தேடுதல் எதுவும் நடத்தாமலே பெயருக்கு அப்பகுதியை சுற்றி வந்துவிட்டு புலிகளின் வருகையை தடுப்பதற்காக முள்ளிக்குளத்திற்கு வரக்கூடிய பிரதான பாதைகளில் மட்டும் காவல் கண்காணிப்பு நிலைகளை அமைத்திருந்தது.
மாலைதீவுக்குழு புறப்பட்ட அன்றைய தினமே அக்காவல் நிலைகளும் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால் இந்தத்தடைவ அதிகாலை 6 மணிக்கே அப்பகுதிக்கு வந்த இந்திய இராணுவம் ஒவ்வொரு பகுதியாக சுற்றிவளைத்து வீடு வீடாக சல்லடை போட்டுத் தேடியது.
தகவல் அறிந்த புளொட் குழு தங்களது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த வில்பத்துக் காட்டுக்குப் பின்வாங்கி ஓடியது. அப்படி ஓடும் போது ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது.
முள்ளிக்குளத்திலிருந்து வில்பத்துக் காட்டுக்குள் நுழைய வேண்டுமானால் இடுப்பளவு தண்ணீருள்ள ஒரு ஆற்றைக்கடக்க வேண்டும். அந்த ஆற்றில் சகதி அதிகம். அதனால் கொஞ்சம் கஸ்டப்பட்டுத்தான் கடக்க வேண்டும். 92 பேர் அடங்கிய இவர்களது குழு வரிசையாக ஆற்றைக் கடந்து கொண்டிருந்த போது முன் வரிசையில் சென்றவர்கள் அக்கரையில் கால்வைத்து ஒரு பத்துப் பதினைந்து அடி எடுத்து வைக்க, ஒரு பெரிய காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றை நோக்கி வந்தது. இவர்கள் பயத்தில் ஆனையடா, ஆனையடா எனக் கத்திக் கொண்டு திரும்பி ஓடிவர பின்னால் பின்னால் வந்து கொண்டிருந்தவர்களுக்கு அது அது ஆமியடா ஆமியடா என்று கேட்டது. காட்டுப்பக்கமும் வந்து ஆமி சுற்றி வளைத்துவிட்டானாக்கும் என்று எண்ணிக் கொண்டு வந்த வழிக்கு திரும்பிச் சிதறி ஓட பலர் சேற்றுக்குள் விழுந்து எழும்பினார்கள். இறுதியில் உண்மை தெரிந்து ஒரு வழியாக ஆற்றைக் கடந்து வில்பத்து காட்டுக்குள் சென்று தங்கினார்கள்.
நேரம் மாலை 5 மணியைத் தாண்டியும் காலை வந்த இந்திய இராணுவம் திரும்பவே இல்லை. காட்டிற்குள் இருந்தவர்களை பசி வாட்டி எடுத்தது. இருவர்; காட்டு வழியாக கடற்கரையோரமாக இருந்த தென்னந்தோப்பில் இளநீர் பறித்து வரலாம் என்று சென்றனர். அப்போது செல்வரத்தினம் என்ற நடுத்தர வயதுக்காரரும் முருகதாஸ் என்ற அவரது மருமகனும் இந்திய இராணுவத்திடம் அனுமதி பெற்றுக் கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க வந்தனர் அவர்களிடம் இந்திய இராணுவம் பற்றி விசாரித்த புளொட்காரர்கள் தங்களுக்கு சாப்பாடு சமைத்து எடுத்த வரக் கேட்டனர்.

அதற்குத் தாங்கள் கிராமத்துக்குள் திரும்பிப் போனால் இந்திய ஆமி தங்களைப் பிடித்து விடுவார்கள் என்று சொல்லி அவர்கள் மறுத்து
விட்டார்கள்.
புளொட்காரர்களுக்கு வந்ததே கோபம் . அருகிலிருந்த பெரியதொரு பூவரசம்கட்டையை எடுத்து இருவரையும் அடிஅடியென்று அடித்துவிட்டார்கள்.

இளைஞரான முருகதாஸ் இவர்கள் துவக்கு வைத்துக் கொண்டு ஏன் தடியால் அடிக்க வேண்டும் என்று யோசித்துப் பார்த்தான். துவக்கு வெடிச்சத்தம் கேட்டால் இந்தியன் ஆமிக்கு இவர்கள் இங்கே இருப்பது தெரிந்தவிடும். அதனால் வெடிவைக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் எதிர்த்துத் தாக்க ஆரம்பித்தான்.

அதற்குள் அங்கே வந்த வேறு மீனவர்கள் நிலைமையின் பாதகத் தன்மையை புரிந்து கொண்டு ஆமி ஆமி என்று கத்தினார்கள். புளொட்காரர்கள் உண்மையில் இந்தியன் ஆமி வருவதான நினைத்துக் கொண்டு திரும்பி ஓடிவிட்டார்கள்.

24 மணிநேரமும் முள்ளிக்குளத்தில் தங்கியிருந்து தேடுதல் நடத்திய இந்திய இராணுவத்தினர் சங்கிலியை மட்டுமல்ல எந்த ஒரு புளொட் உறுப்பினரைக்கூட பிடிக்கவில்லை. அங்கு தொடர்ந்திருந்தால் புளொட் எதிர்த்துத் தாக்கக் கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. புலிகளும் அந்த இடத்திற்கு வந்து தாக்கக்கூடிய சாத்தியமும் இருந்தது. எனவே, புலிகள், புளொட் என்று இரண்டு பக்கத்தாலும் ஆபத்து வரக்கூடிய ஒரு பகுதியில் தாங்கள் தங்கியிருப்பது பாதுகாப்பற்றது எனக்கருதி மறுநாள் காலை புளொட்டிற்கு உதவி செய்த ஒரு சில அப்பாவிகளை பிடித்துக்கொண்டு அவர்கள் திரும்பி விட்டார்கள்.
கடும் பசியோடு காட்டிற்குள முடங்கிக்கிடந்த புளொட் குழு முள்ளிக்குளக்காரர்கள் யாரும் தங்களுக்கு உதவி செய்யவில்லையே, சாப்பாடு கொண்டுவரவில்லையே என்ற ஆத்திரத்தோடு உள்ளுக்குள் வந்தது. வந்து முதல் வேலையாக செல்வரத்தினத்தையும் அவரது மருமகன் முருகதாசையும் நீங்கள் புலிகளின் ஆட்கள் உங்களை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி முகாமுக்குள் இழுத்துச் சென்றனர்.
முருகதாசுக்கு திருமணமாகி 6 மாதம் தான் ஆகியிருந்தது. அவரது மனைவி புளொட்காரரின் காலில் விழுந்து “என்ர மனுசனை ஒன்றும் செய்துபோடாதேங்கோ, விட்டிடுங்கோ உங்களைக் கும்புடுறன்” என்றுக் கெஞ்சிக் கேட்க காலால் அவளை உதைத்து தள்ளிவிட்டுச் சென்றனர்.
விசாரணை என்றவுடன் வசந்தன் குழு சுறுசுறுப்படைந்தது. முகாமில் விசாரணை நடத்துவது யார் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களில் ஒருவர் இந்தியாவின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த சங்கிலியின் பாதுகாப்புப்டையில் இருந்தவர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விசாரிப்பவர்களைக் கொண்டே விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களை கொலை செய்து, சங்கிலிதான் கொலையின் சூத்திரதாரி என்று மற்றவர்கள் நம்பும்படியாக செய்யத் திட்டமிட்டார்கள்

காந்தி தேசத்தின் மறுபக்கம்-07

07
20 நிமிடங்கள் அந்த விமானம் அரபுக்கடலின் மீது எரிபொருளை தீர்ப்பதற்காக பறந்து கொண்டிருந்த நேரத்தில் அதிலுள்ள கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் விமானம் பத்திரமாக கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பாகிஸ்தானிய குடிவரவு பகுதியிலிருந்து எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ராபினுடன் வெளியேறிய உமாமகேஸ்வரன் கராச்சியின் புறநகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அன்று இரவு தங்கினார். மறு நாள் காலை 9.00 மணிக்கு வாடகை கார் ஒன்றை பிடித்துக்கொண்டு கராச்சி நகரத்தின் மையப்பகுதியிலருந்த அஹ்ரம் நகருக்குச் சென்றார். அங்கிருந்த பங்களாவிலேயே உமாவினது பாலஸ்தீன நண்பர் தங்கியிருந்தார்.

அவருடன் தொலைபேசியிலும், கடிதம் மூலமும் அடிக்கடி தொடர்பு கொண்டாலும் நேரில் சந்தித்து 5 வருடங்களாகிவிட்டது. இவர்கள் சென்று அழைப்பு மணியை அழுத்தி வந்தவிடயத்தைச் சொல்ல வந்து பார்த்த கமால்டினுக்கு உமாமகேஸ்வரனை உடனே அடையாளம் தெரியவில்லை. யார் இது எனது பெயரை விசாரித்து வந்திருக்கும் புது மனிதன் என்று அவர் திகைத்துப் போய்விட்டார்.
அவரின் திகைப்பிற்கான காரணத்தை புரிந்து கொண்ட உமாமகேஸ்வரன் தன்னையும், ராபினையும் அறிமுகப்படுத்தி தான் இப்போது உமா மகேஸ்வரனல்ல முஹமட் இப்ராஹிம் என்றார். ஹமால்டினுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
மிஸ்டர் உமா வேசப் பொருத்தம் பிரமாதமாக இருக்கின்றது. அசல் முஸ்லிமைப் போலவே நீங்கள் இருக்கின்றீர்கள். என்று கூறி அவரையும் ராபினையும் உள் அழைத்துச் சென்றார்.

கொஞ்ச நேரம் பரஸ்பர நலன் விசாரிப்பின் பின் காலை உணவு மேசையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. முதலில் மாலைதீவு எதிர்காலத்தைப் பற்றி ஹமால்டின் விசாரித்தார். றோவின் சொற்படி உமாமகேஸ்வரன் நடந்து கொண்டதற்காக அவரை கண்டித்தார்.
உண்மையிலேயே நீங்கள் மிகப்பெரிய தவறு செய்து விட்டீர்கள், உமா மாலைதீவில் தாக்குதல் நடத்தியது அதுவும் இந்தியாவின் சொல்லைக்கேட்டு தாக்குதல் நடத்தியது படு முட்டாள்தனமானது என்று அவர் குறைபட்டுக் கொண்டார்.
உமாமகேஸ்வரன் பாடு சங்கடமாகிவிட்டது. தான் செய்ததை அவரால் நியாயப்படுத்த முடியவில்லை.
உண்மையிலேயே நான் தவறு செய்துவிட்டேன். இந்தியாவைப்பற்றி தெரிந்து வைத்திருந்தும் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விட்டேன் என்று அவர் ஹமால்டினுக்குச் சொன்னார்.

”மிஸ்டர் உமா இந்தியர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள், உலகத்திலேயே அதிகளவிற்கு அகிம்சையைப்பற்றி பேசுபவர்கள் அவர்கள்தான். ஆனால் இது அவர்கள் தாங்கள் நடத்துகின்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மூடி மறைப்பதற்கு போடுகின்ற வேசம் என்று உலகத்திற்குத் தெரியாது.” என்று கூறிவிட்டு சற்று மௌனமாக இருந்;த ஹமால்டின் பின்னர் “மாலைதீவு விவகாரம் நீங்கள் எதிர்பாhத்தபடி வெற்றியளித்திருந்தால் இந்தியா உங்களைவிட்டுவைத்திருக்கும் என்று நினைக்கின்றீர்களா? நிச்சயமாக உங்களை கொலை செய்திருப்பார்கள். அவர்களுக்குத் தேவை மாலைதீவை தங்களது நிழலுக்குக் கீழே கொண்டு வருவதுதான். உங்களை தாக்குதலுக்கு அனுப்பிய போதே எதிர்த்தாக்குதலுக்கும் அவர்கள் திட்டம் தீட்டிவிட்டார்கள்.” ஏன்றாh;
உமாமகேஸ்வரன் அவர் சொன்னதை மௌனமாக கேட்டுக் கொய்டிருந்தார்
“வெற்றியையும் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டும், தோல்வியையும் தங்ககளுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் நட்பு நாடான பாகிஸ்தான், அதுவும் முஸ்லிம் நாடான பாகிஸ்தான் உதவிக்கு
செல்லுமுன் ஏன் இந்தியா உதவிக்குச் செல்ல வேண்டும். ஏற்கனவே இதை எதிர்பார்த்து அவர்கள் தயாராகவே இருந்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் நண்பரான ஹயும் (மாலைதீவு ஜனாதிபதி) இப்போது இந்தியாவுக்கு கடமைப்பட்டவராகிவிட்டார். ஏமாந்து போனது நீங்கள்தான் என்று ரோவின் போட்ட திட்டத்தை ஹமால்டீன் அம்பலப்படுத்தினார்.

”உண்மை தான் இதைப்பற்றியெல்லாம் அப்போது யோசிக்கவில்லை.” என்று அவர் சொன்னதை ஒப்புக் கொண்ட உமாமகேஸ்வரன் “இப்போது எனக்குள்ள பிரச்சினை எங்களுடைய ஆட்களை மாலைதீவுச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும். அதற்காகத்தான் இங்கே வந்து தங்கியிருந்து உங்களுடைய உதவியைக் கேட்டேன்” என்றார்.
இங்கிருந்து அதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என்று ஹமால்டின் திருப்பிக் கேட்க உமாமகேஸ்வரன் தனது திட்டத்தை (அதாவது ரஜீவ்காந்தியின் பிள்ளைகளைக் கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை மேற்படி) அவருக்குச் சொன்னார். அதைக் கேட்டு ஒரு சில வினாடிகள் யோசித்த ஹமால் இது சாத்தியமா என்று நினைக்கின்றீர்களா என்று கேட்டார்.
சாத்தியமாகுமா என்றால் உங்களது கேள்வி எனக்கு விளங்கவில்லை. ரஜீவின் பிள்ளைகளை கடத்துவது சாத்தியமாகாது என்று நினைக்கின்றீர்களா என்று உமா கேட்க, இல்லை இல்லை நான் அதைச் சொல்ல வரவில்லை. இதைச் செய்தால் மாலைதீவு அரசாங்கம் பணிந்து வந்து உங்களது ஆட்களை விடுவிக்கும் சாத்தியக்கூறு இருக்குமா? என்று தான் கேட்டேன் என்றார் ஹமால்.
" நிச்சயமாக சாத்தியமாகும். மாலைதீவு என்னமும் இந்தியாவின் மேற்ப்பார்வையின் கீழ் தான் இருக்கின்றது. எங்களது ஆட்கள்கூட இந்திய மாலைதீவு கூட்டுக் கண்காணிப்பில்தான் இருக்கின்றார்கள். பிரச்சினையாக இருப்பது மாலைதீவு அரசாங்கமல்ல இந்தியா தான். இந்தியாவைப் பணிய வைக்க வேண்டும் என்றால் நேரு குடும்பத்தில் கைவைக்க வேண்டும். இந்தியாவில் நீங்கள் போய் ஒரு ஆயிரம் பேரை சுட்டுத் தள்ளிப் பாருங்கள். அங்கே எதிர்ப்பு பெரிதாக ஒன்றும் இருக்காது, தேசத் தந்தை என்று சொல்கின்ற காந்தியின் வாரிசை கடத்தினால் கூட அவர்கள் கவலைப்படமாட்டார்கள் ஆனால் நேரு குடும்பத்தில் கைவைத்துப் பாருங்கள் உடனேயே சீறி எழுந்துவிடுவார்கள் என்று அவருக்கு விளக்கமளித்தார் உமா. ஹமால் அவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்டார்.
அதன்பின் இருவரும் ரஜீவின் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு அதை உடைப்பதற்கான வழிமுறைகள் அவர்களை கடத்தினால் இந்திய பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படையினரின் கண்ணில் படாமல் காரியம் முடியும் மட்டும் பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டிய இடங்கள் இந்த விசயத்தை செய்து முடிக்க இந்தியாவுக்குள் அணுகக்கூடிய நம்பிக்கைக்குரிய நபர்கள். இந்த நடவடிக்கையினுடைய சாதகபாதகமான அம்சங்கள் இந்திய பாதுகாப்புத்துறையிலுள்ள பலவீனங்கள் என்பது பற்றியெல்லாம் விரிவாக ஆராய்ந்தார்கள்.
இந்த விடயத்தில் தங்களால் முழு உதவியையும் தங்களால் செய்ய முடியும் என உறுதியளித்த ஹமால் உங்களுக்குமட்டுமல்ல இஸ்லாமுக்கே அவர்கள் எதிரிகள். பொது எதிரிக்கு எதிராக நாங்கள் ஐக்கியப்பட வேண்டும். இதற்காக நீங்கள் நாங்கள் எல்லோரும் சேர்ந்து சர்வதேச நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும். அதைவிட நீங்கள் இன்னொருதடவை றோவின் வலையில் விழாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதன்பின் அவர்கள் பாரூக்தாதாவை சந்திக்கப் புறப்பட்டனர். கராச்சி நகரத்தின் பிரபல்யமிக்க பெரும் புள்ளியான அவர் பெயருக்கு ஏற்றபடி அடியாட்கள் சகிதம் பெரும் தாதாவாகத்தான் காட்சியளித்தார்.அவரைப் பார்த்த போது பம்பாய் வரதராஜ முதலியாரின் நினைப்புத்தான் உமாவுக்கு வந்தது.

ஹமால் உமாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்து உமா கராச்சியில் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என்றும் ஏதாவது ஒரு தொழில்துறையில் முதலீடு செய்ய அவருக்கு தாதா உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தான் அவற்றை நிச்சயமாக செய்து தரலாம் என்று தாதா ஒத்துக்கொண்டார். தாதாவுக்கு கடத்தல் விடயத்தை உடனே சொல்லவில்லை. அவரிடம் தான் அதை பின்பு விபரமாகச் சொல்வதாகவும் விரைவிலேயே எல்லா ஏற்பாடுகளுடனும் கராச்சிக்கு வரும்படியும் தானும் தனது நாட்டுக்கு போய்விட்டு திரும்பி வருவதாகவும் ஹமால் உமாவுக்குச் சொன்னார்.

தான் எதிர்பார்த்தது போல் அல்லாது வந்தவிடயம் சுலபமாக முடிந்துவிட்டதாக உமா திருப்திப்பட்டுக்கொண்டார். அந்த சந்தோசத்தில் ஹமாலுடனும் தாதாவுடனும் விடைபெற்றுக் கொண்டு கராச்சி நகருக்கு சுற்றிபார்க்கச் சென்றார்.
அவர் இவ்வாறு கராச்சி நகரத்தை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும் போது நாட்டில் முள்ளிக்குள முகாமில் ஒரு கொலை நடந்தது..

காந்தி தேசத்தின் மறுபக்கம்-06

06
கராச்சிக்குச் செல்லும் தனது திட்டத்தின் முதல் நடவடிக்கையாக உமாமகேஸ்வரன் தனது பெயரை முஹமட் இப்ராஹிம் என்று வைத்துக் கொண்டார்.
தான் கல்முனையைச் சேர்ந்த நகை வியாபாரி என்றும் தனது நகைக் கடையின் பெயர் பரீதா ஜுவலறி என்றும் சொல்லிக் கொண்டார். அதற்கு அத்தாட்சியாக, அரசு முத்திரை பதித்த வர்த்தக அனுமதி சான்று முதல் அடையாள அட்டையும் தயாரித்துக் கொண்டார்.
தன்னுடைய உருவ அமைப்பும் மற்றவர்களின் பார்வைக்கு அசல் முஸ்லிம் வர்த்தகர் போல் இருக்க வேண்டும் என்பதற்காக தனது சுருண்ட அடர்த்தியான தலைமயிரை கட்டையாக வெட்டி மீசையையுமழித்துவிட்டார். கிழக்கு மாகாண இஸ்லாமிய வட்டார வழக்கு தமிழ்ச் சொற்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு அது போல் பேசவும் பழகிக் கொண்டார்.
திருகுர்ரானைப் பற்றியும் மற்றும் இஸ்லாமிய மதச் சடங்குகள், தொழுகை முறை பற்றியும்கூட வேண்டிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டார். அடுத்து தனது நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராக இருந்த ராபினுடைய பெயரையும் அப்துல் ரஹீம்; என்று மாற்றி அவரை கல்முனை பரீதா ஜுவலறி உரிமையாளர் இப்ராஹிமினுடைய உதவியாளர் என்று சொல்லும்படியும் அவ்வாறே கொழும்பிலுள்ள முஸ்லீம் பகுதிக்குச் சென்று அங்குள்ள முஸ்லீம் இளைஞர்களை சிநேகிதம் பிடித்து அவர்களுடைய பேச்சுவழக்கு, மத விவகாரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி சென்னார்.
ராபின்சனுக்கு இது சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது போல் இருந்தது. உம்மா, வாப்பா, நிக்கா.. முதற் கொண்டு ஜாதி வேலையில்லையா நீங்க செஞ்சிருக்கிறது என்கின்ற தொனியிலான இஸ்லாமியத் தமிழ் வழக்கு அவனது வாய்க்குள் நுழைய மறுத்தது. இந்த மனுசன் சரியான லொள்ளுப் பிடிச்ச மனுசன். கிழக்கு மாகாணப் பெடியள் எத்தனை பேர் இருக்க, யாழ்ப்பாணக்காரனான (அச்சுவேலி) என்னைப் போய் முஸ்லீம் தமிழ் படிக்கச் சொல்கிறார். என்று புறுபுறுத்துக் கொண்டான்.
ராபின் இவ்வாறு முஸ்லீம் தமிழுடன் மாரடித்துக் கொண்டிருந்த நேரத்தில் உமா தனது நம்பிக்கைக்குரிய மற்றொரு மெய்க்காப்பாளரான சக்திவேல் மூலம் தனக்கும், ராபினுக்கும் முஹமட் இப்ராஹிம் அப்துல் ரஹீம் என்ற பெயர்களின் கடவுச்சீட்டு எடுப்பித்துக் கொண்டார். டிசம்பர் மாதம் 12ம் திகதி உமாவினுடைய பலஸ்தீன நண்பர் ஹமால்தீன் கராச்சிக்கு வருவதாகவும், உமாவை அங்கு வந்து தன்னைச் சந்திக்கும்படியும் தகவல் வந்திருந்தது. 1988 டிசம்பர் மாதம் 11ம் திகதி தான் நுவரெலியாவிற்கு JVP தலைவர்களை சந்திக்கச் செல்வதாக மற்றவர்களுக்குத் தகவல் வெளியிடும்படி சத்திவேலிடம் சொல்லிவிட்டு உமாமகேஸ்வரன் இல்லை முஹமட் இப்ராஹிம், அப்துல் ரஹீமுடன் கராச்சி புறப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இப்ராஹிமுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை கடவுச்சீட்டு, விசா, கடவுச்சீட்டிலுள்ள படம், நேரில் வந்திருக்கின்ற ஆள் எல்லாம் சரியென்று குடியகல்வு அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக் கொண்டு அவர் உள்ளே போய்விட்டார்.
ஆனால் அப்துல் ரஹீம் விடயத்தில் குடியகல்வு பகுதியில் இருந்த ஒரு அதிகாரிக்கு சந்தேகம் வந்துவிட்டது. ரஹீம் என்ற பெயரில் வந்திருக்கும் இளைஞருடைய தோற்றமும் பேச்சும் உண்மையான முஸ்லீமுக்கு உரியது போல் இல்லை என்பதை அவர் கண்டுகொண்டார்.
இந்த ஆளை மிரட்டினால் ஒரு பெரும் தொகையை இலஞ்சமாகக் கறக்கலாம் என்று அவர் திட்டமிட்டார். எனவே, அவர் ராபினை தனிப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று உண்மையைச் சொல் நீ முஸ்லிம் இல்லை. கராச்சிக்கு எதுக்குப் போகிறாய்? உன்னுடைய உண்மையான பெயர் என்ன? என்று அதிகாரமாகக் கேட்டார்.
ராபினுக்குப் பயம் வந்துவிட்டாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. இல்லை நான் முஸ்லிம் தான்., இதுதான் என்னுடைய உண்மையான பெயர் என்று அவன் அடித்துச் சொன்னான். ஏய் பொய் சொல்லாதை நான் ஒரு முஸ்லிம். நீ சுன்னத்து செய்திருக்கிறாயா என்று பார்த்தால் உண்மையை என்னால் கண்டுபிடிக்கமுடியும். நான் விசயத்துக்கு வாறன். நான் உன்னைப் போக விடுறன், நீ எனக்கு எவ்வளவு தருவாய்? என்று நேரடியாகக் கேட்டார் அந்த அதிகாரி.

மறுத்தால் பிரச்சினையை அவர் பெரிதாக்கி விடுவார், அதனால்தான் மட்டுமல்ல உமாமகேஸ்வரன்கூட பிடிபட நேரும் என்று கருதிய ராபின் நான் 100 டொலர் தாறன் என்று ஒப்புக் கொண்டான்.
சீ.. உதென்ன பிச்சைக் காசு என்று அந்த அதிகாரி சொல்ல சரி எவ்வளவு கேக்கிறியள்? ராபின் திருப்பிக் கேட்டான்.
எனக்கு 500 டொலர் வேண்டும் என்று அந்த அதிகாரி மீண்டும் சொல்ல, ராபின் குறுக்கிட்டு என்னட்டை 1000 டொலர் ரவலர் செக் தான் இருக்குது. காசு அவ்வளவு இல்லை. என்றான்.
உடனே அந்த அதிகாரி அவனை உள்ளே அழைத்துச் சென்று அங்கிருந்த தீர்வையற்ற வர்த்தக நிலையத்தைக் காட்டி அங்கே ஏதாவது சாமான்களை வாங்கி, ரவலர் செக்கை மாற்றி பணத்தை டொலராக வாங்கி வரும்படி சொன்னார்.
ராபின் அங்கே 500 டொலர் செக்கை கொடுத்து, 80 டொலருக்கு கைக்கடிகாரம் ஒன்றை வாங்கிக் கொண்டு மிகுதி 420 டொலரையும் பணமாகப் பெற்று வந்து அந்த அதிகாரியிடம் கொடுத்தான்.

எங்கே மிச்சம்? என்று அந்த அதிகாரி கேட்க ராபின் தான் வாங்கிய கடிகாரத்தையும் மிகுதி 100 டொலர் பெறுமதியாக இருந்த 5 செக்குகளையும் காட்டி இதை மாற்ற முடியவில்லை என்றான்.
கிடைத்தது லாபம் என்று திருப்திப்பட்டுக் கொண்ட அந்த அதிகாரி ராபினுடைய அதாவது அப்துல் ரஹீமினுடைய கடவுச்சீட்டில் குடியகல்வு முத்திரையைப் பதித்து அவனை மேற்கொண்டு செல்ல அனுமதித்தார்.
அவனை குடியகல்வு பகுதியில் தடுத்து வைத்திருப்பதையும் பின்பு தனி அறைக்கு அழைத்துச் செல்லப்படுவதையும் பார்த்து, சிக்கல் ஏதாவது வந்துவிடுமோ என்று பயந்து போய் இருப்புக் கொள்ளாமல் அந்த தரிப்பிட மண்டபத்தில் தவித்துக் கொண்டிருந்த உமாமகேஸ்வரனுக்கு ராபின் உள்ளே வருவதைக் கண்ட பின்புதான் நிம்மதி வந்தது. தன்னை நோக்கி வந்த அவனை கண் ஜாடையால் என்னிடம் வரவேண்டாம் என்று காட்டினார்.

இரவு 8.40ற்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தைவிட்டு விமானம் புறப்படும் வரை அவர்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசவே இல்லை. விமானத்துக்குள் வைத்துத்தான் ராபின் நடந்த விடயத்தை உமாமகேஸ்வரனிடம் சொன்னான்.

அவருக்குக் கோபம் வந்துவிட்டது. உனக்கு நான் எத்தினைதரம் சொன்னனான் முஸ்லிம்பகுதிக்குப் போ, அங்கேயுள்ள பெடியளோட பழகு என்று. உன்னைப் பார்க்க முஸ்லிம் மாதிரியா இருக்குது என்று கடிந்து கொண்டார்.
அதற்கு நான் என்ன பெரியய்யா (அவ்வாறுதான் உமாவை இயக்கதிலுள்ளவர்கள் அழைப்பது வழக்கம்) செய்யிறது? மூண்டு கிழமைக்குள்ள எப்படி அது முடியும் என்றான்?
நான் எத்தினை கிழமைக்குள்ள பழகினனான் என்னை அவங்கள் கண்டு பிடிக்கேல்லை உங்கட முழியும், மூஞ்சையும் சரியில்லை எனக்கு பாதுகாப்புக்கென்று உங்களை கூட்டிக்கொண்டு வந்தால் உங்களால்தான் எனக்கு பிரச்சினை என்று உமா தொடர்ந்து சீறிவிழ ராபின் எதுவும் பேசவில்லை.

நள்ளிரவு விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது திடீரென்று அதன் முன்பக்கச் சில்லு கிழே இறங்க மறுத்துவிட்டது. விமானி மீண்டும் விமானத்தை மேலே எழுப்பிப் பறந்து அதிலுள்ள எரிபொருள் கணிசமான அளவில் தீர்க்க முயற்சிசெய்தார். விமானத்தில் உள்ளவர்கள் என்ன நடக்குமோ என்று பயந்து போயிருந்தனர்.

உமாமகேஸ்வரன் சகுணங்களை நம்புவதில்லை. ஆனாலும் இதென்ன, புறப்பட்ட நேரத்திலிருந்து எல்லாம் தடையாக இருக்கின்றது என்று யோசிக்க ஆரம்பித்தார்.
இவர் விமானத்திற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தைவிட தான் ஈடுபடப்போகின்ற காரியம் தன்னைப் பெரிய சிக்கலில் மாட்டிவிடுமோ என்று பயப்பட்டார்

காந்தி தேசத்தின் மறுபக்கம்-05

05
மாலைதீவிலிருந்து தப்பிவரும் தனது இயக்க உறுப்பினர்களை அவர்கள் வரும் கப்பலிலிருந்து பாதுகாப்பாக கரைசேர்ப்பதற்கு உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்டது. அதுவும் இந்திய இலங்கைக் கடல் எல்லைக்குள் அந்தக் கப்பல் வருவதற்கு முன் அதைச் செய்ய வேண்டிய அவசரமும் ஏற்பட்டது.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து மிகுந்ததாகவே இருந்தது. கப்பல் இந்திய இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசித்துவிட்டால் நிச்சயமாக இந்தியக்கடற்படையும், சிறீலங்கா கடற்படையும் கூட்டுச் சேர்ந்துகப்பலையும் அதில் இருப்பவர்களையும் கைப்பற்றிவிடுவார்கள். றோ கதையை மாற்றி உமாமகேஸ்வரன் தான் குற்றவாளி என்று அடித்துச் சொல்லிவிடும் என்ற பயம் உமாவுக்கு ஏற்பட்டது.
முதலில் அவர் நினைத்தபடி ராஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்தி பணயம் வைப்பது என்பது உடனடியாகச் சாத்தியப்படக்கூடிய விடயமாகத் தென்படவில்லை. ஆதனால் கொழும்பிலிருந்து கண்டிக்கோ, கிக்கடுவைக்கோ, அனுராதபுரத்திற்கோ செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை அவர்கள் செல்லும் பஸ்சுடன் சேர்த்துக் கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை முள்ளிக்குளம் பகுதிக்குக் கொண்டு சேர்க்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.

அவ்வாறு அவர்கள் முள்ளிக்குளத்தில் கரை சேர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கும், இந்திய அமைதிப்படைக்கும் போக்குக் காட்டிவிட்டு அவர்களை இரகசியமாக நுவரெலியாவுக்குக் கொண்டு சென்று ஜே.வி.பி.யினருடன் தங்கவைக்கலாம் என்று அவர் எண்ணினார்.. எனவே உடனடியாக அவசர அவசரமாக கொழும்பில் வைத்து உல்லாசப் பயணிகளை கடத்துவதற்கு கடத்தல் குழுவொன்று உருவாக்கப்பட்டு திட்டம், ஆயுதங்கள், வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. கடத்தல் குழுவின் தலைவர்களாக மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த மூவரில் ஒருவர் ஆயுதம் தரித்த 4 சகாக்களுடன் பஸ்சைக்கடத்தி நீர்கொழும்பிற்கு கொண்டு செல்வது மற்றவர் வேறு இரண்டு சகாக்களுடன் கடத்தல் நாடகம் முடிந்ததும் நீர்கொழும்பிலிருந்து சிலாபத்திற்கு கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் தப்பிச் செல்வதற்கு 250 குதிரைச்சக்தி வேகம் கொண்ட இயந்திரப் படகுடன் காத்திருப்பது சிலாபத்தில் கரையேறும் குழுவை விரைந்து புத்தளத்திற்குக் கொண்டு சேர்க்க மூன்றாமவர் வாகனமொன்றுடன் அங்கு காத்திருப்பதென்றும் திட்டம் தீட்டப்பட்டது. கொழும்பிலிருந்து புளொட் வசிப்பிடங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டு அங்கிருந்தவர்கள் வேறு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். பணய நாடகம் தொடங்கியவுடன் சிறிலங்கா அரசாங்கத்துடனும், மாலைதீவு கப்பலுடனும் தொடர்பு கொள்வதற்குத் தொலைத் தொடர்பு சாதனமும், தொலைத் தொடர்பாளரும் கூட தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பணய நாடகத்தின் போது பேச வேண்டிய பேச்சுக்கள், வைக்க வேண்டிய கோரிக்கைகள், எதிர்த்தரப்புப் பேச்சுக்களுக்கும், கேள்விகளுக்கும் பிடிகொடுக்காமல் அளிக்க வேண்டிய பதில்கள் என்பனவும் தயாரிக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டன.
உமாமகேஸ்வரன் இவ்வாறு பரபரப்பாகக் கொழும்பில் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது அவர் கொழும்பில் தங்கியிருக்க உதவி செய்தவரும் அவருடைய நெருங்கிய நண்பருமான அமைச்சர் லலித் அத்துலத்முதலி அவருடன் தொடர்பு கொண்டு மாலைதீவு தாக்குதலை புளொட்தான் செய்ததென்று தனக்குத் தெரியும் என்றும் சதிப்புரட்சியாளர்கள் வரும் கப்பலை இலங்கைக்கடல் எல்லைக்குள் கொண்டு வர வேண்டாம் என்றும் கொழும்பில் இருந்து கொண்டு அவர்களை மீட்க எந்தக் காரியமும் செய்யக்கூடாதென்றும் அப்படிச் செய்தால் அது தங்களைப் பெரிய இக்கட்டில் மடாட்டிவிடும் என்றும் அதனால் அவரை கைது செய்ய வேண்டிய நிலை தமக்கு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
உமாமகேஸ்வரனது நிலை ஆப்பிழுத்த குரங்கின் கதியாகிவிட்டது. அத்துலத்முதலி இப்படிச் செய்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் இந்த விடயத்தில் கண்டும் காணாமல் இருந்துவிடுவார். அதாவது பெயருக்கு மற்றவர்களின் பார்வைக்காக எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று தான் உமா நினைத்திருந்தார். ஏனென்றால் அடுத்த ஜனாதிபதியாக தான் வருவதற்காக லலித் உமாவைக் கொண்டு திரை மறைவில் சில காரியங்களைச் செய்ய திட்டமிட்டிருந்தார். அதற்காக உமாவுடன் கலந்து பேசியுமிருந்தார்.
தோல்விக்குமேல் தோல்வி ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம். அடுத்து என்ன செய்வது திட்டமிட்டபடி பயண நாடகத்தை அரசாங்கம் எதிர்த்தாலும் துணிந்து நடத்தி மாலைதீவு சகாக்களை மீட்பதா? அல்லது அரசாங்கத்திற்கு சங்கடமோ பாதிப்போ ஏற்படாத வகையில் வேறு ஏதாவது செய்வதா என்று உமாமகேஸ்வரன் ஊசலாடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியா மாலைதீவு கடல் எல்லைக்குள் வைத்தே தமது விமானப்படையையும், கடற்படையையும் கொண்டு கப்பலைத் தாக்கி நீரில் மூழ்கும் நிலையை உருவாக்கி தான் அனுப்பி சதிபுரட்சியாளர்களை தானே கைது செய்து தன்னை ஜனநாயக காவலனாக காட்டிக்கொண்டது.
இது ஒரு வகையில் உமாமகேஸ்வரனுக்கு இருந்த பெரும் நெருக்கடியை தனித்தது. உடனடியாக அவசரப்பட்டு காரியம் எதையும் செய்து மூக்குடைபட்டுப் போகாமல் நன்கு ஆற அமரத்திட்டமிட்டு அதாவது ரஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை மீட்கலாம் என்று அவர் நினைத்தார். ஆனாலும் கைது செய்யப்பட்டவர்கள் நீதி மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணை என்று வரும் பொது தன்னை முதல் குற்றவாளியாக்கிவிட்டால் என்ன செய்வதென்றும் அவருக்குப் பயம் வந்தது. தன்னைக் குற்றவாளியாக்கினால் உண்மையான சூத்திரதாரிகள் தாங்கள்தான் என்பதும் வெளிவந்துவிடும் என்பதால் இந்தியா அப்படிச் செய்யாது என்றும் அவர் நம்பினார்.
எதற்கும் தன்னுடைய வதிவிடத்தை இலங்கைக்கு வெளியே வேறு ஒரு நாட்டிற்கு மாற்றி யாருக்கும் தெரியாமல் அங்கே தங்கியிருந்து கொண்டு செயல்படுவது என்று நல்லது என்று அவருக்குத் தோன்றியது சிங்கப்பூர், பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளை அவர் தேர்ந்தெடுத்தார். இந்த இரண்டு நாடுகளில் ஒரு நாட்டில் இருந்து கொண்டு இன்னொரு நாட்டில் இருப்பதாக மற்றவர்கள் நம்பும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது திட்டம். இதன் முதல் கட்டமாக தனது பலஸ்தீன நண்பர்களடன் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் நான் தங்கியிருக்க ஏற்பாடு செய்து தருமாறும் அங்கு தான் இஸ்லாமிய வர்த்தகர் போல் ஏதாவது தொழில்துறையில் முதலீடு செய்து கொண்டு தங்கியிருந்து தனது அடுத்த நடவடிக்கையை தொடரப் போவதாகவும் இந்தியாவின் சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ரஜீவின் பிள்ளைகளை கடத்த திட்டமிட்டிருப்பதை அவர் அவருக்கு நேரடியாகச் சொல்லவில்லை. பாகிஸ்தானிலிருந்து உதவக்கூடிய நம்பிக்கையான நபர் ஒருவரையும் தனக்கு அறிமுகம் செய்யுமாறு கோரியிருந்தார்.
அவர்களும் மிக விரைவிலேயே செய்து தருவதாக அவருக்கு உறுதியளித்தனர். தான் கராச்சிக்கு தனது வதிவிடத்தை மாற்றப் போகும் விடயத்தை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்காகத் தான் சிங்கப்பூருக்குப் போய் தங்கியிருக்கப் போவதாக ஒரு வதந்தியை வெளியில் பரவவிட்டார்.
அவரது மிக நெருங்கிய நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர்களாக இருந்த சக்திவேல், ராபின் (சுவிஸில் கொலை செய்யப்பட்டவர்.) ஆகிய இருவருக்கு மட்டும் தான் அவர் கராச்சி செல்லும் விடயம் தெரியும்.

மற்ற அனைவரும் உமா சிங்கப்பூருக்குப் போவதாக நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் பலஸ்தீன தொடர்பாளியிடமிருந்து இருந்து கராச்சியில் அவர் தங்கியிருக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதென்றும் அங்கே தங்களுடைய நண்பரான பாருக் தாதாவை தொடர்பு கொள்ளும்படியும் அவர் உமாவுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவார் என்றும் தகவல் வந்தது. உமாமகேஸ்வரன் காலம்கடத்தாது விரைந்து கராச்சிக்குச் செல்ல போலிப் பாஸ்போட் விசாவுக்கும், விமானடிக்கற்றுக்கும் ஒழுங்கு செய்தார். ரஜீவ்காந்திக்கும், றோவுக்கும் விரைவில் பாடம் படிப்பிக்கின்றேன் என்று அவர் கறுவிக் கொண்டார்.
ஆனால் பாவம் அவர் கராச்சியில் சென்று சந்திக்கப் போகின்ற பாருக் தாதா றோவினுடைய ஆளென்பது அவருக்குத் தெரியாது

புதன், 17 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறுபக்கம் 1

(இந்தத் தொடர் 1997ம் ஆண்டு பாரிசில் இருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்தது. 1989 ம்ஆண்டு மே மாதம் 28 ம் 29 ம் திகதிகளில் உமா மகேஸ்வரன் நேரடியாக வழங்கிய தகவல்களின் அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் எழுதப்பட்டது)

01
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவில் நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம்,அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம்.அதிகாரிகளுக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு.
ரஜீவ்காந்தி இந்திய தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பெண்கள,; குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் எண்ணாயிரம் பேரை கொன்று குவித்தது. பல நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது. பெண்கள் கற்புடன் இருப்பதும், வயோதிபர்கள் குழந்தைகள் உயிருடன் இருப்பதும் இந்தியப் படையின் கண்ணோட்டத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது.
உண்மையில் இலங்கையில் இந்தியப்படை இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை யுத்தகால அழிவுகளாக கொள்ள முடியாது. அது ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தமல்ல அமைதிப் பணி என்ற பெயரில் நடந்தப்பட்டட கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என்றுதான் அந்தச் சம்பவங்களைப் பார்க்க முடியும்.
ராஜீவ்காந்தி கொழும்புக்குச் சென்ற போது ஒரு சிங்களச் சிப்பாய் பகிரங்கமாக அவரைத் தாக்கினார். அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா அந்தச் சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக வெய்யிலின் கொடுமையினால் ஏற்பட்ட மூளைக்கோளாறினால் அந்தச் சிப்பாய் அவ்வாறு நடந்து கொண்டதாக பகிரங்கமாகச் சொன்னார்.
அதேவேளை இந்திய இராணுவத்தின் வருகைக்கு எதிராகவும் ரஜீவ்காந்தி கடைப்பிடித்த இலங்கை தொடர்பான அரசியல் போக்கிற்கு எதிராகவும் சிறிலங்காவில் ஜே.வி.பி இயக்கம் மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டியது. தமிழீழப் பிரதேசத்தில் தமிழ் மக்களை நம்பவைத்து மோசம் செய்த ரஜீவ்காந்தியின் படைகளை எதிர்த்து விடுதலைப்புலிகள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் இந்தியா ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டது. வடகிழக்கில் சீனாவின் எதிர்ப்பு மேறகில் பாகிஸ்தானின் எதிhப்பு தெற்கே புலிகள் ஜே.வி.பி எதிர்ப்பு உள்நாட்டில் பஞ்சாப், கஸ்மீர், மிஸோராம், நகலாந்து, கூர்க்கா மற்றும் அந்திர மக்கள்யுத்தக்குழு போராளிகளின் எதிர்ப்பு என்று தன்னைச் சுற்றியும் தனக்குள்ளேயும் எதிரிகளை அது தேடிக்கொண்டது. இது ரஜீவ்காந்தியினுடைய தலைமைத்துவத்தின் மீதான அவநம்பிக்கையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்றுவித்துவிடும் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அஞ்சினார்கள்.

இந்தியாவின் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத சின்னஞ்சிறு நாட்டின் சிப்பாய் மரியாதை அணிவகுப்பின் போது தாக்கியதும், அதைப் பாரதூரமான சம்பவமாக நினைத்து அந்த நாட்டு ஜனாதிபதி ஜெயவர்த்தனா மன்னிப்புக் கோராமல் மனநிலை பாதிக்கப்பட்டவரின் செயலாக கூறியதை அவர்கள் மிகப்பெரிய விடயமாக எடுத்துக் கொண்டார்கள்.
மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை யாராவது இன்னொரு நாட்டு தலைமை அமைச்சரை வரவேற்கும் அணிவகுப்புக்கு அனுப்புவார்களா? ஜே.ஆர் திட்டமிட்டு இந்தியாவையும் ராஜீவையும் அவமானப்படுத்திவிட்டார் என அவர்கள் கறுவிக் கொண்டார்கள். புலிகளையும் ஜே.வி.பியையும் அடக்கு வதோடு ஜே.ஆர்க்கும் அவரைப் போன்ற சிங்கள அரசியல்வாதி களுக்கும் இந்தியாவின் பலம் என்ன என்பதைக் காட்டுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
இந்த விவகாரத்தை கையாள்வதற்கு இந்தியாவின் பார்ப்பணிய மூளையான றோவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது. றோ அதிகாரிகள் தெற்காசிய வரைபடத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கைக்கு அண்மையில் இருந்த சின்னஞ்சிறு நாடான மாலைதீவு, அவர்கள் கண்களில் பட்டது.
காஸ்மீரையும், சிக்கிமையையும் தந்திரமாக தங்கள் நாட்டில் மாநிலங்களாக ஆக்கிக் கொண்ட தாங்கள் நேபாளத்தையும், பூட்டானையும் தங்கள் அதிகார பலத்தை பயன்படுத்தி இராணுவ மேலான்மைக்கு கீழ் கொண்டுவந்த தாங்கள் இந்தச் சின்னஞ்சிறு மாலைதீவை இதுவரை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

மாலைதீவிலே ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அப்தும் ஹயும் இந்தியாவுடன் அவ்வளவு தொடர்பில்லாதவர். ஆனால் பாகிஸ்தானுடன் நெருக்கமானவர். அதனால் அவரை இந்தியாவின் பக்கம் எடுப்பது பாகிஸ்தானை சீண்டுவதாக ஆகிவிடும். அதைவிட அவரின் எதிரிகள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களை இந்திய சார்பாளர்களாக்கி பதவிக்குக் கொண்டு வருவதன் மூலம் மாலைதீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என றோ நினைத்தது. அது அவர்களிற்கு பெரிய சிரமமாக இருக்கவில்லை. அப்தும் ஹயும் ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்றின் மூலமே பதவிக்கு வந்தவர். அவரால் பதவி இறக்கப்பட்ட அவரின் எதிரிகளில் இருவர் சிங்கப்பூரிலும் ஒருவர் கொழும்பிலும் இருந்தனர். றோ அதிகாரிகள் சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாலைதீவில் ஜனநாயகத் தேர்தல் முறையின் கீழ் ஆட்சிக்கவிழ்ப்புக்கு சாத்தியமில்லை என்பதும் அப்தும் ஹயுமின் எதிரிகள், இந்தியசார்பாளர்கள் என்பதும் தெரிந்தாலே இஸ்லாத்தின் எதிரிகள் என்ற பிரச்சாரத்தின் மூலம் தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிடும் அபாயம் உண்டு என்பதும் றோவுக்கு புரிந்தது.
எனவே இராணுவச் சதி புரட்சி ஒன்றின் மூலம் அப்துள் ஹயுமின் ஆட்சியைக் கவிழ்ப்பதே சிறந்ததும் சுலபமானதுமான வழி என்று அவர்கள் தீர்மானித்தனர். முன்னூறு பேர்வரை இல்லாத மாலைதீவு பாதுகாப்புப படையை முறியடிப்பது பெரிய கஷ்டமான விடயமல்ல என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் யாரை வைத்து இந்தச் காரியத்தை சாதிப்பது என்பது அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்தது.
மாலைதீவு இளைஞர்களை பயன்படுத்தினால் அவர்களுக்குப் புதிதாக பயிற்சி அளிக்க வேண்டும். வெறும் பயிற்சி மட்டும் போதாது யுத்த காலத்தில் நின்ற அனுபவமும், தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்தவிடயம் என்றைக்கும் வெளியே வராமல் பாதுகாக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மாலைதீவு இளைஞர் களிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது. எனவே ஈழப் போராளி களையே இதற்கு பயன்படுத்த வேண்டும் என்று றோ எண்ணியது யாரைப் பயன்படுத்துவது?
இதுவும் றோவுக்கு ஒரு சிக்கலான விடயமாக இருந்தது. ஈபிஆர்எல்எவ்; ஈஎன்டிஎல்எப் ரெலோ இந்த மூன்றும் தங்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பவை. இந்திய இராணுவத் துணையோடு இயங்குபவை. இவர்களைப் பயன்படுத்தினால் நிச்சயமாக தாங்கள் தான் இந்தப்புரட்சிக்கு பின்னணியில் நின்றவர்கள் என்று பகிரங்கமாகிவிடும். அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சர்வதேச நெருக்கடியைக் கொண்டு வந்துவிடும் என்று அவர்களுக்குத் தோன்றியது. எனவே, இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டிராத ஒரு குழுவை அவர்கள் தேடினார்கள். அப்போது புளொட் குழு அவர்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் இந்தியாவுடன் இரகசியத் தொடர்பும், பேச்சுவார்த்தையும் வைத்துக் கொண்டாலும் வெளியில் அது மற்றைய இயக்கங்களைப் போல் இந்திய இராணுவத்துடன் சேர்ந்திருக்காது தனித்து நின்றது. அதேவேளை புலிகளின் எதிரியாகவும் அது விளங்கியது. எனவே இந்தக்காரியத்திற்கு புளொட்டைத் தான் பயன்படுத்த வேண்டும் என றோ தீர்மானித்தது. புளொட்டினுடைய நிரந்தர இந்தியத் தொடர்பாளரான பாலபுத்தர் முலம் உமாமகேஸ்வரனுக்கு தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தகவல் அனுப்பப்பட்டது.என்ன காரணத்துக்காக என்பது பாலபுத்தரிடம் சொல்லவில்லை புலிகளுக்கெதிராக யுத்தம் புரிவதற்கு ஆயுதம் வழங்கவே உமாமகேஸ்வரனை அழைப்பதாக அவர் நினைத்துக் கொண்டார்.
றோவிடம் இருந்த தகவல் வந்திருந்த சமயத்தில் உமாமகேஸ்வரனின் சகாக்கள் ஜோதீஸ்வரன் (கண்ணன்), வாசுதேவா ஆகியோர் புலிகளால் கொல்லப்பட்டிருந்தனர். இதனால் பல தடைவ தன்னை நம்பவைத்து மோசம் செய்த றோவின் மீது ஆத்திரம் கொண்டீருந்த உமாமகேஸ்வரன் அதை மறந்து றோவை சந்திக்க ஒப்புக்கொண்டார். 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி வவுனியா செட்டிகுளத்தில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் இந்திய இராணுவத்தின் விசேட உலங்குவானூர்தி மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்ப்பட்டார்.
அவரை அழைத்துச் சென்ற இந்திய இராணுவ விமானப்படை அதிகாரிக்கோ அல்லது விமானிக்கோ கூட தங்களால் அழைத்துச் செல்லப்படுபவர் உமாமகேஸ்வரன் என்று தெரியாது. சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு வீட்டில் உமாமகேஸ்வரன்; றோ இரகசியச் சந்திப்பு நடந்தது. அந்தச்சந்திப்பில் மாலைதீவு விவகாரத்தை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. தாங்கள் சொல்கின்ற தாக்குதலைச் செய்ய வேண்டும் என்றும் அதற்குப் பணமும், ஆயுதமும் புளொட்டுக்குத் தருவதாக றோ சொன்னது. புலிகளுக்கெதிரான தாக்குதலாகவே அது இருக்கும் என உமாமகேஸ்வரன் நினைத்துக் கொண்டார். அன்றைய சந்திப்பின் போது றோ 50லட்சம் ரூபா இந்தியப் பணத்தை உமாமகேஸ்வரனுக்கு கொடுத்தது. அடுத்த சந்திப்பின் போது ஆயுதம் வழங்கப்படும் என்றும் அதற்கான இடத்தையும், திகதியையும் பின்பு அறிவிப்பதாகச் சொல்லி மீண்டும் இந்திய இராணுவ உலங்குவானுர்தியிலேயே உமாமகேஸ்வரனை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர். ஊருக்கு வந்த உமாமகேஸ்வரன் றோவின் பணத்தை கற்பிட்டியில் மாசிக் கருவாட்டுத் தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் கொழும்பின் புறநகர் பகுதியில் பாரிய கோழிப்பண்ணை ஒன்றை அமைக்கவும் முதலீடு செய்துவிட்டு றோவின் அடுத்த சந்திப்பிற்காக காத்திருந்தார்.
தொடரும்......................