சனி, 20 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறுபக்கம்16

16

19ம் நூற்றாண்டில் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய பிரித்தானியரின் கைக்கூலியான கண்காணிமார் ஆள்பிடித்த போது தமிழகத்தில் தென்மாவட்டங்களான தஞ்சாவூர் புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஏற்பட்டிரந்த கொடும் பஞ்சத்தினாலும் அதைவிடக் கொடுமையான சாதிய அடக்குமுறைகளாலும் அல்லல்பட்டு வாழ்வுக்கும், சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டிருந்த மக்கள் மத்தியில் கண்டிய சீமை கதையை பரப்பினார்கள். அதாவது கஸ்டமில்லாத வேலை, கை நிறையச் சம்பளம் ஆளுக்கொரு வீடு, அப்பிளும், திராட்சையும் நிறைந்த காணி சொந்தம் என்று அவர்கள் பரப்பிய கதையை நம்பி மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஆள்பிடிக்கும் நிலையங்களின் முன்னால் வரிசையில் நின்றார்கள்.

இதைப் போலவே 1983, 84 காலப்பகுதியில் புளொட்டினத அமைப்பாளர்களும் பின்தளக் கனவு எனற ஒரு கதையை தமிழ் இளைஞர்கள் மத்தியில் அவிழ்த்துவிட்டார்கள். அதாவது ஆறுமாதம் ஆயுதப் பயிற்சி அதன்பின் கைகளில் ஆளுக்கொரு ஆயுதம் , ஆயுதம் வந்தபின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட்டம். போராட்டம் முடிந்ததும் அனைவருக்கும் சமத்துவமான சமதர்மத் தமிழீழம் என்றெல்லாம் இவர்கள் செய்த பிரசாரம் இளைஞர்களுக்கு பின் தளம் செல்லும் ஆசையைத் தூண்டி அவர்களை படகுகளுக்காக கடற்கரையில் வந்து காத்திருந்து முண்டியடிக்கும்படி செய்தது.

1983 நவம்பர் மாதத்திலிருந்து 1984 டிசம்பர் வரை மட்டும் 6000 முதல் 8000 இளைஞர்கள் வரை இந்த அமைப்பாளர்களது பின்தளக் கனவில் மயங்கி படகேறி தமிழகம் சென்றார்கள். இக்காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 தடவைகள் கூட படகுகளில் குடாநாட்டுக்கரைகளில் இருந்து இளைஞர்கள் தமிழகம் கொண்டு செல்லப்பட்டார்கள. ஒரு படகில் 25 பேர் முதல் 30 பேர் வரையிலும் சில சமயங்களில் 40 பேர் என்ற கணக்கிலும் ஆட்கள் அனுப்பிவைக்கப்பட்டார்கள். சில சமயங்களில் படகிற்கு ஆட்கள் குறைந்த போது கடற்கரைக்கு வேடிக்கை பார்க்க வந்த இளைஞர்களை தமிழ் நாட்டுக்குப் போனால் சினிமா நடிகர்களைப் பார்க்கலாம் என்று ஆசைகாட்டி ஏமாற்றிஅனுப்பிய சம்பவங்களும் உண்டு. இப்படி ஏமாற்றப்பட்டு வந்து தமிழக பயிற்சி முகாம்களில் மாட்டுப்பட்டு பின் தங்களின் கதையைச் சொல்லி அழுதவர்கள் நிறையப் பேர் உண்டு.

உண்மையில் இந்த ஆள்பிடிப்பாளர்கள் என்னதான் மாக்கிசம், மக்கள் ஜனநாயகம் என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள் செய்தாலும் தங்களை முற்போக்குவாதிகளாகச் சொல்லிக் கொண்டாலும் றோவின் ஏற்பாட்டின் பெயரில் இந்திய இராணுவம் வழங்கவிருந்த ஆயுதப்பயிற்சியை அடிப்படையாக வைத்தே இந்த ஆள் பிடித்தலைச் செய்தார்கள். இங்கே குறிப்பிடத்தக்க ஒரு முக்கியமான அம்சம், இந்தியா தனது பார்ப்பனிய நலனுக்கு அப்பால் தமிழீழம் உருவாக ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிந்து கொண்டே இந்த ஆள்பிடித்தலை இவர்கள் செய்ததுதான்.

அதாவது இவர்கள் இந்த மாபெரும் ஆள்பிடித்தலை செய்த காலத்திலேயே இந்தியாவினுடைய முகமூடியை கிழிக்கும் வங்கம் தந்த பாடத்தையும் வெளியிட்டுவிட்டார்கள். (வங்கம் தந்த பாடம் என்பது இந்தியா வங்காள தேசத்தின் விடுதலைப் போர்க்காலத்தில் உதவி செய்யச்சென்று, செய்த உபத்திரங்களைச் சித்தரிக்கும் நூல்)

மறுபுறத்தில் உமாமகேஸவரனைப் பொறுத்தவரை, புளொட்டின் பார்ப்பணிய மூளைகள், மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி என்று பிரகடனப்படுத்திய அளவுக்கு அவருக்கு ஒன்றும் மாக்சிசம் தெரியாது. வர்க்கக் குணாம்சத்தில் கூட மாக்கிசத்திற்கு எதிரான குட்டி முதலாளித்துவக் குணாம்சங்களே அவரிடம் மிதமிஞ்சி இருந்;தன. மாக்சிச முலாம் பூசிய அவரது பேச்சுக்களும் கொள்கைத் திட்டங்களும் குட்டி முதலாளித்துவ தலைமை அல்லது பார்ப்பனிய தலைமைகளுக்கு இருக்கக்கூடிய வெறும் வாய்ச் சவாடல்களாகவே இருந்தன. அவரை இயக்கத்தின் தலைவர் என்பதை விட இயக்கத்தின் இணைப்பாளர் என்று சொல்வதே பொருத்தமானது.


அதாவது மாக்சிசம் பேசுபவர்கள் மாக்சிசம் பேசுங்கள், ஆத்மீகம் பேசுபவர் ஆத்மீகம் பேசுங்கள், இந்தியாவை எதிர்ப்பவர்கள் எதிருங்கள், ஆதரிப்பவர்கள் ஆதரியுங்கள், அரஜாகம் புரிபவர்கள் அரஜாகம் புரியுங்கள், கொலை செய்பவர்கள் கொலை செய்யுங்கள், கொள்ளையடிப்பவர்கள் கொள்ளையடியுங்கள் ஆனால் எல்லோரும் புளொட் என்ற நாடகக் கம்பனியின் நடிகர்களாக இருந்து அவரவர்களுக்குரிய பாத்திரத்தை ஒழுங்குமுறை தவறாமல் செய்யும்படி பார்த்துக்கொள்ளும் இயக்குனராக அதாவது ஒரு சமரசவாதியாகவே இருந்தார். அந்தச் சமரசவாதம் என்பது ஒரு சீரழிந்த தன்மையே. இது ஒரு விடுதலை இயக்கத்திற்கு இருக்க முடியாத ஒன்றும் கூட, இதுவே உமாமகெஸ்வரனதும், புளொட்டினதும் அழிவுக்கும் அடிப்படைக் காரணம் எனலாம்.

புளொட்டில் ஏற்பட்ட சீரழிவுகளிலும், முரண்பாடுகளிலும் மிக முக்கியமானது. தங்களது உடல்பலம் கொண்டு மற்றவர்களை அடக்கியாண்டு பழக்கப்பட்ட பிரிவினரும் மூளைபலம் கொண்டு மற்றவர்களை அடக்கியாளப் பழக்கப்பட்ட ஆள்பிடிக்காரர்களும் (அமைப்பாளர்கள்) இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையே இதை ஒரு உட்கட்சிப் போராட்டம் என்று சொன்னால் அது உட்கட்சிப் போராட்டம் என்ற அர்த்தத்திற்கே இழுக்காகும்.

புளொட்டின் உட்கட்சிப் போராட்டத்தின் சூத்திரதாரிகள் என்று சொல்லப்படும் கனவான் எவரும் புளொட் என்ற ஒரு தவறான அமைப்பை உருவாக்கியதில் தங்கள் பங்கு என்ன என்பதை சுயவிமர்சனம் செய்ததில்லை. அரைகுறை வைத்தியன் ஒருவன் அப்பாவி நோயாளியை தன்னுடைய வளர்ச்சிக்கு பலி கொடுப்பது போல் இவர்கள் அப்பாவி இளைஞர்களை பின்னால் இருந்து தூண்டிவிட்டு விட்டு தாங்கள் எப்போதும் நல்ல பிள்ளைகள் போல் தங்களைத தற்காத்துக்கொண்டு எட்டி இருந்து கொண்டார்கள்.

எப்போதும் தங்கள் உடல் பலம் கொண்டு மற்றவர்களை அடக்கியாண்டு பழக்கப்பட்ட அராஜகப் பிரிவினர் இந்த அப்பாவி இளைஞர்களது மனக்குமுறல்களை, கோரிக்கைகளை இயக்க விரோத நடவடிக்கைகளாகப் பார்த்து அவர்களைக் கொன்று புதைகுழிக்குள் அனுப்பிய போது மூளைபலம் கொண்ட பிரிவினர் அவர்கள் அந்தத் துர்ப்பாக்கிய நிலையை அடைவதற்கு தாங்களும் அவர்களை அமைப்புக்குள் கொண்டுவந்தவர்கள் என்ற வகையில் காரணமாக இருந்தவர்கள் என்பதை மறைத்து தாங்கள் நடத்திய உட்கட்சிப் போராட்டத்தின் அனுபவங்களான சுயவிளம்பரப்படுத்தி சுயலாபம் தேடிக்கொண்டனர்.

உண்மையில் இந்த இரண்டு பகுதியினருக்குமிடையில் நடைபெற்ற சமூக ஆளுமையை பங்குபோடுவதற்கான பலப்பரீட்சையில் பலியாகிப் போனவர்களில் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களிலும் பின்தங்கிய மாவட்டங்களிலிருந்தம் வந்த அப்பாவி இளைஞர்கள் தான்.

புளொட்டின் புகழ்பெற்ற ஓரத்த நாடு டீ முகாமில் அச்சுவேலியைச் சேர்ந்த ஒருவர் வைத்திருந்த ஒரு புதிய ஜட்டியை காரணமாக வைத்து அவருடன் ஒன்றாக நாட்டிலிருந்து பின்தளப்பயிற்சிக்கு வந்த ஆறு பேர் புலிகளின் உளவாளிகள் என்ற பேரில் புதைகுழிக்குள் அனுப்பப்பட்ட விடயம் என்பது மறந்துவிடக்கூடிய ஒன்றல்ல. இந்த அறுவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தவளைகளையும், பாம்புகளையும், குரங்குகளையும் கொன்று விஞ்ஞானப் பரிசோதனை செய்வது போல இந்த ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் புளொட்டின் ஜாதியக் கனவான்களின் உட்கட்சிப் போராட்ட பரிசோதனைகளுக்கு பலிக்கடா ஆக்கப்பட்டார்கள் என்ற அருவருக்கத்தக்க உண்மையையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.

கருத்துகள் இல்லை: