திங்கள், 29 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறுபக்கம் 28

28

உமாமகேஸ்வரனுடைய கொலை எவ்வாறு நடந்தது என்பதற்கு நேரில் பார்த்த சாட்சியம் எதுவும் கிடையாது. அது பற்றி கிடைத்திருக்கக்கூடிய எல்லாத் தகவல்களும் வெறும் ஊகங்கள் என்ற அடிப்படையிலே தான் இருக்கின்றன.

இன்றைய புளொட் தலைமைதான் ஆச்சிராசன், ராபின் உட்பட 6 பேர் கொண்ட குழுதான் அவரைக் கொலை செய்யதாகச் சொல்கிறது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கும் என்பது தெரியாது.
ஏனெனில் உமாமகேஸ்வரன் கொலை முடிந்த கையோடு சென்னை வடபழனி தேசிகர் தெருவில் உள்ள 11ம் இலக்க இல்லத்தில் ஒரு கூட்டம் நடந்ததாகவும் அதில் இன்றைய புளொட் தலைமை உட்பட இன்றைய புளொட் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உமாமகேஸ்வரனின் கொலையை நியாயப்படுத்தி அதற்கான காரணங்களை ஒரு ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்து இலங்கையில் எஞ்சியிருந்த புளொட் உறுப்பினர்களுக்குப் போட்டுக் கேட்க ஏற்பாடு செய்து அனுப்பியும் இருந்தார்கள். இந்த ஒலிப்பதிவு நாடா மற்றவர்களின் கையில் அகப்படாத வகையில் வவுனியாவில் வைத்து அதை மாணிக்கதாசன் தீயிட்டுக் கொளுத்தியதாக அறிய முடிந்தது.
உமாமகேஸ்வரன் கொலையுண்டவுடன் அவரது சடலத்தைப் பொறுப்பேற்க உடனடியாக யாரும் முன்வரவில்லை. உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டுவிட்டார், அதுவும் ஆச்சிராசன், ராபின் ஆகியோர் தான் அவரை அழைத்துச் சென்று கொலைசெய்தவர்கள் என்ற விடயத்தை மற்றவர்களுக்கு முதலில் சொன்னவர் சாம் முருகேசு என்பவர். இவர் தான் அத்துலத்முதலியின் உதவியுடன் பின்னர் உமாமகேஸ்வரனது சடலத்தைப் பொறுப்பேற்று வவுனியாவிற்கு கொண்டு சென்று அடக்கமும் செய்தார்.

உண்மையில் உமாமகேஸ்வரனுடைய இறுதிக் காலத்தில் அவரை திருடன் என்று விமர்சித்தவர்கள், துரொகி என்று வெறுத்தவர்கள், றோ வுடன் சேர்ந்த அவரை கவிழ்க்கச் சதி செய்தவர்கள் எல்லாம் அவரது சடலம் தீயில் எரிந்து சாம்பலானவுடன் தியாகி என்றும், கொள்கை வீரர் என்றும் மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி என்றும் ஆகா, ஓகோ என்று புகழ ஆரம்பித்துவிட்டார்கள்.


பொதுவாக ஒரு அமைப்பின தலைவர் இறந்தவுடன் ஆகக்குறைந்த பட்சம் அதன் உயர் அங்கமான பொலிட் பீரோவோ அல்லது மத்திய குழுவோ கூடி ஒரு தற்காலிகத் தலைவரைத் தெரிவு செய்வதே வழக்கம். ஆனால் உமாமகேஸ்வரன் இறந்தவுடன் புளொட்டின் பொலிப் பீரோவோ, மத்திய குழுவோ கூட்டப்படவில்லை. மாறாக மாநாட்டில் இயக்கத்தின் சகல பொறுப்புக்களிலுமிருந்து இடை நிறுத்தி வைக்கபட்ட மாணிக்கதாசன் வவுனியாவில் வைத்து தனக்கு வேண்டிய சிலரின் உதவியோடு தானே அமைப்பின் தற்காலிக தலைவராக தன்னை தானே பிரகடனப்படுத்திக் கொண்டார்.


இந்தப் பிரகடனப்படுத்தலுக்கு முன் அவர் அப்போது சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த கொப்பேகடுவாவின் ஆலோசனை பெற்றதாக சொல்லப்படுகின்றது. அதன்பின் அந்தத் தற்காலிகத் தலைவரால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவே அவர்களைச் சேர்ந்தவர்களைக்கொண்ட ஒரு மாநாட்டை நடாத்தி பாலபுத்தரை மாகாணம் பொருந்திய தலைவராக மகுடம் சூட்டியது.


உண்மையில் ஒரு சதி முயற்சி நடந்தால் அதற்கு அடுத்த கட்டம் எவ்வாறு நகர்த்தப்படுமோ அவ்வாறுதான் நகர்த்தப்பட்டுள்ளது. புளொட்டின் புதிய நிர்வாகம் பதவியைக் கைப்பற்றிக் கொண்டவுடன் புதிய நிர்வாகத்தின் மத்திய குழு உறுப்பினராக இருந்த சாம் முருகேசுவுக்கு அவர் சில இரகசியங்களை வெளியே தெரியப்படுத்தாமல் இருப்பதற்காக அவருக்கு பெருந்தொகை பணம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.


ஆச்சிராசன், ராபின் அகியோரே உமாமகேஸ்வரனை கொலை செய்ததாக சொன்ன சாம் முருகேசுவே உமாமகேஸ்வரனை கொலை செய்த ஆயதத்தை வைத்திருந்ததாகவும் பின்பு அவற்றை புளொட்டின் புதிய நிர்வாகம் அவரிடமிருந்து பெற்று மறைத்துவிட்டதாகவும்; சிலர் சொல்கிறார்கள்.


இதில் எந்தளவு துரம் உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஏனெனில் அதன் பின் சாம் முருகேசு நீண்ட காலம் உயிரோடு இருக்கவில்லை. திடீரென்று மர்மமான முறையில் அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவரைப் புலிகள் கொன்றுவிட்டதாக புளொட் தலைமை சொல்கின்றது. ஆனால் அவர் இரகசியங்களை வெளியே சொன்னபடியால் மாணிக்கதாசன்தான்; புலிகள் என்ற பெயரில் அவரைக் கொன்றது என்று அதேகாலத்தில் புளொட்டைவிட்டு வெளியேவந்த நிறையப் பேர் சொல்கிறார்கள்.


இதேபோல் உமாமகேஸ்வரன் கொலை செய்யப்பட்ட தினத்திற்கு முன் தினம் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட உமாமகேஸ்வரனது நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாப்பாளரான சக்திவேல், உமாமகேஸ்வரனை கொன்றவர்களை பழிவாங்கியே தீருவேன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார். திடீரென்று அவரும் ஒரு நாள் கொலையுண்டு போனார். அவரையும் புலிகள்தான் கொலை செய்துவிட்டதாக புளொட் சொல்கின்றது. ஆனால் அது உண்மையில்லை. அவரைக் கொன்றது உண்மையான புலிகள் அல்ல. அது கூட செட்டப் செய்யப்பட்ட புலிகள் தான் என்று சொல்கிறார்கள்.


அடுத்து இன்றைய புளொட் தலைமையால் நம்பிக்கைத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட ஆச்சிராசளை கூட இந்தியாவில் வைத்து கொலை செய்ய மாணிக்கதாசன் முயன்றதாக சொல்லப்படுகின்றது. 1993ம் ஆண்டு சிறிலங்கா அரசின் தேவைக்காக ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இங்கு வந்த மாணிக்கதாசன்; இங்கிருந்த முன்னாள் புளொட் உறுப்பினர்கள் பலருக்குத் தொலைபேசி எடுத்து உமாமகேஸ்வரனைக் கொலை செய்த ஆச்சிராசனை தாங்கள் கொன்றுவிட்டதாக அதாவது அவருக்கு தண்டனை கொடுத்துவிட்டதாக சொல்லியிருந்தார்.


இதைவிட சுவீசில் வசித்து வந்த ராபினும், அவரது மனைவியும், மனைவி வயிற்றிலிருந்த குழந்தையும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகள் கூட புலிகள் செய்ததாக மற்றவர்கள் நம்பும் விதத்தில் ஒரு செட்டப்பை உருவாக்கியே செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் சுவீஸ் பொலிசார் அங்கேயிருந்த புளொட் உறுப்பினர்கள் தான் இந்தக் கொலைகளின் சூத்திரதாரிகள் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்திருக்கிறார்கள்.


உண்மையில் இந்தத் தொடர் கொலைகள் உமாமகேஸ்வரன் கொலை பற்றியே சில சந்தேகங்களை தோற்றுவித்திருக்கின்றன. அதாவது இந்தக் கொலையைப் பற்றிய இரகசியங்கள் தெரிந்தவர்கள் கொலைகாரனைக் கண்டுபிடித்து பழிவாங்கப் போவதாக சபதம் செய்தவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதென்பது இன்றைய புளொட் தலைமைப்பீடம் ஏதோ . ஒன்றை மறைக்க விரும்புகின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இன்றைய புளொட்டில் எத்தனையோ முன்னணி உறுப்பினர்களும், மத்திய குழு உறுப்பினர்களும் இருக்க சக்திவேலையும், சாம்முருகேசையும் மட்டும் குறிவைத்துக் கொல்ல வேண்டிய அவசியம் புலிகளுக்கில்லை. அவர்கள் புலிகளால் கொல்லப்படும் அளவுக்கு அவர்களால் தேடப்பட்டவர்களும் அல்ல என்பதும் எல்லோருக்கும் தெரியும். புலிகள் அவர்களை கொன்றார்கள் என்பது றோ வுக்காகவும் உமாமகேஸ்வரனது வெளிநாட்டுச் சொத்துக்களை கையகப்படுத்திக் கொள்வதற்காகவும் தாங்கள் செய்வித்த கொலையை மூடிமறைக்க புதிய புளொட்டின் உயர்பீடம் உருவாக்கிவிட்ட பம்மாத்தே இது என்று நம்பப்படுகின்றது.

புதிய புளொட் என்று இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டவுடன் பழைய புளொட் தானாக கலைந்து போய்விட்டது. புளொட்டின் உண்மையான உறுப்பினர்கள் பலர் முற்றாக போராட்டத்தைவிட்டு ஒதுங்கிவிட்டனர்.


ஆனால் றோவும் சிறிலங்கா இராணுவமும் புளொட் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று விரும்பின. இருபகுதியினரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் வேறு வேறு மட்டத்தில் தொடர்பு கொண்டு புதிய புளெட்டுக்கு உயிர் கொடுக்க முயன்றனர்.

4 கருத்துகள்:

செம்மலர் செல்வன் சொன்னது…

சிங்களவர்கள் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்து விட்டார்கள்..
1. விடுதலை புலிகளின் மீது தமிழ் நாட்டு மக்களுக்கு வெறுப்பு வர வைப்பது
2. இந்திய அரசு , ராஜீவ் காந்தி இழப்பால் பட்டு படாமல் ஒடுங்கி விடும்.
3. வேறு எவருடைய ஆதரவுமின்றி, விடுதலை புலிகள் இயக்கம் இயங்க வேண்டும்..

சிவா சின்னப்பொடி சொன்னது…

நன்றி செம்மலர் செல்வன் உங்கள் வருகைக்கும்.பின்னூட்டத்துக்கும்

Ranganathan. R சொன்னது…

சிவா...

என்ன... இப்படி ஒரு கனமான பதிவுகளைப் போட்டுள்ளீர்கள்...

வாழ்த்துக்கள்... இனிமேல்... தவறாது உங்கள் பதிவுகளைப் படிப்பேன்...

சிவா சின்னப்பொடி சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி ரங்கநாதன்.சில பதிவுகள் காலத்தின் தேவையாகும்..