வெள்ளி, 19 செப்டம்பர், 2008

காந்திதேசத்தின் மறுபக்கம்-09


09வில்பத்துக் காட்டுக்குள்ளிருந்து கடும் பசியோட திரும்பி வந்த ஒரு குழு செல்வரத்தினத்தையும், முருகதாசையும் இழுத்துவர இன்னொரு குழு
அங்கிருந்த சங்கக்கடையை பதம் பார்த்தது. பிஸ்கட் பெட்டிகள், சோடா கேஸ்கள், அரிசிமூட்டைகள் என்று எல்லாவற்றையும் அந்தக் குழுமுகாமுக்கு தூக்கிச் சென்றது.
இவற்றைவிட இன்னொரு குழு காட்டுக்குள் சென்று மான் ஒன்றை வேட்டையாடி வந்தது. மதியம் 1.00மணிக்கு மான் கறியுடன் சாப்பாடு முடிந்ததும் செல்வரத்தினத்தின் மீதும், முருகதாஸ் மீதும் விசாரணை ஆரம்பமாகியது.
முள்ளிக்குள முகாமின் வடகிழக்கு மூலையில் இருந்த பெரிய வாகை மரத்தின் கீழேயே விசாரணை நடந்தது. செல்வரத்தினமும், முருகதாசும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்றும், புளொட்டினது எதிரிகள் அல்ல என்றும் 20 பேருக்கு சாப்பாடு சமைத்து எடுத்துவர முடியாத காரியம் என்றும் அப்படி பெருமளவுக்கு சாப்பாடு சமைப்பதைக் கண்டாலே இந்திய இராணுவம் தங்களை கைது செய்துவிடும் என்ற பயத்திலேயே தாம் சாப்பாடு கொண்டு வர மறுத்ததாக தங்கள் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.
விசாரித்தவர்களுக்கு அவர்கள் சொன்னது சரி என்றுபட்டது. ஆனால் தங்களுடைய ஆட்களுக்கு முருகதாஸ் அடித்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதற்காக அவனுக்கு தண்டனை கொடுக்காவிட்டால் பின்பு மற்றவர்களுக்கு இது ஒரு முன்மாதிரியாய் போய்விடும் என்று அவர்கள் நினைத்தார்கள். செல்வரத்தினத்தை போகலாம் என்று அனுப்பிவிட்டு முருகதாசை நிறுத்தி வைத்து "எதற்காக நீ எங்கட ஆட்களுக்கு அடிச்சனி" என்று அவர்கள் கேட்டார்கள்.
"ஐயோ, அண்ணாமாரே நான் சத்தியமாய் அவைக்கு அடிக்கல்ல அவை தான் எனக்கு அடிச்சவை. அடி தாங்க ஏலாமல் நான் அதை தட்டிவிட்டனான்" என்று மன்றாடும் பாணியில் அவர் அவர்களுக்கு பதில் சொன்னான்.
“டே, பொய் சொல்லாத உண்மையில் நீ அடிச்சனிதானே" என்று அவர்கள் மீண்டும் மிரட்டிக் கேட்க முருகதாசுக்கு அழுகை வந்துவிட்டது. ஐயோ, சத்தியமாய் நான் அடிக்கல்ல என்று அழுது கொண்டு சொன்னான். விசாரித்தவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
3 பேர் அந்த விசாரணைக்குழுவில் இருந்தார்கள். அதில் சங்கிலியினது முன்னால் பாதுகாப்புப் படையிலிருந்த சுட்டி தன்னுடைய ரி 56 ரக ரைபிளை லோட் பண்ணி சேப்ரி லொக்கில் (வெடிப்பதற்கான விசையைத் தடுக்கும் சாதனம்) விட்டுவிட்டு செம்மறி நாயே என்னடா எங்களுக்கு காது குத்தவா பார்க்கிறாய் உண்மையைச் சொல்லு நீ எல்.ரி.ரி.யினுடைய ஆள் தானே. சொல்லேல்லேயோ சுட்டுவிடுவன் என்று பல்லை நறுமி கண்களை உருட்டிக் கொண்டு டிகரில் (விசையில்) கையை வைத்துவிட்டான். அடுத்த கணம் டுமில் என்ற சத்தத்துடன் நெருப்பைக் கக்கிக் கொண்டு குண்டு சீறிப்பாய்ந்தது.
"ஐயோ, அம்மா" என்று அலறியவாறு முருகதாஸ் நிலத்தில் விழுந்தான் உயிர் போய்விட்டது. நெஞ்சுப்பகுதியில் இருதயப் பகுதியை பிய்த்துக்கொண்டு குண்டு வெளியேறி சென்றுவிட்டது.
ஒரு 100 மீற்றர் தூரம் சென்றிருக்காத செல்வரத்தினம் "ஐயோ, என்ர தம்பி ராசா" என்று அலறிக்கொண்டு திரும்பி ஓடி வந்தார். சுட்டி திகைத்துப் போய்விட்டான். 'சேவ்ரி லொக் போட்டுத்தானே இருந்தேன், எப்படி வெடித்தது' என்று அவன் தனது துப்பாக்கியைத் தூக்கிப் பார்த்தான். விசாரணைக்குழுவில் இருந்த மற்ற இருவரும் பேய் அறைந்த மாதிரி ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்துப் போய்விட்டார்கள்.
முகாமில் மற்றப் பகுதியில் தங்கியிருந்த சங்கிலி உட்பட மற்றவர்கள் தங்களுடைய துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு பதற்றத்துடன் அங்கே ஓடிவந்தார்கள். அதற்குள விசயம் அறிந்த மற்றவர்களும் அங்கு வந்து கூடிவிட்டார்கள். முருகதாசின் இளம் மனைவி கணவனின் உயிரற்ற உடல் மீது விழுந்து கதறிய கதறல் பார்க்க பரிதாபமாக இருந்தது. புளொட் குழுவில் வாய் திறந்து யாரும் எதுவும் பேசவில்லை. அவர்களது மௌனம் ஊரவர்களுக்கு மேலும் பயத்தைத் தந்தது.

முகாம் பொறுப்பாளரும் சங்கிலியும் சுட்டியை விசாரித்தனர். அவன் தான் மிரட்டுவதற்காகத்தான் துப்பாக்கியை காட்டியதாகவும், அது வெடிக்கும் என்று நினைக்கவில்லை என்றும் தனது துப்பாக்கியின் சேப்டி லொக் வேலை செய்யவில்லை என்றும் சொன்னான்.
சங்கிலி அவனது துப்பாக்கியை வாங்கிப் பரிசோதித்து பார்த்த போது அதன் சேப்டி லொக் உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. உன்ர துவக்கின்ரை சேப்டிலொக் உனக்குத் தெரியாமல் எப்படி உடையும் என்று சங்கிலி சுட்டியைக் கேட்க, அவன் அதுதான் எனக்கும் தெரியவில்லை என்றும் , தான் சாப்பிடப் போகும்போது தனது துப்பாக்கியை ஆயுத தளபாடப் பகுதியில் வைத்துவிட்டுச் நென்றதாகவும் , அங்கு யாரோ வேண்டுமென்று இதை உடைத்திரக்க வேண்டும் என்றும் , இதில் ஏதோ சதி இருக்கின்றது என்றும் சொன்னான். சாப்பாட்டு நேரத்தில் ஆயுதத்தளபாடக் பகுதிக்கு போனது யார் என்று இரகசியமாக விசாரித்துப் பார்த்தும் யாரையும் கண்டு பிடிக்க முடியவில்லை. சங்கிலி இது மாணிக்கதாசனின் காரியமாகத்தான் இருக்க வேண்டும் என்றும் , அவன்தான் தனது ஆட்களைக் கொண்டு இரகசியமாக இதை செய்திருக்கலாம் என்றும் சந்தேகப்பட்டான்.
இந்த சந்தேகத்தை உறுதி செய்ய மாணிக்கதாசனின் ஆட்கள் யார் யார் முள்ளிக்குள முகாமில இருக்கிறார்கள் என்று சங்கிலியும் அந்த முகாம் பொறுப்பாளரும் சேர்ந்து கண்டுபிடிக்க முயன்றனர். வசந்தன் குழு தாங்கள் எதுவும் தெரியாத நல்ல பிள்ளைகள் போல நடந்து கொண்டு மாணிக்கதாசனின் ஆட்களை தேடும் சங்கிலியின் முயற்சிக்கு ஒத்துழைத்தனர்.
முள்ளிக்குளம் இப்படி அமளிதுமளிப்பட்டுக் கொண்டிருக்கும் போது முள்ளிக்குளத்துக்குக் கிழக்கே இருந்த புளொட்டின் மற்றொரு முகாமான குஞ்சுக்குளத்தில் இன்னொரு சம்பவம் நடந்தது.
மன்னாரிலிருந்து மதவாச்சி செல்லும் சாலையிலுள்ள குஞ்சுக்குளம் சந்தியில் புளொட்டினது சோதனைச்சாவடி இருந்தது. அந்த சாவடி தான் குஞ்சுக்குளம் முள்ளிக்குளம் முகாம்களுக்கான உணவு விநியோகச் சாவடி என்றும் சொல்லலாம். மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்களும் (லொறி முதல் கார் வரை) கொழும்பிலிருந்து மன்னாரை நோக்கி வரும் வாகனங்களும் இந்தச் சோதனைச்சாவடியில் சோதனை செய்யப்படும். இந்தச் சோதனையின் போது சோதனைக் குழு கேட்கும் பணத்தை மட்டுமல்ல அவர்கள் விரும்பிய சாமான்களையும் கொடுத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.
கருவாட்டு சிற்பங்கள், அரிசி மூட்டைகள், கொக்கோ கோலா, பன்ட்ரா கேசுகள், ரின்பால் மற்றும் உலர் பால்மா பெட்டிகள், உடுப்புகள், அவர்கள் எதையெல்லாம் விரும்புகின்றார்களோ அதை எல்லாம் பயணக்காரர்கள் கொடுத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். இவையெல்லாம் பயணத்திற்காக அவர்கள் அறவிடும் வரிப்பணத்தில் அடக்கமில்லை. என்ன தம்பியவ இப்படி அநியாயம் செய்யிறியள் என்று கேட்கக்கூட வேண்டாம் தங்களுக்குள் முணுமுணுத்தாலே போதும் அடுத்த கணம் முணுமுணுத்தவர்கள் புலிகளின் ஆள் என்று முத்திரை குத்தப்பட்டு அடித்து உதைத்து இழுத்துச் செல்லப்படுவதோடு அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு விடும்.

அதுபோல் அவ்வழியால் வரும் பஸ்கள், மினி பஸ்கள், கார்கள், வான்கள் எல்லாம். நிறுத்தி வைக்கப்பட்டு அவற்றில் புலிகளின் ஆதரவாளர்கள் (அதாவது புளொட்டிற்கு எதிரானவர்கள்) வருகின்றார்களா என்று தீவிரமாக கண்காணிக்கப்படும். இந்தக் கண்காணிப்பாளர்கள் வரும் போது யாராவது பயத்தில் முளிசிவிட்டால் போதும் உடனே அவர்கள் புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவார்கள். அவர்களது பயணம் கொழும்பை நோக்கியோ மதவாச்சியை நோக்கியோ இருக்காது. புளொட்டின் பிரதான முகாமாக செட்டிகுளத்தை நோக்கித் தான் இருக்கும்.
வவுனியாவிலும் சரி குஞ்சுக்குளத்திலும் சரி வரிவசூல் மற்றும் சோதனைச் சாவடிகளை நிர்ணயிக்கும் பொறுப்புக்களை வன்னிமாவட்ட இராணுவ பொறுப்பாளரான மாணிக்கதாசன் தான் நேரடியாக கையாண்டு வந்தான். சோதனைச் சாவடிகளில் கைது செய்யப்படுபவர்கள் குஞ்சுக்குள முகாமிலோ, முள்ளிக்குள முகாமிலோ வைக்கப்படுவதில்லை.
மாணிக்கதாசனின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுள முகாமிற்கே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அந்த முகாமில விசாரணைக் கைதிகளை விசாரிப்பதற்கென்றே ஒரு தனியான வதைகூடம் இருந்தது. மாணிக்கதாசனுக்கு புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுகின்றவர்களைச் சீண்டி வதைத்து விளையாடுவதில் ஒரு தனி சந்தோசம். இது அவனுக்குள்ள ஒரு மனநோய் என்று கூடச் சொல்லலாம்.
புலி எதிர்ப்பு சாகசம் என்ற பெயரில் அவன்; செய்த இந்த மனிதவதைகளை நேரடியாகவும், பகிரங்கமாகவும் எதிர்த்தவர்களில் குஞ்சுக்குளம் முகாம் பொறுப்பாளராக இருந்த பாருக் என்ற கணேசலிங்கமும் ஒருவர். இவர் இயக்கத்தில் மாணிக்கதாசனுக்கு சமகாலத்தவர், போராளிகளில் நீண்டகாலம் சிறையில் இருந்தவரும் கூட. ஆனாலும் ஆனைக்கோட்டை காலத்திற்கு முன் இவர் ஈரோஸ் உறுப்பினராக இருந்தவர். அதையே இவருக்கான குறைவாக மாணிக்கதாசன் சொல்லிவந்தான்.
இந்தப் பின்னணியில் ஈரோஸ் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரான ஐயா என்பவரையும் இன்னொருவரையும் குஞ்சுக்குள சோதனை சாவடிக்குழு புலிகள் என்று சொல்லி பிடித்து வந்தது. அவர்களை முன்பே அறிந்திருந்த பாருக் அவர்கள் புலிகளல்ல ஈரோhஸ்காரர்கள் அவர்களை செட்டிகுளம் கொண்டு போக வேண்டாம். குஞ்சுக்குளத்தில் வைத்தே நான் விசாரிக்கின்றேன் என்று அழைத்துச் சென்றுவிட்டார்.
இது மாணிக்கதாசனை கோபமடையச் செய்துவிட்டது. அவன்; தனது அதிகாரத்தை பயன்படுத்திக் கேட்டும் பாருக் அவர்களை அவரிடம் ஒப்படைக்கவில்லை. உமாமகேஸ்வரன் சொன்னால் மட்டுமே அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று பாருக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
மாலைதீவு தாக்குதலுக்கான தயாரிப்பு நேரத்தில் இது நடந்ததால் உமாமகேஸ்வரன் இதை கவனத்தில் எடுக்கவில்லை. பாருக் மாலைதீவில் சென்று மாபட்டிக் கொண்டதும் மாணிக்கதாசனுக்கு வசதியாகப் போய்விட்டது. ஆனால் உடனடியாக அவன் காரியத்தில் இறங்கவில்லை.
தற்போது தனக்கெதிராக குற்றம் சுமத்துபவர்களுக்கு தன்னுடைய சக்தி என்ன என்பதை நிருபிக்க வேண்டிய தேவை அவனுக்கு ஏற்பட்டது. அதனால் குஞ்சுக்குளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஐயாவையும் மற்றவரையும் கொலை செய்ய அவன்; அங்கு புறப்பட்டுச் சென்றான்

கருத்துகள் இல்லை: