ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

காந்திதேசத்தின் மறுபக்கம் 23

23

உமாமகேஸ்வரனுக்கு தமிழ் நாட்டில் ஒரு எஸ்டேட்டும் சுவிஸ் பங்கியில் பெருந்தொகை பணமும் இருப்பதாக 1985லேயே குற்றச்சாட்டு எழுந்தது. அன்று உமாமகேஸ்வரனது விசுவாசிகளாக இருந்த யாழ்ப்பாணக் கனவான்கள் இதில் உண்மை இல்லை என்றும், புளொட்டை உடைக்க நினைக்கும் சூழ்ச்சிக்காராகளின் பொய்ப்பிரச்சாரமே இது என்றும் மறுத்துப் பேசினார்கள்.

ஆனால் உமாமகேஸ்வரன் இந்தக் குற்றச்சாட்டை முழுக்க முழுக்க பொய் என்று ஒருபோதும் மறுத்ததில்லை. இயக்கத்தின் எதிர்கால நலன் கருதி இயக்கத்திற்கு வெளிநாடுகளில் (தமிழ் நாடு உட்பட) சில அசையும் அசையா சொத்துக்கள் இருக்கின்றன என்றும் மற்றவர்கள் குற்றம் சாட்டுவது போல அது தன்னுடையதோ அல்லது தன்னுடைய உறவினர்களதோ பெயரில் இல்லையென்றும் அமைப்புக்கு வேலை செய்யும் மிக நம்பிக்கைக்குரிய சில நபர்களின் பெயரிலேயே இந்தச் சொத்துக்கள் இருப்பதாகவும் ஒத்துக்கொண்டிருந்தார்.

அதாவது இந்தச் சொத்துக்களுக்கு ஐந்து பேர் பொறுப்பென்றும் அதில் மூவர் லண்டனிலும் ஒருவர் ஜேர்மனியிலும் ஒருவர் தளத்திலும் (இலங்கையில்) இருப்பதாகவும் அவர் சொல்லியிருந்தார். ஆனால் அவர்களின் பெயரை அவர் சொல்லவில்லை. 1986இல் புளொட் இரண்டாக உடைந்த போது லண்டனில் இயக்கத்தின் சொத்துக்களுக்குப் பொறுப்பாக இருந்த மூவரில் ஒருவர் நுNனுடுகு பக்கம் சென்றுவிட்டார் என்றும் இயக்கத்தின் சொத்தில் ஒரு பகுதியை அவர் எடுத்துச் சென்றுவிட்டார் என்றும் அவரைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் சொன்ன போது அந்த நபர் யாரென்று வெயியே தெரிய வந்தது. மற்றவர்களைப் பற்றி ஊகங்களே இருந்தன.

தற்போது வசந்தன் விவகாரமும் அவர் பாலபுத்தரை முன்னிறுத்தி தன்னுடைய சதி முயற்சியை தொடர்வது தொடர்பாகவும் தனக்கு மிக நம்பிக்கையான இருவருடன் உமா கலந்தாலோசித்த போது பாலபுத்தர் இயக்கத்தில் இராணுவப் பயிற்சி பெற்றவரோ நிரந்தர உறுப்பினரோ கிடையாது. வசந்தனது விவகாரத்தை பகிரங்கமாக விசாரணை செய்து மற்றவர்களுக்கும் அதைத் தெரியப்படுத்தி அவனுக்குத் தண்டனை கொடுத்துவிட்டு பாலபுத்தரையும் அமைப்பிலிருந்து நீக்கிவிடுங்கள் என்று அவர்கள் அவருக்கு ஆலோசனை சொன்னார்கள்.


ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வசந்தனது விவகாரத்தை பகிரங்கப்படுத்தினால் அவனுடன் தொடர்புடைய மற்றவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். விசாரணை என்று வரும் போது வசந்தனுக்கு உடைந்தையாக இருந்தவர்களே அவனுக்கு எதிராக சாட்சி சொல்லி தாங்கள் நல்ல பிள்ளைகள் போல் நடித்து தப்பி விடுவார்கள் என்றும் பாலபுத்தரை பொறுத்தவரை அவரை அவ்வளவு சுலபமாக அமைப்பிலிருந்து நீக்க முடியாது. அவரிடம் இயக்கத்;தின் பொறுப்புக்கள் சில இருக்கின்றன. அத்தோடு அவருக்கு இயக்கத்தின் முக்கியமான இரகசியங்கள் சிலவும் தெரியும் என்றும் அவர் அதற்குக் காரணம் சொல்லியிருந்தார்.

பாலபுத்தரிடம் இருந்த பொறுப்புக்களும் அவருக்குத் தெரிந்த இரகசியங்களும் என்னவாக இருக்கும் என்பது தெரியாது. ஆனால் அதையிட்டு உமாமகேஸ்வரன் பயம் கொண்டிருந்தார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். வழக்கமாக தன்னுடைய எதிரிகளை காய் நகர்த்தி ஓரங்கட்டுவதிலும் தயவுதாட்சண்யமின்றி அவர்களை அழித்தொழிக்க முயல்வதிலும் வல்லவர் என்றும் எதிரி முந்திக் கொள்ளுவதற்கு முந்தி தான் முந்திக் கொள்வதில் கெட்டிக்காரர் என்றும் பெயர் பெற்ற அவர் பாலபுத்திரனையிட்டு பயங்கொண்டிருந்தது அப்போது ஆச்சரியமாக மட்டுமல்ல புதிராகவும் இருந்தது.


உமாமகேஸ்வரன் திட்டமிட்டபடி 25.03.89 அன்று வில்பத்து வனவிலங்கு சரணாலய விடுதிக் கட்டிடத்தில் புளொட்டின் இரண்டாவது தளமாநாடு ஆரம்பித்தது. அதற்கு முன் சங்கிலிக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஆட்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பாதுகாப்புக் குழுவே மாநாட்டு மண்டபத்திற்கும் அதைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் என்றும் மற்றவர்கள் எந்த ஆயுதத்தையும் சிறு கத்தி கூட மாநாட்டு மண்டபத்திற்கோ அல்லது அந்தப் பகுதிக்கோ எடுத்துவரக் கூடாதென்றும் கடுமையான உத்தரவு போடப்பட்டது. மாநாட்டு பிரதிநிதிகளை குழுக்களாகப் பிரித்த போது கூட ஒவ்வொரு குழுவிலும் சங்கிலிக்கு வேண்டியவர்கள் இருக்குமாறு பிரிக்கப்பட்டது. வசந்தன் உமாமகேஸ்வரன் குழுவில் போடப்பட்டு அவரது நேரடிக் கண்காணிப்பில் இருக்குமாறு செய்யப்பட்டதுடன் யார் யாரெல்லாம் அவனுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று சந்தேகிக்கப்பட்டதோ அவர்களையெல்லாம் ஒன்று சேராதபடி தனித்தனியாகப் பிரித்து வேறு குழுக்களில் போடப்பட்டது.

புளொட், DPLF, மலையகத்தில் அமைக்கப்படவுள்ள இராணுவ அமைப்பு இந்த மூன்றையும் கட்டுப்படுத்தக்கூடிய தலைமை அமைப்பு ஒன்றை தெரிவு செய்வதும் இராணுவ அமைப்புக்கான கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள், அரசியல் அமைப்பான நுPசுடுகுஇற்கான கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகள் என்பவற்றையும் தனித்தனியாக வரையறை செய்வதுமே மாநாட்டின் பிரதான நோக்கமாக இருந்தது.

ஒவ்வொரு குழுவும் முதலில் இந்த அமைப்பு வடிவம், அமைப்பு கட்டுப்பாட்டு விதிகள் என்பன தொடர்பாக குழுநிலையில் ஆராய்ந்து அவற்றை உருவாக்கி பின்பு எல்லாக் குழுவும் ஒன்று சேர்ந்து விவாதித்து ஒரு பொது முடிவுக்கு வருவதென அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே வசந்தன் குழு இந்த விடயங்கள் பற்றி வேறு விதமாக பிரசாரம் செய்திருந்தபடியால் குழுநிலையிலேயே விவாதம் சூடுபிடித்திருந்தது. அமைப்பு கட்டுப்பாடு என்ற விடயத்தைப் பெரும்பாலானவர்கள் பின்தள விவகாரங்களுடன் அதாவது ஒரத்த நாட்டு புதைகுழி விவகாரங்களுடன் ஒப்பிட்டு இது அதுக்கே வழிவகுக்கும் என்று கருத்துச் சொன்னார்கள். தலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கவிடக் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.


பெரும்பாலான குழுக்கள் உமாமகேஸ்வரனை புளொட்டின் தலைவராகவும் பாலபுத்தரை DPLF கட்சியின் தலைவராகவும் தெரிவு செய்து இருவருக்கும் அதிகாரங்களை சமமாக பகிர்வதோடு இவர்களுக்குத் துணையாக மேலும் ஐவர் கொண்டு இந்த அமைப்பே சகல அமைப்புக்களையும் கட்டுப்படுத்தும் வழிநடத்தும் அதிகாரம் கொண்டதாக இருக்கும்படி செய்ய வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டிருந்தன. இந்தக் கருத்து வசந்தன் குழு ஏற்கனவே பரப்பியிருந்த கருத்தாகும். அதாவது பாலபுத்தரையும் உமாமகேஸ்வரனையும் சமபலத்தோடும், சம அதிகாரத்தோடும் நிறுத்தும் அதே சமயம் பாலபுத்தரின் கருத்தையும் கையையும் ஒங்கச் செய்யும் வகையில் திட்டமிட்டு 5 பேரை தெரிவு செய்வதன் மூலம் உமாமகேஸ்வரனை தனிமைப்படுத்தி பலமிழக்கச் செய்துவிடலாம் என்பது அவர்களது எண்ணம்.

இந்தக் கருத்து ஒரு தீர்மானக நிறைவேற்றப்பட முன்பே இந்தக் குழுவுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய 5 பேரும் யார் என்பதை வசந்தன் குழு முடிவு செய்துவிட்டது. பாலபுத்தரின் கையை பலப்படுத்தி அவருக்கு வேண்டியவைகளை நிர்வாகத்திற்கு கொண்டு வருவதன் மூலம் இந்தியாவிடம் ஆயுதம் வாங்கலாம் என்ற பிரச்சாரத்தை இரகசியமாக முன்வைத்து தாங்கள் சொல்பவர்களையே நிர்வாகத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கீழ்மட்ட உறுப்பினர்களைக் கேட்டிருந்தார்கள்.

இந்த விடயம் உமாமகேஸ்வரனுக்கு வேண்டியவர்கள் மூலமும் சங்கிலியின் மூலமும் மாநாடு தொடங்கிய நேரத்திலேயே அவருக்குத் தெரிய வந்தது. உமாமகேஸ்வரனைப் பொறுத்தவரை அமைப்பில் தன்னுடைய கருத்தை தான் செய்து முடிக்க நினைக்கும் காரியத்தை மற்றவர்களை ஏற்றுக் கொள்ள வைக்கும் வல்லமை அவருக்கு இருந்தது. மாநாட்டில் குழு பிரிந்த போதே பாதுகாப்பிற்காக சங்கிலியின் ஆட்களை ஒவ்வொரு குழுவிலும் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டது போல தன்னுடைய கருத்தை வலியுறுத்தி பேசி எதிர்கருத்தை முறியடிக்கும் வல்லமை பெற்ற ஒவ்வொருவரையும் அவர் ஒவ்வொரு குழுவில் நியமித்திருந்தார்.

உமாமகேஸ்வரன் 5 பேர் கொண்ட உயர்குழு (பொலிட் பீரோ) ஒன்றை உருவாக்குவதென்றும் அதில் மூவர் புளொட்டிலிருந்து, ஒருவர் DPLFலிருந்து, ஒருவர் செயலதிபர் (தான்) என்ற வகையில் ஒருவர் என மூவர் தெரிவு செய்யப்படுவர்hகள் என்றும் மிகுதி இருவர் மலையக அமைப்பிலிருந்து ஒருவர் கொழும்பு நிர்வாக அமைப்பிலிருந்து ஒருவர் என்ற அடிப்படையில் செயலதிபரால் நியமிக்கப்படுபவர்களாக இருப்பார்கள் என்று திட்டம் தீட்டியிருந்தார். இதைவிட புளொட்டிற்கு தனியான செயற்குழு நுPடுகுஇற்கு தனியான செயற்குழு என்றும் அதில் சொல்லியிருந்தார்.

மாநாட்டின் குழுநிலை விவாதம்; வசந்தனது அமைப்புத் திட்டத்திற்கும் உமாமகேஸ்வரனது அமைப்பு திட்டத்திற்குமான விவாதமாகவும் மாணிக்கதாசனது சுவாரஸியமான பாலியல் விவகாரங்களைப் பற்றிய விவாதமாகவும் சூடு பிடித்துக் கொண்டிருந்த போது முள்ளிக்குள முகாம் பகுதிக்கு புலிகள் வந்துவிட்டதாகவும் அந்த முகாமை அவர்கள் கைப்பற்றினால் அங்கிருப்பவர்கள் மூலமாகத் தகவலறிந்து மாநாட்டு மண்டபத்தையும் அவர்கள் தாக்கக் கூடும் என்ற ஒரு செய்தி வந்தது. அதைக் கேட்ட உமாமகேஸ்வரன் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார்.

கருத்துகள் இல்லை: