08
மாலைதீவு விவகாரம் தோல்வியில் முடிவடைந்த உடனேயே றோ உமாமகேங்வரனை கொல்லுமாறு ENDLF க்கு சமிக்ஞை காட்டியது. ENDLF இன் நம்பிக்கை நட்சத்திரமான வசந்தன் முள்ளிக்குளத்தில் முடக்கப்பட்டிருந்ததும், சங்கிலி அங்கு உடன் இருந்ததும் அதற்குப் பாதகமான விடயங்களாக இருந்தன.
சங்கிலி பொறுப்பு எதுவும் இல்லால் சாதாரனமான உறுப்பினராக இருந்தாலும் ஒரு பொறுப்பாளனுக்கு இருக்ககூடிய அதிகாரங்களைவிட அதிகளவு அதிகாரங்களை கொண்டவராகவே இருப்பதாக மற்றவர்கள் நம்பினார்கள்.
ஒரு பொறுப்பாளருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைவிட அதிகளவு மரியாதையை அவர்கள் அவருக்கு கொடுத்தனர். நீண்ட நாட்கள் வேலை எதுவும் இன்றி அவர் அங்கு தங்கியிருந்தது அங்கிருந்தவர்களக்கு பயத்தையும் சந்தேகங்களையும் உருவாக்கியது.
ஏற்கனவே வசந்தன், சங்கிலி மலையத்தில் கொலைப்படை ஒன்றை உருவாக்கி வைத்திருக்கின்றான்; என்று பிரச்சாரம் செய்தது வேறு அவர்களுக்கு கிலியை உண்டாக்கியது. அதிலும் சங்கிலி தனது முன்னைய பாணியிலல்லாதது கீழ் மட்ட உறுப்பினர்களுடனும் சகஜமாக நெருங்கிப் பழகியது பலருக்கு வியப்பாக இருந்தாலும் அதுவே இனம்புரியாத ஒரு அச்சத்தையும் கொடுத்தது.
வசந்தனைப் பொறுத்தவரை தான் எதற்காக முள்ளிக்குளத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றேன் என்பதை அறியவில்லை. தான் நடாத்தி முடிக்க திட்டமிட்டிருக்கின்ற விடயமும் உமாமகேஸ்வரனுக்குத் தெரியும் என்பதும் அவருக்குத் தெரியாது. ஏதோ அவன் பொறுப்பாக இருந்து பிரச்சாரப் பிரிவு கணக்குகளில் பிரச்சினை என்பதாலேயே அங்கு அனுப்பப்படுவதாக உமாமகேஸ்வரன் அவனுக்குச் சொல்லியிருந்தார்.
எனவே வசந்தன் சங்கிலிக்கு சந்தேகம் வராத விதத்தில் நடந்து கொண்டு அவனது நம்பிக்கையைப் பெறும் அதே நேரத்தில் தனக்கு விசுவாசமானவர்களை வைத்து மிக இரகசியமாக சங்கிலிக்கெதிரான குழு ஒன்றையும் தூண்டிவிட முயற்சி செய்தான்;.
சங்கிலியை அங்கிருந்து எடுப்பிக்கும் நிர்ப்பந்தத்தை உமாமகேஸ்வரனுக்கு கொடுக்கும் அதே நேரத்தில் முகாம்களில் குழப்பத்தை உண்டுபண்ணி அவர் முள்ளிக்குளத்திற்கு வரவேண்டிய தேவையை உருவாக்கி அங்கு வைத்து அவரை கொலை செய்வது என்பது வசந்தனின் திட்டம். தனது இந்தத் திட்டத்தை செயற்படுத்த அவர் தன்னுடன் ஆறு பேரை கூட்டுச் சேர்த்துக் கொண்டதாக நம்பப்படுகின்றது.
இந்த ஆறு பேரும் பின்பு நடந்த உமாமகேஸ்வரன் கொலையில் சம்மந்தப்பட்டவர்களல்ல. பின்பு உமாமகேஸ்வரனைக் கொலை செய்தவர்கள் அன்று வசந்தனின் நடவடிக்கைக்கு இடைஞ்சலாக இருந்து உமாமகேஸ்வரனைப் பாதுகாத்தவர்கள்.
ஆனால் அன்று வசந்தனோடு சேர்ந்து உமாவைக் கொலை செய்ய முயன்றவர்கள் இன்று உமாமகேஸ்வரனை கொலை செய்தவர்களை துரோகிகளாக்கி தங்களை உமாமகேஸ்வரனது விசுவாசிகள் என்றும் அவரது கொள்கை வழி நடப்பவர்கள் என்றும் சொல்லி கதையையே தலைகீழாக மாற்றிவிட்டார்கள்..
வசந்தன் குழுவினர் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாக்குவதற்கான காய் நகர்த்தலின் முதல் கட்டமாக இயக்கத்தின் முக்கிய இராணுவ பொறுப்பாளர்களில் ஒருவரான மாணிக்கதாசனை குறிவைத்தார்கள்.
இந்த மாணிக்கதாசன் ஒரு காலத்தில் யாழ் ஆஸ்பத்திரி சுவர்களில் வீர வசனங்கள் எழுதி புகழ் பெற்றவன்;. ஆனைக்கோட்டை கிளிநொச்சித் தாக்குதல் காலத்திலிருந்தே இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்தவன்;. எப்போதும் சாகசங்கள் நிகழ்த்தி காட்ட வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவன்;. லெபனான் பயிற்சிக் காலத்திலேயே இஸ்ரேலிய இராணுவத்தை அடித்து சாதனை நிகழ்த்திய தன்னை மாலைதீவு தாக்குதலுக்கு பொறுப்புத்தந்து அனுப்பாததையிட்டு அவன்; மிகவும்ம னஸ்தாபம் கொண்டிருந்தான்;.
அனுபவம் இல்லாதவர்களை அனுப்பியதால் தான் மாலைதீவுத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது என்று அவர் வெளிப்படையாகவே உமாமகேஸ்வரன் மீது விமர்சனம் வைக்கத் தொடங்கியிருந்தான்;.
ஏற்கனவே சங்கிலிக்கு அவனுக்கும் ஒத்துவருவதில்லை. தன்னுடைய நிர்வாகப் பகுதிக்குள் (மாணிக்கதாசனே PLOT வன்னி மாவட்டப போறுப்பாளர்) சங்கிலியை தங்கவைத்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. இது தன்னை அவமானப்படுத்த மேற்கொண்ட முயற்சி என்று அவர் மனம் புழுங்கிக் கொண்டிருந்தான்;.
ஆனால் உமாமகேஸ்வரன் மாணிக்கதாசனை மாலைதீவுக்கு அனுப்பாததும் , வன்னி மாவட்டத்திற்கு அப்பால் நடக்கும் இயக்க நடவடிக்கைகளில் பங்குபற்ற அழைக்காததற்கும் வேறு காரணம் இருந்தது.
மாணிக்கதாசன் சிறீலங்கா இராணுவத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவன்;. அராலித்துறையில் கொலையுண்டு போன ஜெனரல் கொப்பேகடுவ உட்பட சிறிலங்கா இராணுவத்தில் உள்ள பல்வேறு முக்கிய அதிகாரிகள் அவனுக்கு நண்பர்களாக இருந்தார்கள். *
உமாமகேஸ்வரன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்தவன்; அவன்தான்.
அவ்வாறே 1984இல் உமாமகேஸ்வரன் அத்துலத்முதலியுடன் நட்புக் கொள்வதற்கும் பாலம் அமைத்து கொடுத்தவனும்; அவன் தான். அவனது தாய் ஒரு சிங்களவராக இருந்ததும்; அவனது தாய்வழி உறவினர்கள் பலர் சிறிலங்கா இராணுவத்தில் அதிகாரிகள் தரத்தில் இருந்ததுமே அவனுக்கு இதெல்லாம் சாத்தியமானதாக ஒரு முறை உமாமகேஸ்வரனை தெரிவித்திருந்தார்.
எங்கே அவன மூலம் சிறிலங்கா இராணுவத்திற்கும் அரசுக்கும் தகவல் தகவல் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே மாலைதீவு மற்றும் JVP நடவடிக்கைகளை உமா அவனுக்குத் தெரிவிக்கவில்லை.
மாணிக்கதாசன் மாலைதீவு விரக்தியால் பேசித்திரிந்த பேச்சுக்களை அவதானித்த வசந்தன் குழுவினர் இந்த முரண்பாட்டைப் பயன்படுத்தத் தீர்மானித்தனர். வன்னி மாவட்டத்தில் வரி வசூல் மூலம் சேகரித்த 60 லட்சம் ரூபாவை சுருட்டிக் கொண்டு மாணிக்கதாசன் கனடாவுக்குச் செல்லப் போவதாக முதலில் அவர்கள் ஒரு புரளியைக் கிளப்பிவிட்டார்கள்.
அடுத்து அவன் இயக்க உறுப்பினர்களுடன் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் வெள்ளைநிற பொடியளை அவன் இரவு தன் படுக்கைக்கு அழைத்துச் செல்கின்றார் எனவும் கதை பரப்பப்பட்டது. கேட்பவர்கள் நம்பும்படியாக சுவாரசியமாகப் பரவிய இந்தக் கதைகளைக் கேட்ட கீழ் மட்ட உறுப்பினர்கள் பலரும் அவனைக் கைது செய்ய வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று பலமாகக் குரலெழுப்பினார்கள் .
மாணிக்கதாசனது சாகசங்களால் கவரப்பட்டு எப்போதும் அவருடனேயே சுற்றிக் கொண்டிருக்கும் அவனது அபிமானிகள் கூட இதனால் அவனுடன் நெருங்கப் பழகப் பயந்தார்கள். அவனுடன் நெருங்கிப்பழகினால் தங்களையும் மற்றவர்கள் வேறு விதமாக எண்ணிவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் றோவின் ஆலோசனையின் பேரில் சங்கிலியைக் கைது செய்து வசந்தன் குழுவின் நடவடிக்கையை இலகுவாக்குவதற்காக இந்திய அமைதிப்படை மீண்டும் ஒரு தடைவ முள்ளிக்குளம் பகுதியை முற்றுகையிட்டது.
மாலைதீவு தாக்குதல் நடப்பதற்கு முன்பு புலிகள் அப்பகுதிக்கு வராமல் தடுப்பதற்காகவும் PLOT யையும் தாம் கண்காணிக்கின்றோம் என்று பாசாங்கு செய்யவும் இந்திய அமைதிப்படை அந்தப்பகுதிக்கு வந்தது. அப்போது தேடுதல் எதுவும் நடத்தாமலே பெயருக்கு அப்பகுதியை சுற்றி வந்துவிட்டு புலிகளின் வருகையை தடுப்பதற்காக முள்ளிக்குளத்திற்கு வரக்கூடிய பிரதான பாதைகளில் மட்டும் காவல் கண்காணிப்பு நிலைகளை அமைத்திருந்தது.
மாலைதீவுக்குழு புறப்பட்ட அன்றைய தினமே அக்காவல் நிலைகளும் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால் இந்தத்தடைவ அதிகாலை 6 மணிக்கே அப்பகுதிக்கு வந்த இந்திய இராணுவம் ஒவ்வொரு பகுதியாக சுற்றிவளைத்து வீடு வீடாக சல்லடை போட்டுத் தேடியது.
தகவல் அறிந்த புளொட் குழு தங்களது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த வில்பத்துக் காட்டுக்குப் பின்வாங்கி ஓடியது. அப்படி ஓடும் போது ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது.
முள்ளிக்குளத்திலிருந்து வில்பத்துக் காட்டுக்குள் நுழைய வேண்டுமானால் இடுப்பளவு தண்ணீருள்ள ஒரு ஆற்றைக்கடக்க வேண்டும். அந்த ஆற்றில் சகதி அதிகம். அதனால் கொஞ்சம் கஸ்டப்பட்டுத்தான் கடக்க வேண்டும். 92 பேர் அடங்கிய இவர்களது குழு வரிசையாக ஆற்றைக் கடந்து கொண்டிருந்த போது முன் வரிசையில் சென்றவர்கள் அக்கரையில் கால்வைத்து ஒரு பத்துப் பதினைந்து அடி எடுத்து வைக்க, ஒரு பெரிய காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றை நோக்கி வந்தது. இவர்கள் பயத்தில் ஆனையடா, ஆனையடா எனக் கத்திக் கொண்டு திரும்பி ஓடிவர பின்னால் பின்னால் வந்து கொண்டிருந்தவர்களுக்கு அது அது ஆமியடா ஆமியடா என்று கேட்டது. காட்டுப்பக்கமும் வந்து ஆமி சுற்றி வளைத்துவிட்டானாக்கும் என்று எண்ணிக் கொண்டு வந்த வழிக்கு திரும்பிச் சிதறி ஓட பலர் சேற்றுக்குள் விழுந்து எழும்பினார்கள். இறுதியில் உண்மை தெரிந்து ஒரு வழியாக ஆற்றைக் கடந்து வில்பத்து காட்டுக்குள் சென்று தங்கினார்கள்.
நேரம் மாலை 5 மணியைத் தாண்டியும் காலை வந்த இந்திய இராணுவம் திரும்பவே இல்லை. காட்டிற்குள் இருந்தவர்களை பசி வாட்டி எடுத்தது. இருவர்; காட்டு வழியாக கடற்கரையோரமாக இருந்த தென்னந்தோப்பில் இளநீர் பறித்து வரலாம் என்று சென்றனர். அப்போது செல்வரத்தினம் என்ற நடுத்தர வயதுக்காரரும் முருகதாஸ் என்ற அவரது மருமகனும் இந்திய இராணுவத்திடம் அனுமதி பெற்றுக் கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க வந்தனர் அவர்களிடம் இந்திய இராணுவம் பற்றி விசாரித்த புளொட்காரர்கள் தங்களுக்கு சாப்பாடு சமைத்து எடுத்த வரக் கேட்டனர்.
அதற்குத் தாங்கள் கிராமத்துக்குள் திரும்பிப் போனால் இந்திய ஆமி தங்களைப் பிடித்து விடுவார்கள் என்று சொல்லி அவர்கள் மறுத்து
விட்டார்கள்.
புளொட்காரர்களுக்கு வந்ததே கோபம் . அருகிலிருந்த பெரியதொரு பூவரசம்கட்டையை எடுத்து இருவரையும் அடிஅடியென்று அடித்துவிட்டார்கள்.
இளைஞரான முருகதாஸ் இவர்கள் துவக்கு வைத்துக் கொண்டு ஏன் தடியால் அடிக்க வேண்டும் என்று யோசித்துப் பார்த்தான். துவக்கு வெடிச்சத்தம் கேட்டால் இந்தியன் ஆமிக்கு இவர்கள் இங்கே இருப்பது தெரிந்தவிடும். அதனால் வெடிவைக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் எதிர்த்துத் தாக்க ஆரம்பித்தான்.
அதற்குள் அங்கே வந்த வேறு மீனவர்கள் நிலைமையின் பாதகத் தன்மையை புரிந்து கொண்டு ஆமி ஆமி என்று கத்தினார்கள். புளொட்காரர்கள் உண்மையில் இந்தியன் ஆமி வருவதான நினைத்துக் கொண்டு திரும்பி ஓடிவிட்டார்கள்.
24 மணிநேரமும் முள்ளிக்குளத்தில் தங்கியிருந்து தேடுதல் நடத்திய இந்திய இராணுவத்தினர் சங்கிலியை மட்டுமல்ல எந்த ஒரு புளொட் உறுப்பினரைக்கூட பிடிக்கவில்லை. அங்கு தொடர்ந்திருந்தால் புளொட் எதிர்த்துத் தாக்கக் கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. புலிகளும் அந்த இடத்திற்கு வந்து தாக்கக்கூடிய சாத்தியமும் இருந்தது. எனவே, புலிகள், புளொட் என்று இரண்டு பக்கத்தாலும் ஆபத்து வரக்கூடிய ஒரு பகுதியில் தாங்கள் தங்கியிருப்பது பாதுகாப்பற்றது எனக்கருதி மறுநாள் காலை புளொட்டிற்கு உதவி செய்த ஒரு சில அப்பாவிகளை பிடித்துக்கொண்டு அவர்கள் திரும்பி விட்டார்கள்.
கடும் பசியோடு காட்டிற்குள முடங்கிக்கிடந்த புளொட் குழு முள்ளிக்குளக்காரர்கள் யாரும் தங்களுக்கு உதவி செய்யவில்லையே, சாப்பாடு கொண்டுவரவில்லையே என்ற ஆத்திரத்தோடு உள்ளுக்குள் வந்தது. வந்து முதல் வேலையாக செல்வரத்தினத்தையும் அவரது மருமகன் முருகதாசையும் நீங்கள் புலிகளின் ஆட்கள் உங்களை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி முகாமுக்குள் இழுத்துச் சென்றனர்.
முருகதாசுக்கு திருமணமாகி 6 மாதம் தான் ஆகியிருந்தது. அவரது மனைவி புளொட்காரரின் காலில் விழுந்து “என்ர மனுசனை ஒன்றும் செய்துபோடாதேங்கோ, விட்டிடுங்கோ உங்களைக் கும்புடுறன்” என்றுக் கெஞ்சிக் கேட்க காலால் அவளை உதைத்து தள்ளிவிட்டுச் சென்றனர்.
விசாரணை என்றவுடன் வசந்தன் குழு சுறுசுறுப்படைந்தது. முகாமில் விசாரணை நடத்துவது யார் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களில் ஒருவர் இந்தியாவின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த சங்கிலியின் பாதுகாப்புப்டையில் இருந்தவர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விசாரிப்பவர்களைக் கொண்டே விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களை கொலை செய்து, சங்கிலிதான் கொலையின் சூத்திரதாரி என்று மற்றவர்கள் நம்பும்படியாக செய்யத் திட்டமிட்டார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக