ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

காந்திதேசத்தின் மறுபக்கம் 20

20
ஹட்டன் நகரத்தில் சந்திரசேகரனது பிரச்சாரக் கூட்டம் நடப்பதற்கு முன்பு ஈ.பி.ஆர்.எல்.எப்.பினது பிரசாரக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு வடக்கு கிழக்கு முதலமைச்சர் என்ற பந்தாவுடன் மெய்காவற்படை, கூலிப்படை சகிதம் வரதராஜப்பெருமாள் வந்திருந்தார். அவரைப் பார்க்கவென்று ஓரளவு கூட்டம் கூடியிருந்தது. வசந்தனும், சந்திரனும் கூட அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தனர். அவர்கள் அங்கே செல்லும் போது புளொட்டில் இருந்த வேறு இருவரை அவர்கள் பார்த்தார்கள். ஒருவர் புளொட்டின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ஈஸ்வரன், மற்றவர் வசந்தனுக்கு சமகாலத்தில் பயிற்சி பெற்ற முகுந்தன் என்பவர். இருவரும் நீண்ட காலத்திற்கு முன்பே புளொட்டை விட்டு விலகி ஒதுங்கியிருந்தார்கள்.

ஈஸ்வரன் பல மாதங்களாகவே கொட்டகலை பகுதியில் தங்கியிருந்து ரியூசன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். முகுந்தன் ஏன் மலையகத்திற்கு வந்தான் என்பது தெரியாது. ஆனால் வசந்தனுக்கும், சந்திரனுக்கும் சிந்தனை வேறு திசையில் சென்றது. அதாவது அவர்கள் இருவரும் சங்கிலியையும், உமாமகேஸ்வரனையும் கொல்லவே (அப்போதுதான்) மலையகம் வந்திருப்பதாக கதைகட்டிவிட்டு உமாமகேஸ்வரனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சொல்லி தாங்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதாக நம்பவைத்து அவரைக் கொன்றுவிடலாம் என்றும் பழியை அவர்கள் இருவர் மீதும் போட்டுவிடலாம் என்றும் அவர்கள் திட்டமிட்டனர்.

உமாமகேஸ்வரனுடன் ராபின் மட்டுமே கொழும்பிலிருந்து வந்திருந்தான். ஏற்கனவே சங்கிலியுடன் பாதுகாப்புப் பணிக்கென்று அவனையும் சேர்த்து மூவர் மட்டுமே இருந்தனர்.

எனவே, ஈஸ்வரனையும், முகுந்தனையும் கொலை செய்ய வேண்டும் என்று உமாமகேஸ்வரனுக்கு நம்பிக்கை தரும் வகையில் எடுத்துச் சொல்லுவது சங்கிலியையும் அவனுடன் இருந்த மற்ற இருவரையும் அதைச் செய்து முடிக்கும் வேலைக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குவது உமாமகேஸ்வரனுக்கு ராபினுடன் சேர்ந்து தாங்களும் பாதுகாப்புக் கொடுக்கிறோம் என்று சொல்லி உடனிருந்து அவரையும் ராபினையும் கொலை செய்வது என்பது அவர்கள் திட்டமாக இருந்தது.

எனவே உடனேயே அவர்கள் அவசரஅவசரமாக தலவாக்கலவுக்குத் திரும்பி சந்திரசேகரனது தேர்தல் அலுவலகமான பஞ்சலிங்கம் ஸ்டோரில் வந்து உமாமகேஸ்வரனையும், சங்கிலியையும் தேடினார்கள்.

சங்கிலி அவர்கள் இருவரையும் இரகசியமாக பிடித்து தட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஜே.வி.பி. பயிற்சி முகாம் பகுதிக்குச் சென்று விட்டான். மற்றவர்களை கதிரவன்(திவாகரன்) பிரச்சார கூட்ட ஏற்பாடுகளை கவனி;க்க அழைத்துச் சென்றுவிட்டார்.
அங்கு யாரையும் காணாத நிலையில் அவர்கள் அங்கிருந்த சந்திரசேகரனின் உதவியாளரான ராஜாவிடம் உமாமகேஸ்வரனும் சிவாவும் (சங்கிலியின் மலையகப் பெயர் அவன்தான் சங்கிலி என்பது யாருக்கும் தெரியாது) எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியுமா? என்று அவர்கள் கேட்டனர்.

தங்களது கூட்டங்களுக்கு பாதுகாப்புக்கு வந்தவர்கள் என்ற வகையில் மட்டுமே அவர்களைப் பற்றி அறிந்திருந்த ராஜா சிவா எங்கே போனார் என்று தெரியாது. உமா நேற்றே கொழும்புக்கு போய்விட்டதாக சிவா சொன்னாரே உங்களுக்குத் தெரியாதா? என்றார்.

அவர்களுக்குப் பேரதிர்ச்சியாகப் போய்விட்டது. அடே எல்லாப் பிளானும் வீணாப் போச்சு என்று சலித்துக் கொண்டனர். தங்களது திட்டம் தெரிந்துதான் அவர் கொழும்புக்கு போனார் என்று சிந்திக்க அவர்களது அறிவுக்குத் தோன்றவில்லை.

இனி மலையகத்தில் நின்று பிரயோசனம் இல்லை என்று முடிவெடுத்துக் கொண்டு சங்கிலி அல்லது கதிரவன் வந்தால் தாங்கள் கொழும்புக்குப் போவதாக சொல்லும்படி சொல்லிவிட்டு பஸ் ஏறினார்கள்.

ஈஸ்வரனும், முகுந்தனும் உமாவை தட்ட காத்திருந்த செய்தியை அவசரமாக தெரிவிக்க வந்தவர்களைப் போல அவர்கள் கொழும்பு அலுவலகத்திற்கு சென்றார்கள்.
அவர்கள் அங்கு வந்திருந்த செய்தியையும், கொண்டு வந்த செய்தியையும் ராபின் மூலமாக அறிந்த உமாமகேஸ்வரனுக்கு தான் சொன்ன வேலையை ஒழுங்காக செய்யாமல் தப்பிவிட்டதற்காக சங்கிலி மீது கோபம் ஏற்பட்டது. உடனடியாகவே தொலைத்தொடர்பு நிலையம் மூலமாக (கொழும்புக்கும், மலையகத்திற்கும் தனியாகத் தொலைத் தொடர்பு நிலையம் புளொட்டிற்கு இருந்தது) சங்கிலியுடன் தொடர்பு கொண்டு அவனை வாங்குவாங்கென்று வாங்கிவிட்டார். அவன் தான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த நேரத்தில் நீங்கள் இங்கே இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவர்கள் உங்கே வந்துவிட்டார்கள். அவர்களைத் தந்திரமாக இங்கே திரும்பி அனுப்பி வையுங்கள் என்று உமாவுக்குச் சொன்னான்

உமாமகேஸ்வரனுக்கு அவர்களை மீண்டும் அங்கே திரும்பி அனுப்ப ஏனோ மனம் இடந்தரவில்லை. சங்கிலி கோபத்தில் ஏதாவது ஏடாகூடமாக செய்து முடித்தால் மலையக வேலைகள் பாழாகிப் போய்விடுவதோடு சங்கிலியும் மாட்டுப்பட நேரும் என அவர் பயந்தார். எனவே உடனேயே அவர்கள் இருவரும் மலையகத்திலிருந்து கதிரவனிடம் சொல்லாமல் திரும்பி வந்தது தவறு என்றும் அதற்கான விளக்கத்தை எழுதி கொழும்பு அலுவலகப் பொறுப்பாளரிடம் கொடுத்துவிட்டு முள்ளிக்குளம் முகாமுக்கு உடனடியாக திரும்பிப் போகும்படி கடிதம் எழுதி அனுப்பினார். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட வசந்தனுக்கும், சந்திரனுக்கும் தாங்கள் சொன்ன ஈஸ்வரன் கதையை உமாமகேஸ்வரன் நம்பவில்லை என்று தெரிந்தது. எனவே அவர் எழுதியுள்ளபடி முகாமுக்குச் சென்று வேறொரு சந்தர்ப்பத்திற்கு காத்திருந்து உள்ளுக்குள் இருந்தே அவரை கொலை செய்ய வேண்டும் என்று எண்ணினார்கள். முகாமுக்குச் செல்லாமல் கொழும்பில் நின்றால் நிச்சயமாக அவருக்கு தங்கள் மேல் சந்தேகம் வரும் என்று அவர்கள் பயந்தார்கள்.

வசந்தனைப் பொறுத்தவரை தன்னுடைய திட்டம் இன்னமும் உமாமகேஸ்வரனுக்குத் தெரியாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். தான் தமிழகம் சென்று திரும்பிய விடயம் கூட அவருக்குத் தெரியாது என்றே அவன் நினைத்திருந்தான். அவர் சொல்லியபடிதான் இரகசியமாக யாழ்ப்பாணம் போனதாகவும் அங்கே புலிகளுக்கு தெரியாமல் பல இடங்களுக்குச் சென்று புளொட்டின் முன்னாள் ஆதரவாளர்களைச் சந்தித்து தேர்தலில் DPLFகுக்கு வோட்டுப் போடும்படி கேட்டுக் கொண்டதாகவும் கதையளந்திருந்தான்.

உமாமகேஸ்வரன் இதையெல்லாம் தெரிந்தும் தெரியாதவர் போல நடந்து கொண்டார். வசந்தன் விடயத்தை அவர் கையாண்ட விதம் என்பது அவரது 80களின் தொடக்க கால நடவடிக்கைகளுக்கும், இறுதி கால நடவடிக்கைகளுக்குமுள்ள வேறுபாட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

80களின் நடுப்பகுதிவரை அதாவது பின்தளக்காலத்தில் உமாமகேஸ்வரனுக்கு ஒருவர் மீது சந்தேகம் வந்துவிட்டால் தனிப்பட்ட முறையில் ஒருவர் தனக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்று தெரிந்துவிட்டால் அவரை நீண்ட காலம் உயிரோடு விட்டுவைக்க. அவர் விரும்பவில்லை. (உ-ம் சந்ததியார், சிவனேஸ்வரன் கொலைகள்) இதை சிலர் உமாமகேஸ்வரனுக்கு இருந்த பலவீனம் என்று சொல்லுவார்கள். சிலர் இது அராஜகம் என்று சொல்வதுண்டு. அவரது விசுவாசிகளே இது தலைமைத்துவத்துக்குரிய சாணக்கியம் என்று வாக்காலத்து வாங்குவதுண்டு. எது எப்படியோ பிள்தளக் காலத்தில் உமாமகேஸ்வரனது மறுபக்கம் என்பது இப்படித்தான் இருந்தது.

இந்த மறுபக்கத்தை பயன்படுத்தத் தெரிந்து கொண்ட குடாநாட்டு பயில்வான்கள் கூட்டம் (புளொட்டுக்குள் இருந்த) உமாமகேஸ்வரனுக்காக உமாமகேஸ்வரன் பெயரால் உமாமகேஸ்வரன் சொன்னதாக சொல்லிக் கொண்டு பல திருவிளையாடல்களை நடத்தினர். சுழிபுரம் கொலைகள் முதற்கொண்டு ஒரத்த நாட்டு (தமிழ் நாடு) புதைகுழிகள் வரை அதில் அடக்கம். இதில் உமாமகேஸ்வரன் உத்தரவிட்டது10 என்றால் செய்யப்பட்டது 100.

தான் சைட் அடித்த தமிழ்நாட்டுப் பெண்ணை தனக்குக் கீழே இருந்த ஒருவன் காதலித்துவிட்டான் என்பதற்காகவே அவனைப் புலிகளின் உளவாளி என்று முத்திரை குத்தி உமாமகேஸ்வரனின் உத்தரவு என்ற பெயரில் ஒரத்த நாட்டு சவுக்கு மரத்திற்கு உரமாக்கிய சம்பவம் மக்கள் யுத்தத்தின் மகத்தான வரலாறு.


உமாமகேஸ்வரன் தன்னுடைய தவறுகளுக்கு அந்தப் பயில்வான்கள் கூட்டத்தைப் பயன்படுத்தியதன் மூலம் தன்னுடைய பெயரால் அந்தப் பயில்வான்கள் செய்த தவறுகளை அவர் தட்டிக் கேட்க முடியாமல் போனார். அதன்மூலம் அந்தத் தவறுகளுக்கு அவரே காரணகார்தாவாகவும் ஆனார்.

80களின் பிற்பகுதியில் புளொட்டில் ஏற்பட்ட உடைவைத் தொடர்ந்து வந்த தோல்விகள், புளொட்டின் சீரழிவுத் தன்மை இவையெல்லாம் உமாமகேஸ்வரனை முழுமையாக மாற்றிவிட்டது என்று சொல்லா விட்டாலும் கொஞ்சம் மாற்றியது. எதிராளிகளை அவர் விட்டுப்பிடிக்க ஆரம்பித்தார். பயில்வான்கள் சுயமுடிவுகள் எடுப்பதை இயன்றவரை தவிர்க்க முயற்சித்தார்.

கருத்துகள் இல்லை: