ரஜீவ்காந்தியின் பிள்ளைகளைக் கடத்தி பணயம் வைக்க திட்டமிட்ட விடயம் றோவுக்கு தெரிய வந்ததையிட்டு உமாமகேஸ்வரனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் (உமாவின் நண்பர்) தான் முதலில் இந்தத் தகவலை அவருக்கு தெரிவித்திருந்தார். அதுவும் இப்படியாக முட்டாள்தனமான காரியங்கள் எதிலும் இறங்க வேண்டாம் என்றும் நேரு குடும்பத்தில் கை வைத்தால் இந்தியா தனது முழுச்சக்தியையும் பயன்படுத்தி உங்களை ஒழிக்க முற்படும் என்றும் எச்சரிக்கை கலந்த ஆலோசனையை உமாமகேஸ்வரனுக்கு தெரிவித்தார்.
அதன் பின்பே உமா, பாலஸ்தீன நண்பர் ஹமால்டினுடன் தொடர்பு கொண்டு தனது கடுமையான ஆதங்கத்தை தெரிவித்துக் கொண்டார். தன்னுடைய தரப்பிலிருந்து நிச்சயமாக இந்த விடயம் வெளியே போயிருக்காது என்று அவர் உறுதியாக நம்பினார். தன்னுடன் கராச்சிக்கு துணையாக வந்த ராபினுக்குக் கூட இந்த விடயத்தைப் பற்றி அவர் சொல்லவில்லை. ஹமால்டின் தரப்பில் இருந்துதான் இது வெளியாகியிருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.
ஹமால்டினுக்குக் கூட இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பாருக்தாதா மீது தான் அவருக்குச் சந்தேகம் வந்தது. இஸ்லாமிய நலனை மட்டுமல்லாமல் வியாபார நலனையும் குறியாக கொண்ட அவர் தன்னுடைய சுயலாபத்துக்காக இந்த விடயத்தை றோவுக்கு தெரிவித்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. நடந்த சம்பவத்திற்காக உமாமகேஸ்வரனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர் நடந்த தவறை ஈடு செய்ய மாலைதீவு சகாக்களை மீட்கும் நடவடிக்கைக்கு தான் முக்கியமான வேறு பங்களிப்பை செய்வதாக உறுதி கூறினார்.
ஆனால் அவரது இந்த உறுதி மொழி உமாமகேஸ்வரனது கவலையை போக்கவில்லை. அவர் தனது வதிவிடத்தை கராச்சிக்கு மாற்றுவதையிட்டு பெரும் நம்பிக்கை கொண்;டிருந்தார் கொழும்பு நிலைமை நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற முன்னமே ஜனாதிபதி வேட்பாளரான பிரேமதாசாவை ஒழித்துவிட உமாமகேஸ்வரனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பிரேமதாசாவிற்கு எதிரான ஐக்கியதேசியக் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் அவரது உதவியை நாடினார். பிரேமதாசா ஒழிந்தால் தான் வேட்பாளராக இருக்கலாம் என்பது அவரது எண்ணம்.
ஆனால் உமாமகேஸ்வரன் மாலைதீவு சம்பவ நேரத்தில் தனக்கு கைகொடுக்கத் தவறிய அந்த ஐ.தே.கட்சி முக்கியஸ்தருக்கு சமயம் பார்த்து பதிலடி கொடுக்கும் விதத்தில் தன்னால் அவர் சொல்லும் காரியத்தை செய்ய முடியாதென தீர்க்கமாக மறுத்து சொல்லிவிட்டார். படையினர் மத்தியிலும் கொழும்பு அரசியல் குண்டர்கள் மத்தியிலும் பெரும் செல்வாக்குப் பெற்ற அந்த முக்கியஸ்தர் இதைக்காரணமாக வைத்து தனக்கு நெருக்கடி தரக்கூடும் என்று அவர் அஞ்சினார்.
வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி அது பிரேமதாசாவாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால் என்ன வெற்றி பெற்றால் தன்னுடைய செயற்பாடுகளுக்கு அது தடையாக இருக்குமென்று அவருக்குத் தோன்றியது. அதனால் எதிர்க்கட்சி வேட்பாளரான சிறிமா அம்மையார் வெற்றி பெறுவதற்கு உழைக்குமாறும் தங்களுடைய கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் சிறிமா அம்மையாருக்கு வாக்களிக்குமாறு மக்களை தூண்டும்படியும் இயக்கத்தின் சகல பொறுப்பாளர்களுக்கும் உமா அறிவித்திருந்தார்.
ஆனால் அவருடைய கஸ்ர காலம் அவர் எதிர்பார்த்ததிற்கு மாறாக ஐ.தே.கட்சியே தேர்தலில் வெற்றி பெற்றது. பிரேமதாசாவே ஜனாதிபதியானார். உமாமகேஸ்வரனுக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. கராச்சி விடயம் முடியாதென்று ஆகி விட்டது. கொழும்பு நிலைமைகள் போகப் போக எப்படி ஆகும் என்று சொல்ல முடியாது. வவுனியா பகுதிக்குச் சென்றால் , புலிகள் இந்திய - இராணுவம் இரண்;டு பகுதியினராலும் நெருக்கடியை எதிர்பார்க்க வேண்டும். மலையகத்தில் வேண்டுமானால் தற்காலிகமாக கொஞ்சக்காலம் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் நீண்ட நாளைக்கு அது முடியாது. இப்படி அவர் சிநத்தித்துக் கொண்டிருந்த போது ஐனாதிபதி பிரேமதாசாவின் மிக நெருங்கிய நண்;பரான முஸ்லிம் தலைவர் ஒருவர் வந்து, அவரைச் சந்தித்து பிரேமதாசா அவரைச் சந்திக்க விரும்புகிறார் என்ற செய்தியைத் தெரிவித்தார். இந்தச் செய்தி தாகத்தால் தவித்த ஒருவனுக்கு தண்ணீர் கிடைத்ததைப் போல் இருந்தது உமாவுக்கு.
பிரேமதாசாவை பொறுத்தவரை, சிறிலங்கா அரசியலில் அவர் சாதி அந்தஸ்தில் குறைந்தவர். சிறிலங்காவின் ஆட்சி பீடம் எப்போதும் தங்களது பரம்பரைச் சொத்தாக எண்ணிவரும் கண்டிய கொயிகம உயர் சாதியினர் தன்னைத் தொடர்ந்து ஆட்சி செலுத்த அனுமதிக்கமாட்டார்கள் என்ற பயம் அவருக்கிருந்தது. பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் உட்பட அனைத்துத் துறையிலும் கொயிகம சாதியினரது அதிகாரமே கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்த்தனா தலைமையிலான பச்சைப் புலிகள், விசேட அதிரடிப்படை (ளுவுகு) ஆகியவற்றால்கூட தனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என அவர் பயந்தார். பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துறைகளில் தன்னுடைய ஆட்களைப் போட்டு தன்னுடைய அதிகாரத்தை உறுதி செய்யும் வரை, அவருக்கு இராணுவ ரீதியாக நம்பிக்கைக்குரிய அடியாட்கள் படை தேவைப்பட்டது. அரசியல் ரீதியாக அவருக்கென்று கொழும்பின் அடிமட்ட சேரிப்பகுதிகளில் பெரிய குண்டர் படை ஒன்று இருந்தாலும் அது இராணுவ ரீதியாக பயிற்றப்பட்டதல்ல. புலிகளுடன் அவர் பேச விரும்பினார். ஆனால் புலிகள் ஒருபோதும், தான் சொல்கிறபடி செய்வதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று அவருக்குத் தெரிந்தது. எனவே அவர்களைவிட்டால் புளொட் ஒன்றுதான் தன்னால் அணுகக்கூடிய இயக்கமாக அவருக்குத் தோன்றியது.
பிரேமதாசா அடிப்படையில் ஒரு இந்திய எதிர்ப்பாளர் அல்ல. கொழும்பிலுள்ள இந்திய முதலாளிகளில் பெரும் பகுதியினர் அவரது நண்பர்கள். தில்லுமுல்லுகளும், சுத்துமாத்துக்களும் நிறைந்த பாராளுமன்ற அரசியலில் சிறுவயதிலிருந்தே ஈடுபட்டு அனுபவம் பெற்ற அவர் இந்திய எதிர்ப்பை, வாக்கு வேட்டைக்கான ஒரு கருவியாகவே பயன்படுத்த முற்பட்டிருந்தார். எனவே, இந்திய எதிர்ப்பாளர்களாக உள்ள தமிழ் இயக்கங்களை தன்னுடைய நண்பர்களாக்கிக் கொள்ள அவர் விரும்பினார். புலிகள், புளொட் இரண்டும்தான் இந்திய எதிர்ப்பு இயக்கங்களாக அவருக்குத் தெரிந்தது. புளொட்டைப் பொறுத்தவரை அது இந்தியாவுடனும், றோவுடனும் முன்பு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது பிரேமதாசாவுக்குத் தெரியாது. அவர் மாலைதீவு தாக்குதல் காலத்தில் உமாமகேஸ்வரன் விட்ட இந்திய எதிர்ப்பு அறிக்கைகளைப் பார்த்து புளொட்டும் இந்திய எதிர்ப்பு இயக்கம் என்று முடிவுகட்டிவிட்டார். மாலைதீவு புரட்சியை இந்தியா முறியடித்துவிட்டதால் உமாமகேஸ்வரனுக்கு இந்தியா மீது ஆத்திரம் இருக்கும் என்றும் அவர் நம்பினார்.
இந்தப்பின்னணியில் பிரேமதாசா பதவிறே;ற மூன்றாவது வாரம் அவரது கொழும்பு இல்லத்தில் உமாமகேஸ்வரன் அவரைச் சென்று சந்தித்தார்.
உமாவை அன்புடன் வரவேற்ற பிரேமதாசா அவருடன் மனம் திறந்து பேசினார். சிறுவயதில் தான் பட்ட கஸ்ரம் தன்னுடைய சமூக அமைப்பினால் அரசியலுக்குள் தான் அடைந்த அவமானங்கள் தன்னுடைய விடாமுயற்சியினாலும், கடுமையான உழைப்பினாலும் தான் ஜனாதிபதியாக உயர்ந்த பதவிக்கு வந்திருக்கும் நிலை இவற்றை எல்லாம் விபரமாகச் சொன்ன அவர் தனக்குள்ள பிரச்சினைகளையும் எடுத்துச் சொன்னார். சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள ஒருவன் உயர்ந்த பதவியை அடையும் போது மேல் நிலையில் உள்ளவர்கள் ஒரு நாளும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எப்போதும் அவனுக்கு இடைஞ்சல் செய்யவும் அவனை ஒழித்துவிடவுமே முயற்சி செய்வார்கள். இந்த நிலைதான் என்னுடைய இப்போதைய நிலையும் என்று குறிப்பிட்டதோடு தான் அதிகாரிகள் மட்டத்தில் சகல துறைகளிலும் மாற்றங்களைச் செய்து தனது ஆட்களைப் போடும் போது தனக்கு ஏதாவது சவால்கள், அச்சுறுத்தல்கள் வந்தால், அந்தச் சயத்தில் உமாமகேஸ்வரன்தான் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உமாமகேஸ்வரனிற்கு பிரேமதாசாவின் மனம் திறந்த பேச்சு மிகவும் பிடித்துவிட்டது. தான் தேவைப்படும் போது கண்டிப்பாக அவருக்கு உதவி செய்யக் காத்திருப்பதாக உறுதியளித்த உமா, தான் கொழும்பில் தொடர்ந்து தங்கியிருக்க பிரேமதாசாவின் ஒத்துழைப்புத் தேவை என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு, நீங்கள் கொழும்பில் தங்கியிருக்க வேண்டும் என்பது தானே என்னுடைய விருப்பமும் என்று சிரித்துக் கொண்டே சொன்ன பிரேமதாசா ஆனால் தயவு செய்து கொழும்பில் எனக்குத் தெரியாமல் ஏதாவது செய்து, எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விட வேண்டாம். வவுனியாவிற்கு அப்பால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் அந்தச் சந்திப்பு முடிந்தது.
ஜே.ஆரை முன்பு உமாமகேஸ்வரன் சந்தித்த போது முக்கியப்படுத்தப்பட்டது போல் இந்த பிரேமா உமா சந்திப்பு பகிரங்கப்படுத்தப்படவில்லை. பிரேமதாசா தன்னுடைய தேவைகளையொட்டி இதைப் பகிரங்கப்படுத்த அனுமதிக்கவில்லை.
ஆனாலும் இது எப்படியோ பிரேமதாசாவைக் கொலை செய்ய உமாவின் உதவியைக் கோரிய ஐ.தே.கட்சி முக்கியங்தருக்குக் தெரிந்துவிட்டது. மடியில் நெருப்பைக் கட்டியது போல் அவர் இருப்புக் கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தார். தன்னைப் பற்றி உமாமகேஸ்வரன் ஏதாவது பிரேமதாசாவிடம் சொல்லியிருப்பாரோ என்று அவர் பயப்பட ஆரம்பித்தார்.
பச்சைப் புலிகள் அல்லது stf ஐக் கொண்டு உமாமகேஸ்வரனைத் தட்டிவிட்டால் என்ன என்று அவர் யோசனை செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக