சனி, 20 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறுபக்கம் 18

18
மலையகத் தமிழர்களை வடக்கத்தையான், தோட்டக்காட்டான், கள்ளத் தோனி என்றெல்லாம் இழிவு செய்து அவர்களது வாக்குரிமையைப் பறித்து அவர்களை வாக்குச்சீட்டு அரசியல் மூலம் நாடற்றவர்களாக்கி சிங்கள இனவாதிகளுக்குப் பக்கபலமாக நின்ற யாழ்ப்பாணத்து லண்டன் கனவான்களினதும், சாதிய பயில்வான்களினதும் வழிவந்த பாலபுத்தர் அன் கொம்பனியினுடைய எதிர்பிபனால் மலையகத்தில் தேர்தல் வேலைகளோ கதிரவன் செய்த அரசியல் வேலைகளோ ஒன்றும் தடைப்பட்டுப் போய்விட வில்லை.

கதிரவனைப் பொறுத்தவரை வடக்குக் கிழக்கில் அமைப்பை உருவாக்கிய மக்கள் யுத்தக் கனவான்கள் செய்த தவறை அலையகத்தில் செய்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எந்தக் காரணத்தைக் கொண்டும் மலையக இளைஞர்களுக்கு ஆயுத ஆசை காட்டி வடக்குக் கிழக்கு கூலிப்படைகளாக அனுப்பக் கூடாது என்பதில் அவர் கண்டிப்புடன் இருந்தார். மலையக இளைஞர்கள் மலையகத்திலேயே போராட்டத்தை உருவாக்க வேண்டும். மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக அவர்கள் தாங்களே தலைமை தாங்கிப் போராட வேண்டும் என்பதிலும் மலையகத்தின் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தலைமை தாங்கக் கூடிய வெகுசன அமைப்புக்கள் மூலமாக இளைஞர்களது எழுச்சியை ஒழுங்கமைத்து ஒரு படிமுறை வளர்ச்சியூடாகவே புலிகளைப் போல் கட்டுப்பாடும், இரகசியம் காக்கும் தன்மையும் மிக்க அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதிலும் அவர் கருத்துடன் இருந்தார்.

வடக்குக் கிழக்கு மக்களாகிய நமக்கு நமது தாயகம் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு பிரதேசம் இருக்கின்றது. ஏங்களுக்கென்று சொந்த நிலம் இருக்கின்றது, எங்களில் 80 வீதமானவர்களுக்கு சொந்த சேமிப்புக்கூட இருக்கின்றது. சிறிலங்கா அரசின் இராணுவ வன்மறைகளால் நாம் சொந்த பிரதேசங்களைவிட்டு விரட்டப்பட்டாலும் மீண்டும் சுமுக நிலை ஏற்படும் போது நாங்கள் எங்கள் சொந்த இடங்களுக்குப் போய் இது எங்கள் மண், இது எங்கள் வீடு என்று உரிமை கொண்டாடக் கூடிய நிலை எங்களுக்கு இருக்கின்றது.


ஆனால் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை அவ்வாறானதல்ல. அவர்கள் பிரித்தானியர்களால் கூலிகளாக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகளாகின்றது. அவர்கள் கண்டி சீமைக்கு வந்த போது ஆங்கிலேயரின் கைக்கூலிகளான கங்காணிகள் புழுகித் தள்ளியது போன்று வழமான வசதியான வாழ்க்கை காத்திருக்கவில்லை. கொட்டும் மழையிலும் பழக்கமே இல்லாத கடும் குளிரிலும் கொலரா, மலேரியா போன்ற ஆட்கொல்லி நோய்களின் கடும் கொடூரத்தாலும் அவர்கள் பட்ட கஸ்டம் எழுத்தில் எழுதி மாழாது. அடர்ந்த காடாக இருந்த மலையகம் இன்று தேயிலைத் தோட்டங்களாகவும் இறப்பர் தோட்டங்களாகவும் மாறி பொன்விழையும் பூமியாகக் காட்சி தருகின்றதென்றால் அதற்குப் பின்னால் ஒவ்வொரு தேயிலைச் செடிக்கும், ஒவ்வொரு இறப்பர் மரத்திற்கும் பின்னால் தோட்டத் தொழிலாளர்களது இரத்தம், உழைப்பு, வியர்வை உயிர், உடல் எல்லாமே இருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்கள் தங்களது உழைப்பை மட்டுமல்ல வியர்வையை, இரத்தத்தைச் சிந்தி உயிரைக் கொடுத்து உடலை உரமாக்கித் தான் அந்தத் தோட்டங்களை உருவாக்கினார்கள்.

இரண்டாவது உலக யுத்தம் முடிந்த காலத்தில் இன்று பெரிய பணக்கார நாடுகளாகவும் வல்லரசுகளாகவும் இருக்கும் மேற்குலக நாடுகளே கடன்கார நாடுகளாக இருந்தன.

இன்று பிச்சை கேட்டு நிற்கும் இலங்கை அன்று கடன் கொடுத்த நாடாக இருந்தது. இரண்டாவது உலக யுத்த நடவடிக்கைக்கு நிறைய இறப்பர் தேவைபட்ட போது இலங்கை அதை கொடுக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருந்தது. இங்கிலாந்து நாடு அவ்வாறு இலங்கையிடமிருந்து இறப்பரை கொள்வனவு செய்த வகையில் இலங்கையிடம் கடன்பட்ட நாடாக இருந்தது. இவ்வாறு இலங்கைக்கு கொடுக்க வேண்டிய பணம் ஸ்டேலிங் நிலுவைக் கணக்கு என அழைக்கப்பட்டது.

வெள்ளைக்கார எஜமான் இந்த நாட்டைவிட்டுப் போன பின்பு அவனது இடத்தை சுவீகரித்துக் கொண்ட டி.எஸ்.சேனநாயக்காவின் கூட்டமும் யாழ்ப்பாணத்து திருச்செல்வம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் குழுவும் மலையக மக்கள் இரத்தம் சிநத்தி உழைத்த அந்தப் பணத்தைக் கொண்டு அரிசியும், மாவும் இறக்கி வயிறு முட்டச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டுதான் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கி அவர்களை ஒரு இனச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் திட்டமிட்டு மிகப்பெரிய அநீதியை இழைத்தது.


பின்னாளில் தந்தை செல்வா என்று அழைக்கப்பட்ட செல்வநாயகம் கூட இந்த அநீதியை எதிர்த்து ஒப்புக்காக தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தாரே அன்றி இதை எதிர்த்து மாபெரும் அரசியல் போராட்டம் நடத்தவோ பறிக்கப்பட்ட வாக்குரிமையை மீண்டும் பெற்றுக் கொடுக்கவோ அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை. இது இந்திய வம்சாவழித் தமிழர் பிரச்சினை இது எமது போராட்டத்திற்கு தேவையில்லாத களம் என இவர்கள் விட்டுவிட்டார்கள்.


வெள்ளைக்கார எஜமான் நயவஞ்சகமாக எமது தேசியத்தை நசுக்கி எமது ஆட்சியுரிமையைப் பறித்து எம்மை தான் தன்னுடைய நலனுக்காக உருவாக்கிய சிறிலங்கா என்ற சிறை கூட்டத்துக்குள் அடைத்துவிட்டு அதை காவல்காக்கும் நிறுவனமாக பாராளுமன்ற ஆட்சிமுறையை உருவாக்கிய போது அந்தச் சிறையை உடைத்து தமிழர் தேசியத்தையும் , தமிழர் ஆடசி உரிமையையும் விடுவித்து உறுதி செய்வதற்குப் பதில் அந்தச் சிறையை காப்பதற்கு காவலாளிகளாகச் செல்ல ஓட்டப் போட்டி நடாத்திக் கொண்டிருந்த இவர்களுக்கு இது ஒரு தேவையில்லாத களம் தான்.

2000 வருடத்திற்கு முன் இந்தியாவிலிருந்து வநற்த விஜயனின் வாரிசுகள் தாங்கள் என்று சொல்லும் சிங்களவர்களை இலங்கையர்கள் என்று அழைத்த இவர்கள் ஒரு நூறு வருடத்திற்கு முன் அவுஸ்ரேலியாவிற்கும், தென்னாபிரிக்காவுக்கும் சென்ற வெள்ளையர்களின் அவுஸ்ரேலியர்கள் என்றும், தென்னாபிரிக்க வெள்ளையர்கள் என்றும் அழைத்த இவர்கள் 150, 200 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்த அப்பாவித் தோட்ட தொழிலாளர்களைத் தங்களுக்குச் சமமாக இலங்கைத் தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்வதற்கும் அழைப்பதற்கும் இவர்களுக்கு மனம் வராமல் போனதற்கு அடிப்படைக் காரணம் சாதி, தமிழ் நாட்டில் நிலவிய மிகக் கொடுமையான சாதிய அடக்கு முறையால் பாதிக்கப்பட்ட மக்களே கண்டிச் சீமைக்கு போனாலாவது தங்களுக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்று நம்பி புலம் பெயர்ந்து வந்தார்கள் என்பது இவர்களுக்குத் தெரியும்.

மறுபக்கம் இவர்களை இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று இலங்கைத் தமிழர்களில் இருந்து பிரிந்து பெருமைப்படுபவர்கள் இவர்களது தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள். இவர்களில் 99 வீதமானவர்களுக்கு இலங்கைப் பிரசா உரிமையும் உண்டு. இலங்கையிலும் வீடுகள் சொத்துக்கள் உண்டு. இந்தியாவிலும் வீடுகள் சொத்துக்கள் உண்டு. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற தமிழர் பழமொழியின்படி இயங்கும் இவர்களுக்கு இந்த மக்கள் ஒரு வியாபாரப் பொருள்தான். இந்த வியாபாரப் பொருட்களுக்குப் இவர்கள் இட்ட வியாபார சின்னம் தான் (வுசயனந ஆயசம) இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்ற இந்த அடையாளச் சின்னம் அழிந்து இலங்கைத் தமிழர்கள் என்ற பொதுக் குறியீட்டுக்குள் அவர்கள் வந்துவிட்டால் இவர்களுக்கு திருச்சிக்கும், தஞ்சாவூருக்கம்,புதுக்கோட்டைக்கும் செல்வம் அனுப்ப வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதே யதார்த்தம்.

உண்மையில்இலங்கை மண்ணிலே பிறந்து வளர்ந்த குப்புசாமிக்கும், சுப்பிரமணிக்கும் தமிழ் நாட்டு மண் என்ன நிறம் என்று கூடத் தெரியாது. பாட்டன் முப்பாட்டன் காலத்துடனேயே அவனது தமிழகத் தொடர்பு அழிந்து போய்விட்டது. பலருக்கு அங்கே உறவினர்கள் கூடக் கிடையாது. 200 வருட காலம் இலங்கையிலேயே அவர்கள் இரத்தம் சிந்தி உழைத்தார்கள். அவர்களது உழைப்பினால் பலர் கோடீஸ்வரர்களானார்கள். இலங்கை மக்களுக்கு அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் சரி சிங்களவர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் இலவச அரிசியும் உணவு மானியமும் கிடைத்தது. அவர்களது உழைப்புத் தந்த அந்நியச் செலவாணியினால் கொழும்பு நகரத்தில் மாடமாளிகைகள் எழுந்தன. ஆடம்பர சொகுசுக் கார்கள் ஓடின. பஜிரோ ஜீப்புக்கள் வந்து இறங்கின. ஆனால் பாவம் இதற்கெல்லாம் காரணமாயிருந்த இந்த மக்களுக்கென்றுதான் ஒன்றுமேயில்லை. அவர்கள் குடியிருக்கும் நிலம் அவர்களுக்குச் சொந்தம் இல்லை. நாளைக்குச் சாப்பிட வேண்டுமானால் இன்றைக்கு அவர்கள் வேலை செய்துதான் ஆக வேண்டும்.
தோட்டத்துரை அவர்களை வேiலியிலருந்து நிறுத்தி லயத்தைவிட்டு விரட்டிவிட்டால் பஞ்சப் பரதேசிகளாக அவர்கள் நடு வீதிக்குத்தான் வரவேண்டிய நிலை ஒரு போதும் அவர்கள் தாங்கள் வேலை செய்த தோட்டத்திற்குச் சென்று இது எங்களது தோட்டம், இது நாங்கள் குடியிருந்த நிலம், இது நாங்கள் குடியிருந்த லயம் என்று உரிமை கொண்டாட முடியாது.

உண்மையில் தோட்டத்துரை அல்லது தோட்ட நிர்வாகம் என்ற சில தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புக்களால் தீர்மானிக்கப்படக்கூடிய நவீன கொத்தடிமைகளாகத்தான் அவர்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயிருந்த தொழிற்சங்கங்கள் இன்னொரு துரைத்தனத்தைத்தான் அங்கே உருவாக்கியிருந்தன. அமைச்சர் தொண்டமானினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட பிரஜா உரிமையும், வாக்குரிமையும் அடிப்படையில் அந்த மக்களது பொருளாதார அரசியல் சமூக அடக்கு முறைகளைத் தகர்க்கவில்லை. மாறாக சிறையில் இருக்கும் ஒருவனுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு ஒப்பானதாகவே அவை இருந்தன.

இந்தப் பின்னணியில் நடக்க இருந்த 1988 பொதுத் தேர்தலை மாற்றத்தை விரும்பும் மலையக மக்களின் தொகையை அறியும் கருத்துக் கணிப்பாக கொள்ள கதிரவன் திட்டமிட்டார். சந்திரசேகரன் தேர்தலில் நிற்பார் என்று தெரிந்தவுடனேயே அங்கே பெரும் பரபரப்பும், பெரிய எதிர்பார்ப்பும் குறிப்பாக இளைஞர்களிடையே உருவாகியது. தேர்தல் மனு தாக்கல் செய்த அன்றே அந்த கரைபுரண்ட உற்சாகத்தை அறிய முடிந்தது.

அதேநேரம் சந்திரசேகரனை கொல்வதற்கு ஒரு சதி முயற்சி நடந்தது. நுவரெலியாவில் தேர்தல் மனு தாக்கல் செய்து விட்டு தலாவாக்கலைக்கு திரும்பி வரும் சமயத்தில் நானு ஓயா பாலத்தில் வைத்து சந்திரசேகரனை சுட்டுக் கொல்ல இரு இளைஞர்கள் காத்திருந்தார்கள்

கருத்துகள் இல்லை: